குழந்தைகளுக்கான நூலகம் தொடங்கவே அமெரிக்காவில் இருந்து வந்திருக்கேன்!



‘‘இந்தச் சமூகத்துல எந்த ஒரு மாற்றம் வரணும்னாலும் அதை குழந்தைகள்கிட்ட இருந்துதான் தொடங்கணும். ஏன்னா, அவங்கதான் நாளைய எதிர்காலம். அதுக்கு சிறந்த கல்வியும், வாசிப்பும் ரொம்ப அவசியம். அதை நூலகங்கள் வழியாகத் தான் கொண்டுபோக முடியும்னு நினைக்கிறேன். அதுக்காகவே குழந்தைகளுக்கான இந்த நூலகத்தைத் திறந்திருக்கேன்...’’ புத்தகங்களை அடுக்கியபடி அத்தனை நம்பிக்கையாகப் பேசுகிறார் ஸ்ரீராம் கோபாலன்.  

ஒரு பிரத்யேகமான குழந்தைகள் நூலகத்தை தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உருவாக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடன் அமெரிக்காவில் ஐடி வேலையை துறந்துவிட்டு சென்னை வந்திருக்கும் இளைஞர் இவர். முதற்கட்டமாக தன் வீட்டிலேயே குழந்தைகள் நூலகத்தைத் திறந்துள்ளார்.
சென்னையின் புறநகரான புதுபெருங்களத்தூரில் ஒரு கம்யூனிட்டி அபார்ட்மெண்டில் இருக்கிறது ஸ்ரீராமின் வீடு. உள்ளே நுழைந்ததுமே முதலில் நம்மை வரவேற்பது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய குழந்தைகள் நூலகமே! வீட்டின் பெரிய ஹாலையே நூலகமாக மாற்றியிருக்கிறார் ஸ்ரீராம். இதன் பெயர் பிரக்ரத் அறிவகம்.

‘‘‘பிரக்ரத்’னா இயற்கைனு அர்த்தம். இந்த நூலகம் வெறும் புத்தகம் வைக்கிற இடமாக இல்லாமல் அறிவை சேகரிக்கிற இடமாக இருக்கட்டும்னு இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தேன்...’’ உற்சாகமாகச் சொல்கிறார் ஸ்ரீராம். ‘‘நான் பிறந்து வளர்ந்தது படிச்சதெல்லாம் சென்னை தாம்பரத்துலதான். பி.இ எலக்ட்ரானிக்ஸ் முடிச்சேன். பிறகு, பிரசாத்ஸ்டூடியோவுல வீடியோ எஞ்சினியரிங் பிரிவுல பணியாற்றினேன். அப்புறம், 2005ல் நான் எலக்ட்ரானிக்ஸ்ல எம்.எஸ். படிக்க அமெரிக்கா போயிட்டேன். அங்க ரெண்டு ஆண்டுகள் VLSI சம்பந்தமாக படிச்சேன்.
அப்புறம், 2007ல் இருந்து 2022 வரை 15 ஆண்டுகள் ஆரக்கள், ஏஎம்டினு ரெண்டு ப்ராசஸர் கம்பெனிகள்ல வேலை செய்தேன்.

கடந்த ஆண்டு மே மாதம்தான் இந்தியாவிற்குத் திரும்பினேன். இந்த 15 ஆண்டுகள்ல முதல் ஆறு ஆண்டுகள் ஆர்வமாக வேலை செய்தேன். அப்ப நிறைய லேஆஃப்பை பார்த்தேன். பல நிறுவனங்கள் பலரை வேலையைவிட்டு பணிநீக்கம் செய்தாங்க. அந்நேரம், இப்படியான வேலையை செய்யணுமானு எனக்குள்ள ஒரு கேள்வி எழுந்தது.

நான் எம்.எஸ் படிச்சிட்டு இருக்கும்போதே இந்தியாவிற்காக நாம் ஏதாவது செய்யணும்னு ஒரு ஆர்வமும் இருந்தது. அதனால, சம்பாதிக்க ஆரம்பிச்சதும் நன்கொடைகள் நிறைய கொடுத்தேன். குறிப்பாக, குழந்தைகள் கல்விக்குத்தான் செய்யணும்னு எனக்கு அப்போதிலிருந்தே ஆசை. அதுக்குதான் நிறைய நன்கொடைகள் அளிச்சிருக்கேன்.

அடுத்து அசோசியேஷன் ஃபார் இந்தியா’ஸ் டெவலப்மெண்ட்னு ஒரு குரூப் இருக்கு. தவிர, இந்தியா’ஸ் லிட்ரசி புராஜெக்ட்னு இன்னொரு குரூப். இவங்களுக்காக தன்னார்வலராக பணிகள் செய்தேன். நான் இருந்த கலிபோர்னியாவுல ‘ஸ்வரம்’னு ஒரு அமைப்பை நாங்களே உருவாக்கி நாடகங்கள் எல்லாம் போட்டோம்.

அதன்வழியாக சேகரமாகும் நிதியை இந்தியாவில் உள்ள தன்னார்வ அமைப்புகளுக்கு நன்கொடையாக அளிப்போம். இப்படியிருந்த நேரம் 2017ல் எனக்கும் வேலை போயிடுச்சு. அப்பதான் நமக்கு பிடிச்ச வேலை செய்யணும்னு தோணுச்சு. பிடிச்ச வேலைனா குழந்தைகள் கல்விக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கு உதவுறதும்தான்.

ஆனா, பிடிச்ச விஷயத்தை பண்றதுல காசு வராது. பிடிக்காத ஆஃபீஸ் வேலையை செய்றதுலதான் பணம் வருது. அதனால, என்ன பண்றதுனு யோசிச்சேன். அப்ப நானும் என் மனைவி சுகன்யாவும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தோம்.என் மனைவி சுகன்யாவிற்கு சொந்த ஊர் மதுரை. அவங்க பி.இ படிச்சிருக்காங்க.

இன்போசிஸ்ல வேலை செய்தாங்க. நாங்க ரெண்டுபேருமே அமெரிக்காவுல மீட் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டோம். அவங்களுக்கும் இதேமாதிரியான ஆசைகள்தான். நான் இந்தமாதிரி பிடிச்சதை செய்யப்போறேன், வேலையை விடப்போறேன்னு சொன்னதும் ரெண்டுபேரும் சேர்ந்து பிளான் பண்ணினோம். ஏன்னா, எங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க.

அதனால, அடுத்த ஐந்தாண்டுகள் நல்லதொரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து நிறைய சம்பாதிக்கணும். பிறகு, இந்தியாவுக்கு வந்து எங்களுக்குப் பிடிச்சதைச் செய்யணும்னு தீர்மானிச்சோம்.

அவங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகணும்னு ஆசை. இப்ப அவங்க ஆடியோ புக்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. 2022ல் இந்தியாவுக்கு மனைவி, குழந்தைகளுடன் திரும்பினேன். இங்க வரும்போதே நிறைய திட்டங்களுடன்தான் வந்தேன். அதுல ஒண்ணுதான் குழந்தைகளுக்கான நூலகத் திட்டம்...’’ என்கிறவர், அதை விவரித்தார்.

‘‘எனக்கு குழந்தைகள் கல்விக்கு உதவி செய்றது ரொம்பப் பிடிக்கும்னு சொன்னேன். ஏன்னா, நான் இந்தியாவுல படிச்சதுக்கும் அமெரிக்காவுல படிச்சதுக்கும் பெரிய வித்தியாசத்தை உணர்ந்தேன். நான் இந்தியாவுல படிக்கிறப்ப புரிஞ்செல்லாம் படிக்கல. நல்ல மார்க் வாங்கணும்னு நினைச்சு படிச்சேன். இங்க எல்லோருமே அப்படிதான் படிக்கிறோம். ஆனா, அமெரிக்கா போய் படிக்கிறப்ப அவங்க சொல்லித்தர்ற மாடலே வேறாக இருந்தது. நான் மார்க் வேணும்னு என் பேராசிரியர்கிட்ட போய் நின்னப்ப, ‘ஏன் மார்க் பத்தி கவலைப்படுற... உனக்கு புரிஞ்சுதா இல்லையானு மட்டும் சொல்லு. புரியலனா வந்து கேளு. சொல்லித்தர்றேன்’னு சொன்னார்.

அப்புறம், புரிஞ்சு படிக்க ஆரம்பிச்சேன். எல்லா பாடத்திலும் நல்ல மார்க் எடுத்து கிளாஸ் டாப்பராகவும் வந்தேன். அதனால, குழந்தைகளைப் புரிஞ்சு படிக்க வைக்கணும் என்பது என் ஆசை. அதுக்கு வாசிப்பு ரொம்ப உதவும்.  இங்கிருந்துதான் குழந்தைகளுக்கான நூலகம் ஆரம்பிக்கிற ஐடியாவும் உதயமானது. இதுல எனக்கு இன்னொரு முக்கியமான இன்ஸ்பிரேஷன் என்  மகன்தான்.

அவர் நிறைய புத்தகம் படிப்பார். அமெரிக்காவுல எல்லா பகுதிகளிலும் நடந்துபோகும் தொலைவில் ஒரு நூலகம் இருக்கும். வாராவாரம் அந்த நூலகத்திற்கு போவார். நாங்க மறந்தால்கூட ஞாபகமாக அழைச்சிட்டுபோகச் சொல்வார். அப்ப ஒவ்வொருமுறையும் பத்து பதினைஞ்சு புத்தகங்கள் எடுத்திட்டு வருவோம். இத்தனைக்கும் அவருக்கு நாலு வயதுதான் ஆகிறது. அப்பவே வாசிப்பைத் தொடங்கிட்டார்.

என் சின்ன வயசுல இப்படியான அருகாமை நூலகம் இருந்தமாதிரி எனக்கு ஞாபகம் இல்ல. இருந்தாலும் படிக்கிற ஆர்வமும் அப்ப இருக்கல. அமெரிக்காவுல இப்படியொரு நூலக அமைப்புமுறை இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் கல்லூரியில் படிக்கிறப்ப கல்லூரி நூலகம் பயன்படுத்தியிருக்கேன். பொது நூலகத்தைப் பயன்படுத்தினதில்ல. இதுமாதிரி இந்தியாவுல இல்ைலயேனு ஒரு வருத்தம் இருந்தது. அதனால, நம்மால் இதுக்கு என்ன பண்ணமுடியுமோ அதை செய்வோம்னு நினைச்சேன்.

உடனே, என் பையனுக்காக வாங்கின புத்தகங்களை யாருக்கும் நன்கொடையாகக் கொடுக்காமல் நானே சேகரிக்க ஆரம்பிச்சேன். இதுதவிர, அங்க நூலகத்துல ஒவ்வொரு வாரமும் அவங்க பயன்படுத்தின பழைய புத்தகங்களை குறைவான விலைக்கு விற்பனை செய்வாங்க. அந்தமாதிரியான புத்தகங்களையும் வாங்க ஆரம்பிச்சேன்.

என் பையன் படிக்கவும், இந்தியா வந்தபிறகு நூலகமாக வைக்கவும் நிறைய நூல்கள் வாங்கினேன். கடைசி ரெண்டு ஆண்டுகளாக கோவிட் நேரத்துல நூலகங்கள் எல்லாம் மூடிட்டாங்க. அப்ப என் நண்பர்களிடமும், என் பையனின் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களின் பெற்றோரிடமும் நான் இந்தமாதிரி நூலகம் தொடங்கப்போறேன்... எனக்கு புத்தகங்கள் சீப்பாகவோ அல்லது இலவசமாகவோ அளித்தால் நன்றாக இருக்கும்னு கேட்டேன்.

நிறையபேர் நன்கொடை வழங்கினாங்க. அப்படி சேகரித்த புத்தகங்களும், நானாக வாங்கிய புத்தகங்களுமாக 5 ஆயிரம் புத்தகங்கள் வரை சேர்ந்தன. அதையெல்லாம் கடந்த ஆண்டு வரும்போது எடுத்திட்டு வந்தேன். முதல்ல தாம்பரம் வீட்டுலதான் ஆரம்பிக்கிற திட்டம். ஆனா, பசங்க படிப்புக்காக புதுபெருங்களத்தூர் வரவேண்டியதாகிடுச்சு. நூலகத்திற்காக பெரிய வீடாக பார்த்தேன். இந்த வாடகை வீட்டில்தான் எங்க பிரக்ரத் அறிவகத்தைத் தொடங்கினோம்...’’ என உற்சாகமாகச் சொல்கிறவர், நூலகத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக வருத்தப்படுகிறார்.

‘‘இந்த ஐந்து மாசங்களாக நல்லபடியாக போயிட்டு இருக்கு. 15 பேர் ரெகுலராக வர்றாங்க. என் அபார்ட்மெண்ட் மட்டுமில்லாமல் பக்கத்து அபார்ட்மெண்ட்ல இருந்தும் வண்டலூர்ல இருந்தும்கூட சிலர் வர்றாங்க. ஆனா, நான் நினைச்சமாதிரி வரல. ஏன்னா, நான் இருக்கிற கம்யூனிட்டி அபார்ட்மெண்ட்ல 2 ஆயிரம் வீடுகள் வரை இருக்கு. குறைஞ்சது ஆயிரம் குழந்தைகளாவது இருப்பாங்க. எல்லோருக்குமே இங்க குழந்தைகள் நூலகம் இருக்குன்னு தெரியும். ஆனா, யாரும் வர்றதில்ல. அது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு.

வீட்டு ஓனரும், ‘நூலகம் நடத்தினால், மின்சாரக் கட்டணத்தை கமர்ஷியல் ஆக்கிடுவாங்க. அதனால, வேண்டாம்’னு சொல்றார். அதனால நான் ஓவர் பப்ளிசிட்டி பண்ணல.
இப்ப நூலகம் வைக்க பொது இடமாக பார்த்திட்டு இருக்கேன். பொது இடம்னு வர்றப்ப யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனா, பொது இடம்னா வாடகை அதிகம் வருது. அதுக்காக நண்பர்கள், தெரிந்தவர்களிடம் நன்கொடை கலெக்ட் பண்ணிட்டு இருக்கேன்.

ஓரளவு நன்கொடை சேர்ந்திடுச்சுனா பெரிய இடமாகப் பார்த்து என்னிடம் உள்ள 5 ஆயிரம் நூல்கள் ப்ளஸ் நிறைய தமிழ் நூல்களும் வாங்கி வைக்கலாம்னு இருக்கேன்...’’ என மகிழ்ச்சியாகக் குறிப்பிடும் ஸ்ரீராம், எதிர்காலத்தில் நூலகம் பயன்படுத்த முடியாத இடத்தில் உள்ளவர்களும் படிக்கிற மாதிரி செய்ய வேண்டும் என்பதே தன் கனவு என்கிறார்.

‘‘இப்ப என் நூலகத்துக்கு எளிதாக எல்லோராலும் வரமுடியும். இதேபோல,  நூலகத்தை எளிதாக அணுகமுடியாத இடத்துல இருக்கிறவங்களுக்கும் நூல்கள் போய்ச் சேரணும். குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குப் போய்ச் சேரணும்னு ஆசைப்படுறேன். அதுக்கும் ஒரு திட்டம் வச்சிருக்கேன்.

இப்ப நெட்ஃபிளிக்ஸ் இருக்கு இல்லையா... அவங்க அமெரிக்காவுல ஆரம்பத்துல டிவிடிதான் வச்சிருந்தாங்க. இப்பமாதிரி அப்ப ஆன்லைன் ஸ்ட்ரீமிங் கிடையாது. அதனால, அப்ப டிவிடியை வீட்டுக்கு அனுப்புவாங்க. அதைத் திருப்பி அவங்களுக்கு ரிட்டர்ன் அனுப்பவும் என்வலப் எல்லாம் ஒட்டி கவரும் சேர்த்து வச்சே அனுப்புவாங்க. எத்தனை டிவிடினாலும் பார்க்கலாம். போஸ்டல் சார்ஜ் உள்பட மாசம் எட்டு டாலர்தான்.

இந்த மாடலை நூலகத்திற்கும் பயன்படுத்தணும்னு நினைச்சிருக்கேன். இந்தியாவுல எந்தக் கிராமத்துல இருக்கும் குழந்தைகளும் என்ன புத்தகம் வேணும்னாலும், எத்தனை புத்தகம் வேணும்னாலும் சரி... படிக்கலாம். அதை போஸ்ட் அல்லது வேறு ஏதாவது ஒரு டெலிவரி மூலம் அனுப்பணும். ஒரு மாசத்திற்கு இவ்வளவு கட்டணம்னு வைக்கலாம். அதைவிட இலவசமாக பண்ணமுடிஞ்சால் சிறப்பாக செய்வேன். என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் புத்தகங்களை வாசிக்கணும். அவங்க அறிவை விசாலமாக்கணும். அதன்வழியாக நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தணும். அவ்வளவுதான்...’’ எனப் புன்னகைக்கிறார் ஸ்ரீராம்.  

பேராச்சி கண்ணன்