சிறுகதை - இரவில் மட்டும் இருப்பவள் இனியா!
என் மேசை மேல் உட்கார்ந்திருந்த டேனியல் கோல்மன்-ஐ தயக்கத்துடன் உற்றுப் பார்த்தவாறே சொன்னான். மாட்ரிமோனியல் விளம்பரங்களில் வெட்கத் தயக்கத்துடன் காணப்படும் தேவரகொண்டா சாயலில் இருந்தான்.‘‘இனியா அவ பேரு. என் வொய்ஃப்...’’‘‘இருக்கட்டும், அவங்களுக்கு என்ன. அவங்க வந்திருக்காங்களா. சைக்யாட்ரிஸ்ட்கிட்ட வர்ற அளவுக்கு இனியாவுக்கு என்ன..?’’ என்றேன் சன்னமான குரலில்.
ஏசியின் மெல்லிய சப்தம் உறுத்தலாக இருப்பது போல மேலே பார்த்தான். அப்புறம் தலையைக் குனிந்து கொண்டான்.‘‘பிரச்னை இனியாவுக்கா இல்லை எனக்கான்னு புரியலை டாக்டர். நீங்கதான் தீர்த்து வைக்கணும். ஸாரி சரிபண்ணணும்...’’ என்றான்.இப்போது என்னைப் பற்றி. நகரின் மறைவான இடத்தில் இந்த அபார்ட்மெண்டில் க்ளினிக் வைத்திருக்கிறேன்.
அதிகம் ஆட்கள் வரமாட்டார்கள். புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். இல்லையென்றால் பழைய படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன். இந்த நகரத்தின் பரபரப்பிற்கும் நவீனத்திற்கும் தேவைப்படாத அடாசு ஆள்தான் நான். அவன் என்னை நம்பலாமா என்பது போல பார்த்தான். மீண்டும் ஏசியைப் பார்த்தான். ‘‘ஏசியை அணைச்சுரவா?’’ ‘‘இருக்கட்டும். எனக்கு வந்திருக்கற சிக்கல் யாருக்கும் வந்திருக்காது டாக்டர். நான் ரொம்ப ஆசைப்பட்டு லவ் பண்ணி இனியாவைக் கல்ணாணம்
பண்ணிக்கிட்டேன். ஆனா, முத ராத்திரியில இருந்தே இந்த பிரச்னை ஆரம்பமாயிருச்சு...’’‘‘முதல் தடவை அப்படித்தான் இருக்கும். அப்புறம் போகப்போக நீங்க பயந்து போற மாதிரி ஆகியிருக்குமே...’’‘‘அப்படித்தான் டாக்டர் ஆச்சு.
ஆனா, நான் பயந்தது வேற விஷயத்துக்காக...’’நல்ல வேளை அவனது சமாச்சாரங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து விடுவானோ என்று பயந்தேன். பொதுவாக அதுமாதிரி பிரச்னை உள்ள ஆட்கள் என்னிடம் வரமாட்டார்கள். அதற்கு வேறு டாக்டர்கள் இருக்கிறார்கள். நான்தான் சொன்னேனே நான் கொஞ்சம் பழைய ஆள் என்று. ‘‘நைட் நல்லாத்தான் இருக்கா டாக்டர்...’’‘‘ஏன் பகல்லயும் எதிர்பார்த்திங்களா?’’
‘‘ச்சே... அதில்ல டாக்டர். நைட் எல்லாம் என்கூட இருக்கறவ காலையில கண்விழிச்சுப்பார்த்தா ஆளைக் காணம். வீடு முழுக்க தேடறேன். அவளைக் காணம். சரி ஏதாவது வேலையா போயிருப்பாள்னு காத்திருந்தா அவ இல்லவே இல்லை.
அப்புறம் ஆபீசுக்குப் போயிட்டு நைட் லேட்டா வந்து பார்த்தா அவ அப்படியே சீவி சிங்காரிச்சிட்டு... இது கொஞ்சம் பழைய வார்த்தைதானே. ஜேடி-ஜெர்ரியோட ஜவூளிக்கடை விளம்பரங்கள்ல வர்ற நடிகை மாதிரி ஜொலிப்புடன் பெட்ரூம்ல இருந்து வர்றா...’’ ஆலிவர் ஸாக்ஸ் புத்தகத்தில் வருவது போல ஏதாவது சொல்லப்போகிறானா? யாரது இனியா? எப்படி இருப்பாள்?
‘‘ச்சும்மா தமாஷ் பண்ணியிருந்தாங்களா உங்க மனைவி? அவங்க ஃபோட்டோ இருக்கா?’’ ‘‘இல்லை டாக்டர். நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா, விஷயம் ரொம்ப சீரியஸ். இந்தா பாருங்க மொபைல்ல வால்பேப்பர்ல சிரிச்சிட்டிருக்கா பார்த்திங்களா... இதுதான் இனியா. பார்த்தாலே உள்ளுக்குள்ள எதுவோ கிளம்புதுல்ல. அத்தனை அழகா இருப்பா...’’‘‘சரி இருக்கட்டும். அப்புறம் என்ன ஆச்சு. அடுத்தடுத்த இரவுகள்லயும் அவ நைட் இருக்கா. காலைல விடிஞ்சதும் காணாமப்போயிடுறாளா?’’
‘‘எக்ஸாக்ட்லி டாக்டர். இந்த கண்ணாமூச்சி விளையாட்டு தினம் தொடர ஆரம்பிச்சது. ஒருநாள் அவளை நைட் பெட்ல அவ தூங்கினதும் கை கால்களை கட்டிப் போட்டு வைச்சேன். அப்படியும் காலைல அவளைக் காணோம். கட்டிய கயித்தை என் மேல போட்டு வைச்சிருந்தா...’’ ‘‘இது பத்தி நீங்க இனியாகிட்ட நேர்ல பேசியிருக்கலாமே..?’’
‘‘பேசினேன். ஒரு கட்டத்துல இது தாங்காதுன்னு நைட் அவளை என்மேல சாச்சிக்கிட்டு அவள் மார்பை இடுப்பை மத்த இடங்களை ஏதும் தொந்தரவு செய்யாம அவ கண்களை நேருக்கு நேரா பார்த்து பேசினேன். நிதானமா கேட்டேன்...’’‘‘என்னாச்சு... ஒத்துக்கிட்டாங்களா?’’‘‘அழ ஆரம்பிச்சிட்டா. ஏன் இப்படி பொய் பொய்யா சொல்றிங்க. நான் பொய் சொல்றேனாம். காலைல வீட்டுலதான் இருந்தாளாம். வேணும்னா பக்கத்து ஃப்ளாட்காரங்ககிட்ட போய் கேட்டுக்கங்கன்னு சொன்னா...’’
‘‘நம்பற மாதிரி இல்லையே மிஸ்டர். அதெப்படி ஒரு மனைவி நைட்ல மட்டும் வீட்ல அதுவும் பெட்ரூம்ல முழு ஒத்துழைப்போட இருக்கா... காலைல பொழுது விடிஞ்சதும் காணாமப் போயிர்றா... அவ ஏதும் வாம்ப்பயரா..? உங்க கழுத்தை ஏதும் கடிச்சி ரத்தம் கித்தம் குடிக்க முயற்சி பண்ணினாளா?’’
‘‘டாக்டர் நீங்க நம்பலைன்னு தெரியுது. நான் வர்றேன்...’’ என்று எழுந்தான் கோபமாக.‘‘ஸாரி உட்காருங்க. சொல்லுங்க. என்னதான் சொல்றா உங்க இனிய்ய்யா..?’’ என்றேன்.
அவன் மேலும் தவிப்புடன் தொடர்ந்தான்.‘‘பெட்ரூமை பூட்டி சாவியை சன்னலுக்கு வெளியே எறிஞ்சுட்டு ஒருநாள் படுத்துட்டேன். அவ எதையும் கண்டுக்காம என்னை கங்குபாயோ ஏதோ படத்துல அலியாபட் பண்ற மாதிரி என் மேல படுத்துட்டு ‘லவ்யூ புருஷா’ என்றாள். அப்புறம் நடந்ததற்கு எத்தனை ‘ஏ’ வேண்டுமானாலும் போடலாம். ஆனா, காலைல ஆள் இல்லை. கதவு பூட்டியே இருக்கு. எப்படி வெளிய போனாள்னு தெரியலை...’’‘‘சிம்ப்பிள். ரொம்ப கற்பனை பண்ணிக்க வேணாம். இனியாகிட்ட மாத்து சாவி இருந்துருக்கும்.
சும்மா உங்களை கண்ணாமூச்சி காட்டறாங்க. உங்களுக்கு ஏதும் வைத்தியம் தேவையில்லை. இனியாவை ஒரு ரெண்டு சிட்டிங் அழைச்சுட்டு வாங்க. பேசி சரி பண்ணிர்லாம்...’’‘‘நானும் அப்படித்தான நினைச்சேன் டாக்டர். ஆனா, இது அவ வேணும்னே பண்ணலன்னு புரிஞ்சது. அவளைக் கட்டிப்போட்டா வெளியில போயிர்றாளேன்னு...’’ ஒரு முக்கியமான ஃபோன் வர எடுத்து பேசிவிட்டு கேட்டேன்.
‘‘எங்க விட்டிங்க... மேலே சொல்லுங்க...’’ ‘‘அவளை கட்டிப்போட்டாலும் வெளியில போயிர்றாளேன்னு அன்னிக்கு நைட் அவளை வெட்டிப் போட்டுட்டேன் டாக்டர்...’’ ‘‘என்ன... என்ன சொல்றிங்க...’’
‘‘கொன்னுட்டேன் டாக்டர். செத்துப் போனா எப்படி வெளியில போவாள்னு அவளோட பாடியை நாலு பாகமா வெட்டி கார்ல வைச்சு ஊருக்கு வெளியில கொண்டு போய் கொட்டிட்டு வந்துட்டேன். தினம் பேப்பர் வாங்கிப் பார்ப்பேன். இது வரை செய்தி வரலை...’’அவன் பார்த்த பார்வையில் கொலை வெறி எல்லாம் இல்லை. பயம்தான் இருந்தது. மேற்கொண்டு இந்தக் கதையை அவன் எப்படி கொண்டு செல்லப் போகிறான் என்ற அவஸ்தையில் உட்கார்ந்திருந்த எனக்கு டகாரென்று போலீஸுக்கு ஃபோன் போட்டு வரவழைத்து ரெட் ஹாண்டடாக... ச்சே... அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. என்னதான் சொல்கிறான் என்று கேட்கலாம்.
‘‘அப்புறம் நடந்ததுதான் ஹைலைட் டாக்டர். அவளைத்தான் கொண்டு போய் போட்டுட்டு வந்திட்டமே... இனி வீட்ல சொல்லி நல்ல பொண்ணா டிவி சீரியல்கள்ல எல்லாம் வர்ற, புருஷனுக்காக ஏங்கற, மாமியார்கிட்ட அல்லல் படற பொண்ணுங்க மாதிரி பார்த்து கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சிட்டே மாட்ரிமோனியல் சைட்டை பார்த்துட்டே நைட் பெட்ரூம்ல படுத்திருந்தேன்...’’‘‘இதுல என்ன இருக்கு... மேல சொல்லுங்க...’’‘‘அவ வந்துட்டா டாக்டர். செத்துப் போயிட்டாதானே. ஆனா, நைட் எப்பவும் போல வந்திர்றா. காலையில காணாமப் போயிர்றா. இப்ப நைட் தானே..?’’
அவனுக்கு நான் அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருந்த நேரம் இரவு 9.30. இப்போது பத்தரைக்கு மேலாகிறது. சன்னல் வழியே சாலை முழுக்க விளக்குகள். குளிர் ஏசியில் அதிகம் போல இருந்தது.
‘‘டாக்டர் அவ வந்துட்டா...’’ ‘‘யாரு?’’‘‘இனியா...’’
அப்போது ஒரு பெண் அறைக்குள் வாசனையாகவும் திகிலாகவும் வந்து கொண்டிருந்தாள். அவளின் அந்த பிரமிட் போன்ற மூக்கு அப்படியே அச்சு அசலாக விக்டோரியா ஜஸ்டிஸ் போல இருந்தது. அவள் உதட்டோரம் அதென்ன இரத்தமா? அதிர்ச்சியில் கையில் வைத்திருந்த பேனாவைத் தவறவிட்ட நான் கீழே குனிந்து எடுக்கும்போதுதான் கவனித்தேன். அது சரி, அவனுக்கு ஏன் கால்கள் தரையில் படவில்லை..?!
விஜயநிலா
|