வயாகரா மீன்! அப்புறம்





மீன்களின் இனப்பெருக்கத்திற்காக போடப்பட்ட 45 நாட்கள் தடைக்காலம் முடிந்து கடலுக்குள் வலை வீசத் தொடங்கி விட்டனர் மீனவர்கள். விலை குறைவாகவும் ஃபிரஷ்ஷாகவும் கிடைப்பதால் சென்னை காசிமேட்டை மொய்க்கிறது மீன் பிரியர்களின் கூட்டம். மீன் வாடை மூக்கைத் துளைக்க ஒரு ரவுண்ட் அடித்தோம். கடலில் சிக்கிய மீன்களும், நம் காதில் சிக்கிய தகவல்களும் இதோ...


''பூமியின் கால்வாசியில இருக்கற நிலத்தில் கோடிக்கணக்கான மனிதர்கள் வெவ்வேற முகங்களோட வெவ்வேறு விதமாக இருக்கும்போது, முக்கால்வாசியா இருக்கற கடல்ல எத்தனைவிதமான உயிரினங்கள் இருக்கும்ங்கறதை கணக்கு போடுறது கஷ்டம் சார்’’ என்றபடி மீன் புராணம் பேச ஆரம்பித்தார் வட சென்னை மீனவ கிராமங்களின் ஐக்கிய பஞ்சாயத்து சபையின் துணைத் தலைவர் தேசப்பன்.


குறிப்பாக தமிழ்நாட்டின் வங்கக்கடல் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் ருசி மிகுந்ததாம். கேரளத்து அரபிக்கடல் மீனில் ருசி குறைவாம். கடல் நீரின் உவர்ப்புத் தன்மையில் உள்ள வித்தியாசமே இதற்குக் காரணம் என்கிறார்கள். சாதாரணமாக மீன் மார்க்கெட்டில் சங்கரா, கிழங்கான், நெத்திலி, பாறை, வஞ்சரம், வவ்வால், சீலா, நண்டு, இறால் போன்ற சில வகைகளைத்தான் பார்க்கலாம். ஆனால் கடலில் கிடைக்கும் சில அபூர்வ மீன்களும் காசிமேட்டில் கிடைக்கும். கூடைகளில் குவித்துவைத்து ஏலம் விடும்போது வாங்கினால் விலையும் மலிவு!


சுதும்பு, காரப்பொடி, பால்சுறா போன்ற மீன்களை பூண்டு அதிகம் சேர்த்து குழம்பு வைத்துக் கொடுத்தால், தாய்ப்பால் அதிக அளவில் சுரக்குமாம். பால் சுரப்பைத் தூண்டும் மாத்திரை தயாரிக்க காரப்பொடி மீன்கள் பயன்படுகிறதாம். சாதா சங்கரா, சிவப்பு சங்கரா, தொப்பை சங்கரா, பெரிய சங்கரா, மட சங்கரா, நகரை என இருபதுக்கும் மேற்பட்ட சங்கரா வகையில் உருளை சங்கராதான் முதல் தரம்.


மார்க்கெட்டில் கொடுவா என்று விற்கப்படும் மீன் ஒரிஜினல் கொடுவா இல்லையாம்... கொடுவாவில் பல ரகங்கள் உண்டு. இதில் கொருக்கை என்ற வகையே கொடுவா என்ற பெயரில் விற்கப்படுகிறது. ‘‘நீளவாக்கில் இருப்பதுதான் ஒரிஜினல் கொடுவா. அது அபூர்வமாதான் கிடைக்கும். ருசியும் தூக்கலா இருக்கும்’’ என்கிறார்கள் காசிமேடு மீனவர்கள்.


வவ்வால் மீன்களில் கருப்பு வவ்வால், வெள்ளை வவ்வால், ஐ வவ்வால் என்ற வகைகள் உண்டு. இதில் ஐ வவ்வால் ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய் வரை போகிறதாம். சுறாவிலும் வரி சுறா, பால் சுறா, ரத்த சுறா என்று பலவகைகள் உண்டு. ரத்த சுறாவை பலரும் விரும்பி வாங்குவதில்லை. வெளிநாடுகளில் இதை புட்டு செய்து சாப்பிடுகிறார்கள். மீன் சந்தைகளில் பெரிய சைஸ்களில் விற்கப்படுவது வஞ்சிரம் மீன் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அதன் பெயர், மாவலசி! இரண்டு கிலோ எடை வரைக்கும் இருப்பதுதான் வஞ்சிரம். அதற்கு மேல் வளரும் மீன்களை மாவலசி என்றே குறிப்பிடுகிறார்கள். 50 கிலோ எடை வரை வளரும் இந்த மீன், சுறாவுக்கு அடுத்ததாக வேக நீச்சல் போடக்கூடியதாம்.

திருக்கையில் புள்ளி திருக்கை, படங்கா, கப்ப திருக்கை என வெரைட்டிகள் உண்டு. இதில் படங்காவை புட்டு செய்து சாப்பிடலாம். இறால்களில் நாம் சாப்பிடக் கிடைப்பது சொற்பமே! சிங்க இறால், மட இறால், ஓ.பி இறால் என அருமையான மூன்று வகைகளும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரெட் ரிங் எனப்படும் இறால் குளிர் நிலையிலேயே வாழுமாம். இந்த வகை இறால் ஆழ்கடல் பகுதியை விட்டு மேலே வருவது அரிது என்பதால், கிடைப்பது குதிரைக் கொம்பு என்கிறார்கள். இந்த இறாலை உண்டால் ஆண்மை பெருகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்படி அரிதாகவும், ‘அந்த’ விஷயத்துக்கு உகந்ததாகவும் இருக்கும் ரெட் ரிங் ஆயிரக்கணக்கில் விலை போகிறது!

ஆக்டோபஸ் போல அருவருப்பான தோற்றம் தரும் கடம்பா வகை மீன்களும் தாம்பத்ய உணர்வைத் தூண்டும் வல்லமை மிக்கதாம்! நம்மூர் சந்தைகளில் கிலோவுக்கு நான்கைந்து நிற்கும் குட்டியூண்டு சைஸ் கடம்பா மீன்களே விற்கப்படுகின்றன. ஒன்றரை கிலோ அளவிலான பெரிய கடம்பாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

பார்க்க பாம்பு போலவே இருக்கும் குழி ஆறா மீன்களை யாரும் வாங்கி வீடுகளில் சமைப்பதில்லை. பெரிய ஹோட்டல்களில் இந்த மீன்களை மெஷினில் அழகாக துண்டு போட்டு ‘வஞ்சரம்’ என்ற பெயரில் வஞ்சகமாக விற்கிறார்கள்.

இந்த மீனின் இன்னொரு விசேஷம்தான் ‘செம மேட்டர்’. இதன் வயிற்றில் ‘மெட்டி’ எனப்படும் குடல் போன்ற பகுதி இருக்கிறது. வயிற்றைக் கிழித்து இந்த மெட்டியை எடுத்து, சுத்தமாகக் கழுவி காய வைப்பார்களாம். பிறகு இதை அரைத்துப் பொடியாக்கி வயாகரா போன்ற ஆண்மை சக்தி தரும் மாத்திரை தயாரிப்புக்கு பயன்படுத்துகிறார்களாம். ‘‘மெட்டியில் தயாரிக்கும் பவுடர், பத்து வயாகராவுக்கு சமம் சார்’’ என்று சில மீனவர்கள் சொல்வதை நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
- அமலன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்