ஆஸ்கர்...+ நோபல் இரண்டையும் வென்ற இருவர்!



ஒரே நபர் நோபல் பரிசையும் ஆஸ்கர் பரிசையும் வெல்ல முடியுமா?

முடியும். அப்படி நடந்திருக்கிறது. ஒரு முறை அல்ல இரு முறை! முதலாமவர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. 1925ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வெல்கிறார்; 1939ல் பிக்மாலியன் படத்துக்கு - சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெறுகிறார்!மற்றொருவர் பாடகர் பாப் டிலன். 2000ம் ஆண்டு, ‘Wonder boy’ படத்துக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வெல்கிறார்; 2016ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வெல்கிறார்.இதில் இன்னுமே ஒரு அரிய கேட்டகிரி உள்ளது.

ஆஸ்கர், நோபல், கிராமி, எம்மி என்று நான்கு வெவ்வேறு துறைகள் சார்ந்த  விருதுகளை வென்ற ஒருவர் உள்ளார்!எளிதில் ஊகிக்க முடியாத பெயர் - அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் அல் கோர் (Al Gore)!

2006ம் ஆண்டு காலநிலை மாற்றம்  குறித்த ஆவணப்படமான ‘An Inconvenient Truth’திற்கு ஆஸ்கர் விருது பெற்றார். 2007ம் ஆண்டு காலநிலை மாற்றம் குறித்த ஒரு கமிட்டியில் செயல்பட்டதற்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். 2007ம் ஆண்டு இசைத்துறையில் அளிக்கப்படும் கிராமி விருது! சிறந்த பேசும் ஆல்பத்துக்கான விருது!அதே ஆண்டு - 2007ல் - தொலைக் காட்சி நிகழ்வுகளுக்கு அளிக்கப்படும் எம்மி விருதில் - prime time emmy - விருதை தனது நிறுவனமான Current TVக்கு தட்டிச்சென்றார்!

அல் கோர் இன்னும் காலநிலைமாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் கூட அதிபர் பைடன் அலாஸ்காவில் எண்ணெய்க் கிணறுகள் தோண்ட அனுமதி அளித்ததை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

கார்த்திக் வேலு