அழைப்பிதழ்





அச்சாபீஸ் உள்ளே முதலாளி நுழைந்தார். இரவு பதினோரு மணி வரை நேற்று பத்திரிகை வேலைகள் நடந்ததால், ஒன்பது மணிக்கு வர வேண்டிய பணியாட்கள், அரை மணி நேரம் தாமதித்தே வந்தார்கள். எல்லோருக்கும் கண்கள் சிவந்திருந்தன. மின்சாரத் தட்டுப்பாட்டால் வாங்கி வைத்த ஆர்டர்களை நேரத்துக்குத் தர முடியாமல் முதலாளி திணறினார். மின்சாரம் இருக்கும் நேரம் ஓவர் டைம் பார்த்து தொழிலாளிகள் சோர்ந்தனர்.

‘‘ஏம்பா, அந்த புலியூர் அம்மா குடுத்துச்சே... பையனோட கல்யாணப் பத்திரிகை! அதை ஒரு பண்டல் கட்டி கொண்டாங்கப்பா. ஆயிரம் ரூபா அட்வான்ஸ் குடுத்துடுச்சு. முந்நூறு பாக்கி. மூணு நாளா பிரஸ்சுக்கும் வீட்டுக்கும் நடையா நடக்குது பாவம். கரன்ட் பிரச்னையால அச்சாபீஸையே மூடிட்டு போயிடலாம்னு இருக்குது’’ என்று புலம்பினார்.

பொடியன் பத்திரிகை பண்டலைக் கொண்டு வந்து டேபிளில் வைத்தான். மேலே பில் எழுதி கயிற்றினுள் செருகியிருந்தான். அவரவர்கள் வேலையில் மூழ்கினார்கள். அப்போதுதான் அந்தம்மா பதைபதைப்போடு அச்சகத்தினுள் நுழைந்தாள். ‘‘ஏனுங்க, எங்க பையன் பத்திரிகையை அச்சடிச்சுட்டீங்களா?’’

‘‘அவசரம் அவசரம்னு பறவா பறந்தீங்க, உங்களுதுதான் நேற்று நைட் வேலை போட்டு முடிச்சுட்டோம்... முந்நூறு ரூபாய் பேலன்ஸ் இருக்குதுங்க!’’ என்றார் முதலாளி.
“இனி இதை யாருகிட்டங்க குடுக்கறது..?’’ - அவள் கண்கள் கலங்கியிருந்தன.
‘‘ஏம்மா, என்னாச்சு?’’
‘‘பொண்ணு நேத்து நைட்டு ஓடிப்போச்சுங்களாம்!’’