60 வயது ஆஸ்கர் நாயகி!



‘‘அன்பான பெண்களே, உங்களோட முக்கியத்துவமும், இளமையும் கடந்து போய்விட்டது என்று யாரையும் சொல்ல அனுமதிக்காதீர்கள்...’’ என்கிற மிசெல் யோதான், இன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாகத் தேடப்படும்  நபராக இருக்கிறார்.
காரணம், சமீபத்தில் நடந்து முடிந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ எனும் அமெரிக்கப் படம் ஏழு ஆஸ்கர் விருதுகளைத் தட்டியது. இப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதைத் தன்வசமாக்கியிருக்கிறார் மிசெல் யோ.

இதன்மூலம் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் ஆசியப் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் மிசெல். அவரது வயது 60.பெரும்பாலும் திரைப்படத்துறையில் நடிகைகளின் முக்கியத்துவம் முப்பது வயதுக்குள் முடிந்துவிடும். அதற்குப் பிறகு அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், முன்னணி கதாபாத்திரங்கள் கிடைப்பது கடினம். இது கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரைக்கும் பொருந்தும்.

இந்நிலையில் அறுபது வயதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல், ஆஸ்கர் விருது உட்பட உலகின் முக்கிய விருதுகளை எல்லாம் அள்ளியிருக்கிறார் மிசெல் யோ.

சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக்காட்டி, திரைப்படத்துறை சார்ந்த பெண்கள் மட்டுமல்லாமல் எல்லா பெண்களுக்கும் ரோல் மாடலாக மாறியிருக்கிறார். அவரது கதை எல்லோருக்குமே உத்வேகம் அளிக்கக்கூடியது. மலேசியாவில் உள்ள இபோ நகரில் வாழ்ந்து வந்த ஒரு சீனக் குடும்பத்தில் 1962ம் வருடம் பிறந்தார் மிசெல் யோ. இவரது அம்மா ஜானெட் யோ ஒரு சினிமா காதலர். தான், பார்க்கும் படங்களுக்கு எல்லாம் மகள் மிசெல்லையும் உடன் அழைத்துச் செல்வார்.

அம்மாவுடன் சேர்ந்து பார்த்த திரைப்படங்கள்தான் மிசெல்லுக்குள் சினிமா கனவை விதைத்தன. அம்மாவுக்குத்தான் ஆஸ்கர் விருதை அர்ப்பணித்திருக்கிறார் மிசெல் யோ.
மிசெல்லின் அப்பா யோ கியான் டெய்க் ஒரு வழக்கறிஞர். மலேசியன் சீன அசோசியேஷனில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மலேசியாவில் வாழ்ந்ததால் ஆங்கிலமும், மலாய் மொழியும் பேசும் ஒரு பெண்ணாக வளர்ந்தார் மிசெல். சீன மொழியான கன்டோனீஸை அவர் கற்கவில்லை. ஒரு பாலே டான்ஸர் ஆகவேண்டும் என்பதுதான் சிறுமி மிசெல்லின் கனவு. நான்கு வயதிலிருந்தே பாலே நடனத்தைக் கற்க ஆரம்பித்துவிட்டார். அவரது ஊரில் இவ்வளவு சிறிய வயதில் பாலே நடனம் கற்ற முதல் பெண் மிசெல்தான்.

மலேசியாவின் இபோ நகரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் படித்தார். அவர் படித்த பள்ளியில் நீச்சல், ரக்பி போன்ற விளையாட்டுகளில் சாம்பியனாக வலம் வந்தார். விளையாட்டைவிட நடனத்தின் மீதுதான் மிசெல்லுக்கு ஆர்வம் அதிகம். மிசெல்லுக்கு 15 வயதாக இருந்தபோது அவரது குடும்பம் லண்டனுக்கு இடம்பெயர்ந்தது. அங்கே சென்றதும் பாலே நடனம் மீதான காதல் இன்னமும் அதிகமானது. லண்டனிலேயே புகழ்பெற்ற நடனப்பள்ளியான ‘ராயல் அகாடமி ஆஃப் டான்ஸி’ல் சேர்ந்தார். அங்கே முக்கிய பாடமாக பாலே நடனத்தைத் தேர்வு செய்தார்.

பாலே நடனத்தில் ஜாம்பவானாக மாறிக்கொண்டிருந்த காலத்தில் மிசெல்லின் முதுகுத்தண்டில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் காரணமாக அவரால் ஒரு தொழில்முறை பாலே டான்ஸராக முடியாமல் போய்விட்டது. அத்துடன் அவர் தொடர்ந்து பாலே நடனப்பயிற்சியிலும் ஈடுபட முடியவில்லை.

மிசெல்லின் ஆர்வம் நடனத்திலிருந்து மற்ற கலைகளின் மீது திரும்பியது. படைப்புக் கலை மற்றும் நாடகம் சம்பந்தமான படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். 1983ம் வருடம் ‘மிஸ் மலேசியா வேர்ல்டு’ எனும் அழகிப்போட்டியில் பங்கேற்று கிரீடம் சூடினார். அதே வருடம் மலேசியா சார்பாக உலக அழகிப்போட்டியில் கலந்துகொண்டார். ஆனால், பதினெட்டாவது இடத்தைத்தான் அவரால் பிடிக்க முடிந்தது.

1984ம் வருடம் ஆஸ்திரேலியாவில் நடந்த ‘மிஸ் மூம்பா இன்டர்நேஷனல் 1984’ எனும் அழகிப்போட்டியில் பட்டம் பெற்றது மிசெல்லின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. ஜாக்கிசானுடன் ஒரு கடிகார விளம்பரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. இந்த விளம்பரம் ஹாங்காங்கைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான ‘டி அண்ட் பி ஃபிலிம்ஸை’ ஈர்த்தது.

நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மிசெல்லின் கால்ஷீட் ஒப்பந்தத்துக்காக போனில் அழைத்து கன்டோனீஸில் பேசியிருக்கின்றனர். ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் சிங் லுங் என்பவருடன் சேர்ந்து மிசெல் நடிக்க வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். அப்போது அவருக்கு கன்டோனீஸ் மொழி ஓரளவுக்குத்தான் புரியும். சுத்தமாகப் பேச முடியாது. இருந்தாலும் ஆங்கிலத்தில் பேசி கால்ஷீட் கொடுத்துவிட்டார். ஷூட்டிங்கிற்காக ஸ்டூடியோ வந்தபோது அங்கே ஜாக்கிசான் இருந்திருக்கிறார். சிங் லுங் என்பது ஜாக்கி சானின் கன்டோனீஸ் பெயர் என்பது அப்போதுதான் மிசெல்லுக்குத் தெரிய வந்தது!

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கன்டோனீஸைப் பேசக் கற்றுக்கொண்டார் மிசெல். கன்டோனீஸை சரளமாகப் பேசத் தொடங்கியவுடன் ஹாங்காங் ஆக்‌ஷன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ‘யெஸ், மேடம்’ (1985) என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார் மிசெல் யோ. இப்படத்தை தயாரித்த ‘டி அண்ட் பி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் மிசெல் யோவின் பெயரை மிசெல் கானாக மாற்றியது. மேற்கத்திய மற்றும் சர்வதேச ரசிகர்கள் மத்தியில் மார்க்கெட்டிங் செய்வதற்காக மிசெல் கான் என்ற பெயரைச் சூட்டியது ‘டி அண்ட் பி ஃபிலிம்ஸ்’.
‘யெஸ், மேடத்’துக்குப் பிறகு தற்காப்புக் கலை சார்ந்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன. இந்தப் படங்களிலும் மிசெல் கான் என்ற பெயரிலேயே நடித்தார். டூப் இல்லாமல் உயிரைப் பணயம் வைத்து சண்டைக்காட்சிகளில் நடித்தார் மிசெல்.

தேர்ந்த குங்ஃபூ மாஸ்டர் சண்டையிடுவது போல அவர் நடித்த சண்டைக்காட்சிகள் இருக்கும். இத்தனைக்கும் குங்ஃபூ போன்ற தற்காப்புக் கலைகளை முறையாகக் கற்கவில்லை மிசெல். அவர் சின்ன வயதில் கற்றுக்கொண்ட பாலே நடனம்தான் சினிமாவில் தற்காப்புக் கலை சார்ந்த காட்சிகளில் நடிக்க உதவியிருக்கிறது. 1988ம் வருடம் டி அண்ட் பி ஃபிலிம்ஸின் நிறுவனர்களில் ஒருவரான டிக்‌ஷன் பூனைத் திருமணம் செய்துகொண்டார் மிசெல். திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அடுத்த நான்கு வருடங்களில் மிசெல்லின் திருமண வாழ்வு விவாகரத்தில் முடிய, திரைப்பட வாழ்வு ஆரம்பமானது.

ஜாக்கி சானுடன் இணைந்து ‘போலீஸ் ஸ்டோரி 3 : சூப்பர்காப்’பில்(1992) நடித்தார். 1993 - 1996ம் வருடம் வரை பத்து படங்களுக்கு மேல் நடித்து உலகளவிலான திரைப்பட ரசிகர்களிடம் அறிமுகமாகிவிட்டார் மிசெல். 1997ல் ஹாலிவுட்டிலிருந்து அழைப்பு வந்தது. மிசெல் கான் என்ற பெயரை உதறிவிட்டு மிசெல் யோவாக ஹாலிவுட்டில் நுழைந்தார். முதல் படமே ஜேம்ஸ் பாண்ட் படம். ஆம்; ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே முக்கியமான ஒன்றாகக் கொண்டாடப்படும் ‘டுமாரோ நெவர் டைஸ்’ (1997) படத்தில் சீன பாண்ட் கேர்ளாக நடித்தார். ஹாலிவுட்டில் அசைக்க முடியாத ஓர் இடத்தை முதல் படத்திலேயே பிடித்துவிட்டார்.

இதற்குப் பிறகு வெளிவந்த ‘கிரவுச்சிங் டைகர், ஹிடன் டிராகன்’ என்ற படம் மிசெல்லின் அடையாளமாகவே மாறியது. இரண்டாயிரத்துக்குப் பிறகு வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்தார். இப்போது ‘அவதார் 3’, ‘அவதார் 4’ உட்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மிசெல்லின் நடிப்புப் பயணம் அறுபது வயதைத் தாண்டியும் வெற்றிகரமாகத் தொடர்கிறது. அத்துடன் ழான் டோட் என்ற பார்ட்னருடன் அவரது இல்லற வாழ்க்கையும் தொடர்கிறது.

த.சக்திவேல்