டெக்கில் அசத்தும் வேலூர் மாணவன்



ஒன்றோ… இரண்டோ அல்ல. நூற்றுக்கணக்கான விழிப்புணர்வு வீடியோக்கள். தவிர, எக்கச்சக்க எலக்டரானிக்ஸ் தகவல்கள் என யூடியூப்பிலும், இன்ஸ்டாகிராமிலும் அசத்தி வருகிறார் சுபியான். அவரின், ‘AR7 TECH’ சேனலுக்கோ அல்லது ar7_tech இன்ஸ்டா ஐடிக்கோ போனால், ‘தேவையில்லாத லிங்க்கை திறக்காதீங்க.
திறந்தால் என்னவாகும்’ என்பதில் தொடங்கி, ‘ஏன் சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசக்கூடாது, வாட்ஸ்அப் காலினை ரிக்கார்டு செய்வது எப்படி...’ என ஏகப்பட்ட பயனுள்ள விஷயங்களை வீடியோக்களின் வழியே அள்ளித் தெளிக்கிறார்.

இத்தனைக்கும் சுபியானின் வயது 18தான். இந்தாண்டு கல்லூரியில் சேர விண்ணப்பம் செய்துவிட்டு காத்திருக்கும் மாணவர் இவர்.

ஆனால், அதற்குள் இன்ஸ்டா ரீல்ஸின் இளம் கிரியேட்டர் பரிசும், சான்றிதழும் பெற்றுவிட்டார். யூடியூப்பின் சில்வர் அவார்டும் விரைவில் அவருக்குக் கிடைக்கவுள்ளது. ஏனெனில், அவரின் யூடியூப்பை ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதேபோல் அவரின் இன்ஸ்டாவை ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேர் ஃபாலோ செய்கின்றனர். உலக அளவில் இளம்வயதில் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களைத் தமிழில் தரும் ஒரே யூடியூப் சேனல் அநேகமாக இவருடையதாக மட்டுமே இருக்கும்.

‘‘2019ல்தான் யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். பிறகு, இன்ஸ்டாவுல பக்கம் ஓப்பன் பண்ணினேன். எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கிட்டேன். எந்த ஒரு விஷயத்தையும் வீடியோவாக போஸ்ட் பண்றதுக்கு முன்னாடி நான் முதல்ல செய்து பார்த்திடுவேன்.  அப்பதான் தவறில்லாமல் தகவல்களைத் தரமுடியும்.

அதனாலதான் இத்தனை ஃபாலோயர்ஸ், வியூவர்ஸை பெறமுடிஞ்சது...’’ என்கிற சுபியானுக்குப் பூர்வீகம் வேலூர்.‘‘நான் பிறந்து வளர்ந்தது வேலூர்ல. இப்ப குடியாத்தம் அருகே மேல்ஆலத்தூர்னு ஒரு கிராமத்துல வசிக்கிறோம். அப்பா அப்துல் ரஹ்மான் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்றார். நான் ஆறாம் வகுப்பு படிக்கிறப்ப எலக்ட்ரானிக்ஸ்ல ஆர்வம் வந்துச்சு.

அப்ப புரொஜெக்ட்ஸ் எல்லாம் செய்வேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கிறப்ப எலக்ட்ரானிக்ஸ் புரொஜெக்ட்ல மாவட்ட அளவுல பள்ளியில் முதலாவதாக வந்தேன். அப்ப ஆட்டோமெட்டிக் தெரு விளக்குனு ஒரு புரொஜெக்ட் செய்தேன். அதாவது தெருவிளக்குகள் இரவானதும் ஆட்டோமெட்டிக்காக ஆன் ஆகிற மாதிரியும், காலையில் ஆட்டோமெட்டிக்காக ஆஃப் ஆகிறமாதிரியும் சென்சார் பயன்படுத்தி செய்தேன். அதுக்கு முதல்பரிசு கிடைச்சது.

அந்த பரிசு கிடைச்ச அடுத்த மாசமே என் அண்ணன் இர்பான், ‘ஒரு இமெயில் ஐடி உருவாக்கித் தரேன். அதன்மூலம் யூடியூப் சேனல் ஆரம்பிச்சு எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான பயனுள்ள தகவல்களை வீடியோவாக போடு...’னு ஊக்கப்படுத்தினார். அங்கிருந்து என் ஜர்னி ஆரம்பிச்சது...’’ என உற்சாகமாகச் சொல்கிறார் சுபியான். ‘‘உடனே, ‘AR7 TECH’ என்கிற பெயர்ல யூடியூப் சேனல் ெதாடங்கினேன்.

அப்பா பெயர் அப்துல் ரஹ்மான் என்பதையும், என் பெயர் ஆங்கிலத்துல ஏழு எழுத்து வரும் என்பதால் 7 என்றும், இதனுடன் டெக்னாலஜி, டெக்னிக்கல் என்பதை குறிக்க டெக்னும் போட்டு சேனலுக்கு பெயர் வச்சேன்.

பிறகு எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான எட்டு வீடியோஸ்… அதாவது எப்படி ஒரு பவர் பாங்க் செய்றது, எமர்ஜென்ஸி லைட்லேம் செய்றது எப்படி, பவர்கட் ஆகும்போது எப்படி சார்ஜ் பண்ணிக்கலாம்னு சில விஷயங்களை போஸ்ட் செய்தேன். அப்ப எனக்கு யூடியூப் பற்றி போதுமான அறிவு இருக்கல. அதாவது வீடியோ எப்படி எடுக்கிறது, எந்தமாதிரி கொடுக்குறதுனு எதுவும் தெரியாது. சும்மா செல்போன் கேமராவுல இந்த விஷயங்களை முன்னெடுத்தேன்.

சவுண்ட் பற்றியும் ெதரியாது. மற்றவர்களின் இசைகளை எடுத்து பயன்படுத்தினேன். அதனால, காப்பி ரைட் பிரச்னை வந்து என் எல்லா வீடியோக்களையும் யூடியூப்ல இருந்தே தூக்கிட்டாங்க. ஒவ்வொரு வீடியோவுக்கும் நான்கு மணிநேரமாவது செலவிட்டு இருப்பேன். அடுத்து என்ன செய்யனு தெரியல. வீட்டுலயும் அப்பா, அம்மாவுக்கு என் வேலைகள் பிடிக்கல. வேண்டாம்னு சொன்னாங்க. அப்புறம், பத்தாம் வகுப்பு போனதும் மறுபடியும் வீடியோ போட ஆரம்பிச்சேன்.

இப்ப 18 வீடியோஸ் போட்டேன். ஓரளவுக்கு ரீச் இருந்தது. அப்புறம், என்னுடைய முகத்தை காட்டி நானே பேசி வீடியோ பண்ணினேன். சீனாவுல ஆப்கள் சிலவற்றை தடை செய்தாங்க. அதைப்பற்றி ஒரு போஸ்ட் போட்டு வைரலாக்கினேன். அப்ப அறுநூறு பேர் வரை சப்ஸ்கிரைப் செய்தாங்க. லாக்டவுன் வந்தப்ப எலக்டரானிக்ஸ் சம்பந்தமான விழிப்புணர்வு கன்டென்ட் நிறைய போட்டேன். சார்ஜ் போட்டுக்கிட்டே போன் பேசினால் என்னவாகும்னு விவரமாகப் பதிவிட்டேன். இதுக்கு நல்ல பலன் கிடைச்சது. இன்னும் நிறைய பேர்கிட்ட ரீச்சானேன்.
 
பிறகு, தெளிவான ஸ்கிரிப்ட் தயார் செய்து பண்ணி வீடியோ செய்தேன். கிட்டத்தட்ட ஒரு வீடியோவுக்கு எட்டு மணி நேரம் எடுத்துக்கிட்டேன். ஆங்கர், கேமரா, எடிட்டிங்னு எல்லாமும் நானேதான். ஆரம்பத்துல அம்மா போனைத்தான் ரெண்டு ஆண்டுகளாக பயன்படுத்தினேன். அது 6 ஆயிரம் ரூபாய் உள்ள சாதாரண போன். அப்புறம், ஒரு போட்டியில் ஜெயிச்சதுக்கு பரிசாக பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள போன் கிடைச்சது. இதன்பிறகு, குவாலிட்டியான வீடியோவாக பதிவிட முடிஞ்சது.

இதுல சாலையில் போயிட்டு இருக்கும்போது உங்க ஆண்ட்ராய்டு போன் கீழ விழுந்து தொலைந்தாலோ, யாராவது எடுத்தாலோ அதை கண்டறிய ‘find my device’னு ஒரு வீடியோ போட்டேன். இது ஒரு கோடியே 30 லட்சம் வியூவ்ஸ் போனது. இதன் ரீச் நானே எதிர்பார்க்காதது. இந்த ரீல்ஸ்க்குத்தான் இன்ஸ்டாகிராம்ல பத்தாயிரம் ரூபாய் வெகுமதியும் சான்றிதழும் தந்தாங்க. இதனால், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இன்ஸ்டாவுல ஃபாலோ செய்தாங்க.

அந்நேரம், நான் தவறான ஒரு லிங்க்கை கிளிக் பண்ணிட்டேன். அதனால, என் இன்ஸ்டா அக்கவுன்ட்டை யாரோ ஹேக் செய்திட்டாங்க. இதனால், நான் புது ஐடியை உருவாக்குறமாதிரி ஆகிடுச்சு. உடனே மறுநாளே புது ஐடி கிரியேட் பண்ணி மறுபடியும் உள்ளே வந்தேன். அப்படியும்  45 நாட்கள்ல ஒரு லட்சம் ஃபாலோயர்களை கிராஸ் பண்ணினேன். இப்ப யூடியூப் நிறுவனமும் சில்வர் அவார்டு தரப்போறாங்க. அதாவது ஒரு லட்சம் சப்ஸ்கிரைப் போனால் இந்த அவார்டு கிடைக்கும்.

இதுல எனக்கு ஒரு லட்சத்து 27ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க. பொதுவாக, என்னுடைய பதிவெல்லாம் விழிப்புணர்வு பற்றினதுதான். தவிர, எலக்ட்ரானிக்ஸ்ல என்ன விஷயங்கள் செய்யலாம்னு சொல்வேன். அதனாலயே பலருக்கும் என் வீடியோஸ் பிடிச்சிருக்கு. எங்க ஊர்ல உள்ள பலரும் என்னை ஃபாலோ பண்றாங்க. அப்புறம், நான் படிச்ச பள்ளியிலும் ஃபாலோ செய்றாங்க.

ஆரம்பத்துல அப்பா வருத்தப்பட்டார். ஆனா, இப்ப அவர் வெளியில் போகும்போது, ‘உங்க பையன் பண்ற வீடியோ பயனுள்ளதாக இருக்கு’னு பலரும் சொல்லி பாராட்டுறாங்க. இதனால, அப்பா இப்ப எதுவும் சொல்றதில்ல. சிலர் நீங்கதான் எங்க இன்ஸ்பிரேஷன்னு கமென்ட்ல சொல்வாங்க. அப்பெல்லாம் ரொம்ப பெருமையாக இருக்கும். அதேநேரம் நெகட்டிவ் கமென்ட்ஸும் வரும். ஆனா, நான் பாசிட்டிவ்வை மட்டுமே எடுத்துக்கிறேன்.

நான் எந்த வீடியோ பண்ணும் முன்பும் ஒருமுறை அதை முயற்சி செய்திடுவேன். இப்ப உதாரணத்திற்கு வாட்ஸ்அப் கால் ரிக்கார்ட் பண்ணமுடியாது. ஆனா, அதுக்கு ஒரு ஆப் இருக்கு. அதனுள் போனால் வாட்ஸ்அப் காலினை ரிக்கார்ட் பண்ணலாம். இதை நான் ஒருமுறை செய்து பார்த்திட்டு அப்புறம்தான் வீடியோவாக போட்டேன். இதுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அதேபோல சில போன்கள்ல இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்தாலும் ரிக்கார்டு ஆகாது.

இதுல ஆண்ட்ராய்டு வெர்ஷன் முக்கியமானது. இதையும் நான் தகவல்ல சொல்றேன்...’’ என மகிழ்ச்சியுடன் குறிப்பிடும் சுபியான், ‘‘இப்ப நானே வீட்டுல ஒரு ஸ்டூடியோ உருவாக்கிட்டு இருக்கேன். கம்ப்யூட்டர், கேமரா உள்ளிட்டவை எல்லாம் என் சொந்த செலவுல வாங்கியிருக்கேன். இதன்வழியாக இனி தரமான வீடியோக்கள் போடமுடியும்.

தவிர, பி.எஸ்சி சைபர்  செக்யூரிட்டி படிக்க விண்ணப்பம் செய்திருக்கேன். நான் அதுசம்பந்தமான வேலைகள் நிறைய செய்திருக்கிறதால எனக்கு அதுல அதீத ஆர்வம். அப்புறம் பெர்சனல் கம்ப்யூட்டர் நானே புதுசாக உருவாக்கலாம்னு இருக்கேன். அதுக்காக ரேம், சர்க்கியூட் பற்றி ஆய்வு பண்ணிட்டு இருக்கேன். தவிர, 150 அடி உயரம் பறக்கிற ட்ரோன் செய்யலாம்னு தயாராகிட்டு வர்றேன். இது என்னுடைய கனவு. ஆனா, உண்மையில் எனக்கு சயின்ட்டிஸ்ட் ஆகணும்னுதான் ஆசை. இறைவன் அருளால் அதுவும் நடக்கும்னு நினைக்கிறேன்...’’  நம்பிக்கை மிளிரச் சொல்கிறார் சுபியான்.

பேராச்சி கண்ணன்