நியூஸ்வே





பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை முதல்முறையாக வென்றிருக்கிறார் மரியா ஷரபோவா. டென்னிஸின் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற பத்தாவது வீராங்கனை என்ற பெருமையோடு, தரவரிசையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நம்பர் ஒன் ஆகியிருக்கிறார். ஒரு வருடமாக காயங்களோடு அவதிப்பட்டுவந்த அவருக்கு இந்த வெற்றி ரொம்பவே ஸ்பெஷல்! மற்ற இடங்களில் இருக்கும் புல்தரை போல அல்லாமல் இங்கு களிமண் தரையில் விளையாடுவது ‘ஐஸ்பாறையில் பசு மாட்டை ஓடவிடுவது போல’ இருப்பதாக எப்போதும் குற்றம் சாட்டிவந்த அவர், இந்த வழுக்குத் தரையிலும் ஜெயித்துவிட்டார்.

பிரிட்டிஷ் ராணியாக இரண்டாம் எலிசபெத் கிரீடம் சூட்டியதன் 60ம் ஆண்டு விழா கொண்டாட்டம், மகன் சார்லஸுக்கு சாதகமாக முடிந்திருக்கிறது. டயானா மரணம், கமீலா கள்ளக்காதல் போன்ற காரணங்களால் சார்லஸை வெறுத்து ஒதுக்கிய பிரிட்டிஷ் மக்கள் இப்போது ‘ராணிக்கு அடுத்து சார்லஸுக்கு மகுடம் சூட்டலாம்’ என்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

லோக் ஆயுக்தா அமைப்பு அடிக்கடி ஏதாவது ஊழலைக் கண்டுபிடித்ததால் கர்நாடக பி.ஜே.பி. அரசுக்கு தர்மசங்கடம். இதைத் தடுக்க ஒரே வழி, அந்த அமைப்பை முடக்குவது! கடந்த 9 மாதங்களாக இதற்கு தலைவராக ஒரு நீதிபதியை நியமிக்காமல் காலியாகவே வைத்திருக்கிறார் முதல்வர் சதானந்த கவுடா. ‘லோக் ஆயுக்தாவை காப்பாற்றுவோம்’ என்ற பிரசார இயக்கம் இப்போது முழு வேகத்தில்!

ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்து குவித்து விட்டார் என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தாலும், ஆந்திர அரசியல்வாதி ஜெகன்மோகன் ரெட்டியால் செல வழிக்க முடிவது வெறும் 4 ஆயிரம் ரூபாயைத்தான்! ஐதராபாத்தின் சஞ்சால்குடா சிறையில் அடைக்கப்படும் முதல் வகுப்பு கைதிகள், அங்கிருக்கும் கேன்டீனில் வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மினரல் வாட்டர், பேஸ்ட், சோப்பு, கூல் டிரிங்க்ஸ், ஐஸ் கிரீம், பிஸ்கெட், சிகரெட் என தடை செய்யப்படாத பொருட்களை இந்த கேன்டீனில் விற்கிறார்கள். ஜெகன் பெயரில் அவர் குடும்பத்தினர் 4 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய, அதை வைத்து செலவழித்துக் கொண்டிருக்கிறார் அவர்.

ஊழலை எதிர்க்கும் போராட்டத்தில் ஜோசியத்தைக்கூட துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள் அன்னா ஹசாரேவும் பாபா ராம்தேவும்! அடுத்த ரவுண்டு உண்ணாவிரதத்துக்கு தயாராகிவரும் இவர்கள், ‘‘மத்திய அரசுக்கு கஷ்ட காலம் வந்தாச்சு’’ என ஆரூடம் சொல்கிறார்கள். ஜூன் 4ம் தேதி நிகழ்ந்த சந்திர கிரகணமும், 5ம் தேதி பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வெள்ளி கடந்து போன நிகழ்வும் ஆட்சிக்கு ஆபத்தைத் தருமாம். இதுவரை 4012 ஆண்டுகளில் இப்படி 81 முறைதான் நிகழ்ந்ததாம். ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு ஆட்சி மாற்றம் கியாரண்டியாம்! 2004ம் ஆண்டு இப்படி நடந்தபிறகுதான் பி.ஜே.பி. ஆட்சி வீட்டுக்குப் போனதாம்!