உதயநிதி தந்த 13.99 லட்சம் ரூபாய் சைக்கிள்!
நெகிழ வைக்கும் வீராங்கனை ஷா தபித்தாவின் கதை
ஷா தபித்தாவுக்கு 15 வயது. 10 வது படிக்கிறார். அப்பா உடன் இல்லை. அம்மாவோ வீட்டு வேலைக்கு மஸ்கட் சென்றுவிட்டார். ஒரு அண்ணன். 17 வயதுதான் ஆகிறது. உள்ளூர் ஒர்க் ஷாப் ஒன்றில் மெக்கானிக் வேலைக்கு செல்கிறார். அம்மாவுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம். அதில் ஒரு பகுதியை பிள்ளைகளுக்கு அனுப்புகிறார். அண்ணனுக்கு கூலி வாரம் ரூ.1500 கிடைக்கும். வீட்டு வாடகை கொடுத்து, அன்றாட செலவுகளைத் தாக்குப்பிடித்து வாழ்ந்தும் தபித்தாவுக்கு, தான் படித்த தனியார் பள்ளியில் பீஸ் கட்ட முடியவில்லை.
எனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இரண்டு மாதம் இருக்கும் போது அருகாமையில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் சேர்ந்தார். தபித்தாவின் சூழ்நிலை அறிந்து ஆசிரியர்கள் கூடுதல் அக்கறை எடுத்து பாடங்கள் நடத்தினர். தேர்ச்சியும் பெற்றார். இந்த நேரத்தில் தபித்தாவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.13 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்டட் ரேஸ் சைக்கிளை வழங்கியுள்ளார்!
எதற்காக இந்த சைக்கிள்?
2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற 14 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் (Track) வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலம், நாசிக்கில் 07.01.2023 முதல் 10.01.2023 வரை நடைபெற்ற 27வது தேசிய அளவிலான மிக இளையோர் (மகளிர்) சைக்கிளிங் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கியுள்ளார். சமீபத்தில் தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்று, இப்பொழுது National Centre of Excellence (NCOE) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அதன்மூலம் ஷா தபித்தா பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கு ஆசைப்பட்டார். அதற்கு ஏதுவாக இப்போட்டிகளுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரேஸ் சைக்கிள் வேண்டும். என்ன செய்யலாம்?
மார்ச் மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பினார். எண்ணி மூன்றே மாதம். கடந்த 22ம் தேதி மாணவியை சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் வரவழைத்து தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூபாய் 13.99 லட்சம் மதிப்பீட்டிலான Argon 18 PRO (Complete bike) Competition Wheel Set, Mavic Front Five Spoke Wheel Set and Mavic Rear Dic Wheel set சைக்கிளை வழங்கியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குட்டையூர்தான் ஷா தபித்தாவின் வசிப்பிடம். தான், வாங்கி வந்த சைக்கிளைத் தொட்டு தடவியபடி பூரிப்பு மாறாமல் தன் அனுபவங்களை நெகிழ்ச்சி ததும்ப நம்மிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.‘‘எனக்கு சொந்த ஊர் குன்னூர். 6 வருஷம் முன்னே அப்பா அம்மா பிரிஞ்சுட்டாங்க. அம்மாவுடன் நாங்க மேட்டுப்பாளையம் வந்துட்டோம். குன்னூரில் 4வது வரைக்கும்தான் படிப்பு. அண்ணன் படிக்கப் போகலை. நான் எஸ்விஎஸ் ஸ்கூலுக்குப் போனேன்.
ஏழாவது படிக்கும்போது அங்கே நிறைய சீனியர்கள் ரேஸ் சைக்கிள் ஓட்டிகிட்டு இருந்தாங்க. நானும் வாங்கி ஓட்டிப் பார்த்தேன். அதுவே பிடிச்சுப் போச்சு. விளையாட்டு மாஸ்டர் என் ஆர்வத்தைப் பார்த்து பயிற்சி கொடுத்தார். நான் போற வேகத்தைப் பார்த்து உள்ளூர் சைக்கிள் ரேஸ் டோர்னமெண்ட்ல சேர்த்து விட்டார் கோச். அதுல நான் நாலாவது இடம் வந்தேன்.
‘இன்னும் வேகமாப் போனீன்னா மாவட்டத்துல, மாநிலத்தில, தேசிய அளவிலயே மெடல் வாங்குவே’னு ஊக்கப்படுத்தினார் கோச். ஃபிரண்ட்ஸ் எல்லாரும் ரேஸ் சைக்கிள் கொடுத்து என்கரேஜ் பண்ணினாங்க. அதுதான் என்னை ஸ்டேட், நேஷனல் எல்லாம் வின் பண்ண வச்சு இந்த தங்கம், வெள்ளி, வெண்கல மெடல்களை எல்லாம் வாங்க வச்சிருக்கு!’’ என கையோடு கொண்டு வந்திருந்த மெடல்களை எல்லாம் காண்பித்தார் தபித்தா.
நம் வீட்டில் வைத்திருக்கும் சாதாரண சைக்கிளுக்கும் இந்த சைக்கிளுக்கும் என்ன வித்தியாசம்... எதற்கு இந்த விலை... என கேட்டபோது, இதன் கியர் ரைசஸ், செட்டிங்ஸ், டைனமிக் பொசிசன், ஃபிரேம் வெயிட்லஸ் பற்றியெல்லாம் விளக்கிய தபித்தா, ‘‘ரேஸ் சைக்கிளில் மணிக்கு 40 - 50 கிலோமீட்டர் கூட செல்லலாம். எந்த அளவுக்கு அதை அழுத்துகிறோமோ அந்த அளவுக்குப் பறக்கலாம்!’’ என்று சொன்னவர், தான் தனியார் பள்ளியிலிருந்து, அரசுப் பள்ளிக்கு வந்து சேர்ந்த சூழலையும் விவரித்தார்.
‘‘பொதுவாக ஒன்பதாம் வகுப்புக்கு மேல இடைநின்றாலே அவங்களை மத்த ஸ்கூல்ல எடுத்துக்க மாட்டாங்க. என்னை எங்க மேடம் பப்ளிக் எக்ஸாம் 2 மாதமே இருக்கும் நிலையில் எடுத்துக்கிட்டாங்க. அது மட்டுமல்ல, ரேஸ்ல சாதிக்கிற நேரத்துல படிப்புல கோட்டை விட்டுடக்கூடாதுன்னு அத்தனை டீச்சர்ஸும் நிறைய அக்கறை எடுத்துட்டாங்க.
பள்ளிக்கூடம் விட்டாலும் கிளாஸ். வீட்டுக்குப் போனாலும் ஆன்லைன் கிளாஸ். அதுலதான் இந்த வருஷம் எல்லா பாடத்தையும் படிச்சு பாஸ் பண்ணினேன்!’’ என்றவர், ‘‘அரசுப் பள்ளியில் வந்து சேரும்போது ஆசிரியர்கள் கேட்டாங்க, ‘பப்ளிக் எக்ஸாம் இரண்டு மாசம் கூட இல்லை. உன்னை சேர்த்துக்கிட்டா ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணுவியா’ன்னு. ‘எப்படியும் படிப்பேன். அது போக சைக்கிள் ரேஸ்ல நம்ம ஸ்கூலுக்கு மெடல் வாங்கிக் கொடுப்பேன்’னு வாக்குறுதியும் கொடுத்தேன். அதில் பாதி தூரம் கடந்துட்டேன். மீதி தூரமும் கடக்கணும். அதுதான் இன்டர்நேஷனல் லெவல்ல மெடல் வாங்கறது!’’ என்கிறார்.
ரேஸுக்காக திருவனந்தபுரம், ஹைதராபாத், மும்பை, நாசிக் என அலைகிறாரே... குடும்பம் கஷ்டம் எனச் சொல்கிறாரே... எப்படி இதையெல்லாம் எதிர் கொள்ள முடிகிறது..? கேரள சைக்கிள் ரேஸ் கேம்ப்பில் இவரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கிறார்கள். அதனால் இவரின் செலவுகள் பற்றின பில் கொடுத்தால் போதும் அதை அவர்கள் கொடுத்து விடுகிறார்களாம். சரி, இந்த விஷயம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குப் போனது எப்படி? அதையும் விளக்கினார்.
‘‘தமிழ்நாட்டில் ஸ்ரீமதின்னு தூத்துக்குடி சேர்ந்த பொண்ணு... அவங்களும் சைக்கிள் ரேஸ் வின்னர்தான். அவருக்கும் இப்படி சைக்கிள் ஸ்பான்சர் செய்திருந்தாங்க. அதுபோல நமக்கும் கிடைச்சா நல்லாயிருக்கும்ன்னு எனக்கு உதவி செய்யும் அங்கிள் சொன்னார். அதை வச்சு, ‘நான் சொந்தமா சைக்கிள் இல்லாமலே இப்படியெல்லாம் சாதனை பண்ணியிருக்கேன். எனக்கு இந்த மாதிரி ஒரு ரேஸ் சைக்கிள் இருந்தா சர்வதேச சாதனை பண்ணுவேன்’னு கோயமுத்தூர் டிஎஸ்ஓகிட்ட கடிதம் கொடுத்தேன்.
அவர் அதை அமைச்சருக்கு அனுப்பியிருந்தார். அதை மீடியா, பத்திரிகை பேட்டிகளிலும் சொல்லியிருந்தேன். சொல்லி மூணு மாசம்தான் ஆச்சு. திடீர்ன்னு சென்னையிலிருந்து கூப்பிட்டாங்க. அமைச்சர் பார்க்கணும்ங்கிறார். புறப்பட்டு வாங்கன்னாங்க. அங்கே போனபிறகுதான் நான் கேட்ட சைக்கிளே வாங்கி வச்சுட்டு, அதைக் கொடுக்கக் கூப்பிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுது. ‘நீங்க நம்ம பொண்ணு. என்ன கஷ்டம்ன்னாலும், எப்ப எந்த உதவி வேண்ணாலும் கேளுங்க’ன்னு சொன்னார்.
‘நிச்சயமா நீங்க செய்த உதவியை மறக்க மாட்டேன். அதுக்கு நான் இன்டர்நேஷனல் மெடல் வாங்கிக் காண்பிப்பேன்’னு அஷ்யூரன்ஸ் கொடுத்துட்டு வந்திருக்கேன்!’’ நம்பிக்கையுடன் சொல்பவரிடம், அவர் விரும்பியது இந்த சைக்கிள்தானா என்று கேட்டோம்.‘‘இன்டர்நேஷனல் லெவல்ல சைக்கிள் ரேஸ் சாம்பியன்ஸ் யூஸ் பண்ற சைக்கிள் இதுதான். நான் இந்த மாதிரி, இன்ன பிராண்ட் சைக்கிள் இருந்துச்சுன்னா நேஷனல், இன்டர்நேஷனல் அளவுக்கு சுலபமா மெடல் வாங்கிடுவேன்னுதான் கோரிக்கை வச்சிருந்தேன்.
தமிழ்நாட்டிலேயே முதன் முதலா இப்பதான் வாங்கியிருக்காங்க. இது லேட்டஸ்ட் புது மாடல். முழுவதுமே அலாய் ஃபிரேம். வெயிட்லஸ். வெறும் இரண்டே முக்கால் கிலோதான். ஸ்பேர் வீல்ஸ்ஸும் கொடுத்திருக்காங்க!’’ என ஷா தபித்தா முடிக்க, அவரது வாழ்வியல் சூழல் குறித்து அவர் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர் கலைச்செல்வியிடம் பேசினோம். ‘‘எங்க பள்ளிக்கூடத்துல எந்த சூழ்நிலையில் எந்த மாணவர்கள் வந்தாலும் சேர்த்துக்கறதை வழக்கமாக வச்சிருக்கோம். அப்படித்தான் இந்தப் பொண்ணும் வந்தாங்க.
இவங்ககிட்ட இருந்த மெடல் எல்லாம் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. இது மட்டும் போதாதும்மா... நல்லா படிக்கணும்ன்னு ஸ்பெஷல் கேர் எடுத்துப் படிக்க வச்சோம். அதுக்கு நல்லா ஒத்துழைச்சா. அதுக்கு மேல அவளோட குடும்பக் கஷ்டத்தைக் கேட்கும்போது நமக்கே ஒரு மாதிரி இருந்துச்சு. 17 வயசுல அண்ணன்... ஏதோ ஒரு கூலி வேலைக்குப் போய் இந்தப் பெண்ணை சாதனையாளர் ஆக்கணும்ன்னு பாடுபடறான். அம்மா மஸ்கட்ல வீட்டு வேலை செஞ்சு பணம் அனுப்பறாங்க.
நாங்க படிப்புல எங்களால முடிஞ்ச உதவிகளை செய்யறோம். இதையெல்லாம் தாண்டி எங்களுக்கு வாடகை கொடுக்க முடியலை. எங்காவது கம்மி ரேட்ல ஒரு வீடு கிடைக்குமான்னு வந்து கேட்டா. அப்படி ஒண்ணும் அமையல. இந்த சைக்கிளுக்கு வழி பிறந்த மாதிரி அதுக்கெல்லாம் எப்படியாவது ஒரு வழி பிறக்கும்ன்னு நம்பறோம்!’’ என்றார்.
தபித்தா வசிக்கும் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அங்கே இவரின் அண்ணனையும் பார்க்க வேண்டும் என்றோம். ‘அவன் ரொம்பக் கூச்ச சுபாவம்... வேண்டாமே... என்னை நீங்க பார்த்ததே போதும்.. போயிட்டு வாங்க அங்கிள்!’’ என்று வழியனுப்பி வைத்தார் தபித்தா.
கா.சு.வேலாயுதன்
|