உலக மேடையில் தமிழ் சினிமா!





இடம்: கிராண்ட் ஹயாத் ஹோட்டல், துபாய்.
நாள்: ஜூன் 21 மற்றும் 22.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியத் திரையுலகிற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கச் செய்கிற இடமும் நாளும் தான் இவை. ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ விழா - சுருக்கமாக ‘சிமா’ (SIIMA  South Indian International Movie Awards) நடைபெறும் மேடை அதுதான்!
இந்த மெகா விழா பற்றிய சில டிட்பிட்ஸ்...

* உலகளாவிய மேடை ஒன்றில் நடக்கும் முதல் தென்னிந்திய சினிமா விருது விழா இதுதான்!

* முதல் நாள் நிகழ்ச்சியை பார்வதி ஓமணகுட்டன் தொகுத்து வழங்குகிறார். யூத் ஐகான், ரொமான்டிக் ஸ்டார், ஆக்ஷன் ஸ்டார் என தென்னிந்திய சினிமாவில் நம்பிக்கை தரும் அடுத்த தலைமுறை திரைக் கலைஞர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி இது.

* அடுத்த நாள், தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் விருது விழா! நிகழ்ச்சிகளை நடிகர் மாதவன், பார்வதி ஓமணகுட்டன், லக்ஷ்மி மஞ்சு ஆகியோர் தொகுத்தளிக்கின்றனர்.

* நான்கு மொழிகளிலும் 19 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

* நடிகைகள் சமீரா ரெட்டி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சார்மி, அமலா பால், ப்ரியாமணி, தீக்ஷா சேத், ஹரிப்ரியா, பூர்ணா, நிதி சுப்பையா, பாருல் யாதவ் ஆகியோர் நடனமாடுகின்றனர். இதோடு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி நிகழ்ச்சிகளும் உண்டு. சர்வதேச மாடல்களின் ஃபேஷன் ஷோ, பின்னணி பாடகர், பாடகிகள் வழங்கும் இசை நிகழ்ச்சி என ரசிகர்களின் விழிகளுக்கும் செவிகளுக்கும் காத்திருக்கிறது ஒரு மெகா விருந்து.

* தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படங்களைப் பார்த்து, அதிலிருந்து விருதுக்குரிய படங்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்தனர் ஜூரிகள். இப்படி ஒவ்வொரு விருதுக்கும் தலா ஐந்து பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ஐந்து பேரிலிருந்து விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்யப்போவது ரசிகர்கள்தான்! 


* தெலுங்கு தயாரிப்பாளர் ஷ்யாம் பிரசாத் ரெட்டி, ‘தி ஹிந்து’ நாளிதழின் சினிமா பத்திரிகையாளர் மாலதி ரங்கராஜன், நடிகை குஷ்பு, பூர்ணிமா பாக்கியராஜ், சீனியர் நடிகை பாரதி விஷ்ணுவர்தன், புகழ்பெற்ற கன்னட இயக்குனர் டி.எஸ்.நாகபரணா, கன்னட தயாரிப்பாளர் மஞ்சு, நடிகை லிஸி பிரியதர்ஷன், நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன், இயக்குனர் சித்திக் ஆகியோரே படங்களை இறுதி செய்த ஜூரிகள்.    

* இவ்விழா மூலம் வரும் வருவாயிலிருந்து ஏழ்மை நிலையிலிருக்கும் திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் வாரிசுகள் 25 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளனர்.