வாழ்க்கைச் சிலந்தி!

‘சயாமீஸ் ட்வின்ஸ்’ எனப்படும் ஒட்டிப் பிறக்கும் இரட்டையர் மீது லேட்டஸ்ட்டாக தமிழ் சினிமாவுக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. ‘மாற்றான்’ படத்தில் சூர்யாவின் கேரக்டர் அதுதான் என்கிறார்கள். ‘சாருலதா’ என்ற படத்தில் ப்ரியாமணி இப்படிப்பட்ட வேடத்தில் டபுள் ஆக்ட் செய்யப் போகிறார். சுவையான கதையோட்டத்துக்காகவும், வசீகரத்துக்காகவும் இப்படிப்பட்ட மனிதர்களாக நட்சத்திரங்கள் நடித்துக் காட்டலாம். நிஜத்தில் அவர்களின் வாழ்க்கை வலி, உலகின் அத்தனை மொழிகளில் இருக்கும் எல்லா வார்த்தைகளுக்குள்ளும் அடங்காத ஒன்று! தனித்தனியாகவும் வாழ முடியாமல், இணைந்தும் வாழ முடியாமல், இரண்டு மனசுகளின் அபிலாஷைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாமல், இருவரில் யாருக்கும் அந்தரங்கம் என ஒன்று இல்லாமல்... வாழ்ந்து பார்க்கிறவர்களுக்கே புரியும் வலி!

கங்காவுக்கும் யமுனாவுக்கும் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகேயுள்ள கெசப்பூர் கிராமத்தில் தனித்தனி வாக்காளர் அட்டைகள் இருக்கின்றன. மம்தா முதல்வரான கடந்த சட்டசபைத் தேர்தலில்தான் முதன்முதலாக அவர்கள் வாக்களிக்கச் சென்றார்கள். அவர்களது வாக்குரிமை குறித்து ஏக சர்ச்சைகள்! ‘‘ஒருவரை இரண்டு ஓட்டு போட அனுமதிக்க முடியாது’’ என அதிகாரிகள் சிலர் தடுத்தனர்.
‘‘எங்களில் யாருக்காவது வாக்குரிமை மறுக்கப்பட்டால், தேர்தல் ஆணையத்தின் மீது வழக்குத் தொடர்வோம்’’ என்று போராடி ஓட்டுப் போட்டு வந்திருக்கிறார்கள் இருவரும்.

உண்மையில் கங்கா, யமுனா விஷயத்தில் ‘அவர்களா’ அல்லது ‘அவரா’ என்று சொல்ல முடியாத வினோதத்தை நிகழ்த்தியிருக்கிறது இயற்கை. கங்காவும் யமுனாவும் இடுப்புக்குக் கீழே ஒரே ஜீவன். தொப்புள் கொடியிலிருந்து இருவராகப் பிரிந்திருக்கிறார்கள். கொல்கத்தாவின் சர்க்கஸ் மேடைகளில் காட்சிப் பொருளாக வந்து போகும் இந்த ஓருடல் ஈருயிர் ஜீவன்களை தனது குறும்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் கோவை இளைஞர் ராஜேந்திர பாலா.


‘‘சினிமா கனவுல சென்னையில சுத்திட்டிருக்கேன். எங்க போனாலும் ‘என்ன பண்ணியிருக்கே’ங்கிற கேள்வியத்தான் முதல்ல கேக்கறாங்க. சின்ன வயசுல கிறுக்குன கதை, கவிதைகள்லாம் இன்னிக்கு சினிமா என்ட்ரிக்கு பயன்படறதில்லை. அவங்களைப் பொறுத்தவரை பிரபலமானவங்ககிட்ட அசிஸ்டன்ட்டா இருந்திருக்கணும்; இல்லாட்டி ஒரேயொரு ஷார்ட் ஃபிலிமாவது எடுத்திருக்கணும். ரெண்டு நிமிஷம் ஓடுனாக்கூட பரவாயில்ல. நானும் ஷார்ட் ஃபிலிம் எடுக்கற முயற்சியில இறங்குனேன். அந்த சமயத்துல ‘மாற்றான்’ அறிவிப்பு வந்துச்சு. ‘படத்துல சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையரா வர்றார்’ங்கிற தகவல் எல்லோரையும் போல எனக்குள்ளும் ஆர்வத்தை அள்ளிவிட, அப்படிப்பட்டவங்களைத் தேட ஆரம்பிச்சேன்’’ என்கிற பாலாவின் மனதில் ஊனமுற்றவர்கள் குறித்த வித்தியாச சிந்தனை பள்ளி நாட்களிலிருந்தே இருந்திருக்கிறது.

‘‘எங்கூட ஸ்கூல் படிச்ச ஒரு பொண்ணுக்கு நடக்கறதுல கொஞ்சம் பிரச்னை. எல்லோரும் அவளை பார்வையிலேயே கஷ்டப்படுத்துனாங்க. மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும். சினிமா ஆசை துளிர்விட்டப்பவே, ‘குறைகள், நீட்சிகளோட பிறந்தவங்களை காட்சிப் பொருளாக்காதீங்க’ன்னு ஒரு மெசேஜ் சொல்லணும்ங்கிற துடிப்பு இருந்திச்சு’’ என்கிறார். ‘‘நீண்ட தேடலுக்குப் பிறகு இவங்கள பத்தி தெரிஞ்சது. பல சிரமங்களுக்கு நடுவுல கெசப்பூர் போய் இறங்குன எனக்கு பெரிய அதிர்ச்சி. ‘போட்டோ, சினிமா... என்ன வேணும்னாலும் எடுத்துக்கோங்க; ரெண்டு லட்ச ரூபாய் மட்டும் தந்துடுங்க’ன்னு கேட்டாங்க. ரெண்டு நாள் அங்கயே தங்கி, என் பள்ளிக்கூட ஃபிளாஷ்பேக்கெல்லாம் எடுத்துச் சொன்னபிறகு மனசு மாறுனாங்க. ‘மனசுக்கும் வயித்துக்கும் போராட்டம் நடக்கறப்ப வயித்துப் பக்கம் நிக்க வேண்டியதா இருக்கே? சர்க்கஸ்ல நாங்க காட்சிப் பொருளா நிக்கறது மூலமா கிடைக்கிற வருமானத்துலதான் எட்டு பேர் சாப்பிடுறோம்’னு அவங்க சொன்னதையும் ஒதுக்க முடியல. என்னால முடிஞ்சதுன்னு கொஞ்சம் கொடுத்துட்டு வந்தேன். படம் திருப்தியா வந்திருக்கு’’ என நெகிழும் பாலா, படத்துக்கு வைத்திருக்கும் பெயர் ‘வாழ்க்கைச் சிலந்தி’.

ஏழை கிராமத்துத் தம்பதியின் மூத்த வாரிசான, ஒட்டிப் பிறந்த  கங்காவும் யமுனாவும் நான்கு சுவர்களுக்குள்ளேயே சிலந்தி போல் சுற்றி வந்தபடியே வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். வெளிநாட்டு டிவி ஒன்று இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, இவர்களைக் காட்சிப்படுத்த லட்சங்களை இறைக்கிறது. ‘‘நூறு வீடு இருக்கற கிராமத்துலயே நடமாட முடியாம நாலு சுவருக்குள்ள முடங்கியிருக்காங்க. ‘உலகத்துக்கே காட்டப் போறோம்’னு சொல்றீங்களே. அவங்களுக்கு மனசு செத்து ரொம்ப நாளாச்சு. ஆனா அவங்களைப் பெத்தவங்க மனசையும் கொஞ்சம் பாருங்கய்யா’’ எனக் கண்ணீரோடு அவர்களது தந்தை திருப்பி அனுப்புகிறார். 12 நிமிடங்கள் மனதைக் கனமாக்கி நகர்கிறது ‘வாழ்க்கைச் சிலந்தி’.


‘‘அங்கிருந்து கிளம்பினப்ப, ‘குடும்பத்தை ஓரளவு செட்டில் பண்ணிட்டு சீக்கிரத்துல சர்க்கஸ் வேலையை விடணும் தம்பி’ என்றார்கள் இருவரும் ஒரே குரலில். ஆச்சரியம் என்னன்னா, எல்லா விஷயங்கள்லயும் எதிரெதிர் குணம் கொண்டவங்களாம் ரெண்டு பேரும். இப்படி ஒரே குரல்ல அதுக்கு முன்னால பேசுனதே இல்லையாம். சொல்லி சந்தோஷப்பட்டுச்சு அந்தக் குடும்பம்’’ என்கிறார் ராஜேந்திர பாலா.
- அய்யனார் ராஜன்
படம்:சதீஷ்