தெரிஞ்சது!





குமாரின் செல்போன் ஒலித்தது. அழைப்பது நண்பன் சந்தோஷ். அவனிடம் இந்த விஷயத்தை சொன்னால் சந்தோஷப்படுவான்!

ஆன் செய்த குமார் உற்சாகமாகச் சொன்னான். ‘‘சந்தோஷ்! எனக்குக் கவிதைப் போட்டியில பரிசு கிடைச்சிருக்கு. அங்கதான் போயிட்டிருக்கேன்!’’ என்றான்.

‘‘அப்படியா? நேத்து நாம ஒரு இடம் பார்த்தோமே... அதை சதுர அடிக்கு 50 ரூபாய் குறைச்சுப் பேசி முடிச்சுட்டேன்! கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் லாபம்டா...’’ - உற்சாகமாக ஒலித்தது சந்தோஷின் குரல்.

‘‘இப்ப நான் ரோட்டுல இருக்கறேன்... சரியா கேக்கலை! போயிட்டு உனக்கு கால் பண்றேன்’’

- கட் பண்ணி விட்டு மனைவி பக்கம் திரும்பிய குமார், ‘‘கவிதைப் போட்டியில் ஜெயிச்சிருக்கேன்னு சொல்றேன்... எதையுமே கண்டுக்காம, இடத்தைப் பத்தி பேசுறான்... ரசனை கெட்ட பய!’’ என்றான் சலித்துக் கொண்டு.

‘‘சரி விடுங்க... அவருக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்!’’ - சமாதானம் சொன்னாள் குமாரின் மனைவி.

தொடர்பு துண்டிக்கப்பட்ட செல்லை கடுப்போடு பார்த்த சந்தோஷ், ‘‘ஒரு இடத்தை விலை பேசி ஒரு லட்சம் ரூபாய் குறைச்சிருக்கேன்னு சொல்றேன். ஏதோ கவிதை எழுதிட்டானாம்... நூறு ரூபாய் பரிசு வாங்கியிருக்கானாம். அதைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கான். காசோட அருமை தெரியாதவன்!’’ என்று சலித்துக் கொண்டான்.

‘‘சரி விடுங்க... அவருக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்!’’ என்றாள் அவன் மனைவி.