Must Watch
 எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்
சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் உட்பட ஏழு ஆஸ்கர் விருதுகள் தவிர பல்வேறு விழாக்களில் 350க்கும் அதிகமான விருதுகளைக் குவித்திருக்கும் ஆங்கிலப்படம் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’. ‘சோனி லிவ்’வில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து தன் கணவன் வேமண்ட்டுடன் இணைந்து சலவைத் தொழில் செய்துவருகிறாள் எவ்லின்.
நிற்க நேரம் இல்லாமல், குடும்பத்தினருடனும் ரிலாக்ஸாக பேச முடியாமல் எப்பொழுதும் காலில் சக்கரம் கட்டியது போல் பரபரப்பாக இருக்கிறாள் எவ்லின்.இவர்களது மகள் ஜாய், தன்பால் உறவில் இருக்கிறாள். அதை எவ்லினால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் அம்மாவுக்கும் மகளுக்கும் சண்டை.  இந்நிலையில் ஆடிட்டிங் சம்பந்தமாக வருமான வரித்துறை அதிகாரியைச் சந்திக்க தனது அப்பா மற்றும் கணவனுடன் செல்கிறாள் எவ்லின். அங்கே சட்டென ஆல்பாவெர்ஸ் எனும் இன்னொரு பிரபஞ்சத்துக்கு ஜம்ப் ஆகிறார் வேமண்ட். வெவ்வேறு பிரபஞ்சத்தில் வெவ்வேறு ஆளாக இருக்கிறார் வேமண்ட். இதுபோலவே எவ்லினும் அங்கே பல கேரக்டர்களில் வலம் வருகிறார். இந்த பலவகையான பிரபஞ்சங்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறாள் ஜோபு துப்பாக்கி. அதாவது எவ்லினின் மகள்!
இந்த ஒவ்வொரு பிரபஞ்சமும் எவ்லினின் ஆசைகள்; கனவுகள். அந்த பிரபஞ்சங்களில் எல்லாம் தொழில் ரீதியான கஸ்டமர்கள் முதல் அவள் சந்தித்த அனைவரும் எவ்லினின் ஆசை, லட்சியம், செயல்களை எல்லாம் முடக்க - தடுக்க முற்படும் வில்லன்களாகத் தோன்றுகிறார்கள். இறுதியில், நிஜ உலகில் எவ்லினின் கணவன், ‘எல்லோருக்குள்ளும் இருக்கும் நல்ல இயல்பைப்பார்... வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்... இங்கே யாரும் கெட்டவர்கள் இல்லை... ’ என்கிறான்.
அதுபோலவே எவ்லின் பார்க்கத் தொடங்க, இதுவரை அவள் சஞ்சரித்த உலகங்கள் அனைத்தும் வண்ணமயமாக மாறுகின்றன. அந்தந்த உலகங்களில் வில்லன்களாக வந்தவர்கள் எல்லாம் நல்ல நண்பர்களாகத் தோன்றுகிறார்கள். தன் மகளின் உணர்வையும் இயல்பானதே என ஏற்கிறாள் எவ்லின். தத்துவ ரீதியான விஷயத்தை செல்லூலாய்டில் அட்டகாசமான படமாக எடுத்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்கள்.எவ்லினாக பட்டையைக்கிளப்பி ஆஸ்கரைத் தட்டியிருக்கிறார் மிசேல் யோ. படத்தின் இயக்குநர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட்.
இல வீழா பூஞ்சிரா
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அதிர்வுகளைக் கிளப்பிய மலையாளப் படம் ‘இல வீழா பூஞ்சிரா’. ‘அமேசான் ப்ரைமி’ல் பார்க்கக் கிடைக்கிறது. கேரளாவில் உள்ள அழகான மலைப்பிரதேசம், இல வீழா பூஞ்சிரா. கட்டுப்பாடுகள் நிறைந்த சுற்றுலாத்தலம் இது. இதன் உச்சியில் இயங்கிவருகிறது ஒரு போலீஸ் ஒயர்லெஸ் ஸ்டேஷன்.
இதில் மது, சுதி என இரண்டு காவலர்கள் பணிபுரிகின்றனர். மதுவும், சுதியும் கீழே இறங்கும்போது அவர்களுக்குப் பதிலாக இரண்டு காவலர்கள் வருவார்கள். இப்படி சுழற்சி முறையில் இயங்குகிறது அந்த ஸ்டேஷன். பெரிதாக பரபரப்பு இல்லாமல் நிதானமாக நகரும் காவல் நிலையம் அது. இந்நிலையில் ஒரு இளம் பெண்ணின் வெட்டப்பட்ட கை மட்டும் மலைக்குக் கீழே உள்ளே பகுதியில் கிடைக்கிறது. மற்ற பகுதிகள் ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள இடங்களில் கிடைக்கின்றன.
அந்த உடலின் பாகங்கள் யாருடையவை... கொலைகாரன் யார்... என்பதே மீதிக்கதை. க்ரைம் திரில்லர் வகைமை படப்பிரியர்கள் தவறவிடக்கூடாத படம். யாரும் நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து பிரமாதப்படுத்தியிருக்கிறார் சௌபின் சாஹிர். படத்தின் இயக்குநர் சாஹி கபீர்.
த வேல்
சிறந்த நடிகர் மற்றும் சிறந்த மேக் அப் - ஹேர் ஸ்டைலிங்குக்கான ஆஸ்கர் விருதுகளைத் தட்டியுள்ள ஆங்கிலப்படம், ‘த வேல்’. இப்போது ‘சோனி லிவ்’வில் பார்க்கலாம்.மகள் மற்றும் மனைவியைப் பிரிந்து தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஆங்கிலப் பேராசிரியர் சார்லி. 272 கிலோ எடை கொண்ட சார்லியால் எழுந்து நிற்பது கூட கடினம். ஓரிடத்தில் அமர்ந்து ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார். தோழியாகவும், செவிலியராகவும் இருந்து சார்லியைக்கவனித்துக்கொள்கிறாள் லிஸ்.
இந்நிலையில் சார்லியின் இதயம் கடுமையாக பாதிப்படைகிறது. இன்னும் அதிகபட்சமாக அவரால் ஒரு வாரம் மட்டும்தான் உயிரோடு இருக்க முடியும். இத்துயரச் சூழலில் சில வருடங்களுக்கு முன்பு தன்னால் கைவிடப்பட்ட மகள் எல்லியுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறார் சார்லி. அதுவே அவரது கடைசி ஆசை. அப்பாவும் மகளும் இணைந்தார்களா... மனைவியையும், மகளையும் விட்டு சார்லி ஏன் பிரிந்தார்... போன்ற பல கேள்விகளுக்கு அழுத்தமான உணர்வுகள் ரீதியாக பதில் சொல்கிறது திரைக்கதை.
சார்லியாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஆஸ்கரைத் தன்வசமாக்கியிருக்கிறார் பிரெண்டன் ஃப்ராஸெர். மனதை நெகிழ்விக்கும் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் டேரன் அர்னோஃப்ஸ்கி.
குட்டெ
காவல்துறையில் இருந்துகொண்டே ஊழலில் ஈடுபடும் காவல்துறையினரைப் பற்றி ஏராளமான படங்கள் வந்துவிட்டன. இதில் லேட்டஸ்ட் வரவு, ‘Kuttey’ இந்திப் படம். ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. நூற்றுக்கணக்கான ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்புவதற்காக கோடிக்கணக்கில் பணம் எடுத்துச்செல்லும் ஒரு வாகனத்தைப் பற்றி காவல்துறையினரான கோபாலுக்கும், பஜ்ஜிக்கும் தெரிய வருகிறது.
காவல்துறையில் இருந்துகொண்டே சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுபவர்கள் இவர்கள். ஒரு கும்பலுடன் சேர்ந்து அந்த வாகனத்தில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறான் கோபால். இத்தனைக்கும் அந்த வாகனத்தில் செக்யூரிட்டி ஆபீசராக இருப்பவர் கோபாலுக்கு நன்கு தெரிந்தவர். மும்பையில் உள்ள ஒரு புறநகர் பகுதியில் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுகிறான் கோபால்.
இதில் பல பேர் கொல்லப்படுகின்றனர். கோபால் மீதும் குண்டு பாய்கிறது. வலியைத் தாங்கிக்கொண்டு பணத்தைக் கொள்ளையடிக்க அவன் முற்படும்போது அங்கே வேறு இரண்டு பேர் துப்பாக்கியுடன் வர, சூடு பிடிக்கிறது திரைக்கதை.நிழல் உலக சம்பவங்களை மசாலாவாக்கித் தந்திருக்கின்றனர். படத்தின் இயக்குநர் ஆஸ்மான் பரத்வாஜ்.
தொகுப்பு: த.சக்திவேல்
|