ஒன்றரை ஆண்டுகளாக நம்பர் ஒன்! இது கயல் குடும்பத்தின் சாதனை



பொதுவாக ஒரு சீரியல் டிஆர்பியில் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைப்பது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதலிடத்தைக் கச்சிதமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது ‘கயல்’ சீரியல். கடந்த ‘சன் குடும்ப விருது’ 2022ல் சிறந்த சீரியல், சிறந்த இயக்குநர், சிறந்த ஹீரோயின், சிறந்த வில்லன், நட்சத்திர நாயகன்... உள்ளிட்ட ஏழு விருதுகளைத் தட்டிச் சென்றது ‘கயல்’.

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ‘கயல்’ ஷூட்டிங் ஸ்பாட்டிற்குள் நுழைந்தோம். முதலில் அகப்பட்டவர் கதையின் நாயகன் எழில் @ சஞ்சீவ். ‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. வெற்றிகரமான நம்பர் ஒன் சீரியல்ல நானும் இருப்பது மகிழ்ச்சி. ஒருநாள் ‘விஷன் டைம்’ ராஜேஷ் சார் எனக்கு போன் செய்து, ‘இந்தமாதிரி ஒரு கதை. உங்களுக்கு பிடிச்சிருந்தால் பண்ணுங்க’னு சொன்னார். கதை கேட்டதும் பிடிச்சிருந்தது. அங்கிருந்து என் ‘கயல்’ ஜர்னியும் தொடங்குச்சு. இப்ப ஒன்றரை ஆண்டுகள் தாண்டி போயிட்டு இருக்கோம்.

என் எழில் கேரக்டர் ரொம்ப ரீச்சாகியிருக்கு. காரணம், சன்டிவி. அவங்க ரீச் ரொம்பப் பெரிசு. வெளியில் போனாலே ‘எழில்... கயலை எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க’னு கேட்குறாங்க! அதுக்கான விடையை கதை சொல்லும். அடுத்தடுத்த எபிசோடுகள்ல அதுக்கான விஷயங்கள் ஆரம்பிக்கப் போகுது.
‘கயலி’ன் வெற்றிக்குக் காரணம் டீம் வொர்க். ஆர்ட்டிஸ்ட்ஸ் டீம் ஆகட்டும், டெக்னீசியன் டீம் ஆகட்டும் எல்லோருமே 100% உழைப்பை தர்றாங்க; தர்றோம். அதனாலயே இப்பவரை மக்கள் நம்பர் ஒன் இடத்துல வச்சிருக்காங்க...’’ என எழில் ஆனந்தமாக சொல்லும்போதே கயலின் அண்ணன் மூர்த்தி வந்து சேர்ந்தார். மூர்த்தி கேரக்டரில் நடிக்கும் அய்யப்பனுக்கு சொந்த ஊர் ஊட்டி.

‘‘ஆசானே அங்க என்ன பண்றீங்க...’’ என்றபடியே ‘மீட்டர் ஆறுமுகம்’ கேரக்டரில் வரும் செபாஸ்டியனும் அங்கு வந்து சேர களைகட்டியது இடம். ‘‘சென்னைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிடுச்சு...’’ என்றபடி ஆரம்பித்தார் மூர்த்தி @ அய்யப்பன். ‘‘நிறைய சீரியல்கள் பண்ணியிருக்கேன். இதுல ஸ்பெஷல்னா, ‘கயல்’தான். ஏன்னா, இதுல தனியா என் பெயர் சொல்ற மாதிரியான ஒரு கேரக்டர்ல நடிக்கிறேன்.
இப்ப மக்களிடம் மூர்த்தி கேரக்டர் அவ்வளவு ரீச்சாகியிருக்கு. குடிகாரனாக இருந்து இப்ப திருந்தியிருக்கிறதால மக்கள் இன்னும் பாராட்டுறாங்க...’’ என அவர் சொல்ல, ‘‘நிஜவாழ்க்கையில் மூர்த்தி கேரக்டர் நிறைய பேரிடம் கனெக்ட்டாகி இருக்கு. அது பற்றி யாராவது உங்ககிட்ட பேசியிருக்காங்களா ஆசானே...’’ என செபாஸ்டியன் கேட்க, ‘‘நிறைய...’’ என்கிறார் அய்யப்பன்.

‘‘சிலர் அவங்க வீட்டுல இதுமாதிரி ஒரு கேரக்டர் இருந்ததையும், அதனால பட்ட கஷ்டத்தையும் என்கிட்ட சொல்லியிருக்காங்க. ‘உங்களைப் பார்த்து அவரும் திருந்தணும்’னு சொல்வாங்க. அந்தளவுக்கு இந்தக் கேரக்டர் மக்கள்கிட்ட போய்ச் சேர்ந்திருக்கு. எனக்கு நிஜத்தில் ரெண்டு அக்காக்கள். அவங்க ஃபீலிங் தெரியும். அண்ணன்களின் ஃபீலிங் தெரியாது.

இப்ப நிறைய பேர் வந்து பேசும்போது தெரியுது. ஒரு அண்ணனாக எல்லோருக்கும் நான் கனெக்ட்டாகி இருக்கேன். இந்தக் கேரக்டர் கொடுத்தவங்களுக்கும், இந்தக் கேரக்டருக்கு என்னைத் தேர்ந்தெடுத்தவங்களுக்கும் நன்றி...’’ என அய்யப்பன் சொல்ல, ‘‘சூப்பர் ஆசானே...’’ என்கிறார் செபாஸ்டியன்.

அப்போது ஷாட் முடிந்து வந்த தனம் @ ஜானகியிடம் வம்பிழுத்தார் செபாஸ்டியன். ‘‘என் ஆசானுக்கு மனைவியாக வர்றாங்க. அதனால, அண்ணியை ஒரு இன்டர்வியூ பண்றேன்...’’ என்றதும் ஓகே என்றோம். ‘‘நிறைய தமிழ்ப்படங்கள்ல நடிச்சிருக்கீங்க.

இதுல ‘கயல்’ வரவேற்பு எப்படியிருக்கு...’’ என செபாஸ்டியன் கேட்க, ஜானகி தொடங்கினார். ‘‘சொல்ல வார்த்தைகள் இல்ல. எங்க போனாலும் எல்லோரும் சொல்ற வார்த்தை ‘ரொம்ப யதார்த்தமாக இருக்கேன்’னுதான்.

அதேபோல, ‘இந்தமாதிரி ஒரு மருமகள் கிடைப்பாளா’னு பாராட்டுவாங்க. அந்தளவுக்கு வீட்டுல ஒரு மருமகள்னா இப்படிதான் இருக்கணும்னு வாழ்கிற கேரக்டராக இருப்பது ரொம்ப ஹேப்பியா இருக்கு. மக்களின் ஆசீர்வாதம்தான் நம்பர் ஒன் சீரியலாக கொண்டு வந்திருக்கு. அது தொடரணும்...’’ என்கிற தனம் @ ஜானகியைத் தொடர்ந்தனர், கயலின் தங்கை ஆனந்தியும், தம்பி அன்புவும்.  

‘‘நான்கு மாசம் கழித்து, என் மகப்பேறு இடைவெளிக்குப்பிறகு இப்ப திரும்ப வந்திருக்கேன். எப்ப வருவேன்னு என் தோழிகள் உட்பட பலரும் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. அந்தளவுக்கு என் கேரக்டரும் ரீச்சாயிருக்கு. சிலர் எங்களுக்கு இப்படியெல்லாம் அக்கா இல்ல. உனக்குக் கிடைச்சிருக்குனு சொல்வாங்க. என் குடும்பத்தில்கூட, ‘கயல் மாதிரி உதாரணமாக இருக்கணும். எப்படி குடும்பத்தை கையில் எடுத்து வழிநடத்துறாள் பாரு’ம்பாங்க. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு...’’ என்கிற ஆனந்தியின் இயற்பெயர் அபிநவ்யா.  

‘‘எல்லோருமே இப்ப என்னை அன்புவாகத்தான் பார்க்கிறாங்க. தங்கள் ரியல் வாழ்க்கையில் கனெக்ட் பண்றாங்க. வெளியில் போகும்போது, ‘என்னப்பா அக்கா சொல்றதை கேட்கலாம்ல... எப்படியாவது போலீஸ் ஆகிடுப்பா’னு சீரியஸாக சொல்வாங்க. எந்தளவுக்கு ‘கயல்’ அவங்க மனசுல ஒன்றியிருக்குனு புரியுது...’’ என மகிழ்ச்சியாக சொல்லும் அன்புவின் இயற்
பெயர் ஜீவா.

தொடர்ந்து ‘மீட்டர் ஆறுமுகமான’ செபாஸ்டியன், ‘‘இதுதான் எனக்கு முதல் சீரியல் அனுபவம். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தது ரவி அண்ணன்தான். நான் ஒரு தொகுப்பாளராக வேலை செய்யும்போது ‘இப்படியொரு கேரக்டர் இருக்கு... வந்து பண்ணு’னு ஊக்கப்படுத்தினார். இப்ப என் கேரக்டரான மீட்டர் ஆறுமுகம் என்பதைவிட அய்யப்பன் அண்ணனை ஆசானேனு கூப்பிடுவேனே... அதுதான் ரொம்பவே பாப்புலராகியிருக்கு...’’ என அவர் நிறுத்தும்போதே பெரியப்பாவும், பெரியம்மாவும் ஆஜரானார்கள்.

‘‘சீரியல்லதான் இவங்க பேச்சு அப்படியிருக்கும். ஆனா, நிஜத்துல பெரியப்பாவும், பெரியம்மாவும் ரொம்ப ஜாலி டைப்...’’ என செபாஸ்டியன் சொல்ல, பெரியப்பாவாக வரும் முத்துராமன் சிரிக்கிறார்.‘‘நான் சன்டிவிக்காக ராடன்ல ‘வாணி ராணி’ பண்ணினேன். பிறகு, திரைப்படங்கள் மட்டும் செய்தேன். இப்ப இந்தக் கேரக்டர். கேட்டப்ப, ‘பத்து பேர்ல ஒரு ஆளாக வரக்கூடாது’னு சொன்னேன். ‘நல்லா ரீச்சாகும்’னு சொன்னாங்க. உண்மையில் மக்கள்கிட்ட அவ்வளவு ரீச் பண்ணியிருக்காங்க.

பெரியப்பா கேரக்டர் இவ்வளவு லைவ்வா இருக்கும்னு யோசிக்கல. எங்க போனாலும் கயல் பெரியப்பானுதான் சொல்றாங்க. இந்த சீரியலின் வெற்றிக்குக் காரணம் நம் வாழ்க்கையில் நடக்கிற சம்பவங்களை திரைக்கதை ஆக்கினதுதான்...’’ என உற்சாகமாக முத்துராமன் சொல்ல, பெரியம்மா சுமங்கலி தொடர்ந்தார்.‘‘ஒவ்வொரு சீனையும் ரசிச்சே பண்றோம். இவ்வளவு வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றி. மக்கள் எங்களை தினமும் கழுவிக் கழுவி ஊத்துறாங்க. இது எங்க கேரக்டருக்கு கிடைச்ச பரிசு...’’ எனப் புன்னகைக்கிறார்.

அடுத்து, கயல் அம்மாவாக காமாட்சி கேரக்டரில் நடிக்கும் மீனாகுமாரியிடம் பேசினோம். ‘‘ஹீரோயினாக நிறைய சீரியல்கள் பண்ணிட்டேன். மற்ற கேரக்டர்களும் பண்ணியிருக்கேன். இப்ப அம்மா கேரக்டர். சில கேரக்டர்கள் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அதுமாதிரி இந்தக் கேரக்டரும் நிறைய விஷயங்களை கத்துக் கொடுக்குது...’’ என அவர் சொல்லி நிறுத்த, ஷாட் முடித்து மகள் ‘கயல்’ வந்து சேர்ந்தார்.

‘‘440 எபிசோடுகளைத் தாண்டியிருக்கோம் என்பதே உற்சாகம் தருது. நான் சீரியல்ல முதல்ல பண்ணினது நெகட்டிவ் கேரக்டர். திடீர்னு இதுல பாசிட்டிவ் லீட் பண்ணும்போது மக்கள் எப்படி எடுப்பாங்களோனு ஒரு எண்ணம் மனசுக்குள்ள இருந்துச்சு. ஆனா, முதல் தினத்தில் இருந்து இப்பவரை மக்கள் சப்போர்ட் குறையவேயில்ல. தொடர்ந்து அதிகரிச்சிட்டேதான் இருக்கு.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. இவ்வளவு ஆதரவு எனக்கு மட்டுமில்லாமல் டீமிற்கும் கொடுத்திருக்காங்க. அம்மா, அப்பாகிட்ட இருந்து கிடைக்கிற அன்பு மாதிரி மக்கள் தர்றாங்க...’’ நெகிழும் கயலின் இயற்பெயர் சைத்ரா ரெட்டி. ‘‘எங்க ‘கயல்’ குடும்பத்தின் பர்சனலை சொல்றேன்...’’ என்றபடி தொடர்ந்தார்.  ‘‘முதல்ல என் அம்மா. அவங்க ரொம்ப சைலன்ட். வேலைக்கு வருவாங்க. போயிடுவாங்க. அடுத்து, நம்ம ஜானகி அக்கா. செட்ல செம ஃபன் கேரக்டர். அக்கா இருந்தா செட்டே ஜாலியாக இருக்கும். நம்ம செபாஸ்டியன் சிரிச்சிட்டே ஃபன் பண்ணிட்டே இருப்பார். எங்களுக்காக வீட்டுல சமைச்சு சாப்பாடு எல்லாம் கொண்டு வருவாங்க.

மூர்த்தி அண்ணன் எப்பவும் கேரக்டராவே இருப்பார். பெரியப்பா, பெரியம்மாவும் செம ஜாலியான டைப். அப்புறம் நம்ம ஹீரோ சஞ்சீவ் ரொம்ப சப்போர்ட். ரொம்ப கேரிங்.
அடுத்து, இயக்குநர் செல்வம் சார்... யாராவது மூட் அப்செட்னா உடனே சரி செய்திடுவார். பெர்ஃபெக்ட் கேப்டன். எந்த கேரக்டர் எப்படி ரியாக்‌ஷன் கொடுக்கணும்னு சொல்லித் தருவார்.

அதேமாதிரி கேமராமேன் ஆனந்த் சார்... அவ்வளவு சப்போர்ட் பண்ணுவார். எங்க ப்ராம்ப்ட் ரமணி... அவர் இல்லைனா நாங்க யாருமில்ல...’’ என்கிறவர், ‘‘அப்புறம், இதை கயலாக இருந்து மட்டுமல்ல, சைத்ராவாக இருந்தும் சொல்றேன். வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லா வகையான பிரச்னைகளும் வரத்தான் செய்யும். பிரச்னை இல்லாதவங்க யாருமில்ல. அதை எப்படி சமாளிக்கிறீங்க... எப்படி எதிர்கொள்றீங்க என்பது முக்கியம்.

பெண் அல்லது ஆண், யாராக இருந்தாலும் சரி. எந்த பிரச்னை வந்தாலும் நம்பிக்கையுடன் அந்தப் பிரச்னைக்கு தீர்வு என்னனு தேடுங்க. அந்தப் பிரச்னையை யோசிச்சிட்டு உட்காராதீங்க. ஒரு பிரச்னைக்குத் தீர்வு கிடைச்சால் அது எளிதாக முடிஞ்சிடும்...’’ என தைரியம் தருகிறார் சைத்ரா.நிறைவில், கேப்டன் ஆஃப் த ஷிப் இயக்குநர் செல்வத்திடம் பேசினோம். ‘‘‘கயல்’ தொடர்ந்து முதல் இடத்துல இருப்பது ரொம்ப சந்தோஷமான விஷயம். இயக்குநராக அந்தக் கிரெடிட் எனக்கு கிடைச்சாலும் முழுக்க முழுக்க இது டீம் ஒர்க்குக்கு கிடைச்ச வெற்றி.

சேனல்ல ரவி சார் இருக்கார். எழுத்தாளர்கள் அய்யப்பன், கார்த்திக் பின்புலமாக இருக்காங்க. ஒளிப்பதிவாளர் ஆனந்த் நிறைய இன்புட் தருவார். ஆர்ட் டைரக்டர் ராஜா சார் கேட்குற செட்களைப் போட்டுக் கொடுப்பார். என் உதவி இயக்குநர்கள்... அப்புறம் ஆர்ட்டிஸ்ட்டுகளின் ஒத்துழைப்புனு எல்லாருடைய உழைப்பும் இதுக்குப் பின்னால இருக்கு.    

2006ல் சன் டிவியில்தான் என் கரியரை தொடங்கினேன். 2011 வரை ‘உதயா டிவி’க்கு டைரக்‌ஷன் பண்ணிட்டு இருந்தேன். 2011ல்தான் சன் டிவிக்கான வேலைகள் செய்தேன். என் முதல்
சீரியல் ‘முந்தானை முடிச்சு’. பெரிய ஹிட் கொடுத்தது. அடுத்து ‘மரகத வீணை’, ‘கேளடி கண்மணி’, ‘கல்யாணப் பரிசு’, ‘கல்யாணப் பரிசு 2’, ‘அழகு’, ‘கண்மணி’, ‘அன்பே வா’... இப்ப ‘கயல்’. உண்மைல ‘கயல்’ சீரியல் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைச்ச பொக்கிஷம். அதுக்கு சன் டிவிக்குதான் நன்றி சொல்லணும். இந்த வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம். அவங்க கொடுக்கும் ஆதரவு ரொம்ப பெரிசு...’’ நெகிழ்கிறார் இயக்குநர் செல்வம்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்