அஜித் கொடுத்த ஜிகர்தண்டா!





‘‘ஒரே நாளில் ஒருத்தருடைய தலையெழுத்தை பாலைவனமாகவோ, சோலை வனமாகவோ மாற்றக்கூடிய சக்திகொண்டதுதான் சினிமா. இதற்கு உதாரணமாக என் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை சொல்கிறேன்’’ என பீடிகையோடு பேச ஆரம்பித்தார் எஸ்.ஜே.சூர்யா.

‘‘வாலி’ படத்தில் இரண்டு அஜித்களும் வரும் காட்சியில், அண்ணன் அஜித் எப்படி உட்கார வேண்டும் என்று நான் பொசிஷன் சொல்லிக்கொடுக்கும் காட்சியைத்தான் இந்தப் படத்தில் பார்க்கிறீர்கள்.
‘ஆசை’ படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தபோதுதான் அஜித்துடன் எனக்குப் பழக்கம். உதவி இயக்குனர்களில் எனக்கென்று அஜித் மனதில் தனி இடம் இருந்தது. ‘உங்கிட்ட நிறைய திறமை இருக்கு... சீக்கிரமா படம் பண்ணு’ என்று என்னை ஊக்கப்படுத்தி வந்தார் அவர். ‘ஆசை’ ரிலீசுக்குப் பிறகு அவரை நான் சந்திக்கவேயில்லை. மூன்று வருடம் கழித்து ‘உல்லாசம்’ படப்பிடிப்பில் அவரை சந்திக்க நேர்ந்தது. ‘ஹேய்! நீ இன்னும் அசிஸ்டன்ட்டாதான் சுத்திக்கிட்டு இருக்கியா’ என விசாரித்தார். அதோட விடலை... ‘போய் கதை பண்ணிட்டு வா. நல்லாயிருந்தா படம் பண்ணுவோம்’ என்றார். நாக்கு வறண்டு போனவன் கையில் ஜிகர்தண்டா கொடுத்ததுபோல, அஜித் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்குள் அப்படியொரு சந்தோஷத்தைக் கொடுத்தது.

‘வாலி’ படத்துக்கு எல்லாம் ரெடி! ஒரு வாரத்தில் ஷூட்டிங் தொடங்குவதாக இருந்தது. அடையாறு போட் கிளப்பில் ஷூட்டிங்கிற்காக ஒரு வீட்டில் பர்மிஷன் கேட்டு வைத்திருந்தோம். படப்பிடிப்புக்கு முந்தைய நாள் அந்த வீட்டு உரிமையாளரிடம் ஞாபகப்படுத்தலாம் என்று அங்கு போனேன். ‘திடீரென விருந்தாளிகள் வருவதால் வீடு தரமுடியாது’ என குண்டை தூக்கிப் போட்டார் வீட்டு ஓனர்.
‘சார், உங்க விருந்தாளிகளுக்கு வேண்டுமானால் கம்பெனி செலவில் ஹோட்டல்ல ரூம் போட்டுத் தர்றதுக்கு ஏற்பாடு பண்றேன். தயவுசெய்து கோவாப்ரேட் பண்ணுங்க’ எனக் கேட்டேன். ம்ஹும்... அவர் மசிவதாயில்லை. ‘சார், இது எனக்கு முதல் படம். முதல் நாளே ஷூட்டிங் கேன்சல் ஆனால், சென்டிமென்ட்டாக நினைத்து படத்தையே நிறுத்திடுவாங்க’ என்று கெஞ்சினேன். அப்போதும் அவர் முடிவில் உறுதியாக இருந்ததால் நானும் ஒரு முடிவைச் சொன்னேன்.

‘ஓகே சார்! நீங்க வீடு தர வேண்டாம். நாளைக்கு காலையில நீங்க தூங்கி எழுந்ததும் ஜன்னல் வழியே பாருங்க. வெளில இருக்கிற அந்த மரத்துல நான் பிணமா தொங்குவேன்’ என்று சொன்னதுதான் தாமதம்... அரண்டு போன அவர், இற(ர)ங்கி வந்தார். இந்தப் போராட்டத்திற்குப் பிறகு நடந்த முதல் நாள் படப்பிடிப்பில் எடுத்த முதல் ஷாட்தான் நீங்கள் பார்க்கும் இந்தப் புகைப்படம்!’’
- அமலன்
படம் உதவி: ஞானம்