அமெரிக்காவில் வங்கிகள் திவால்... என்ன நடக்கிறது..? அமெரிக்காவிலிருந்து ஸ்ரீராம்



கடந்த வாரம் அமெரிக்காவின் பதினாறாவது பெரிய வங்கியான Silicon Valley Bank திவாலானது. வார இறுதியில் மற்றொரு வங்கியான Signature Bankஉம் மூடப்பட்டது. First Republic Bankஉம் வேறு சில சிறு வங்கிகளும் Liquidity அதிகரிக்க எல்லா வழிகளையும் மேற்கொண்டுள்ளன. இதன் விளைவால் உலகின் பல வங்கிகளின் பங்கு விலை சரிந்தது. அமெரிக்காவின் எல்லா வங்கிகளுமே மூடிவிட்டது போலவும் இந்திய வங்கிகளும் பிரச்னையில் உள்ளது போலவும் வாட்ஸ் அப் வதந்திகள் வரத் தொடங்கி விட்டன.

உண்மையில் என்னதான் நடந்தது?

Silicon Valley Bank 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மூடப்படும் முன் அதில் 175 பில்லியன் டாலர்கள் வாடிக்கையாளர் பணம் இருந்தது. வங்கியின் சொத்து மதிப்பு 209 பில்லியன் டாலர்கள். வங்கியில் முறைகேடோ அல்லது வாராக் கடன் பிரச்னையோ இல்லை.

அப்புறம் வங்கி எப்படி வீழ்ந்தது?

வங்கிகள் முதலீட்டாளர்கள் பணத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு பெரும்பகுதியை பல்வேறு வகையில் முதலீடு செய்யும். அதில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு வட்டியாகத் தந்துவிட்டு மிச்சத்தை லாபமாக வைத்துக் கொள்ளும். Silicon Valley Bank பணத்தை அரசின் நீண்ட கடன் பத்திரங்களிலும் Mortgage Backed Securityகளிலும் முதலீடு செய்திருந்தது. அமெரிக்காவில் வட்டி விகிதம் கடந்த ஓராண்டில் தாறுமாறாக ஏறியதன் விளைவாக அவற்றின் சந்தைமதிப்பு முதலீட்டுத் தொகையை விட குறைந்து விட்டது.

அப்படியே விட்டு வைத்திருந்தால் எதிர்காலத்தில் அவற்றின் மதிப்பு கூடியிருக்கக் கூடும். ஆனால், வங்கியில் பணம் போட்டிருந்த நிறுவனங்கள் பணத்தை எடுக்கத் தொடங்கின.

அதற்கும் காரணம் நாட்டில் வட்டி விகித உயர்வே. தொழில் அபிவிருத்திக்கு வெளியில் கடன் வாங்கினால் வட்டி அதிகம். எனவே, நிறுவனங்கள் வங்கியில் வைத்திருந்த பணத்தை எடுக்கத் தொடங்கின. அதை எதிர்கொள்ள Silicon Valley Bank சொத்துகளை நஷ்டத்தில் விற்க வேண்டியாதாயிற்று. 20 பில்லியன் டாலர் கடன் பத்திரங்களை 1.8 பில்லியன் நஷ்டத்துக்கு விற்றது.
Silicon Valley Bank நிலைமையைச் சமாளிக்க 2.25 பில்லியன் டாலர்கள் முதலீடு திரட்ட வேண்டும் என்று சொன்னதுதான் தாமதம், மிச்சமிருந்த வாடிக்கையாளர்களும் பயந்து போய் பணத்தை எடுக்க முயன்றார்கள். அவர்களுக்குக் கொடுக்க பணமின்றி வங்கி முடங்கியது.

Silicon Valley Bankஇன் இன்றைய நிலைமைக்கு முழுக்காரணம் முன்னாள் அரசும், இந்நாள் அரசும், Federal Reserve Bankஉம்தான். தேர்தலில் ஜெயிப்பதற்காக தேவையுள்ளோர் தேவைப்படாதோர் என்று வகை தொகையில்லாமல் நோட்டு அடித்து விநியோகித்தது முன்னாள் ட்ரம்ப் அரசு. விலைவாசி உயர்வுக்கு அது மட்டும் போதாதென நாட்டின் வங்கி விகிதத்தை அதல பாதாளத்தில் மிக நீண்ட நாட்களுக்கு வைத்திருந்தது Federal Reserve வங்கி.

இது அமெரிக்காவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று பலர் சொன்னபோதும்; இது விலைவாசி உயர்வைத் தராது என்று பொய் சொன்னது Federal Reserve வங்கி. விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் போனதும் இப்போது தேவைக்கு அதிமாகவும் அதிவிரைவாகவும் வட்டி விகிதத்தை ஏற்றி நாட்டை பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளியிருக்கிறது Federal Reserve வங்கி.

யாருக்கு பாதிப்பு..?

அமெரிக்காவின் வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்துக்கு 250,000 டாலர் வரை காப்பீடு வழங்குவது FDIC நிறுவனம். அமெரிக்க அரசும் FDICயும் Silicon Valley வங்கியில் வைத்திருத்த பணம் எவ்வளவாக இருந்தாலும் அதைத் தருவோம் எனச் சொல்லிவிட்டன. எனவே, வங்கியில் பணம் வைத்திருந்த யாருக்கும் நஷ்டமில்லை. வங்கி திவாலானதால் வங்கியின் பங்கில் முதலீடு செய்தவர்களுக்கு மொத்தமும் நஷ்டம்.

பிற வங்கிகளுக்கு என்னவாகும்?

இப்பிரச்னை இரு வங்கிகளுடன் முடியப்போவதில்லை. First Republic Bank Liquidity பிரச்னை இருப்பதாகச் சொல்லியிருக்கிறது. ஆனால், நிலைமை மோசமில்லை என்றும், மத்திய வங்கியில் கடன் பெற்றும் முதலீடு திரட்டியும் சமாளித்து விடுவோம் என்றும் சொல்லியிருக்கிறது. இன்னும் சில சிறு வங்கிகள் பிரச்னைக்குள்ளாகலாம். Too Big to Fail என்று சொல்லப்படும் JP Morgan Chase, Bank of America, Citi Bank போன்றவை பிரச்னைக்குள்ளாகும் வரை அரசு, முதலீட்டாளர்கள் குறித்து கவலைப்படாது.

Hindenburg Effect

அதானி நிறுவனம் குறித்துச் சொன்ன ஹிண்டன்பர்க் நிறுவனம் ஏன் Silicon Valley Bank பற்றி சொல்லவில்லை என்று கேட்கிறார்கள். ஒருவர் தொடர்ந்து புகை பிடித்து வந்தால்
அவருக்கு கேன்சர் வரும் என்று சொல்லலாம். கேன்சர் வந்தது உறுதியானால் இன்னும் சில ஆண்டுகளில் இறப்பார் என்று சொல்லலாம். ஆனால், கொரோனா கொடுந்தொற்று வரும்... அது பல கோடி பேர்களைக் கொல்லும்... என்று யாராலும் சொல்ல முடியவில்லை அல்லவா..? அது போலத்தான் இதுவும்.

ஊழல் புரையோடிய நிறுவனப் பங்கு வீழும் எனச் சொல்லலாம். நாட்டின் விலைவாசி உயர்வும் வட்டி விகித உயர்வும் 200 பில்லியன் டாலர் சொத்து கொண்ட வங்கியை காவு வாங்கும் என ஹிண்டன்பர்க் அல்ல யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இந்திய வங்கிகள் நிலைமை என்ன?இப்பிரச்னை அமெரிக்காவுக்கு மட்டுமானது. இந்தியப் பொருளாதாரத்திலும் வங்கிகளின் முதலீட்டிலும் பெரிய பிரச்னையில்லை. இந்திய வங்கிகள் எவையும் இச்சிறு வங்கிகளில் முதலீடு செய்துள்ளதாகவும் தகவல் ஏதுமில்லை.