சர்வதேச புக் கிளப் இப்போது சென்னையில்!



‘‘புத்தக வாசிப்பு என்பது ஒருவரின் சிந்தனைகளையும் செயல்திறனையும் அற்புதமாக மாற்றும் வல்லமை கொண்டது. ஒருவரின் பாசிட்டிவிட்டியை எப்போதும் அதிகரிக்கக் கூடியது. புத்தக வாசிப்பினால் ஒரு தனிமனிதனிடம் எண்ணற்ற மாற்றங்கள் நிகழும். பின்னர் அது சமூக மாற்றமாக மாறும். அப்படிெயாரு சமூக மாற்றம் உலகளவில் விரிவடைந்து செல்ல வேண்டும் என்பதே எங்கள் ஆசை. அதற்காகவே இந்தக் கிளப்பைத் தொடங்கினோம். அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதுதான் எங்களின் அல்டிமேட் கோல்...’’ நம்பிக்கை துளிர்க்கப் பேசுகிறார் ராகுலன் தர்மகுலசிங்கம்.   

இலங்கைத் தமிழரான இவர் சமீபத்தில் சென்னையில், ‘பிக் ஏ புக்’ (Pick a Book) என்ற பெயரில் ஒரு கிளப்பை தொடங்கியிருக்கிறார். ‘புத்தகத்தைத் தேர்ந்தெடு’ எனப் பொருள்படும் இந்தக் கிளப்பின் சிறப்பம்சம், அனைவரிடமும் வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதுடன் அறிவாற்றலை மேம்படுத்தும் பணிகளையும் முன்னெடுப்பதுதான். ‘‘இந்தியாவில் மட்டுமே பதினாறு இடங்கள்ல எங்க கிளப் செயல்பட்டுட்டு வருது. சென்னை 17வது இடம்...’’ என உற்சாகமாகச் சொல்லும் ராகுலனிடம் இந்த ஐடியா குறித்து கேட்டோம்.

‘‘முதல்ல என்னைப் பற்றி சொல்லிடுறேன். நான் பிறந்தது யாழ்ப்பாணம். வளர்ந்தது, படிச்சதெல்லாம் கொழும்புல. எம்பிஏ முடிச்சிருக்கேன். எனக்கு சின்ன வயசுல வாசிப்பு பழக்கம் இருந்தது. அதுதான் இப்ப கனெக்ட்டாகி இருக்கு. அப்ப, பள்ளி விடுமுறையின்போது யாழ்ப்பாணத்துக்குப் போவேன். அங்கே தாத்தாக்கள் குரூப்பா உட்கார்ந்திருப்பாங்க. அவங்க தினசரி செய்தித்தாள்களை வாசிச்சுக் காட்டச் சொல்வாங்க. அப்படிதான் வாசிப்பு பழக்கம் எனக்குள் வளர்ந்தது.

ஒவ்வொரு நாளும் நான் செய்தித்தாள்கள் வாசிக்க, அவங்க கேட்பாங்க. முதல்ல எனக்கு பிடிக்கல. ஆனா, அவங்க அதைக் கேட்டு விவாதம் பண்றதும் கருத்துகளைப் பரிமாறிக்கிறதும் அருமையாக இருந்தது. பிறகு நான் வாசித்ததையும், தாத்தாக்களின் விவாதக் கருத்துகளையும் நண்பர்களிடம் ஷேர் பண்ணுவேன். அது அவங்க மத்தியில் என்னை நிறைய விஷயங்கள் தெரிஞ்சவன் போல் மாற்றியது. அது எனக்கு ஊக்கத்தை ஏற்படுத்துச்சு.

அப்புறம் டீன்ஏஜ்ல படிப்புனு போனதும் வாசிப்பு பழக்கம் விடுபட்டுப் போயிடுச்சு. ஆனா, புத்தக வாசிப்பு என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கு. அதனால, நான் பல விஷயங்கள்ல வெற்றி பெற்றிருக்கேன்.பிறகு படிப்பு முடிஞ்சு 2011ல்   எபிடோம் டிஜிட்டல்னு என் நிறுவனத்தைத் தொடங்கினேன். அப்பதான் மறுபடியும் வாசிப்பைத் தொடங்கினேன். 
இப்படியிருந்தப்பதான், இன்னைக்கு புத்தக வாசிப்பு என்பது குறைஞ்சுபோச்சு; எல்லோரும் டிஜிட்டல்லயே நேரத்தை செலவழிக்கிறாங்கனு தோணுச்சு. ஒரு இன்டராக்‌ஷன் கூட இல்லாமல் இருக்காங்களேனு வருத்தமா இருந்துச்சு. அந்நேரம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த என் நண்பர் ரமேஷும் என்னுடன் இணைந்தார். பிறகு நானும் நண்பர் ரமேஷும் யோசிச்சு, முதல்ல எங்க நிறுவன ஆக்ட்டிவிட்டியாக புத்தக வாசிப்பைத் தொடங்க முடிவெடுத்தோம்.

எங்க நிறுவனத்துல உள்ள மார்க்கெட்டிங் டீம் உறுப்பினர்களை வச்சு ஆரம்பிச்சோம். அதுல நானும் ஒரு நபர். இதுல என்னனா, ஒரு புத்தகத்தை எடுத்துப்போம். ஒரு உறுப்பினர் ஒவ்வொரு நாளும் ஒரு சேப்டரை வாசிக்கணும். ஒரு மேடை மாதிரி போட்டு அந்த சேப்டரை வாசிக்கும் நிகழ்வு நடக்கும். இதனால, எங்க நிறுவனத்துல வாசிப்பு பழக்கம் அதிகமாச்சு. வாசிப்பின் வழியாக நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டாங்க. பிறகு அவங்களே இன்னொரு புத்தகம் கொடுக்கச் சொல்லிக் கேட்டாங்க.

அப்புறம், முப்பது நாட்கள்ல ஒரு புத்தகத்தை முடிச்சிட்டு முழு நிறுவனத்திற்கும் ப்ரசன்ட் பண்ணினாங்க. இதுல வாசிக்கிறது மட்டுமல்ல; அதை விவாதிக்கிறதும், தங்கள் கருத்துகளைப் பகிர்றதும் நடந்தது. சோஷியல் இன்டராக்‌ஷனும் உருவாச்சு. அதாவது மற்றவர்களுடன் அதிகநேரத்தைச் செலவிட வேண்டும் என்பதும் எங்கள் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அதையும் வாசிப்பு நிகழ்வில் மீட்டெடுத்தோம்.  

அதன்பிறகு இதை பொதுமக்களிடம் எடுத்திட்டு போகலாம்னு நினைச்சோம். அப்படியாக ஒரு நிகழ்வை நடத்தினோம். அப்ப பெரிய கூட்டமாக வந்து மக்கள் கலந்துகிட்டாங்க. வந்தவங்க எல்லோரும் இந்த செயல்பாட்டை வாழ்த்தினாங்க. எங்களுக்கு ரொம்ப உற்சாகம் தந்தது. அதுவே கிளப்பிற்கும் அடித்தளமிட்டது...’’ என மகிழ்ச்சியுடன் சொல்கிறவர், நிதானமாகத் தொடர்ந்தார்.   

‘‘இந்தச் செயல்பாட்டை பரவலாக்கணும்னு கிளப்பிற்கு ‘பிக் ஏ புக்’னு பெயர் வச்சோம். 2020ம் ஆண்டு பிப்ரவரி மாசம் முதல்ல கொழும்புவில் ஆரம்பிச்சோம். மார்ச் மாசம் இந்தியாவில் தொடங்கினோம். ஆனா, அடுத்த வாரமே லாக்டவுன் வந்திடுச்சு. அதனால, ஆன்லைன் வழியாக பணிகள் செய்ய வேண்டியதானது. ஆனா, அதுவே நிறைய பேரிடம் போய்ச் சேர்ந்தது. வீட்டுல இருந்ததால பலரும் புத்தகங்களை வாசிச்சு ஜூம்ல ப்ரசன்ட் பண்ணினாங்க.

இந்தியாவுல கொரோனா நேரத்துல வாரம் 8 மணி நேரம் புத்தகங்கள் வாசிச்சவங்க, கொரோனா முடிஞ்சபிறகு வாரம் 16 மணிநேரம் புத்தகங்கள் வாசிச்சாங்க. வாசிப்புப் பழக்கம் அதிகரிச்சு இருந்ததையும் நேரில் பார்த்தோம். இதுக்காக நாங்க முதல்ல அதீத வாசிப்பாளர்கள், வாசிப்பாளர்கள், வாசிக்காதவங்கனு மக்களை வகைப்படுத்தினோம். அதீத வாசிப்பாளர்கள் எப்பவும் புத்தகமும் கையுமாக வாசிச்சிட்டே இருக்கிறவங்க. இவங்களுக்கு தங்கள் கருத்தை பகிர ப்ளாட்பார்ம் தேவை. ‘பிக் ஏ புக்’ல ப்ரசன்டேஷன் வச்சிருக்கிறதால அவங்க அதுல ஷேர் பண்ண வாய்ப்பு அமைத்துக் கொடுக்குறோம்.  

இதனால, அவங்க பேச்சுத் திறமை வளரும். மேடை பயம் போகும். விவாதம் செய்ய பயப்படுபவருக்கும் பயம் விலகி நம்பிக்கை பிறக்கும். பின்னாடி நல்லதொரு அறிவிப்பாளராகவோ, பேச்சாளராகவோ கூட அவங்க வரலாம்.  அடுத்து, அப்பப்ப வாசிக்கிறவங்க இந்த ப்ரசன்டேஷன்ல கலந்துக்கும்போது பாராட்டுகளால் இன்னும் வாசிக்கணும்னு உந்தப்படுவாங்க. அப்புறம், அவங்க அதீத வாசிப்பாளராக மாறுவாங்க.  

கடைசியாக, புத்தகம் வாசிக்காதவங்க இந்த ப்ரசன்டேஷன்ல கலந்துக்கும்போது குறைந்தபட்சம் புத்தகம் வாங்கி அதன் வாசனையையாவது முகர்வாங்க. அப்படியாக அவங்க வாசிப்பிற்குள் வர வாய்ப்பை ஏற்படுத்துறோம். அப்புறம், 45 நிமிடம் ப்ரசன்ட் பண்ணும்போது எந்த ஒரு புத்தகம் என்றாலும் அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். கேட்கிறவங்களுக்கு அறிவுப் பெருக்கம் ஏற்படும். இதுதான் கிளப் மாடல். இதன்படி செயல்பட்டுட்டு வர்றோம்.

இந்தப் புத்தக வாசிப்பு என்பது ஒரு புத்தக மதிப்புரை மாதிரிதான். இந்தப் புத்தகத்தில் இந்த விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்குனு பேசுவாங்க. அப்ப அந்த நூல் ஆசிரியரின் பெயரையும் குறிப்பிட்டு சொல்வாங்க. இதனால அந்த எழுத்தாளருக்கு பப்ளிசிட்டியும் கிடைக்கும். தவிர, அந்த குறிப்பிட்ட புத்தகத்தை மக்களும் ஆர்வமாக வாங்க முன்வருவாங்க. புத்தகமும் விற்பனையாகும். இதுவும் எங்க நோக்கங்கள்ல ஒண்ணு.

இப்ப இலங்கை, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள்ல எங்க ‘பிக் ஏ புக்’ கிளப் செயல்படுது. விரைவில் ஆஸ்திரேலியா, கனடாவுல ஆரம்பிக்கப் போறோம். நாங்க ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தலைவரை நியமிச்சிருக்கோம். சென்னைக்கு சுனில் சேத்தியா என்பவர் தலைவராக இருக்கார். ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த நிகழ்வு நடக்கும்.

இதுல யார் வேண்டுமானாலும் வந்து கலந்துக்கலாம். எந்தக் கட்டணமும் கிடையாது. எந்த புத்தகத்தையும் ப்ரசன்ட் செய்யலாம். மொழியும் தடையில்லை. ஆனா, எல்லாருக்கும் புரியும்படி இருக்கணும். இதனுள் கிட்ஸ் கிளப்பும் இருக்கு. இதை எதிர்கால விஷனாக ஆரம்பிச்சிருக்கோம். ஏன்னா, இன்றைய குழந்தைகள்தான் நாளைய தலைமுறை. அவங்க நல்ல வாசிப்பாளர்களாக வரணும்னு செயல்படுறோம்.

அப்புறம் பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கென்று ஒரு கிளப் ஏற்படுத்தியிருக்கோம். அதாவது பள்ளிகள்ல அவங்க நூலக பீரியடை எடுத்துப்போம். நூலகத்துல நாங்க மாணவ - மாணவிகளை வாசிக்க வச்சு ப்ரசன்ட் பண்ணச் சொல்றோம். அதேபோல கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்லயும் செய்திட்டு வர்றோம்.

நிறுவனங்களுக்கும் தனி கட்டமைப்பு மாடல் இருக்கு. இப்படியாக எல்லா தளங்கள்ல இருக்கிறவங்க இடையேயும் வாசிப்புப் பழக்கத்தையும், கருத்துப் பகிர்வையும் உருவாக்கிட்டு வர்றோம்.  இப்ப நான் முழுநேரமாக ‘பிக் ஏ புக்’ கிளப்பை கவனிச்சிட்டு வர்றேன். இந்த கிளப்ல 5 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்காங்க. இன்னும் நிறைய ரீச் பண்ணணும்னு ஓடிட்டே இருக்கோம்.

இதுல இன்னொரு ஆச்சரியம் என்னனா, எங்க வாசிப்பாளர்கள் இப்ப எழுத்தாளர்களாகவும் உருவாகியிருக்காங்க. சுமார் 25 பேர் புத்தகங்கள் எழுதியிருக்காங்க. விசாகப்பட்டினத்துல ஒரு கிராஃபிக் டிசைனர் இருக்கார். அவர் புத்தகத்தைத் தொட்டதே இல்ல. இங்க ‘பிக் ஏ புக்’ வந்தபிறகு ஓராண்டுல 40 புத்தகங்கள் படிச்சு மேடையில் ப்ரசன்ட் பண்ணியிருக்கார். அவர் இப்ப எங்க கிளப்லே ஒரு புத்தகமும் எழுதி வெளியிட்டுட்டார்.  

கொழும்புல ஒரு சின்ன பொண்ணு இருக்காங்க. 20 ப்ரசன்டேஷன் வரை செய்திருக்காங்க. அவங்களும் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்காங்க. இதேபோல, விசாகப்பட்டினத்துல ஒரு சின்னப் பையன் புத்தகம் வெளியிட்டிருக்கான்.

நாங்களும் உறுப்பினர்களுக்கு நிறைய சப்போர்ட் செய்றோம். எங்களுக்கு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் தெரியும் என்கிறதால அவங்களுக்கு வழிகாட்டுறோம்...’’ என்கிறவர், ‘‘இந்த செயல்பாட்டிற்காக எங்க கிளப்பிற்கு சமீபத்துல ஆந்திராவுல சிறந்த கம்யூனிட்டி எம்பவர்மென்ட் விருது கிடைச்சது. இதேபோல ஒரு விருது கொழும்புலயும் வாங்கினோம். இந்த விருதுகள் ஊக்கப்படுத்தினாலும் அறிவார்ந்த சமூகம் என்கிற எங்கள் இலக்குதான் எங்களுக்கான உண்மை விருது. அதை அடையும்வரை ஓடிட்டே இருப்போம்...’’ என உறுதியான குரலில் சொல்கிறார் ராகுலன் தர்மகுலசிங்கம்.  
                       
பேராச்சி கண்ணன்