கவிதைக்காரர்கள் வீதி : கோபமான அவள்...





மீண்டும் அவள் வார்த்தையிலிருந்து
பிரிந்து சென்ற புயல் ஒன்று
எனக்கு மேலாய் மையமிட்டுக் கொண்டது.
சற்றும் அனுமானத்திற்குட்படாத
ஓர் வெள்ளப் பிரவாகத்தை
அவள் எனக்காய் நிர்ணயித்திருக்கக் கூடும்
அதன் பொருட்டாலான சுழற்சி வேகத்தை
துடித்துக் கிடக்கும் என் இதயத்தின் வாயிலாய்
அவள் பெயரிட்டபடி அதன் விசையாக்கத்தை
இன்னும் அதிகரிக்கக்கூடும்.
அவளை விடுத்த வேறு சிந்தனைகள் புத்தியில்
சில காலம் நிறுத்தப்படலாம்.
சில காலம் வரைக்குமாய் என் பார்வைப் பெண்கள்
அவள் முகம் தாங்கியலைவார்கள்
எச்சொல்லிற்குமாய் என் சுற்றிய நாற் சுவர்கள்
அவள் பெயரிட்டு எதிரொலித்துக் கொண்டிருக்கும்
இது போக இத்யாதிகளாய் இரவுக் கோட்டான்களும்,
அரவமற்ற நிசப்தத்தில் கதறியோடும் மின்விசிறியும்
அவள் பெயர் சொல்லிக் கூவும்
அனைத்தும் நீங்கிய ஓர் நாளில்
இசைவாய் என் இயல்பில் நிலைத்தபின்
பாவமென்று என்னை மன்னித்ததாய்
மிஞ்சியவைகளையும் ஏறி நசுக்கிச் செல்வாள் அவள்.
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ, மதுரை.