பணத்துக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன்னு ஓப்பனா பேட்டி தர்றீங்களே..? ஆத்மிகா Open Talk
‘மீசைய முறுக்கு’, ‘கோடியில் ஒருவன்’ படங்களைத் தொடர்ந்து ‘கண்ணை நம்பாதே’படத்தின் மூலம் ஹாட்ரிக் அடித்துள்ளார் ஆத்மிகா. நுனி நாக்கு இங்கிலீஷ் பேசும் நடிகைகள் மத்தியில் தமிழில் விளையாடுகிறார்.
 ‘கண்ணை நம்பாதே’ அனுபவம் எப்படி?
ஒரு தமிழ்ப் பெண்ணா, தமிழ் நாட்டில் என்னுடைய படம் வெளியானதில் மகிழ்ச்சி. சீனியர் நடிகரான உதயநிதி, சீனியர் இயக்குநரான மாறன் ஆகியோருடன் இணைந்து வேலை செய்தது அதைவிட மகிழ்ச்சி. க்ரைம் படங்களுக்கு எப்போதும் தனி ஆடியன்ஸ் இருப்பார்கள். அதுமாதிரி இந்தப் படத்துக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். உதயநிதியுடன் நடித்த அனுபவம் சொல்லுங்களேன்?
 ‘கண்ணை நம்பாதே’ படத்துக்காக நைட் ஷூட், ரெயின் எஃபெக்ட் காட்சி எடுக்க வேண்டி இருந்ததால் லாங் டைம் டிராவல் பண்ணினோம். அதனால் எங்களுக்கிடையே கம்ஃபோர்ட் லெவல் இயல்பா இருந்துச்சு. உதயநிதி சாரைப் பொறுத்தவரை அவர் ஹியூமர் பெர்சன்னு எல்லோருக்கும் தெரியும். சில சமயம் டேக் போகும்போதும் காமெடி பண்ணுவார். அப்போது ரீடேக் போகும். உதய் சார் சக நடிகர், நடிகைகளிடம் எந்த அழுத்தத்தையும் கொடுக்கமாட்டார். மற்றவர்களின் பார்வையில்தான் அழுத்தம் இருப்பதுபோல் தெரியும். அவர் எப்போதும் நார்மலாக இருப்பார்.
 சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் காதல் தோல்விக்காக கண் கலங்கியதாகப் பேசியிருந்தீர்களே..?
என்னுடைய வாழ்க்கையில் பிரேக் அப் நடந்துச்சு. அதை மறந்து இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். காதல் தோல்வியினால் பாதிப்பு இருந்துச்சு. சில விஷயங்களை நம்பினேன். நாம் உண்மையைப் பேசும்போது எல்லோரும் உண்மைதான் பேசுவாங்கனு நம்புவோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயத்தில் சந்தர்ப்பவாதியாக இருப்பார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையால் லவ் பிரேக்கப் ஆச்சு. அதுக்காக அதை நெனைச்சு நான் கவலைப்படல.
மெச்சூரிட்டி கிடைக்கும்போதுதான் சில விஷயம் நமக்கு செட்டாகாது என்றும், சில விஷயம் நம் கையை விட்டுப் போகும்போது அது நமக்கு சொந்தமில்ல, அதை நெனைச்சு அழணும்னு அவசியமில்ல என்ற தெளிவும் கிடைக்கும்.புகழைவிட பணத்துக்காகத் தான் சினிமாவுக்கு வந்தேன்னு ஓப்பனா பேட்டி தர்றீங்களே?
நான் கொடுத்த பேட்டி வேறு. ஆனா, வெளியே எனக்கு பணம் முக்கியம்னு நியூஸ் வந்துடுச்சு. எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனா, நியாயமா சம்பாதிக்கணும். அது உழைப்பு மூலம் கிடைக்கணும். எல்லோரும் அதுக்காகத்தான் கஷ்டப்படுகிறோம். புகழா,பணமா என்று வரும்போது பணத்துக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கமுடியாது. மனிதனின் அடிப்படைத் தேவைக்கு பணம் முக்கியம். அதுக்கு நியாயமா உழைக்கணும். ‘கர்மா’ என்பது பணத்துக்கும் இருக்கிறது. நல்ல முறையில் சம்பாதிக்கும் பணம்தான் நம் கையில் தங்கும்.
சம்பள விஷயத்தில் டிமாண்ட் பண்ணும் இடத்துக்கு நான் இன்னும் வரவில்லை. அதுக்காக உழைக்கிறேன். அடுத்து, ஹீரோ அளவுக்கு ஹீரோயினுக்கு சம்பளம் தருவதில்லையேனு கேட்கிறார்கள். ஹீரோ நாற்பது நாள் கால்ஷீட் கொடுத்திருப்பார். ஹீரோயின் அப்படி இல்லை. ஹீரோ, ஹீரோயின் இருவருடைய பங்களிப்பை எடுத்துக்கொண்டால் வேறுபாடு அதிகமா இருக்கும்.
இப்போது ஹீரோயினுக்கு கெளரவமான சம்பளம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். ஹீரோயின்கள் அதுல விழிப்புடன் இருக்கவேண்டும். சுயநலமா இல்லாமல் அடுத்தடுத்து வரும் புதியவர்களுக்கும் அந்த பலன் சேருகிற மாதிரி குரல் கொடுக்க வேண்டும்.
உங்கள் படத்தேர்வு எப்படி?
நாயகிகளுக்கு படங்களைத் தேர்வு செய்யும் சுதந்திரம் பெரியளவில் இருக்காது. கிடைக்கும் வாய்ப்புகளில் எவ்வளவு பெஸ்ட்டா பண்ண முடியுமோ அப்படிச் செய்தாக வேண்டும். சில காட்சிகள் வந்தாலும் நம்முடைய பங்களிப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற கவனம் இருக்கும். சினிமாவைப் பொறுத்தவரை டைரக்டர், ஆக்டர் என எல்லாம் சேர்ந்தது, ஒரு பாக்கேஜ் மாதிரி. அப்படி ‘கண்ணை நம்பாதே’ படத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருந்ததால் படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. என்னுடைய கேரியர் ஆரம்பத்துலேயே இந்த மாதிரி படம் பண்ணுவது பெருமை.
அடுத்து, எனக்கு வரும் படங்களில் பெஸ்ட்டாக செலக்ட் பண்ணுகிறேன். பணம் வருதே, ஓகே சொல்லலாமே என்ற மனநிலைக்கு என்னால் வரமுடியல. அந்தமாதிரி முடிவெடுத்திருந்தால் நிறையப் படம் பண்ணியிருக்கலாம். சில படங்களில் முத்தக் காட்சி இருக்கும்.
என்னால் அப்படி நடிக்க முடியாது. சினிமாவுக்கு வந்தோம், பணம் சம்பாதிச்சோம் என்ற மைண்ட் செட்ல நான் இல்லை. நீண்ட நாள் சினிமாவில் இருக்கணும் என்பதுதான் என் முடிவு. நல்ல கதைகள் என்னைத் தேடி வருவதற்குள் என்னை மோல்ட் பண்ணிக்க விரும்புகிறேன். நீங்கள் சின்ன பட்ஜெட் ஹீரோயினா, பெரிய பட்ஜெட் ஹீரோயினா?
அது இயக்குநர் எடுக்கும் முடிவில் இருக்கிறது. திறமைசாலி யார்னு கண்டுபிடித்து வாய்ப்பு கொடுத்தால் எல்லோராலும் பெரிய இடத்துக்கு வரமுடியும். அப்படித்தான் என் திறமைகளை வெளிப்படுத்துகிறேன். சினிமாவில் சின்ன பட்ஜெட் ஹீரோயின், பெரிய பட்ஜெட் ஹீரோயின் என்ற பிரிவு இல்லை என்று சொல்ல முடியாது.
செலக்ஷன் நடக்கும்போது சில பாலிடிக்ஸ் நடக்கும். அதை தவிர்க்க முடியாது. அதையெல்லாம் நான் கடந்துவந்துவிட்டேன். எனக்கான வாய்ப்பு வரும் என்று நம்பும் இடத்துக்கு நான் வந்துவிட்டேன். பெரிய இயக்குநர்கள் படத்தில் நடிக்கணும். அப்படி இல்லையென்றால் புது இயக்குநர்களுடன் நல்ல கதைகளில் நடிக்கணும். நீங்கள் இயக்குநரின் நடிகை என்றால், உங்கள் விஷ் லிஸ்ட்டில் இருக்கும் இயக்குநர்கள் யார்?
மணிரத்னம் சார், வெற்றிமாறன் சார் டைரக்ஷன்ல படம் பண்ணணும். அவர்கள் படத்தில் நடிக்கும்போது லைஃப் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். அவர்கள் படங்களில் நடிக்கணும் என்பதை விட அனுபவம் கிடைக்கும் என்று பார்க்கிறேன்.
ஒரு கேரக்டரில் நடிப்பதற்கு உங்களை எப்படி தயார் செய்கிறீர்கள்?
சில இயக்குநர்கள் குறிப்பு கொடுப்பார்கள். சிலர் ஸ்பாட்ல பாத்துக்கலாம் வந்துடுங்கனு சொல்வாங்க. கேர்ள் நெக்ஸ்ட் டோர் கேரக்டருக்கு முன் ஆயத்தம் தேவைப்படாது. சில கேரக்டர்களின் முழுத் தன்மையைச் சொல்லும்போது புரிதல் கிடைக்கும். சிலபேர் என்னுடைய ஸ்டைலில் பண்ணுங்கனு சொல்வாங்க. நான் எப்படி ஆயத்தமாகணும் என்பதைவிட இயக்குநர்தான் எவ்வளவு வேணும் என்பதை முடிவு செய்வார்.
ஜப்பான் வீடியோவை பாத்தீங்களா?
பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் குற்றம் நடக்கிறது. அந்த கண்ணோட்டம் கேரக்டரில் ஆரம்பமாகிறது. கேரக்டர் வீட்டிலிருந்து ஆரம்பமாகிறது. பாலியல் ரீதியான சீண்டல் ஒருவரை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை மறந்துவிடுகிறார்கள். இதுல சைக்காலாஜிக்கல் ப்ராபளம் இருக்கிறது. குற்றவாளிகள் பெண்களை தங்கள் வீட்டுப் பெண்களாகப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். இளம் தலைமுறையை வழிநடத்துவதில் கல்வி, பெற்றோர் வளர்ப்புக்கு முக்கிய பங்கு உண்டு. அது கிடைக்காதபட்சத்தில் டீன் ஏஜ்ல உள்ளவங்க பாதிக்கப்படுகிறார்கள்.
ஜப்பான் வீடியோவுல அந்தப் பெண் தவிர்த்து ஓட நினைத்தாலும் விரும்பத்தகாத நிகழ்வா அது இருந்துச்சு. நோ மீன்ஸ் நோனு சொல்வார்கள். அந்த மாதிரி விட்டுவிட வேண்டும். டீன் ஏஜ் பிள்ளைகளை முறையாகப் பயிற்றுவிக்க வேண்டும். நல்லதைவிட கெட்டது சீக்கிரம் பரவுது. சமூக தளங்களில் இயங்குகிறவர்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும். இளம் தலைமுறை நல்ல சூழ்நிலையில் வளர்வதை சமூகம், பிரபலங்கள் உறுதி செய்ய வேண்டும்.
சோஷியல் மீடியாவில் உங்களுக்கு ஃபேன் ஃபாலோயர்ஸ் அதிகம். அதுல மறக்க முடியாத அனுபவம் உண்டா?
ரசிகர்கள்தான் என்னுடைய பலம். அவர்களை ஃபேன்ஸ்னு சொல்வதைவிட அன்பர்கள் என்று சொல்வேன். அந்தளவுக்கு அன்பை அள்ளித்தருகிறார்கள். நம்பிக்கை தருகிறார்கள். மோட்டிவேட் பண்ணுகிறார்கள். நானும் அவர்களை மோட்டிவேட் பண்ணுகிறேன். சோஷீயல் மீடியாவுல பாசிட்டிவ்வா ஷேர் பண்ணும்போது அவர்களுக்கு உற்சாகம் கிடைக்கிறது. சில பதிவுகளை லைக்ஸ் வாங்க பண்ணுவோம், சிலது மனசாட்சிக்காக பண்ணணும். நிறைய பேர் நான்போடும் பதிவுகளால் இன்ஸ்ஃபயர் ஆனதாக சொல்கிறார்கள். அவர்கள் அப்படி சொல்லும்போது அது எனக்கான பெருமை என்பதோடு பொறுப்பும் அதிகமாகிறது.
எஸ்.ராஜா
|