இது மெலினா படகாப்பிஇல்ல!
டிரெய்லரில் அதிர்ச்சி டேக். அது இதுதான்: ‘என் தந்தை இறக்கும் தருவாயில் நான் என் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்...’ - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
 ‘‘அட! யாரும் இதைக் கவனிக்காம கடந்து போயிடுவாங்கன்னு நினைச்சேன். நீங்க கரெக்ட்டா கேட்டுட்டீங்களே...’’ குறும்பாக சிரிக்கிறார் இயக்குநர் டான் சான்டி. முதல் ஃபிரேமிலேயே டிரெய்லரில் அதிர்ச்சி கொடுக்கும் மஹாத்மா காந்திஜியின் வார்த்தைகளுடன் ஆரம்பிக்கிறது ‘பிளாஷ்பேக்’ பட டிரெய்லர். பிரபுதேவா, ரெஜினா கஸாண்ட்ரா நடிப்பில் மெல்லிய இழையோடும் டீன் ஏஜ் காதலும், காமமுமாக டிரெய்லர் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது.

‘மஹாபலிபுரம்’, ‘கொரில்லா’ படங்களுக்குப் பின் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஒரு படம் கொடுக்கத் தயாராக இருக்கிறார் டான் சான்டி.‘‘‘காந்திஜி 1008 நல்ல விஷயம் சொல்லியிருக்கார்... அதென்னடா உன் கண்ணிலே இது பட்டிருக்கு?!’ இதுதானே உண்மையாகவே நீங்க கேட்க நினைச்ச கேள்வி..? நாம யாருமே சக மனுஷங்கதான் என்பதை பல இடங்களில் உணர்றதே கிடையாது.
 காந்திஜி தன்னுடைய சுயசரிதையிலே ஏன் இதைப் பதிவு செய்திருக்கார்ன்னு சிந்திச்சா அதற்கான பதில் கிடைக்கும். அவருக்கு அப்ப 17 வயது, மனைவிக்கு 13 வயது. அப்போதெல்லாம் குழந்தைத் திருமணம் சகஜம். அந்த வேளை அவர் அப்பா படுத்த படுக்கையிலே நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார்.  காந்திஜிதான் அவருடைய அத்தனை தேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்திருக்கார். ஆனால், புதிதா கல்யாணமான காந்திஜி தன் மனைவியுடன் சந்தோஷமா இருந்திருக்கார். அந்த நேரம் அப்பா தவறிட்டார். இத்தனை நாட்கள் என் தந்தையைப் பார்த்துக்கிட்ட நான் இந்த ஒரு சிற்றின்பத்தால அவர் கடைசி நிமிடங்களில் பக்கத்திலே இல்லாம போயிட்டேனே அப்படின்னு அவர் வருத்தப்பட்டிருக்கார். காந்திஜியின் சித்தப்பாதான் கதவைத் தட்டி அவர் அப்பா இறந்ததை சொல்லியிருக்கார்.
 என்னதான் நாம மஹாத்மா, தேசப் பிதான்னு சொன்னாலும் தானும் ஒரு சக மனுஷன்தான் என்பதை அற்புதமா இந்த சம்பவம் மூலமா பதிவு செய்திருக்கார் காந்திஜி. அந்த வார்த்தைகள்தான் ‘நாம எல்லாருமே மனுஷங்கதானே, ஏன் இவ்வளவு காம்ப்ளிகேஷன்’ அப்படின்னு யோசிக்க வெச்சது. அந்த புள்ளிதான் ‘பிளாஷ்பேக்’ உருவாகக் காரணம்...’’ நிதான மாக சொல்கிறார் டான் சான்டி.
கதைக்குள்ளே ‘பிளாஷ் பேக்’ இருக்கறது இயல்பு... படத்திற்கே ‘பிளாஷ்பேக்’ தலைப்புக்கு என்ன காரணம்?
நாம ஒவ்வொருத்தரும் டீன் ஏஜில் இப்படியான ஒரு காலத்தை நிச்சயம் கடந்து வந்திருப்போம். ஆனால், அதை டார்க் பக்கங்களா நினைச்சு வெளியே சொல்லிக்கறது இல்லை. ‘ஒரு பெண்ணை, அதிலும் என்னை விட வயதில் மூத்த ஒரு பெண்ணை நான் என் டீன் ஏஜில் ஆசையுடன் பார்த்தேன்’னு யார்தான் ஒப்புக் கொள்வாங்க..? பெண்கள் இன்னும் சுத்தம், வாயைத் திறக்கவே மாட்டாங்க.
ஆக்சுவலி அது கலர்ஃபுல் பக்கங்கள். பயந்து, நடுங்கி, வியர்த்து, நமக்குள்ள இருக்கற ஆசையை வெளியே கொண்டு வந்த நாட்கள் அதுதான். அப்படி ஒரு பையன் ஒரு டீச்சர் மேலே வைக்கும் டீன் ஏஜ் காதல்தான் இந்த ‘பிளாஷ்பேக்’. ‘மெலினா’ படத்துடன் இந்த டிரெய்லர் ஒப்பிடப்பட்டு பேசப்படுதே..? யார் அந்த ரைட்டர்?
படத்திலே ரெஜினா ஆங்கிலோ இந்தியன் கேர்ள் ஆக வர்றாங்க. அந்த லுக், நடை, உடை, எல்லாம் கூட அந்த எண்ணத்தை உண்டாக்கியிருக்கலாம். டீன் ஏஜ் பாய் - வளர்ந்த பெண் மேல் காதல்... இப்படிக் கதை எடுத்தாலே ‘மெலினா’ படத்துடனான ஒப்பீடு நிச்சயம் உண்டாக்கும். உலக அளவில் அந்தப் படம் செய்த மேஜிக் அப்படி. ஆனால், எனக்கு இன்ஸ்பிரேஷன் பாலுமகேந்திரா சாருடைய ‘அழியாத கோலங்கள்’ படம்தான். அப்போதே அந்தப் படம் செம தில்லான ஸ்டெப்.
ரெஜினா முழுக் கதையும் கேட்டுட்டு ‘அந்தப் பொறுக்கி டைரக்டர் நீங்கதானா’ன்னு கேட்டு சிரிச்சாங்க. உண்மைக்குதான் பயம் அதிகம், சீக்கிரம் வெளியே வராது. அதை எழுதுகிற மனுஷன் இன்னைக்கு பொறுக்கி என்கிற நோக்கத்தில்தான் பார்க்கப்படுகிறான் இல்லையா... என்னுடைய வாழ்க்கையிலேயும் இப்படியான ஒரு ‘பிளாஷ்பேக்’ இருக்கு.படத்திலே ‘பொறுக்கி ரைட்டர்’ என்கிற டேக் பிரபுதேவா மாஸ்டர பார்த்துதான் சொல்லப்படும். நான் காதலைக் காட்டிலும் காமத்தை நம்புறவன்.
காமத்துக்கு ஒரு உண்மை முகம் உண்டு. பிரபுதேவா, ரெஜினா... இருவருடனும் வேலை செய்த அனுபவம் பற்றி சொல்லுங்க?
நிறைய ஹீரோயின்களுக்கு கதை சொல்லி வேண்டாம்ன்னு சொன்னாங்க. அதே மாதிரி ஹீரோக்கள் பலரும் கூட இந்தக் கதையில் நடிச்சா என் இமேஜ் கெட்டுப் போகும்ன்னு சொல்லி நோ சொன்னாங்க. ஆனால், ஏற்கனவே அபிஷேக் ஃபில்ம்ஸ்ல மாஸ்டர் ஒரு படம் செய்திருக்கார். அந்த நம்பிக்கையிலே அவர்கிட்டே கதை சொன்னேன். அவரும் கேட்டுட்டு ‘சரி பார்க்கலாம்’ன்னு சொல்வார்ன்னு நினைச்சேன். ஆனால், ‘எப்போ ஷூட் ஆரம்பம்’ன்னு கேட்டார்.
இதுவரையிலும் நடிக்காத ஸ்டைல்ல மாஸ்டரைப் பார்க்கலாம். அவர் அடிப்படையிலேயே ஒரு இயக்குநர் என்கிறதால் எனக்கு என்ன வேணும், என் கதை என்ன சொல்ல வருது எல்லாமே சுலபமா புரிஞ்சுக்கிட்டார். ‘எவ்வரு’ தெலுங்குப் படத்தில் ரெஜினா கேரக்டர் பிடிச்சுப் போயிதான் அவங்க கிட்டே இந்தக் கதையை தைரியமா சொன்னேன். இந்தக் கேரக்டர் மதில்மேல் பூனை ரகம். கொஞ்சம் தடுமாறினாலும் அவங்க இமேஜ் தவறா மாறிடும். அதனாலேயே நிறைய ஹீரோயின்கள் பின்வாங்கினாங்க. ஆனா, ரெஜினா ஒவ்வொரு காட்சியிலேயும் அவ்ளோ ரியலிஸ்டிக்கா, போல்டா நடிச்சாங்க.
டிரெய்லர் பார்த்திட்டு வேண்டாம்ன்னு சொன்ன சில நடிகைகளே கூப்பிட்டு மிஸ் பண்ணிட்டதா வருத்தப்பட்டாங்க. அப்படி ஒரு நடிகை ரெஜினா. அவ்ளோ டெடிகேஷனா வேலை செய்தாங்க. நிஜமாகவே ரெஜினாவும், மாஸ்டரும்தான் இந்தப் படம் உருவாக முழுக் காரணம். படத்தின் மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் பற்றி சொல்லுங்க?
இளவரசு சார் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிச்சிருக்கார். அனுசுயா பரத்வாஜ் தெலுங்கில் பெரிய ஆர்ட்டிஸ்ட். ‘புஷ்பா’, ‘பீஷ்ம பர்வம்’ இப்படி பல படங்கள்ல நடிச்சிருக்காங்க. இந்தப் படத்திலும் பலமான கேரக்டர்.உமா ரியாஸ் மேடம், தனித்துவமான கேரக்டர்கள்லதான் நடிப்பாங்க. அப்படியான கேரக்டர்தான் அவங்களுக்கும். நிறைய புது நடிகர்கள் இருக்காங்க. ரெஜினா வருகிற காட்சிகள்ல வர்ற பசங்கதான் கதையின் நாயகர்கள். அவங்க கேரக்டர்களுக்குத்தான் நிறைய தேடல் செய்தேன்.
சின்ன வயது பையனா அக்ஷத் ‘மெர்சல்’ படம் உட்பட நிறைய படங்கள்ல நடிச்சிருக்கான். அவன்தான் கிட்டத்தட்ட ஹீரோ. அடுத்து ராகுல் என்கிற டீன் ஏஜ் பாய். அந்தக் கேரக்டருக்கு தேடாத இடமில்ல. யாருமே நடிக்க சம்மதிக்கல. தவிர அவங்க அப்பா, அம்மாக்களே கதைய கேட்டுட்டு பையன் பெயர் கெட்டுப் போயிடும்ன்னு சொல்லிட்டாங்க.
அப்பறம் ராகுல்ன்னு ஒரு +1, +2 படிக்கிற பையன் கிடைச்சார். எனக்கு கெட்டப் சேஞ்ச் செய்து காலேஜ், பையனை எல்லாம் ஸ்கூல் பையனா நடிக்க வைக்கறதிலே உடன்பாடு இல்லை. அவ்ளோ நல்லா நடிச்சிருக்கார். சூர்யா என்கிற பையன், காலேஜ் படிக்கற வயசிலே நடிச்சிருக்கார்.
வித்யாசமான டோன், பொயட்டிக்கா இருக்கறதா பராட்டுகள் வருது. அதுக்குக் காரணம் ‘டெடி’, ‘ரன் பேபி ரன்’ படங்கள் செய்த யுவாவின் சினிமாட்டோகிராபி. சான் லோகேஷ் எடிட்டிங் சூப்பரா வந்திருக்கு. எஸ்.எஸ். மூர்த்தி ஆர்ட் டைரக்ஷன், மியூசிக் சாம் சி.எஸ், வசனங்கள் மொத்தமே நாலு பக்கங்கள்தான் வரும். சாம் சி.எஸ். பேக்ரவுண்ட் ஸ்கோர்தான் பல இடங்கள்ல வசனமா இருக்கும். ‘Based on True Events’... யாருடைய உண்மைக் கதை இது?
இது ‘கமிங் ஆஃப் ஏஜ்’ என்கிற சினிமா மேக்கிங் ஸ்டைல். இந்தக் கதையை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி கிட்டே சொல்லும் போது காயத்ரி மேடம்தான் இதைச் சொன்னாங்க. அரிதா நம்ம இந்திய சினிமாவிலே எடுக்கற கதைக்களம்னு கதை கேட்டுட்டுப் பாராட்டினாங்க.
உங்களுக்கு, எனக்குனு எல்லோருடைய உண்மைக் கதை இதுன்னு சொல்லலாம். ஆனால், வெளியே சொல்லிக்கறதில்ல. பார்க்கற ஒவ்வொருத்தரும் அட நமக்கும் இப்படி ஒரு கதை இருக்கே... ச்சே... இப்படியா அந்தப் பொண்ணை யோசிச்சோம் அப்படின்னுலாம் கூட யோசிப்பாங்க.ஒவ்வொருத்தரும் சொல்ல முடியாத அவங்க பிளாஷ்பேக் தருணங்களை ஞாபகப்படுத்தும் இந்த ‘பிளாஷ்பேக்’.
ஷாலினி நியூட்டன்
|