மேக்கப் அலர்ஜியால் தடைபட்ட திருமணம்…என்ன செய்ய வேண்டும் இளம் பெண்கள்?!



செய்தி என்னவோ கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்ததுதான். ஆனால், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களையும் அச்செய்தி நிலைகுலைய வைத்துள்ளது.நியூஸ் இதுதான். கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள அர்சிகெர் என்ற பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமானது.
திருமணத்துக்கு 10 நாட்கள் இருந்த நிலையில், திருமணத்திற்கு முன்பு மேக்கப் செய்துகொள்ள (ப்ரீ-பிரைடல்)  திட்டமிட்டுள்ளார் மணப்பெண். அதன்படி அர்சிகெரில் உள்ள கங்கா என்பவருக்குச் சொந்தமான அழகு நிலையத்தை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அங்கு மணப்பெண்ணுக்கு கங்கா மேக்கப் செய்து அழகுபடுத்தியுள்ளார். இத்துடன் நின்றிருந்தால் அது செய்தியாக வெடித்திருக்காது. மாறாக, தன் திறமையைக் காட்டுகிறேன் என்பதாக மேக்கப் போட்ட மணப்பெண்ணின் முகத்தை வெந்நீரில் ஆவி பிடிக்க வைத்திருக்கிறார். அவ்வளவுதான்... மணப்பெண்ணின் முகம் கருமையாகி, வீங்கி, ஆங்காங்கே கொப்புளங்கள் உண்டாகி முகத்தின் வடிவமே மோசமாக மாறியிருக்கிறது.

இதனால் மணப்பெண் மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியாகி, மேக்கப் போட்ட கங்காவின் மேல் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். இப்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மணமகனும் அவர் குடும்பத்தாரும், பெண்ணின் முகம் இப்படியானதால் திருமணத்தை நிறுத்திவிட்டனர். இந்தச் செய்திதான் இப்போது இந்திய இளம்பெண்களையும், மேக்கப் உலகையும் ஆட்கொண்டுள்ளது. சரி... ஏன் இந்த அலர்ஜி உண்டானது... ப்ரீ- பிரைடல் மேக்கப் என்றால் என்ன... அதை எடுத்துக்கொள்ளும் முன் என்னவெல்லாம் கவனிக்கவேண்டும்... விளக்குகிறார்கள் நிபுணர்கள்.

ரம்யா அழகேந்திரன் (செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் பிரைடல் மேக்கப் நிபுணர்):முதலில் அந்த மணப்பெண்ணுக்கு நடந்தது ஃபேஷியலா அல்லது மேக்கப்பா என்பதிலேயே இங்கே சந்தேகம் எழுகிறது. பொதுவாக மேக்கப்பில் நீராவி பிடிக்கும் முறை கிடையாது. மேக்கப், பார்லர் பிஸினஸில் ஆரம்பநிலையில் இருப்பவருக்கும் இது நன்றாகத் தெரியும்.

வெந்நீர் ஆவி என்றாலே அது ஃபேஷியல்தான். ஆனால், அதன்பிறகு என்ன நடந்தது என்பதுதான் இங்கே கேள்வி. பொதுவாக ஃபேஷியல் செய்த 8 மணி நேரத்துக்கு சூரிய ஒளியே படக்கூடாது என வலியுறுத்துவோம். சோப், ஃபேஸ் வாஷ் உள்ளிட்டவைகளும் அடுத்து வரும் 8 முதல் 12 மணி நேரத்துக்கு வேண்டாம் எனச் சொல்லி விடுவோம்.

காரணம், ஃபேஷியல் செய்து சருமத்துவாரங்கள் புத்துணர்ச்சியாகி, சற்றே திறந்த நிலையில் இருக்கும். அந்நேரம் கெமிக்கல் நிறைந்த சோப், வாஷ் அல்லது சூரிய ஒளி பட்டால் சிலருக்கு அலர்ஜி அல்லது அதீத கருமை உண்டாக வாய்ப்புள்ளது. அதேபோல் ஃபேஷியல் முடித்தவுடனேயே மேக்கப் போடவும் கூடாது. இதெல்லாம் கஸ்டமர்களும் தெரிந்து வைத்திருத்தல் நல்லது.

முக்கியமான விஷயம், எந்த ப்ரீ-பிரைடல் மேக்கப்பையும் ஒரு மாதம் முன்பே செய்துகொள்ளுங்கள். இதுவே நாங்கள் சொல்லும் ஆலோசனை. காரணம், அவர்களுக்கு ஏதேனும் அலர்ஜி உண்டானால் கூட ஒரு மாத காலத்தில் அது குணமாகிவிடும்.

ப்ரீ-பிரைடல் சோதனை என்பது எடுத்ததுமே மொத்த முகத்துக்கும் போடுவதல்ல. முகத்தின் ஏதேனும் ஒரு பாகத்தை முதலில் தேர்வு செய்து அதில் மட்டும் மேற்கொள்வது. அதில் மணப்பெண்ணுக்கு எரிச்சலோ, அலர்ஜியோ, ஏதேனும் வித்யாசமான உணர்வுகளோ ஏற்படுகிறதா என்பதை சோதித்த பின்னரே பாதி முகத்துக்கு பிரைடல் மேக்கப் கொடுப்போம்.
அரை முகம் மட்டும் கொடுக்கும் போது மேக்கப்பில்லா முகத்திற்கும், மேக்கப் போடப்பட்ட பகுதிக்கும் உண்டான வித்யாசத்தைக் காட்ட எங்களுக்கும் சுலபமாக இருக்கும். அதிலே மணப்பெண்கள் சில மாற்றங்கள், சரிசெய்தல், சில தேவைகள்... என்று சொல்லும்போது அவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து முழு முகத்துக்கும் ப்ரீ-பிரைடல் மேக்கப் போடுவோம்.
 
தன்னுடைய சருமம் எப்படிப்பட்டது என்பதில் ஒவ்வொருவருக்கும் அடிப்படை புரிதல் இருப்பது அவசியம். தன்னுடைய சருமம் ஆயில் சருமமா, வறண்ட சருமமா, இல்லை மிகவும் மிருதுவான எதற்கும் சுலபமாக அலர்ஜியாகும் சருமமா... என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பியூட்டீஷியன் வேறு, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வேறு என்பதைத் தெரிந்து - புரிந்து கொள்வது நல்லது. அதேபோல் சரியான சுத்தமான பார்லர்கள் தேர்வும் அவசியம். நல்ல தரமான புராடக்ட்கள் அதைவிட அவசியம். காலாவதியான மேக்கப் புராடக்ட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.  

கீதா அசோக் (அரோமா தெரப்பிஸ்ட் மற்றும் சரும நிபுணர்):

இதை நாங்கள் ‘பிரைடல் கேர்’ என்போம். திருமணத்திற்கு முன்பான தயார் நிலைகள்தான். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஹேர் மசாஜ், ஃபேஷியல், மசாஜ், பெடிக்யூர், மேனிக்யூர், மேக்கப் சோதனை... என அனைத்தும் இதில் அடங்கும். இன்று வீடியோ, புகைப்படங்கள் தொடங்கி அத்தனையும் ஹெச்டி தரத்துக்கு மாறிவிட்டதால் இந்த சோதனைகள் எல்லாம் அவசியம். உங்கள் சருமம் எப்படிப்பட்ட சருமம் எனக் கேட்டுவிட்டுதான் மேக்கப் போட ஆரம்பிப்பார்கள்.

உங்கள் சருமம் என்னவோ அதைப் பொறுத்தே அவர்கள் ஹெச்டி மேக்கப், திரவ மேக்கப், ஏர் பிரஷ் மேக்கப்... என கொட்டிக்கிடக்கும் வகைகளில் ஒன்றைத் தேர்வு செய்வார்கள். மேக், கிரைலான் மாதிரியான நல்ல புராடக்ட்கள் ஏராளமாக இருக்கின்றன.

செய்தியில் அடிபடும் மணப்பெண்ணுக்கு குறிப்பிட்ட பார்லர் உரிமையாளர் சரியான மேக்கப் போட்டிருக்கலாம். ஒருவேளை இந்தப் பெண்ணுக்கு தன்னுடைய சருமம் குறித்த புரிதல் இல்லாமல் கூட இருந்திருக்கலாம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும pH அளவு இருக்கும். அதைப் பொறுத்துதான் காஸ்மெட்டிக் மூலம் உண்டாகும் வினைகளும், விளைவுகளும் இருக்கும்.
உதாரணத்திற்கு, மருதாணி போடும் அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான நிறம் கிடைப்பதில்லை. அவர்களது உடல் வெப்பம், இரத்தத்தில் இருக்கும் pH (Potential Hydrogen) அளவு ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் நிறம் உண்டாகும்.அப்படித்தான் காஸ்மெட்டிக்குகளும். பொதுவாகவே நான்காமிடோஜெனிக் (non-comedogenic) புராடக்ட்களை பயன்படுத்துவது நல்லது. அவைசருமத் துளைகளை பெரிதாக்கி, சருமத்தின் உட்புறத்தில் கெமிக்கல் இறங்குவதைத் தவிர்க்கும்.

அடுத்து மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அல்லது பியூட்டீஷியன் பயன்படுத்தும் பிரஷ், பஞ்சுகள்... ஆகியவற்றை சீராக சுத்தம் செய்கிறார்களா என்பதையும் கவனியுங்கள். இதற்கென ஆல்கஹால் ஸ்பிரே வாஷ் மார்க்கெட்டுகளில் ஏராளமாக உள்ளன. அடுத்து லிப்ஸ்டிக் உள்ளிட்ட மேக்கப் புராடக்ட்களுக்கு நேரடியாக லிப்ஸ்டிக் பயன்படுத்தாமல் மேக்கப் பேலட் அல்லது பிரஷ் பயன்பாடும் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

எதுவாயினும் உங்கள் சருமம் குறித்து நீங்கள் கொடுக்கும் முழுமையான உறுதிக்குப் பின்னர்தான் எந்த ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டும் உங்கள் சருமத்தில் கை வைப்பார்கள். இதுதான் முதல் முறை மேக்கப் எனில் அதையும் திடமாகச் சொல்லி போதிய சோதனைகளுக்குப் பின் மேக்கப்களை எடுத்துக்கொள்ளுங்கள். முகம் என்பதால் சற்று அதிக கவனம் இருப்பது நல்லதுதானே!   

ஷாலினி நியூட்டன்