வாலிப வயது ஹார்ட் அட்டாக்ஸ் தரும் வார்னிங்..!



ஒரு அவுட் ஆஃப் பாக்ஸ் அனாலிசிஸ்..!

உலக மகளிர் தினத்தன்று முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென், ‘‘சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கிலிருந்து குணமடைந்து, மீண்டும் அழகானஓரு வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டேன். நீங்களும் உங்களது இதயங்களை மகிழ்ச்சியாகவும் வலிமையாகவும் பார்த்துக் கொள்ளுங்கள்..!’’ என்று சக பெண்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இன்னொரு பக்கம் தனது திருமணத்தின்போது மணமேடையிலேயே சரிந்து விழுந்து மடியும் மணமகன் வீடியோ இணையத்தில் பரவலாகப் பகிரப்படுகிறது. அடுத்தாற்போலவே கபடி விளையாடிக் கொண்டிருந்த கரூர் வீரர் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி, ஐ.டி. பணியிலிருந்த ஆந்திர வாலிபர் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி என மாரடைப்புச் செய்திகள் இல்லாத நாளே இல்லை எனும் அளவு மாறிக் கொண்டிருக்கிறது.

அரிதானவை மட்டுமே செய்திகளில் வருகின்றன. அதுவே இவ்வளவு என்றால் மற்றவை எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி எழுகிறதல்லவா..?

இந்தியாவில் இறப்பவர்களில் கிட்டத்தட்ட 30%த்தினர் மாரடைப்பால் இறக்கின்றனர் என்று தகவல் அளிக்கும் ஒன்றிய அரசின் சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று, கடந்த 30 வருடங்களில் கிட்டத்தட்ட இருமடங்காக இந்த மாரடைப்பு மரணங்கள் உயர்ந்திருக்கிறது என்று வருந்துகிறது.ஏன் இவ்வளவு ஹார்ட் அட்டாக்ஸ்..? அதுவும் வாழ்க்கையை ஆரம்பிக்கும் வாலிப வயதிலேயே..? எந்த இழையை நாம் கவனிக்காமல் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம்..?

இதைத் தடுக்கும் வழிகள்தான் என்ன... என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், முதலில் மாரடைப்பு எனும் ஹார்ட் அட்டாக் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
நாம் பிறந்தது முதல் நமது வாழ்நாள் முழுவதும் நமது உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை வழங்குவது நமது இருதயத்தின் வேலை. இப்படி ஆக்சிஜனை இரத்தத்தின் மூலம் உறுப்புகளுக்குக் கொண்டு செல்வதை இரத்த நாளங்கள் செய்கின்றன என்றால் இரத்த நாளங்களுக்கு இரத்தம் அளிப்பதை இருதயத் தசைகளும் அதன் இயக்கமும் செய்கிறது.

இதில் இந்த இருதயத் தசைகள் சீராக இயங்க உதவும் கரோனரி இரத்த நாளங்களில் (coronary arteries) அடைப்பு ஏற்படும்போது இந்தத் தசைகள் செயலழிந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தம் செல்வது தடைப்படுவதால் ஏற்படும் விளைவே ஹார்ட் அட்டாக் என்பதுடன், இது விநாடிகளில் நமது உயிரைப் பறித்துவிடும் என்பதையும் நாம் ஏற்கெனவே அறிவோம்.

Non-communicable diseases எனும் தொற்று தவிர்த்த மற்ற நோய்களில் உயிரைப் பறிப்பதில் முதன்மையாக இருப்பது ஹார்ட் அட்டாக். அதற்கு முக்கியக் காரணமாக விளங்குபவை நமது வாழ்க்கை முறை ஏற்படுத்தித் தந்துள்ள சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், அதிகக் கொலஸ்டிரால் மற்றும் உடல் பருமன் என்றால் இவற்றிற்குக் காரணமாக இருப்பது நமது புகைப்பழக்கம், மது, மேற்கத்திய உணவு முறைகள், உடற்பயிற்சியின்மை, உறக்கமின்மை மற்றும் மன அழுத்தம் என்று வருந்தும் இருதய நோய் வல்லுனர்கள், இவையனைத்துமே தமனிகளில் ஒரு அழற்சி வினையை உருவாக்குபவைதான் என்று கூறுகின்றனர்.

அதாவது உடலின் கெட்ட கொழுப்புகள் இரத்தக் குழாய்களில் அடைப்பை (thrombus) உண்டாக்குவதுடன், நமது வாழ்க்கைமுறைப் பழக்கங்கள் ஏற்படுத்தும் அழற்சி வினையால் இந்த கெட்ட கொழுப்புகள் உருவான இடத்திலிருந்து பிரிந்து இரத்தத்துடன் கலந்து சென்று இருதயத்திற்கு அல்லது மூளைக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துவதால்தான் ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.

உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாக மாறியிருக்கிறது. இதனாலேயே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமனை கட்டுக்குள் வைப்பதுடன் புகையிலை மற்றும் மதுவைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றனர்.

ஆனால், இவற்றில் இன்னும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது நமது பணிச்சூழலியல் மற்றும் சமீபத்திய கோவிட் தொற்று.உட்கார்ந்திருப்பதே வாழ்க்கை முறை என்று மாறிவரும் இன்றைய மென்பொருள் துறை சார்ந்த பணிச்சூழலியலில், உடல் உழைப்பு சிறிதும் இல்லாத இந்தப் பணிகள் தரும் உடனடி உடல் பருமனும், தொடர்ந்து ஒளித்திரை முன் பணிபுரிவதால் ஏற்படும் உடல் மற்றும் மனச்சோர்வு, தூக்கமின்மை, ஹார்மோன்கள் மாற்றம் ஆகிய அனைத்தும் எளிதாக இருதய நோய்க்கு வழிவகுக்கிறது என்பதாலேயே Sitting is new Smoking, அதாவது தொடர்ந்து அமர்ந்திருப்பதும் புகைபிடித்தலுக்கு சமமாக மாறிவருகிறது என்று எச்சரிக்கின்றது மருத்துவ உலகம்.

அடுத்ததாக நம்மை கடந்த இரண்டாண்டுகள் ஆட்டுவித்த கோவிட் நோய். தீவிர கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த உறைதலில் ஏற்பட்ட சிக்கல்களும், இருதயத் தசைகளில் ஏற்பட்ட அழற்சியும் உடனடி பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது என்றாலும், அவை நீண்ட கால பாதிப்புகளையும் ஹார்ட் அட்டாக்குகளையும் ஏற்படுத்துகிறதா என்பதை ஆய்வுகள் வரும் காலத்தில் தெளிவுபடுத்தும். இந்நிலையில், கோவிட் நோய் ஏற்படுத்தியுள்ள வொர்க் ஃப்ரம் ஹோம் முறைகள் நமது உடல் உழைப்பின்மையை இன்னும் கூட்டியிருக்கிறது என்பதே நிதர்சனம்.

ஆனால், உலகளவில் ஆசியர்கள், குறிப்பாக இந்தியர்கள் மேற்கத்தியவர்களைக் காட்டிலும் இருமடங்கு இருதய நோய்களால் பாதிப்படைகின்றனர் என்றும், இந்தியா மட்டுமே கிட்டத்தட்ட 60% மாரடைப்பு நோயாளர்களைக் கொண்டுள்ளது என்றும், நாற்பது விநாடிகளுக்கு ஒருவரை ஹார்ட் அட்டாக்கால் இழக்கிறோம் எனும் அதிர்ச்சிகரத் தகவல்களை அளிக்கிறது உலக சுகாதார அமைப்பு.

இதைப்பற்றிய விழிப்புணர்வே நம்மிடையே இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுவதை மறுப்பதற்கில்லை. அதிலும் ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகம் காணப்படும் இந்த ஹார்ட் அட்டாக்கால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்கிறது ஒன்றிய அரசு.

அதேநேரம் சைலண்ட் ஹார்ட் அட்டாக்குகள் ஒரு சைலண்ட் கொள்ளை நோயாக உருவெடுத்து வருகிறது என்றும் ஒன்றிய அரசு குறிப்பிடுகிறது. எல்லாவற்றைக் காட்டிலும் இந்த ஹார்ட் அட்டாக் ஏற்படும் வயது மற்ற நாடுகளைவிட நமது நாட்டில், 8 முதல் 10 ஆண்டுகள் இளையவர்களுக்கே வந்துவிடுகிறது என்பதுதான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.

உண்மையில் எல்லோரும் சொல்வது போல் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளும், உறக்கமின்மையும், உடல் பருமனும், மரபியல் காரணங்களும் மட்டும்தான் காரணமா, இல்லை ‘மிஸ்ஸிங் லிங்க்’ என்று சொல்வது போல் வேறு இழையை நாம் தவறவிடுகிறோமா..?

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் இன்றைய மனிதனைக் காட்டிலும் அதிக ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர் என்பதை நம்மால் மறுக்க முடியாது. நூற்றாண்டுகளை விடுங்கள். பெரிய வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் நமது தாத்தா பாட்டி வாழ்ந்த காலத்தில், இயற்கையோடு இயைந்த அவர்களது வாழ்க்கை முறை, அவர்கள் மேற்கொண்ட கடின உடல் உழைப்பு, போராட்டங்கள் நிறைந்த வாழ்வு, அது தந்த உடலுறுதி மற்றும் மன வலிமை அவையனைத்தும் அளித்த நோயெதிர்ப்பு ஆற்றல் அவர்களை ஆரோக்கியத்துடன் வைத்திருந்தது. அவர்களை மருத்துவர்கள் ‘தினமும் வாக்கிங் போங்க...’ என்று சொல்ல வேண்டிய கட்டாயமே எப்போதும் ஏற்பட்டதில்லை.

அதுவே தொழில் நுட்பம் அதிகரித்து, உடல் உழைப்பு குறைந்து உறக்கத்தை தொலைத்த நமது அப்பா அம்மா காலத்தில்தான் வாழ்க்கை முறை நோய்கள் அதிகரிக்க ஆரம்பித்து, ‘வாக்கிங் செல்லுங்கள்...’ என்பதை மருத்துவர்கள் சொல்லும் கட்டாயம் ஏற்பட்டது என்பதுடன் குடும்பத்தில் இன்னொரு மாற்றமும் சேர்ந்தே நிகழ்ந்தது என்பதுதான் வேதனை.  
தனக்கு வாய்த்த போராட்டங்களையும் ஏமாற்றங்களையும் தனது குழந்தைகள் அனுபவிக்கக் கூடாது என்று எண்ணிய இதே பெற்றோர்கள், தமது பிள்ளைகளுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து ஏமாற்றத்தையே சந்திக்க விடாததுடன், தமது பிள்ளைகளுக்கு உடலாலும் மனதாலும் போராடுவதைக் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டார்கள்.

நினைத்த நேரத்தில் கேட்ட உணவு வகைகள், விரும்பிய ஆடைகள், உறக்கத்தைக் கெடுக்கும் தொழில்நுட்பங்கள் என கேட்ட அனைத்தையும் கேட்கும் முன்னரே வாங்கி வழங்கிய அவர்கள் தங்கள் குழந்தைகளை நிராகரிப்பு, ஏமாற்றம் என்றால் என்ன என்பதையே அறியாமல் வளர்த்ததே, இப்போது போராட்டங்களையும் அழற்சி வினைகளையும் உடலாலும் மனதாலும் தாங்க முடியாத தலைமுறையை உருவாக்கி இப்போது அவர்களின் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக், கேன்சர் போன்றவற்றுடன் தற்கொலைகளையும் பார்த்து கலங்கவும் செய்கிறது.

பத்து குழந்தைகளைப் பெற்று வளர்த்த பண வசதி இல்லாத, சரியான உணவிட முடியாத அன்றைய அப்பா அம்மாக்களால் ஆரோக்கியமான குழந்தைகளை வளர்க்க முடிந்தபோது, ஒற்றைக் குழந்தையைப் பெற்றும், எல்லா வாய்ப்புகளும் இருந்தும் வாசலுக்கே உணவை ஸ்விக்கி ஜொமோட்டா மூலம் வரவழைக்கும் அப்பா அம்மாக்களால் ஆரோக்கியமான குழந்தைகளை வளர்க்க முடியாமல் போனது இங்கேதான் என்று இந்த அவுட் ஆஃப் பாக்ஸ் அனாலிசிஸில் நினைக்கத் தோன்றுகிறது.

அதனால்தான் ஜிம் செல்லும் இளைய தலைமுறையினரையும் கபடி விளையாடும் வாலிபர்களையும் இளம்வயதிலேயே கண்முன்னால் பறிகொடுத்தும் வருகிறோம்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு, உடற்பயிற்சி, உறக்கம், மனநிம்மதி மட்டுமல்ல... இவற்றுடன் கூடிய சிறிது போராட்டக் குணமும் வாழ்வின் தொடக்கத்திலேயே தேவை என்பதுதான் நாம் இன்று தவறவிட்டுள்ள இழை..!ஆம். தேடல் உள்ள மனிதருக்கே தினமும் பசியெடுக்கும் எனும் இழையை உணர்த்திச் செல்கிறது இயற்கை.அனுபவம் சிறந்த பாடம் என்றால் மோசமான அனுபவங்கள் இன்னும் சிறந்த படிப்பினையை அல்லவா அளிக்கின்றன..? இந்த வாலிப வயது ஹார்ட் அட்டாக்ஸ் தரும் படிப்பினைகள் மாற்றங்களையும் நம்மில் நிகழ்த்தட்டும்!

டாக்டர் சசித்ரா தாமோதரன்