ஒரு ஹீரோயின் அறிமுகப்படத்தில் வாங்கும் மிகப்பெரிய சம்பளம் இதுதானாம்



உலக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு ஹீரோயின் அறிமுகப்படத்தில் வாங்கும் மிகப்பெரிய சம்பளம் இதுதானாம்.

வருகிறார் ஸ்ரீதேவி மகள்!

இப்படிக் கேள்விப்பட்டவுடன் அடடே என வெல்கம் போர்டுகள் எல்லாம் தயார் செய்தால் இப்போதும் தமிழுக்கு வராமல் தெலுங்கில் களமிறங்குகிறார் ஜான்வி கபூர். தென்னிந்திய தேவதை, மறைந்த ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் செல்லமான மூத்த மகள்.அம்மா வழியில் தமிழ்ப் படத்தில் அறிமுகமாவார் என ரசிகர்கள் காத்திருக்க... ‘அதெல்லாம் முடியாது, நாங்கதான் முதல் அறிமுகம் கொடுப்போம்...’ என பாலிவுட் சினிமா பச்சக் என பிடித்துக்கொள்ள... வெளியானது ‘தடக்’. காதல், டூயட், பிரிவு, சோகம் என முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை அள்ளிக்கொண்டார் ஜான்வி.

தொடர்ந்து ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’, ‘அங்ரேஸி மீடியம்’, ‘குன்ஜான் சக்ஸேனா’, ‘ரூஹி’, ‘குட் லக் ஜெர்ரி’, ‘மிலி’ என இவர் நடிப்பில் வெளியாகிவிட்டன.அடுத்து வருண் தவான் ஜோடியாக ‘பவால்’, ‘மிஸ்டர் & மிஸஸ் மஹி’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. பெல்லி டான்ஸை முறையாகக் கற்றுக்கொண்ட ஜான்வி இன்ஸ்டா, டுவிட்டர் என எங்கும் தன் இடையை வெட்டி நடனம் ஆடி அடிக்கடி ரசிகர்களுக்கு ஹார்ட் பீட் எகிற வைப்பதில் திறமைசாலி.

அவ்வப்போது ஹிட் பாடல்களுக்கு மொழி பேதமின்றி இவர் நடனம் ஆடும் ரீல்ஸ்கள் இணையத்தில் ஃபயர் ரகம். கார் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் ஜிலீர் ஜிம் உடையில் அசால்ட்டாக தெருவில் நடந்து சென்று மும்பை மாநகரை பரிதவிக்க விடுவதில் பேபிம்மாவுக்கு அப்படி ஓர் ஆனந்தம்.போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போதும் ஜான்வியின் கால்ஷீட் பிஸி காரணமாக கோலிவுட் என்ட்ரி மிஸ் ஆகிவிட்டது.

கடந்த சில மாதங்களாகவே நடிகை ஜான்வி கபூர் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது. குறிப்பாக அவர் தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் ‘பையா 2’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிப்பார் என கூறப்பட்டது.
ஆனால், அதெல்லாம் வதந்தி என போனி கபூர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.எது எப்படியோ, ‘அது நம் வீட்டுப் பொண்ணு... அந்தத் தங்கத்தை எப்போ சார் தமிழ்நாட்டுக்குக் கடத்திட்டு வருவீங்க’ என இங்கே ரசிகர்கள்  காத்திருக்க சட்டென மாஸ் சம்பளத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30வது படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார்.

இந்தப் படத்தின் அப்டேட் கேட்டுதான் சமீபத்திய ‘அமீகோ’ பட நிகழ்வில் உணர்வுபூர்வமாக பேசினார் ஜூனியர் என்டிஆர். ‘‘அப்டேட் கேட்டு படக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள். எங்களிடம் அப்டேட் என ஒன்றிருந்தால் என் மனைவி, குழந்தைக்கு சொல்லும் முன் உங்களுக்குத்தான் சொல்வோம்...’’ என மேடையில்  ஜூனியர் என்டிஆர் பேசிய வார்த்தைகளும், உணர்வுகளும் இப்போதும் டிரெண்டிங்கில் உள்ளன. இதோ கேட்டபடி  அப்டேட் கொடுத்துவிட்டார்கள்.

‘ஜனதா கேரேஜ்’, ‘ஸ்ரீமந்துடு’, ‘பரத் அனே நேனு’ உள்ளிட்ட பல மாஸ் படங்களை இயக்கிய கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ஜான்வி நடிக்க இருப்பதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. ஜான்வியின் 26-வது பிறந்த நாளை முன்னிட்டு, படக்குழு இந்த அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்காக அவருக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தென்னிந்தியாவில் அறிமுகமாகும் முதல் படத்தில் உலக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு ஹீரோயின் வாங்கும் மிகப்பெரிய சம்பளம் இதுதானாம். தெலுங்கில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ராஷ்மிகா, சமந்தா உள்ளிட்டவர்களின் சம்பளமே இதுதானாம். அதாவது பல படங்களில் நடித்து தங்களை நிரூபித்த பிறகு அவர்கள் ஒரு படத்துக்குப் பெறும் ஊதியத்தைத்தான் அசால்ட்டாக தன் முதல் படத்திலேயே ஜான்வி கபூர் வாங்குகிறார் என்கிறார்கள்.

இந்தத் தகவல் பரவியதும் பற்றிக் கொண்டது கோலிவுட், டோலிவுட், மல்லு & சாண்டில்வுட்ஸ். மொத்த தென்னிந்தியாவிலும் இப்போது இதுதான் ஹாட் டாபிக்.
என்னவோ போங்க சார்... ஜான்வி கமிங்கிற்காக மீண்டும் வெயிட்டிங் போர்டுதான் போட்டு வைத்தாக வேண்டும்.

ஷாலினி நியூட்டன்