மேடை நாடகமாகும் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு!



இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் தமிழகத்தில் நடந்த இரண்டு கொலைகள் தமிழக மக்களைப் புரட்டிப்போட்டன. ஒன்று ஆளவந்தார் கொலை. மற்றது லக்ஷ்மிகாந்தன் கொலை. முதலாவது கொலை மக்களைப் பீதியடையச் செய்தது என்றால் பின்னது வெறும் வாய்க்குக் கிடைத்த அவல். காரணம், லக்ஷ்மிகாந்தன் கொலையில் சிறைத்தண்டனை அனுபவித்த அன்றய திரையின் சூப்பர் ஸ்டார்களான பாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ் ணன். அத்தோடு இதோடு தொடர்புடையதாக பேசப்பட்ட பணம், புகழ் மற்றும் பாலியல்.

1932லேயே ஒரு ஃபோர்ஜரிக்காக 7 வருட சிறைத்தண்டனை அனுபவித்தவர் லக்ஷ்மி காந்தன். 1939ல் ரிலீசாகும் லக்ஷ்மி, 1943களில் ‘சினிமா தூது’ எனும் வார இதழை ஆரம்பிக்கிறார். யெல்லோ ஜர்னலிஸம் எனும் மஞ்சள் பத்திரிகையின் பிதாமகன் என்று கோர்ட் தீர்ப்பே இவரை வர்ணிக்கிறது. முதலில் பிரபலங்கள் பற்றிய கிசுக்களைத் தொகுத்தல், பின்பு அதை வைத்து அந்த பிரபலங்களிடமே பணம் கேட்டு பேரம் பேசுதல், கொடுக்க மறுத்தால் ‘தூது’வில் தொடராக எழுதி நாற அடிப்பது... இதுதான் லக்ஷ்மியின் டிரேட் மார்க்.

இந்தப் பத்திரிகை வேறு காரணங்களுக்காக தடைபட்டபோது லக்ஷ்மி அசரவில்லை. சில மாதங்களிலேயே ‘இந்துநேசன்’ என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். அதிலும் அதே அர்ச்சனைகள்தான்.
ஆனால், எல்லாம் 8ம் தேதி, நவம்பர் மாதம், 1944 வரைதான். இந்த நாளில்தான் லக்ஷ்மி காந்தன் வேப்பேரியில் இருந்த ஒரு தெருவின் வழியாக ஒரு கை ரிக்‌ஷாவில் பயணம் செய்யும்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். அடுத்தநாள் பொதுமருத்துவமனையில் இறந்தும்போனார்.

கொன்ற இரண்டு பேர் மட்டுமல்லாமல், கொலைக்கு சதி செய்தார்கள் என்று மேலும் 6 பேரை காவல்துறை கைது செய்தது. இதில்தான் பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் அடக்கம். நடிகர்கள் அப்பீலுக்குப் போனார்கள். ஆனால், பலிக்கவில்லை. வி.எல். எத்திராஜ் என்ற பிரபல கிரிமினல் வக்கீல் 1947ல் லண்டன் பிரிவி கவுன்சிலில் மீண்டும் அப்பீல் செய்தார். பிரிவி கவுன்சில் மீண்டும் கேஸை சென்னை உயர்நீதிமன்றத்தை விசாரிக்கச் சொன்னது.

கொலையில் பாகவதர் மற்றும் கிருஷ்ணன் சதி செய்தார்கள் என்பதற்கான போதுமான சாட்சியங்கள் இல்லை என்று இருவரையும் 1947 ஏப்ரல் மாதம் விடுவித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கைதுக்கும் விடுதலைக்கும் இடைப்பட்ட 30 மாதத்தில் பாகவதர் உடல் ரீதியாக நொடிந்துபோயிருந்தார். என்.எஸ்.கிருஷ்ணன் ஓரளவு பரவாயில்லை. ஆனால், இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் சாட்சியங்களின் வாக்குமூலங்கள், பல்டிகள், பிறழ் சாட்சியங்கள்... எல்லாம் பத்திரிகை வாசகர்களை கன்னித்தீவுக்கே அழைத்துச் சென்றது.

இந்தியாவில் ஒரு நீதிமன்றத் தீர்ப்பில் ஜூரி எனப்படும் மக்கள் தீர்ப்பு மன்றம் - அதாவது சமூகத்தில் அந்தஸ்தில் உள்ள மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேரில் பலர் பாகவதரும், கிருஷ்ணனும் சதியில் ஈடுபட்டார்கள் என்று தீர்ப்பு வழங்கியிருந்தனர். இதையேதான் நீதிபதியும் தன் தீர்ப்பில் ஆமோதித்திருந்தார். இந்தியாவில் நானாவதி வழக்குக்கு முன் தமிழகத்தில் நடந்த கடைசி ஜூரி தீர்ப்பு இந்த லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்குதான் என்பது வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

பாகவதர் மற்றும் கிருஷ்ணன் தொடர்பாக அடிபட்ட பாலியல் அம்சங்களையும் தாண்டி ஒரு கொலைக் குற்றத்தில் விசாரணை எப்படி எல்லாம் நடைபெற்றது, அதில் இருந்த கோக்குமாக்குகளை எல்லாம் நாடகமாகக் கொண்டுவருகிறது ‘மெட்ராஸ் பிளேயர்ஸ்’ எனும் நாடக நிறுவனம். ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ எனும் பெயரில்
சென்னையில் அரங்கேறும் இந்த நாடகத்தை இயக்கியிருப்பவர் இந்த நாடக நிறுவனத்தின் உறுப்பினர்களில் ஒருவரான ராமகிருஷ்ணா.

‘‘வடிவேலு, நாகலிங்கம் ஆகியோர்தான் இந்த வழக்கில் ஏ1 மற்றும் ஏ2. இவர்கள்தான் லக்ஷ்மிகாந்தனை கொலை செய்தவர்கள். இவர்களுடன் பாகவதர், கிருஷ்ணனையும் சேர்த்து மொத்தம் 8 குற்றவாளிகள் சதி செய்து கொலை செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்றது.

2016களில் ஒருமுறை சென்னை உயர்நீதிமன்றத்தின் 125வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஒரு சிறு நாடகத்தை நீதிமன்றத்தில் நிகழ்த்திக் காட்டினோம். அப்போது அங்கிருந்த சீனியர் வக்கீல்கள் ‘சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபலமான இரண்டு கொலைகள் ஒருகாலத்தில் பேசப்பட்டது. அதில் ஒன்றை நாடகமாகச் செய்யலாமே...’ என்று ஆலோசனை சொன்னார்கள்.

அதில் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு சுவாரசியமாக இருந்ததால் அதை செய்ய முன்வந்தோம்...’’ என்று சொல்லும் ராமகிருஷ்ணா, அதற்குத் தயாரான விஷயத்தையும் கூறினார்.

‘‘இந்தக் கொலையே கிசுகிசுக்களால் நிகழ்ந்தது எனும் நிலையில் நாடகமும் கிசுகிசு பாணியில் இருக்கக்கூடாது எனும் முடிவில் அந்தக் கொலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக் கட்டுகளை வாங்கினேன். அது சுமார் 500க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பு.

அதை எல்லாம் நாடகத்தில் கொண்டுவரமுடியாது எனும் அடிப்படையில் அந்த வழக்கில் இடம்பெற்ற முக்கியமான பாத்திரங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நாடகத்தை எழுதினேன்...’’ என்ற ராமகிருஷ்ணா, வழக்கு பற்றிய சில சுவாரசியங்களையும், நாடகத்தில் இடம்பெறும் முக்கியமான காட்சிகள் பற்றியும் விவரித்தார்.

‘‘கொலை நடந்த நவம்பர் 1944க்குப் பிறகு ஒவ்வொருவராகக் கைது செய்யப்படுகிறார்கள். பாகவதரும், கிருஷ்ணனும்கூட கைது செய்யப்படுகிறார்கள். அப்போது ஜெயானந்தம் எனும் ஒருவரும் கைது செய்யப்படுகிறார். மொத்தத்தில் 8 பேர், சதி செய்து கொலை பாதகத்தைச் செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

சதிக்கான முதல் அப்ரூவராக ஜெயானந்தம் மாறுகிறார். உண்மையில் ஜெயானந்தத்தின் தங்கையான மாதுரிதேவி எனும் ஒரு நடிகை பற்றி லக்ஷ்மிகாந்தன் இல்லாததும் பொல்லாததுமான ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அப்படியிருந்தும் திடீரென்று ஜெயானந்தம் பல்டி அடிக்கிறார். பிறகு, ‘என்னைக் கொலையாளிகளில் ஒருவன் மிரட்டினான்... அதனால்தான் பல்டி அடித்தேன்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து முதல் வாக்குமூலத்திலேயே நிற்கிறான்.

அதாவது சதி செய்தோம் என்று ஒப்புக்கொள்கிறான். இந்த 8 பேரில் ஆரியசேனன் என்பவர் லக்ஷ்மிகாந்தனின் மானேஜராக இருந்து விலகியவர். கொலை செய்தவர்களான வடிவேலு மற்றும் நாகலிங்கம் சாதாரண மனிதர்கள். அதாவது அன்றாடம் காய்ச்சிகள். விசாரணை 1945ல் ஆரம்பமாகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. சதி செய்துதான் கொலை செய்தார்கள் என்பதற்காக பலரும் விதவிதமாக சாட்சியங்களைச் சொன்னார்கள்.

ஒருவர் சதி செய்ததை காதில் கேட்டதாக சொன்னார். ஒருவர் சதி செய்ததைப் பார்த்ததாக சொன்னார். ஆனால், இதை எல்லாம் பாகதரும், கிருஷ்ணனும் மறுத்தே வந்தார்கள்...’’ என்று சொல்லும் ராமகிருஷ்ணா, மக்கள் மன்றமான ஜூரியைச் சேர்ந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் இரண்டு பேர் தவிர  பாகவதரும், கிருஷ்ணனும் சதி செய்து கொலை செய்தார்கள் என தீர்ப்பு வழங்கவே இதையே நீதிமன்றம் வேத வாக்காக எடுத்துக்கொண்டு 6 பேருக்கு தண்டனையை அறிவித்தது என்கிறார்.

‘‘பொதுவாக அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்த அல்லது இப்போதும் சில நாடுகளில் இருக்கும் இந்த ஜூரி முறையில் அதில் இடம்பெறும் எல்லா உறுப்பினர்களுமே ஒருமித்த கருத்தை எடுத்திருக்கவேண்டும். அப்போதுதான் அந்த கருத்து ஒரு தீர்ப்பாக நிலைக்கும். ஆனால், இந்தியாவில் அதுவும் இந்த லக்ஷ்மிகாந்தன் கேசில் மொத்தம் 9 பேர் ஜூரியாக இடம்பெற்றனர்.

இதில் 6 பேர் பாகவதர், கிருஷ்ணன் உட்பட 6 பேரும் குற்றவாளிகள் என்று சொல்ல மீதி 3 பேர் இல்லை என்று சொன்னார்கள். ஆகவே, பெரும்பான்மை கருத்தை வைத்து நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை கொடுத்தது...’’ என்று சொல்லும் ராமகிருஷ்ணா, பிறகு எத்திராஜ் எனும் பிரபல கிரிமினல் வக்கீல், பாகவதருக்கும் கிருஷ்ணனுக்கும் எப்படி ஒரு ஆபத்பாந்தவனாக இருந்தார் என்றும் விவரித்தார்.

‘‘இரண்டாவது அப்பீலை லண்டனுக்கு அனுப்பினார் எத்திராஜ். அவர்கள் மீண்டும் இந்த கேஸை விசாரிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஆணையிட்டனர். எத்திராஜ், இந்த தீர்ப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் சதி செய்தார்கள் என்பதற்கான சரியான ஆதாரங்கள் இல்லை என வாதிட்டிருந்தார். இதை கருத்தில்கொண்ட நீதிமன்றம் 1947 ஏப்ரல் மாதம் பாகவதர், கிருஷ்ணன் உட்பட சிலரை விடுவித்தது...’’ என்று சொல்லும் ராமகிருஷ்ணா, இதற்கிடையே இருவரில் ஒருவரான பாகவதர் விடுதலையானபோது ரொம்பவே உடைந்திருந்தார் என்கிறார்.

‘‘வழக்கு விசாரணை மட்டுமில்லாமல் பாகவதர் மற்றும் கிருஷ்ணன் தொடர்பான பல புத்தகங்களைப் படித்தேன்; திரைப்படம் தொடர்பான சில ஆளுமைகளைப் பார்த்துப் பேசினேன்.
பாகவதர் கைது செய்யப்படும்போது அவர் நடித்த ‘ஹரிதாஸ்’ இரண்டு வருடமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், வெளியே வந்தபின் பாகவதர் நடித்த ‘ராஜமுக்தி’ சோபிக்கவில்லை.

அதேநேரம், என்.எஸ்.கிருஷ்ணன் திரையில் தோன்றுவது போலவே சிறையிலும் ஜாலியாக இருந்ததாக படித்திருக்கிறேன். நீதிபதிகள், வக்கீல்களுடன் மட்டுமல்ல, சிறையில் தன்னை அப்போது சந்திக்க வந்தவர்களுடனும் கேலியும் கிண்டலுமாகப் பேசியதாகக் கேள்விப்பட்டேன்.

விடுதலைக்குப் பிறகும் 1955 வரை வெற்றிகரமான நடிகராகவே என்.எஸ்.கிருஷ்ணன் வலம்வந்திருக்கிறார். ஆனால், பாகவதரால் சினிமா முயற்சியில் மட்டுமல்ல, பாட்டுக் கச்சேரிகளிலும் சோபிக்கமுடியாமல் போனது. ஒருவேளை பாகவதர் வெளியே வந்தபோது இந்தியா சுதந்திர நாடாக மாறியிருந்ததை அவரால் உணரமுடியாமல்கூட போயிருக்கலாம்...’’ என்கிறார் ராமகிருஷ்ணா.

செய்தி: டி.ரஞ்சித்

படங்கள்: ஆர்.சி.எஸ்.