பாகிஸ்தானில் பங்குனி உத்திரம்!



பிபிசி இணையதளம் வெளியிட்ட செய்தி, பெரும் அதிர்வலையை அதுவும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இணையத்தை பயன்படுத்தும் அனைவரும் இச்செய்தியை பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.

என்ன விஷயம்..?

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் வசிக்கும் தமிழ் இந்துக்களின் ஒரு சிறிய சமூகம் சமீபத்தில் பங்குனி உத்திரத்தை மத ஆர்வத்துடன் கொண்டாடி இருப்பதுதான்.

கராச்சியின் கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மதராசி பாராவில் சில நூறு தமிழ்க் குடும்பங்கள் வசிக்கின்றன.
இங்கு தென்னிந்தியாவில் உள்ள மதராஸிலிருந்து (இப்போது சென்னை) இடம்பெயர்ந்த இந்துக்களின் மக்கள்தொகை அதிகமாக உள்ளது.இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கராச்சி நகரமானது ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட போது இவர்கள் இன்றைய இந்தியாவில் இருந்து - அன்றைய மதராஸில் இருந்து - இடம்பெயர்ந்து பாகிஸ்தானுக்கு வந்தனர்.

பிரிவினைக்குப் பிறகு, 50 முதல் 60 குடும்பங்கள் சிறந்த பொருளாதார வாய்ப்புகளை நம்பி அங்கு குடியேறின. இந்த குடும்பங்கள் நகரத்தில் உள்ள மூன்று முக்கிய குடி
யிருப்புப் பகுதிகளான மதராசி பாரா, டிரி ரோடு மற்றும் கோரங்கி ஆகியவற்றில் பிணைப்புடன் வாழ்கின்றன.இங்கு தமிழ் சமூகம் 1964ல் மாரியம்மன் கோயிலைக் கட்டியது. இது அவர்களின் முக்கிய மக்கள் கூடும் சபையாக விளங்குகிறது. அனுமன் கோயில் என்று அழைக்கப்படும் மற்றொரு பெரிய கோயிலும் இங்கு கட்டப்பட்டு வருகிறது.

55 வயதான தமிழரான மரியம் சுவாமி, தமது சமூகத்திலும், அவரைச் சுற்றியுள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியிலும் தனது இறைப் பணிகளுக்காக நன்கு மதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவரது வீட்டுக்கு எதிரேதான் அனுமன் கோயில் கட்டப்பட்டு வருகிறது.எல்லா மத விழாக்களுக்கும் இங்கு வாழும் சமூகத்தினர் தங்களுக்குள்ளாகவே நிதி வசூலிக்கின்றனர் என்கிறது பிபிசி இணையதளம். அந்த வகையில், இந்தக் கோயிலைக் கட்டவும் மக்கள் நன்கொடை கொடுத்திருக்கிறார்களாம்.

கராச்சியில் உள்ள தமிழ் இந்துக்கள் தென்னிந்தியாவின் மத மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் புனிதமான பண்டிகைகளின் போது இறைச்சியைத் தவிர்த்து, நோன்பிருந்து வெறும் கால்களில் யாத்திரை செல்வது, பங்குனி உத்திரத்தின் போது அழகு செய்வது போன்ற சடங்குகளைச் செய்கிறார்கள்.இந்தப் பண்டிகையைத் தவிர பொங்கல், தைப்பூசம் மற்றும் மாரியம்மன் திருவிழா போன்ற பிற மத விழாக்களையும் பக்தி சிரத்தையுடன் கொண்டாடுகின்றனர்.

பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டதாகவும் தன்னைப்போன்றோருக்கு இது புதிய அனுபவம் என்றும்  சொல்லும் இளம் பக்தையான ஈஷா ரமேஷ், ‘‘இந்த நிகழ்வுக்காக இரண்டு மாதங்களாக மீன், இறைச்சி சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்...’’ என்கிறார்.எண்பதுகளில் இருக்கும் சீதா என்ற மூதாட்டி, சமூகத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு சமையலில் உதவி செய்யும்போது, புழுங்கல் அரிசி, பருப்பு போன்றவற்றை கலவையின்றி சமைப்பதாக  தெரிவிக்கிறார்.

மதராசி பாராவைச் சுற்றிலும் பல இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த இடத்தை உன்னிப்பாகக் கவனித்தால், இந்துக்களும் இஸ்லாமியர்களும் சமய நல்லிணக்கத்துடன் இருப்பதைக் காணலாம்.அருகே உள்ள மசூதியில் தொழுகைக்கான நேரம் வந்தால், மாரியம்மன் கோயிலிலுள்ள பக்தர்கள் அம்மன் முழக்கத்தையும் கோயில் மணி அடிப்பதையும் நிறுத்தி விடுகிறார்கள்.

அதேபோல் பங்குனி உத்திரம் ஊர்வலம் நடந்தபோது, வழிநெடுகிலும் நின்றுகொண்டிருந்த முஸ்லிம்கள், மரியாதையுடன் வழிவிடுவதைக் காணலாம்.

மதராசி பாராவில் வசிக்கும் வயதான பெண்மணியான காமாட்சி கந்தசாமி, ‘‘நாங்கள் ஒற்றுமையாக வாழ்கிறோம், முஸ்லிம் சமூகத்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் வந்ததில்லை...’’ என்கிறார்.பங்குனி உத்திரம் ஊர்வலத்துக்குப் பிறகு பல இந்து பக்தர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். ஆனாலும் மரியம் சுவாமி உண்ணாவிரதத்தை முடிக்கவில்லை. காரணம்? மாலையில் முஸ்லிம்களுடன் சேர்ந்து அவர் நோன்பு துறப்பதால்!

‘‘எனக்கு ஐம்பத்து ஐந்து வயது. ஒவ்வோர் வருடமும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பேன். மாதம் முழுவதும் விரதம் இருப்பேன். என் மகன், மருமகள் அனைவரும் நோன்பு துறந்தார்கள். அல்லாஹு அக்பர், இறைவன் அருளுடன் மாலையில் நோன்பு துறப்பேன். இது இங்குள்ள அனைவருக்கும் தெரியும்...’’ என்கிறார் மரியம் சுவாமி.

2017ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையான 207.68 மில்லியனில் 1.73 சதவீதம் பேர் இந்துக்கள்.கராச்சியில் தமிழ் இந்துக்கள், ஒரு மதச்சிறுபான்மையினரின் துணைக்குழுவாக இருப்பதால், தங்கள் சொந்த வளமான கலாசார பாரம்பரியத்தின் மீது ஒரு பிடியை வைத்திருக்கிறார்கள். அத்துடன் பிரதான பாகிஸ்தானிய கலாசாரத்துடனும் அவர்கள் கலந்திருக்கிறார்கள்.

கராச்சியின் இந்தப் பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். ஆனால், பலர் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் உருது மொழி பேசும் புலம்பெயர்ந்த சமூகங்களுடன் ஒருங்கிணைந்துள்ளனர்.இங்குள்ள சமூகத்தில் உள்ள பெரியவர்களுக்கு தமிழ் மொழி மீது பிடிப்பு உள்ளது.

ஆனால், இளைய தலைமுறையினர் தங்கள் தாய்மொழியில் சில வாக்கியங்களைப் பேச முடியாமல் வார்த்தைகளைத் தேடுகிறார்கள். இவர்களில் பலரால் தமிழில் அனைத்து பாடல்களையும் பாட முடிகிறது. ஆனால், அவர்களில் பெரும்பாலானோரால் தமிழ் மொழியை எழுத்துக் கூட்டிப் படிக்க முடியவில்லை என்பது சோகம்தான்.வருங்காலத்தில் இவை மாறும். இந்து - முஸ்லீம் ஒற்றுமை தொடரும்!

என்.ஆனந்தி