களங்கம்





சுந்தரம் ஸாரின் திடீர் மரணம் என்னை உலுக்கிவிட்டது. நேர்மைக்கு மறுபெயர் சுந்தரம் ஸார்தான். அதிகாரம் மிகுந்த அரசு பதவியில் இருந்தபோதும், கறை படியாத கைகளுக்கு உரியவர். வறுமையோடு வாழப் பழகியவர். பிரதிபலன் பாராமல் எனக்கும் எவ்வளவோ உதவியிருக்கிறார். அப்படிப்பட்டவரின் குடும்பம் இனி என்ன செய்யும்? எனக்கு மனசு கேட்கவில்லை. ரூபாய் ஐம்பதாயிரத்தை எடுத்துக் கொண்டு அவர் வீட்டுக்குப் போனேன்.

சுந்தரம் ஸாரின் மனைவி அழுதுகொண்டிருந்தார்.
‘‘வருத்தப்படாதீங்கம்மா... நீங்க தவறா நினைக்கலன்னா இதை செலவுக்கு வச்சுக்குங்க’’ என்று பையைக் கொடுத்தேன்.
‘‘நீங்க யார் எங்களுக்குப் பணம் தர?’’
- நியாயமான கேள்விதானே! அதை சமாளிக்க ஒரு பொய்யை அவசரமாகத் தயாரித்தேன்.

‘‘ஸார்தாம்மா ஒரு சமயம் எனக்கு கைமாத்தாக் கொடுத்திருந்தார்... வாங்கிக்கங்க!’’

‘‘என்னது... கைமாத்தா அம்பதாயிரம் ரூபாய் கொடுத்தாரா? ஐயோ... ஐயோ என்கிட்ட நேர்மை நேர்மைன்னு கதை பேசிட்டு, மனுஷன் கிம்பளப்பணத்தை இன்னும் யார் யார்கிட்ட எல்லாம் குடுத்து வச்சிருக்காரோ... பாவி மனுஷன்!’’ என்றபடி பெரிதாக ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்துவிட்டார் அவர்.

நான் அதிர்ந்து போனேன். ஏதோ உதவி செய்யப் போய் சுந்தரம் ஸார் வாழ்நாள் முழுக்க கட்டிக்காத்த கொள்கையைக் களங்கப்படுத்திவிட்டதாய் தோன்றியது.
‘சுந்தரம் ஸார்... என்னை மன்னிச்சிடுங்க!’