புடவை ரகசியம்!





மத்தளத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல, கைபேசி, ஃபேஸ்புக் எல்லாவற்றிற்கும் நன்மை, தீமை என இரண்டு பக்கங்கள் உள்ளன. அதில் சில அசம்பாவிதங்களுக்கு மீடியாக்களின் வெளிச்சம் பரபரப்பு ஊட்டியது உண்மை. அதை நினைத்து மனுஷ்ய புத்திரன் வருந்த வேண்டாம்!
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

ஏழை என்பதற்காக நிலவு வெளிச்சம் தர மறுக்காதது போல்... கால்பந்து வீராங்கனை வித்யாவதி போன்றவர்களிடமும் திறமை இருக்கிறது. அதனை சரியாக வெளிக்கொணர அரசும் நல்ல ஸ்பான்சர்களும் முன்வர வேண்டும். அப்படி வந்தால் வித்யாவதி இன்னும் பெரிய ‘ரோல் மாடல்’ ஆவார்.
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.

‘வீதிக்கு வந்த வெள்ளுடை தேவதைகள்’ கட்டுரை, உண்மைகளை உள்ளபடி உணர்த்தியது. நோயாளிகளைத் தாயாக இருந்து பராமரிக்கும் தனியார் மருத்துவமனை செவிலியர்களின் மன உளைச்சலைப் போக்க, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது
அவசியம்.
- ஆர்.தனபால், பெருங்களத்தூர்.

தமிழ் சினிமாவில் ‘அம்மா’ நடிகைகள் அருகி வரும் இந்த நேரத்தில், அந்தக் கால கதா
நாயகிகளான பூர்ணிமாவும் ராதிகாவும் களத்தில் இறங்கியிருப்பது ஆரோக்கியமான விஷயம். சபாஷ், சரியான போட்டி!
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

பலே... பலே... புடவைக்குள் இத்தனை ரகசியம் இருக்கா? வித்யா பாலன் அம்மணி சொல்லித்தான் புடவையின் மகிமையே தெரிகிறது. இனி, எல்லா பெண்களும் மாடர்ன் உடைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு புடவைக்கு மாறப்போறது உறுதி!
- ஏ.விஷால், புதுச்சேரி.

புகைப்பட கலெக்ஷன் கேள்விப்பட்டிருக்கிறோம். இவ்வளவு பெரிய கேமரா கலெக்ஷனா? விதம்விதமான கேமராக்களை சேர்த்து வித்தியாசமான சாதனையை புரிந்திருக்கிற போட்டோ கோவிந்தனின் முயற்சி நம் எண்ணத்திலும் கின்னஸிலும் பதிய வேண்டிய ஒன்று!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

வாழ்வில் ஓரளவு உயர்ந்து விட்டாலே ‘தூக்க மாத்திரையே துணை’ என்று ஆகிப்போவது உறுதி. இதில், கேன்சர் என்ற குண்டைத் தூக்கிப் போட்டு விட்டீர்களே... இதனால எனக்கு நாலு நாளா
தூக்கம் வரலை தெரியுமா?
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

ஹரியானா மாநிலம் ராக்கிகாரி கிராமத்தில் நமது சிந்து சமவெளி நாகரிக வரலாற்று ஆதாரங்கள் விற்பனையாகிக் கொண்டிருப்பதை நினைத்து நெஞ்சு பதறுகிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நம் அரசு என்னதான் செய்கிறதோ!
- திருமதி சுகந்தா ராம், சென்னை-59.

‘சுட்ட கதை சுடாத நீதி’ பகுதியில், ‘தெரியாத வேலையில் இறங்கக்கூடாது’ என்ற நீதி நிதர்சனத்தை நெற்றிப் பொட்டில் அடித்துச் சொன்னது. ஒவ்வொரு இதழிலும் இந்தப் பக்கத்தை விடாமல் இடம்பெறச் செய்வீர்களா?
- வி.சி.கீதா ராமு, பெங்களூரு.