திருப்புமுனை : கிரிக்கெட்டர் அஷ்வின்





‘‘தென் ஆப்ரிக்காவில் ஒரு ட்வென்ட்டி 20 மேட்ச். ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பர் ஓவரில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கிற நேரம். ஆறு பந்துகளில் குறைவான ரன்களை விட்டுக் கொடுத்தால் ஹீரோ. யார் பந்து வீசப்போவது என்கிற கேள்வியோடு பவுலர்களை பார்க்கிறார் கேப்டன் தோனி. அனுபவம் உள்ள சீனியர்கள் அமைதி காக்க, ஆர்வத்தோடு கை தூக்கினேன். முதல் பந்து மைதானத்தைத் தாண்டி பறந்து போக, ‘சிக்ஸர்’ என்று கை உயர்த்துகிறார் அம்பயர். பயமும் பதற்றமும் தொற்றிக் கொள்ள, அடுத்தடுத்து எல்லைக் கோடு தாண்டி பறக்கிறது பந்து. 22 ரன்களை விட்டுக் கொடுத்து தோற்றோம். சோர்ந்து உட்கார்ந்தேன். ‘பெரிய பருப்பு மாதிரி கை தூக்கின... இதுக்குத்தானா?’ என்பதுபோல பலரின் பார்வையும் இருந்துச்சு.

ஆனாலும் ‘ரிஸ்க்’ என்று ஒதுங்காமல், முன்வந்து கை தூக்கியது சரியென்றே எனக்குப் பட்டது. மற்றவர்கள் செய்யத் தயங்குவதை, நாம் செய்யும்போது வெற்றி தோல்வி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், முதல் சிக்ஸரில் பயமும் பதற்றமும் படாமல் இருந்திருக்கணும். இன்னும் நன்றாகப் பந்துவீசி இருப்பேன். இனிமே எதுக்காகவும் பயப்படப் போறதில்லை என அப்போது முடிவெடுத்தேன்’’

- தீர்க்கமாகப் பேசுகிறார் அஷ்வின். 110 கோடி இந்தியர்களில் 11 பேர் மட்டுமே நாட்டுக்காக ஆட முடிகிற விளையாட்டில், கணிக்க முடியாத ஏற்ற இறக்கங்களே கிரிக்கெட்டின் தனித்தன்மை. வெற்றியின்போது கோடிக்கணக்கான கைகள் தட்டுவதற்கும், தோல்வியின்போது கோடிக்கணக்கான வாய்கள் திட்டுவதற்கும் தயாராக இருக்கிற தேசத்தில் அஷ்வின், மிஸ்டர் கூல்!


‘‘வர்றது வரட்டும்... பாத்துக்கலாம்னு தைரியமா இல்லாம போனா, எந்த விளையாட்டையும் விளையாட முடியாது. ஆறு வயசுல டென்னிஸ் பந்துல ரோட்டுல விளையாடும்போதும், இன்னைக்கு இந்தியாவுக்காக இன்டர்நேஷனல் ஸ்டேடியத்துல விளையாடும்போதும் கத்துக்கிட்ட விஷயம் இதுதான். அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போய் குடும்பம் நடத்துற சாதாரண குடும்பம். படிப்பு, மார்க், கவர்மென்ட் வேலை, கல்யாணம், குழந்தைங்கன்னு வாழ்க்கையோடு விளையாட வேண்டி இருந்ததால, அப்பாவோட கிரிக்கெட் ஆர்வத்துக்கு ஊக்கம் கிடைக்கலை. டி.வில மேட்ச் பார்த்து சந்தோஷப்பட்டுக்கிட்டார்.


அப்பாகூட சேர்ந்து டி.வியில் மேட்ச் பார்த்துட்டிருந்த எனக்குள்ள கிரிக்கெட் மெதுவா இறங்க ஆரம்பிச்சது. ‘நான் விளையாட முடியலை. பையன் விளையாடுறான்’னு அப்பாவுக்குப் பெருமை. தினம் காலையில 5.30 மணிக்கு எழுந்து, கோயிலுக்கு கூட்டிட்டுப் போற மாதிரி கிரிக்கெட் மைதானத்துக்குக் கூட்டிட்டுப் போனாரு. ‘நல்லா விளையாடு. அப்படியே படிச்சிக்கோ’ன்னு சொன்னாங்க பெத்தவங்க. மார்க் ரேஸ்ல பசங்க எல்லாம் தலைதெறிக்க ஓடிட்டு இருந்தப்ப, ஆல்ரவுண்டரா கிரிக்கெட்ல கலக்கணும்னு நான் ஓடிட்டு இருந்தேன். அப்பா, அம்மா ரெண்டு பேரோட ஒரு மாச உழைப்புக்குக் கிடைக்கிற சம்பளம், எனக்கு ஒரு பேட் வாங்குற பணமா இருக்கும். சந்தோஷமா வாங்கிக் கொடுத்தாங்க. சனி, ஞாயிறா இருந்தா, அப்பாவோட டூவீலர் பெட்ரோல் டேங்க் மேல நான் இருப்பேன். பின்னால அம்மா உட்கார்ந்திருப்பாங்க. குடும்பத்தோட டூர் போற மாதிரி, காலையில சிலுசிலுனு அடிக்கிற காத்துல மைதானத்துக்குப் போவோம். இந்திய அணியில் இடம் பிடித்ததைவிட அதிகம் சந்தோஷம் தந்த நாட்கள் அவை.

என் கனவுக்கு நான் ஓடினா பரவாயில்லை... என் குடும்பமே ஓடிவரும்! ஸ்கூல் முடிஞ்சி தினம் ப்ராக்டீஸ் பண்ண போயிடுவேன். ஓய்வு எடுக்க வேண்டிய வயதில் என் தாத்தா, ஸ்நாக்ஸ், டிரஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு சைக்கிள்ல வருவார். கிடைக்கிற இடத்துல நியூஸ் பேப்பர் விரிச்சு படுத்துட்டு, பொறுமையா இருந்து என்னை வீட்டுக்குக் கூட்டிட்டு வருவார்.


இத்தனை பேர் உழைப்பையும் அர்த்தமுள்ளதாக்கற பொறுப்பு என்கிட்டே இருந்துச்சு. 14 வயசுக்கு உட்பட்டோர் டீம்ல, மாநில அளவில் விளையாடினேன். மத்தவங்க கவனம் என் மேல பதியுற நேரத்துல, இடுப்பில் காயம் ஏற்பட்டு, இனிமே விளையாட முடியாதுங்கிற நிலைமை வந்துச்சு. அப்பா அப்படியே திகைச்சு நின்னுட்டார். முதுகெலும்பில் ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னார் ஒரு டாக்டர். இன்னொரு டாக்டர், இடுப்பில் இரும்பு ப்ளேட் வைச்சு ஆபரேஷன் செய்யணும்னு சொன்னார். 14 வயசுல இருந்து 20 வயசு வரைக்கும் விளையாட்டுல ரொம்ப முக்கியமான காலகட்டம். அப்போ கிடைக்கிற பயிற்சி, அங்கீகாரம்தான் அடுத்த கட்டத்துக்குக் கூட்டிட்டு போகும். அந்த வயசுல விளையாடவே முடியாம போனா, எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட வேண்டியதுதான். ஆசையைவிட உயிர் முக்கியம்னு முடிவெடுத்து, ஆபரேஷனுக்குத் தயாராகிட்டோம்.

இன்னொரு ஸ்பெஷலிஸ்ட்கிட்ட செக்கப் போனப்ப, ‘இடுப்பில் சின்னதா ஒரு ஆபரேஷன் போதும். ரெண்டு மாச ரெஸ்ட் போதும். அப்புறம் மெதுவா விளையாட ஆரம்பிச்சுடலாம்’னு சொன்னார். திரும்பவும் ஒருமுறை பொறந்த மாதிரி இருந்தது. சாதாரண மக்களை டாக்டர்கள் எப்படிக் குழப்புவார்கள்ங்கறதுக்கு நேரடி அனுபவமா இருந்த இதை என்னால இப்பவும் மறக்க முடியாது.
பாஸிட்டிவ்வா நடந்த விஷயங்கள்தான் எல்லாருக்கும் திருப்புமுனையா இருக்கும். ‘இனிமே விளையாட முடியாது’ங்கற நிலை வந்தப்பதான், ‘கிரிக்கெட்டை எவ்வளவு நேசிக்கிறேன்’னு புரிஞ்சது. இருக்கிறபோது தெரிகிற அருமையைவிட, இல்லாதபோது இன்னும் ஆழமா புரியும். ‘எப்போ கிரவுண்டுக்கு போவேன்’னு துடிச்சிட்டு இருந்தேன். குளிச்ச மாதிரி வியர்வையில் தொப்பலா நனையற அளவுக்கு விளையாடலைன்னா எனக்கு என்னவோ மாதிரி இருக்கும். ஜுரம் அடிச்சா டாக்டர்கிட்டே போவாங்க. எனக்கு விளையாடினா சரியா போகும். கோபமா இருந்தாலும், சந்தோஷமா இருந்தாலும் விளையாடிக்கிட்டே இருக்கணும். வருஷம் 365 நாள்ல, 300 நாளாவது ஒரு கிரவுண்டுல இருந்தாதான் தொடர்ந்து நிக்க முடியும்.

இதையெல்லாம் பண்ணிட்டு இந்திய அணியில் இடம் பெறாமல் போனால், எதிர்காலம் கேள்விக்குறியாயிடும். திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காம வாழ்க்கையைத் தொலைச்சவங்க எத்தனையோ பேர் கண் முன்னால உதாரணமா இருந்தாங்க. ‘எதிர்காலத்தைப் பத்தி கவலைப்படாம விளையாடு. உனக்கு நாங்க சேர்த்து வைக்கறோம். வாழறதுக்கு அது போதும்’னு வீட்ல சொல்லுவாங்க. அந்த வார்த்தைகள் தர்ற நம்பிக்கையை, வேற எதுவும் எனக்குத் தந்தது இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் எம்.பி.ஏ படிச்சி வேலைக்குப் போனாங்க அம்மா. எவ்ளோ சோர்ந்து வந்தாலும், திரும்ப எனர்ஜி தர்ற வீடுதான் என்னோட பலம். ‘வெற்றி, தோல்வியைவிட, விளையாடுவதே முக்கியம்’னு புரிய வச்சாங்க பெத்தவங்க. அடுத்தடுத்து முன்னேறிட்டே போறதுக்கு இந்த ஊக்கம் உதவியா இருந்துச்சு. பெரிய திட்டம் போட்டு, வியூகம் வகுத்து மேல வரலை. எனக்குப் பிடிச்ச விளையாட்டை, விருப்பத்தோட விளையாடிக்கிட்டே இருக்கேன். அடுத்து அடுத்து கிடைக்க வேண்டிய வளர்ச்சிகள் வந்துட்டே இருந்தன. கனவு மட்டுமே போதாது! ஒரு சதவீதம் கனவும், 99 சதவீதம் அதை நிறைவேத்துற முயற்சியும் அவசியம்.

மீடியம் பேஸ் பவுலரா இருந்து, ஸ்பின்னுக்கு மாறினது வாழ்க்கையில் அடுத்த திருப்புமுனை. பேட்ஸ்மேனா வரணும்னு இருந்த என்னை, ‘ஆல்ரவுண்டரா இருடா. உனக்கு பவுலிங் நல்லா வருது’ன்னு சொல்லி மாத்தி விட்டார், செயின்ட் பீட்ஸ் பள்ளியின் கோச் விஜயகுமார். ‘பேட்டிங், ஃபீல்டீங், பவுலிங்னு எல்லா ஏரியாவுலயும் கலக்கினாதான் அது நிஜமான கிரிக்கெட்’னு புரிய வச்சது என் பயிற்சியாளர்கள்தான். டார்கெட் கொடுத்து, விரட்டிக்கிட்டே இருந்தாங்க. என்னை நான் நம்பினதைவிட, பயிற்சியாளர்கள் என் மேல அதிகம் நம்பிக்கை வச்சாங்க. ‘இவனுக்கு இண்டியன் டீம்ல வாய்ப்பு கொடுங்க, தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்துவான்’னு எனக்காக சண்டை போட்டிருக்காரு என் ஸ்பின் கோச் சுனில். நான் விளையாடுறதை கூர்மையாக கவனிச்சி, அவங்க சொன்ன கரெக்ஷன்கள்லதான் என் எதிர்காலம் இருந்துச்சு.

தமிழ்நாடு அணிக்கு ராமன் சார் கோச். தொடர்ந்து உற்சாகப்படுத்திட்டே இருப்பாரு. தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்கு நிறைய பேரை அனுப்பணும்னு எங்களோடு போராடுவார். நல்லா விளையாடிட்டா, ‘சார்! ஆல் ரவுண்டரா இன்னும் நீங்க எனக்கு சரியான வாய்ப்பு தரலை’ன்னு சண்டை போட்டிருக்கேன். ‘தொடர்ந்து மூணு மேட்ச்ல 5 விக்கெட் எடுத்து, 100 ரன் எடு. அப்ப நீ சொல்றதை நான் ஏத்துக்கிறேன்’னு டார்கெட் தருவார். ரஞ்சி டீம்ல பேட்டிங், பவுலிங் ரெண்டுலயும் நான் நல்ல ஆவரேஜ் வச்சிருக்கிறதுக்கு இந்த ஊக்கம் முக்கியமான காரணம். 2011 உலகக் கோப்பையை ஜெயிச்ச அணியில நான் இருந்ததுக்கு, என்னைவிட அதிகம் சந்தோஷப்பட்டது என்னுடைய பயிற்சியாளர்கள்தான். எந்த துறையா இருந்தாலும், ஒருத்தன் ஜெயிக்கிறதுக்கு பலபேரோட பங்களிப்பு கண்டிப்பா இருக்கும். எனக்கு அந்த சப்போர்ட் அதிகம்’’ என்று நன்றியை நினைவுகளாகக் கோர்க்கிறார் அஷ்வின்.

‘‘உங்களோட பெஸ்ட் ஆட்டம் எது?’’ என்று கேட்டால், ‘‘என் அடுத்த மேட்ச்’’ என்று சிரிக்கிறார். ‘சிறந்த ஒன்றை இறந்த காலத்தில் தேடாமல், எதிர்காலத்தில் தேடுகிறவர்களை வெற்றிகள் தேடி வரும்’ என்பது அந்தப் புன்னகையின் அர்த்தமாக இருக்கலாம்.
(திருப்பங்கள் தொடரும்...)
படங்கள்: பரணி