சர்வதேச அளவில் தமிழுக்கு மரியாதை!



சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘பூக்குழி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Pyre’ நாவல் இடம்பெற்றுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பை அனிருத்தன் வாசுதேவம் செய்திருக்கிறார்.உண்மையிலேயே இது மிகப்பெரிய விஷயம். ஏனெனில் தமிழில் எழுதப்பட்ட நாவல் ஒன்று இந்தப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை.

புக்கர் பரிசு ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மொழியில் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் பதிப்பிக்கப்படும் சிறுகதைத் தொகுப்பிற்கோ, நாவலுக்கோ வழங்கப்படும். பரிசைப் பெறும் நாவலுக்கு விருதுத் தொகையாக 50 ஆயிரம் பவுண்டுகள் வழங்கப்படும். அதை கதாசிரியரும் மொழி
பெயர்ப்பாளரும் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.

சர்வதேச புக்கர் பரிசு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, அந்தப் பரிசுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நாவல்களின் பட்டியல் வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் இடம்பெறுவதே மிகப் பெரிய கௌரவம். அந்த கெளரவத்தை ‘Pyre’ பெற்றிருக்கிறது.இதன் தொடர்ச்சியாக புக்கர் பரிசும் கிடைத்தால் அது சர்வதேச அளவில் தமிழர்களுக்குக் கிடை த்த மிகப்பெரிய அங்கீகாரமாக மாறும்.

நிரஞ்சனா