விஜயா டிச்சர்

காலில் விழுந்த ஆனந்தை என்ன செய்வதென்றே விஜயாவுக்குத் தெரியவில்லை. ஏதும் பேசத் தோன்றாமல் அப்படியே சிலையாக நின்று விட்டாள்.

''நம்ம வீட்டுக்குக் கேவலம் உண்டாக்கணும்ங்கறது எனக்கு நோக்கமில்லை அக்கா... இவ போன் பண்ணி, 'வெள்ளிக் கிழமை எனக்குக் கல்யாணம் பண்றதா தீர்மானிச்சிருக்காங்க. அதுக்குள்ளே நீ முடிவு பண்ணலைன்னா சனிக்கிழமை நான் இருக்கமாட்டேன்’னு சொன்னா! என்ன பண்ணச் சொல்றே? நம்ம வீட்டுல நீ மட்டும்தான் எதையும் சரியா புரிஞ்சுக்கறவ... அதான் உனக்கு போன் பண்ணினேன்...’’ என்றான்.

அவனையும், கூடவே காலில் விழுந்த நளினியையும் தொட்டுத் தூக்கினாள் விஜயா. ‘இது நம் வீட்டுக்கு நல்லதா... அந்தப் பெண்ணின் வீட்டுக்கு நல்லதா’ என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண்ணின் தைரியம் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.


பிறந்த வீடு கோபப்படும் என்பதும், புகுந்த வீடு ஏற்றுக் கொள்ளாது என்பதும் தெரிந்து, ஒரு பெண் ‘மணம்... இல்லையேல் மரணம்’ என்று முடிவெடுக்கிறாள் என்றால், அவளுடைய மன உறுதியை நினைத்து விஜயாவுக்குள் ஆச்சரியம் பொங்கியது.

‘‘நீ பத்தாங்கிளாஸ் படிக்கிறே... அவன் இன்னும் காலேஜ் முடிக்கலை... என்ன தைரியத்தில் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணியிருக்கீங்க? ரெண்டு வீட்டுலயும் வெளியே போங்கன்னு சொல்லிட்டா எங்கே போவீங்க... என்ன பண்ணுவீங்க..?’’ என்றாள் கொஞ்சம் கண்டிப்பான குரலில்.

நளினி கொஞ்சமும் அசராமல் பேசினாள்.
‘‘எங்கயாவது வெளியூருக்குப் போய் வேலை தேடுவோம். கிடைக்கிற வேலையைச் செய்துக்கிட்டு, மேலே படிக்க முயற்சி செய்வோம். என்னை வேற ஒருத்தனுக்கு கட்டி வைக்கப் பார்த்தாங்க... அதான் இப்படி முடிவு செய்தோம்...’’ என்றாள். விஜயாவுக்குக் கொஞ்சம் கோபம்கூட வந்தது.


‘‘என்ன பேசறே நீ... வீட்டுல பெரியவங்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரியும்..? எங்க வீட்டு சூழ்நிலை உனக்குத் தெரியுமா... உன் வாழ்க்கை கெட்டுடக் கூடாதுன்னு முடிவு செய்றியே... அங்கே ரெண்டு பொண்ணுகளுக்கு நிச்சயம் முடிஞ்சு கல்யாணத்துக்கு காத்துக்கிட்டிருக்காங்க! அதைப் பற்றி கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தியா? அதுசரி... நம்ம வீட்டுக் கழுதை, உனக்கே தெரியலை! அவகிட்ட நான் எப்படி அதை எதிர்பார்க்க முடியும்? ஏண்டா... அவதான் எதையும் யோசிக்காம கூப்பிட்டாள்னா, நீயும் வந்து கழுத்திலே தாலி கட்டுவியா..?’’ என்று விஜயா பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தபோது கோயில் வாசலில் ஒரு கார் வந்து நின்றது. சரசரவென்று நளினி வீட்டு ஆட்கள் இறங்கினார்கள்.

அண்ணன்காரன் இறங்கிய வேகத்தில் நளினியின் தலை முடியை கொத்தாகப் பிடிக்க, ஆனந்த் சரேலென்று முன்னேறிச் சென்று அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளினான்.
‘‘வெட்டுறா அந்த நாயை! என்ன நெஞ்சழுத்தம் இருந்தா நம்ம வீட்டுப் புள்ள மேல கை வெச்சிருப்பான்... தாலி கட்டுன அந்தக் கை, அவன் தோள்ல இருக்கக் கூடாது...’’ என்று கர்ஜித்தார் நளினியின் சித்தப்பா.

‘‘எங்க வீட்டுப் பொண்ணுக்கு சேலை வாங்கிக் கொடுத்த அன்னைக்கே உன்னை பொளந்திருக்கணும். விட்டதால இன்னிக்கு தாலி கட்டுற அளவுக்கு வந்திட்டே...’’ என்றபடி ஆனந்தின் சட்டையைக் கோர்த்துப் பிடித்தான் நளினியின் அண்ணன்.

அதுவரையில் அமைதியாக நின்ற விஜயா இடையில் புகுந்து தடுத்தபடி அழுத்தமான குரலில் பேசினாள்... ‘‘கொஞ்சம் நிறுத்தறீங்களா! வீட்டுல பிள்ளையைக் கண்டிக்கறதை விட்டுட்டு இங்கே வந்து கூச்சல் போடுறீங்க... அன்னிக்கு நடந்த சம்பவத்துக்குப் பிறகு நாங்க எங்க வீட்டுப் பையனை ஒரு வார்த்தை ஏன்னு கேட்கலை. ஏன்னா, அவன் மனசு எங்களுக்குத் தெரியும்! ஆனா, நீங்க உங்க பொண்ணுக்கு அவசரமா மாப்பிள்ளை பார்த்திருக்கீங்க... பிள்ளைங்க மனசுல குழப்பத்தையும் பயத்தையும் உண்டாக்கினா, இப்படித்தான் முடிவெடுப்பாங்க. மைனர் பொண்ணு அவ... ஆனந்தை அவ கல்யாணம் செய்தது தப்புதான்! ஆனா, நீங்க அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சதும் தப்பு... எல்லா தப்பையும் நீங்க பண்ணிட்டு, கையை வெட்டு கழுத்தை வெட்டுன்னு சொன்னா என்ன அர்த்தம்..?’’‘‘யேய் டீச்சரம்மா... சதி பண்ணி உங்க வீட்டுப் பயலுக்கு என் புள்ளையைக் கட்டி வச்சுட்டே இல்லே?’’ என்று நளினியின் அப்பா விஜயா பக்கம் திரும்பியபோது இன்னொரு கார் வந்து நின்றது. நளினியின் அம்மாவும் அத்தையும் இறங்கினார்கள். மாலையும் கழுத்துமாக நின்ற நளினியைப் பார்த்ததும் வாய் பொத்தி விசும்பினாள் அம்மா.

‘‘பொண்ணை கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கலைன்னா, இப்படித்தான் கேவலப்பட்டு நிக்க வேண்டியிருக்கும். என்னடி அழுகை உனக்கு..?’’ என்ற அப்பா, யார் மீது காட்டலாம் என்று இருந்த எரிச்சலை அம்மா மீது கொட்டினார்.

‘‘அண்ணே... என்னண்ணே இது? நீ ஒரு வார்த்தை சொன்னதும் எம்புள்ளையைக் கூட கேட்காம வந்தேனே... இதுக்குத்தான் கூப்பிட்டியா? எவன் பிள்ளைக்கோ என் மகனை அப்பனாக்கப் பார்த்தியே... எஞ்சாமி அய்யனாரே! என் குடும்பத்தைக் காப்பாத்திட்டேப்பா. நீங்க நல்லாயிருங்க... நான் வர்றேன்’’ என்று அப்படியே திரும்பிவிட்டாள்.

ஆவேசமாக நளினி பக்கம் திரும்பிய தந்தை, ‘‘இந்தக் கோயில்ல வச்சு சொல்றேன்... எங்க குடும்பத்துக்கும் உனக்கும் இருந்த உறவு அத்துப் போச்சு... வாங்கடா..!’’ என்று அழுகையும் கண்ணீருமாகச் சொல்லிவிட்டு வெளியேற, அடுத்த நிமிடம் கோயிலுக்குள் ஆனந்த், நளினி, விஜயா மட்டும் நின்றார்கள்.

புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது விஜயாவுக்கு. நளினி கண்களில் நீர் கோர்க்க நின்றிருந்தாள். ஆனந்த் கோபத்திலும் பதற்றத்திலும் பெருமூச்சு விட்டபடி நின்று கொண்டிருந்தான். விஜயா கோயில் வாசலில் நின்றிருந்த ஆட்டோவை அழைத்தாள்.

‘‘அவனை நீ மன்னிச்சு ஏத்துக்கலாம்... ஆனா, நாங்க மன்னிக்கத் தயாரா இல்லை! அப்படியே ஜோடியா எங்கேயாவது போய் பிச்சை எடுக்கச் சொல்லு. இந்த அழகு ஜோடிக்காக ஆரத்தி கரைச்சு வைக்கச் சொல்லியிருக்கியே... உனக்குப் பைத்தியமா? கிளிப்பிள்ளைக்குச் சொல்ற மாதிரி அன்னைக்கு படிச்சுப் படிச்சு சொன்னேனே... எல்லாத்தையும் கேட்டு மண்டையை ஆட்டிட்டு, இப்ப இப்படிப் பண்ணிட்டு வந்து நிக்கிறானே... அப்படியே போயிடு!’’ என்று ஆவேசத்தில் சாமி வந்தது போல கத்தினார் அப்பா.

விஜயா அமைதியாக நின்று கொண்டிருந்தாள். அப்பாவுக்குப் பின்னால் நின்றிருந்த அம்மா, ஆரத்தித் தட்டை கையில் மறைத்தபடி வைத்திருப்பதைப் பார்த்தாள். இப்போது அவளுக்குள் கொஞ்சம் தைரியம் வந்துவிட்டது.

‘‘அப்பா! ஆனந்த் நம்மளை எல்லாம் காப்பாத்தியிருக்கான். இன்னிக்கு இந்தக் கல்யாணம் நடந்திருக்கலைன்னா, ரெண்டு நாள்ல நம்ம ஒட்டுமொத்த குடும்பமும் ஜெயில்ல இருந்திருக்கும். ‘என் சாவுக்கு இந்தக் குடும்பம்தான் காரணம்’னு எழுதி வச்சுட்டு அவ செத்துப் போயிருப்பா... என்ன செய்யச் சொல்றீங்க..?’’ என்றாள் விஜயா.
அப்பா கொஞ்சம் அதிர்ச்சியாக விஜயாவைப் பார்த்தார்.

‘‘ஆமாப்பா... இந்தப் பொண்ணுக்கு அவங்க வீட்டுல அவ்வளவு பிரஷர் கொடுத்திருக்காங்க. என்ன செய்யறதுன்னு தெரியாம இவன்கிட்டே சொல்லியிருக்கா... இவன் பயந்துட்டான். சட்டுன்னு முடிவு பண்ணிட்டாங்க... சரி, இந்த மட்டும் எங்கேயாவது பயந்து ஓடாம நம்ம வீட்டுக்காவது வந்தாங்களேன்னு நினைச்சுக்கோங்க... வாங்கப்பா, உள்ளே போய்ப் பேசலாம்...’’ என்றாள்.
அப்பா அதிர்ச்சி குறையாதவராக, ‘‘உள்ளே கூட்டிட்டு வாடா...’’ என்றார். அம்மா மகிழ்ச்சியோடு ஆரத்தி எடுக்க, நளினியும் ஆனந்தும் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அம்மா நளினியை அழைத்து விளக்கை ஏற்றச் சொல்ல, அப்பா கடுப்பாக அம்மாவைப் பார்த்தார்.
‘‘என்ன இருந்தாலும், முறைன்னு ஒண்ணு இருக்கில்லே...’’ என்றாள் அம்மா.

‘‘எல்லாம் முறையாதான் நடக்குதாக்கும்... சோமுவை எங்கே காணோம்? சம்பந்திகளுக்கு என்ன சொல்றதுனு தெரியலையே...’’ என்றபடி ஈஸிசேரில் சாய்ந்தார்.
ஆனந்தை அழைத்த விஜயா, அப்பாவுக்கு அருகில் வந்து நின்றாள். அப்பா அவளை நிமிர்ந்து பார்த்தார்.

‘‘அப்பா! ஆனந்த்கிட்ட சில விஷயங்களைச் சொல்லப் போறேன்... நீங்களும் கேட்கணும்னுதான் இங்கே கூட்டிட்டு வந்தேன்...’’ என்றவள், ஆனந்த் பக்கம் திரும்பினாள்.

‘‘தேவையோ இல்லையோ... தெரிஞ்சோ, தெரியாமலோ நீயும் குடும்பஸ்தன் ஆகிட்டே! இன்னும் அலட்சியமா ஊரைச் சுத்திக்கிட்டிருந்தா நல்லாயிருக்காது. காலேஜ் நேரம் போக மீதி நேரம் நீ அப்பா கடையில் உட்காரணும். உன் சம்பளம்னு அப்பா ஒரு தொகையை எடுக்கற அளவுக்கு உன் உழைப்பு இருக்கணும்... அந்தத் தொகையில்தான் நீயும் நளினியும் படிக்கணும்... இதெல்லாம் நடந்தாதான் நீ செய்த கல்யாணம் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும்...’’ என்றாள்.

‘‘அக்கா... நீ என்ன சொன்னாலும் செய்யறேன்க்கா! அப்பா... உங்களை அசிங்கப்படுத்தணும்னு நான் இப்படி செய்யலைப்பா! அந்தப் பொண்ணு செத்துப் போயிடுமோன்னு பயந்து இப்படிச் செய்துட்டேன்... என்னை மன்னிச்சிடுங்கப்பா...’’ என்று காலில் விழுந்தான் ஆனந்த்.
அப்பா அவனை தொட்டுத் தூக்க முற்பட்டபோது வாசலில் நிழலாடியது.
‘‘கல்யாண விருந்துல நாங்க கலந்துக்கலாமா..?’’ என்ற குரல் கேட்டு விஜயா எட்டிப் பார்த்தாள்.
அப்பா, அம்மாவோடு வாசலில் நின்று கொண்டிருந்தான் வடிவேல்.
(அடுத்த இதழில் முடியும்)
படங்கள்: புதூர் சரவணன்