இணைய சூறாவளி



உர்ஃபி ஜாவெத்... ‘இதான் டிரெஸ்ஸா, இல்ல இதுதான் டிரெஸ்ஸா?’, ‘எங்கே  டிரெஸ்ஸைக் காணோம்?’, ‘என்ன ஜன்னல் கதவை அப்படியே மேலே மாட்டிக்கிட்டு வந்திட்டீங்களா?’- இப்படி நையாண்டிகளும், நக்கலும், கேலிகளும் எத்தனை வந்தாலும் ‘ஐ டோன்ட் கேர்!’ என வித்தியாசமான கவர்ச்சி உடைகள், விசித்திரமான லுக்குகளில் காட்சி கொடுக்கும் உர்ஃபியை நிச்சயம் சமூக வலைத்தள ஆர்வலர்கள் பார்த்திருப்பீர்கள். இணைய சூறாவளியாக வலம் வரும் உர்ஃபி ஜாவெத்துக்கு என்னதான் ஆச்சு?

உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ மாநகரில் 1997ல் பிறந்த 25 வயதுப் பெண் இவர்.

மாஸ் கம்யூனிகேஷனில் பட்டம் பெற்றவர். ‘‘மனதளவிலும் , உடலளவிலும் என் அம்மா, நான், என் சகோதர சகோதரிகள் உட்பட அனைவரும் என் தந்தையால் நிறைய சிக்கல்களையும், காயங்களையும் அடைந்தோம். இதனால் வாழ்வில் ஒரு பிடித்தம் இல்லை.
மேலும் தந்தையே என் வாழ்க்கையில் சரியில்லாத தருவாயில் எப்படி மற்ற ஆண்கள் மேல் எனக்கு நம்பிக்கை வரும்...’’ எனச் சொல்லும் உர்ஃபிக்கு உருசா , அசாஃபி, டாலி ஜாவெத் என்னும் மூன்று சகோதரிகளும், சமீர் அஸ்லாம் என்னும் சகோதரனும் இருக்கின்றனர். பதின்பருவத்திலேயே பல்வேறு இன்னல்களை அடைந்த உர்ஃபி, இப்படி மாறியதற்கான காரணங்களையும் சமீபத்திய பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.   
 
‘‘எனக்கு 15 வயது இருக்கும்போது என்னுடைய புகைப்படத்தை யாரோ ஆபாச வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டனர். அதன்பிறகு என்னை ஆபாச நடிகை என்று கூறி மற்றவர்கள் விமர்சித்தால் கூட பரவாயில்லை. ஆனால், என் தந்தையே என்னை அப்படி அழைத்து சித்திரவதை செய்தார். அதன் பிறகு தற்கொலை செய்யலாம் என முடிவெடுத்தேன். அந்த தருணத்தில்தான் எனக்கு நானே இரண்டாவது வாய்ப்பு கொடுக்க முடிவு செய்தேன்...’’ என வருத்தத்துடன் சொல்லும் உர்ஃபி தனது லுக், ஸ்டைல் என அனைத்தையும் மாற்றியிருக்கிறார்.

‘‘எனக்கு இஸ்லாமியத்தில் மட்டுமல்ல, எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை. நிச்சயம் ஒரு இஸ்லாமிய ஆணைத் திருமணம் செய்ய மாட்டேன். தற்சமயம் பகவத் கீதை படிக்க துவங்கியுள்ளேன்...’’ என்கிற உர்ஃபி 2016ம் ஆண்டு ‘படே பாய்யா கி துல்ஹானியா’ எனும் இந்தி சீரியல் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து ‘சந்திர நந்தினி’, ‘பெபண்ணா’… உள்ளிட்ட பத்துக்கும் மேலான சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு ஓடிடி தளத்தின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில்தான் முதல் முறையாக குப்பைகளால் ஆன உடையை அணிந்து பிரபலமானார். தொடர்ந்து உடைகளில் வித்தியாசம் காட்டத்துவங்க, எங்கும் எதிலும் உர்ஃபி டாக் ஆஃப் த டவுன் தான்.

‘‘என்மீது கோபப்பட்டு என்னை விமர்சிக்க ஆண்களுக்கு உரிமையில்லை என்று நினைக்கிறேன். நான் என் வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களை நீங்கள் அனுபவித்தது இல்லை. கவர்ச்சியான ஆடைகளை அணிவது மட்டுமே என்னுடைய புகழிற்கு காரணம் என்று நான் நினைக்கவில்லை.

எனது  உடலையும், கலையையும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் காண்பிப்பதில் எனக்கு எந்தவித பிரச்னையும், தயக்கமும் இல்லை...’’ என்று கறாராகச் சொல்லும் உர்ஃபி ஜாவெத் அணிந்து வரும் கவர்ச்சியான உடைகளால் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், மேலும் அரசியல் சார்ந்த கண்டனங்களும் கூட எழுந்தன. மேலும் சில இடங்களில் கைது செய்யும் அளவிற்கு பிரச்னைகள் உருவானதும் குறிப்பிடத்தக்கது.

‘‘முஸ்லீம் வீட்டு உரிமையாளர்கள் எனக்கு வாடகைக்கு வீடு தரத் தயங்குகிறார்கள். என் உடையைக் காரணம் காட்டி அவர்கள் வீடு வாடகைக்கு தருவது இல்லை. மறுபுறம் இந்துக்கள் எனது மதத்தால் வீடு கொடுக்கத் தயங்குகிறார்கள். சிலர் அரசியல் அச்சுறுத்தல்களால் தயங்குகின்றனர். பொதுவாகவே மும்பையில் வீடு கிடைப்பது என்பது அரிது. இதில் இப்படியான சிக்கல்களையும் சந்திக்கிறேன்...’’ என்று வருந்துகிறார் உர்ஃபி.

சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் பாஜக பெண் தலைவர் சித்ரா கிஷோர் வாக் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை உர்ஃபி ஜாவெத் ஆடை அணிவது குறித்து கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலாக உர்ஃபி பெண்களின் ஆடை சுதந்திரத்தில் சித்ரா தலையிடுவதாக காவல் துறையில் புகார் கொடுத்திருந்தார்.

இதுகுறித்து உர்ஃபி ஜாவெத் வழக்கறிஞர் கூறுகையில், ‘‘இந்தச் சம்பவம் குறித்து மேல் நடவடிக்கைக்காக எழுத்துபூர்வமான புகாரை மகளிர் ஆணையத் தலைவரைச் சந்தித்துக் கொடுக்க உள்ளோம். பாஜக தலைவர் சித்ராவின் பதிவிற்குப் பிறகு நடிகை உர்ஃபி ஜாவெத் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்...’’ என்றார். இது வட இந்தியாவில் அதிர்வலைகளை உருவாக்கியதுஇப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கும் உர்ஃபி சமீபத்தில் மும்பையின் ஒரு பிரபல ஹோட்டலுக்கு ஐஸ்க்ரீம் கப் போன்ற மேலாடை மட்டும் அணிந்து வர அங்கே இருந்த ஒரு பெண் தனது மேல் கோட்டைக் கழற்றி உர்ஃபியின் உடலை மறைக்கக் கொடுத்தார். அதைக் கண்ட உர்ஃபி கோபத்துடன் அந்தப் பெண்ணை முறைத்துவிட்டு அங்கே இருந்து வெளியேறவும் இந்நிகழ்வு இணையத்தில் வைரலானது.

என்னதான் ஆடை சுதந்திரம் என்றாலும் அளவில்லையா என பாலிவுட் சினிமா மற்றும் டிவி சேனல்கள்  உர்ஃபிக்கு வாய்ப்பளிப்பதை நிறுத்தி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. போனால் போகட்டும் என இதிலும் அசால்ட் காட்டும் உர்ஃபிக்கு இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோயர்கள்.

காம்ஸ் பாப்பா