அப்பா ஹீரோ... மகன் டைரக்டர்!



பல நூறு படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் தேசிய விருதுக்குச் சொந்தக்காரரான தம்பி ராமையா.‘மனுநீதி’ படத்தில் இயக்குநராக தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்தவர். என்றாலும் நடிகராகவே முத்திரை பதித்து வருகிறார்.‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘மைனா’, ‘வாகைசூடவா’, ‘கழுகு’, ‘சாட்டை’, ‘கும்கி’, ‘ஜில்லா’, ‘வீரம்’, ‘நிமிர்ந்துநில்’, ‘காவியத்தலைவன்’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தனி ஒருவன்’, ‘புலி’, ‘வேதாளம்’, ‘அப்பா’, ‘இருமுகன்’, ‘தொடரி’, ‘பைரவா’, ‘டோரா’, ‘வேலைக்காரன்’, ‘விஸ்வாசம்’, ‘தலைவி’, ‘விநோதய சித்தம்’, ‘எனிமி’, ‘செம்பி’... உட்பட ஏராளமான படங்களில் இவர் ஏற்று நடித்த வித்தியாசமான கதாபாத்திரங்கள் இவரது பன்முக நடிப்புக்கு அடையாளம்.இப்போது தன்னுடைய மகன் உமாபதி ராமையா இயக்கும் ‘ராஜாகிளி’யில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இளம் ரசிகர்கள் உங்களை வைத்து மீம்ஸ் போடுமளவுக்கு லைம்லைட்டில் இருப்பதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

என்னுடைய வாழ்க்கை திறந்த புத்தகம் மாதிரி. எல்லோருக்கும் நான் எப்படி இந்த நிலைக்கு வந்தேன் என்று தெரியும். வாழ்க்கையில் திட்டமிடல், கற்றல் எல்லாமே ஒரு மனிதன் செய்யணும். இதெல்லாம் வெற்றியை நோக்கிதான் இருக்கும். ஆனால், நம் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்குதா என்றால் அது கேள்விக் குறி. நான் அடிக்கடி சொல்வது, வெற்றி என்பது அமைவதல்ல, அமைத்துக்கொள்வது. எனது உழைப்பால், எனது சிந்தனையால், எனது கஷ்டத்தால், எனது அவமானத்தால், எனது தனிமை கொடுத்த தாக்கத்தால் நான் வெற்றியடைந்தேன்.

தோற்றுவிட்டேன் என்றால் அதைத் தாங்க முடியும். அதில் என்னுடைய முடிவு இருக்கும். அடுத்தவர் எடுத்த முடிவில் நான் ஜெயித்தேன் என்றால் அந்த வெற்றியை என்னால் கொண்டாட முடியாது. அது கூச்சமாக் இருக்கும். கடவுள் எனக்கு அளவுக்கு மீறிய கஷ்டத்தைக் கொடுத்தாலும் அளவான வெற்றியையும் கொடுத்துள்ளார். அந்தவகையில் கடவுளுக்கு நன்றி. என்னை மாதிரியான நடிகனை ஞாபகம் வைத்து பொதுமக்கள் சிலர் ‘சார் நீங்கதான் எனக்கு ரோல் மாடல்’ என சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.

தாய்மாமனாக, சித்தப்பாவாக, தலைமை ஆசிரியராக எந்த வேடத்தில் நடித்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளுமளவுக்கு முகத்தைக் கொடுத்த என் அம்மா அப்பாவுக்கு நன்றி. மீம்ஸ் போட்டு என்மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்கள் ரசிகர்கள். கடவுள் என்னை நல்ல இடத்துல கொண்டு வந்து வைத்திருக்கிறார். இதை நான் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.  
‘ராஜாகிளி’?

‘விநோதய சித்தம்’ வந்த பிறகு படங்களை செலக்ட் பண்ணி பண்ண ஆரம்பிச்சேன். வாழ்வியல் சார்ந்த கதைகள் என்னிடம் நிறைய இருக்கிறது. ஒரு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை சந்திச்சேன். அவர் என்னிடம் கதை இருக்கிறதானு கேட்டார். உடனே ஒரு புது இயக்குநர் எப்படி ஆர்வத்தோடு சொல்வாரோ அதுபோல் நடித்துக் காண்பித்து கதை சொன்னேன். கதை அவருக்கு பிடித்துப்போகவே உடனே தயாரிக்க முன்வந்தார்.

என்னுடைய மகன் உமாபதி ராமையா, இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உடன் பிறவா தம்பி மாதிரி. அர்ஜுன் சார் தொகுத்து வழங்கிய டிவி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் உமாபதிக்கு இண்டஸ்ட்ரியில் நல்ல பேர் கிடைச்சது. உமாபதியின் மிக்சல் ஆர்ட்ஸ் பாத்துட்டு லோகேஷ் அழைக்கவே அவருடன் சேர்ந்து டைரக்‌ஷன் டெக்னிக்கை இம்ப்ரூவ் பண்ணிக்கொண்டார். ‘ராஜாகிளி’க்கு நான் கதை வசனம் எழுதியிருக்கிறேன். உமாபதி டைரக்‌ஷன்.

இந்தப் படம் பண்ணுவதற்கு காரணம் சமுத்திரக்கனி. ‘விநோதய சித்தம்’ வந்த பிறகு என்னைப் பாராட்டாதவர்களே இல்லை. அந்த வெற்றிதான் இந்தளவுக்கு பிரம்மாண்டமான படம் எடுக்க தயாரிப்பாளருக்கு தைரியத்தை கொடுத்துச்சு. இந்தக் கதை உருவாகக் காரணமாக இருந்தவர் சமுத்திரக்கனி.

வடிவம் பெற காரணமாக இருந்தவர் சுரேஷ் காமாட்சி.நூறு சதவீதம் இந்த உலகத்தில் நல்லவர்கள் என்று யாருமில்லை. அவசரமான உலகத்தில் எல்லோரும் தடுமாறுகிறார்கள். சிலர் குரோதத்துடன் வாழ்கிறார்கள். சிலர் குரோதத்தை அடக்க கற்றுக்கொள்கிறார்கள்.

அந்த வகையில் இது மனிதனுக்குள் இருக்கும் ஏற்ற இறக்கங்களைச் சொல்லும் படம். ரசிகர்கள் தங்களை கனெக்ட் பண்ணிக்கொள்ளக்கூடிய ஃபீல் குட் படமாக இருக்கும். எல்லோரையும் நெகிழ வைக்கும்.

யாரெல்லாம் நடிக்கிறார்கள்?

சமுத்திரக்கனி மெயின் லீட் பண்றார். ஆடுகளம் நரேன், பழ.கருப்பையா, அருள்தாஸ், ஐஸ்வர்யா, லட்சுமி, தீபா, சுதா ஆகியோருடன் நானும் இருக்கிறேன்.

மகன் டைரக்‌ஷன்ல நடித்த அனுபவம் எப்படி?

நான் அதிகம் பேசுபவன். அவர் பேசமாட்டார். எல்லாமே செயல்தான். டெக்னிக்கல் அறிவு அதிகம். உலக சினிமா நிறையப் பார்த்து சினிமா அறிவை வளர்த்துக்கொண்டவர். சினிமா பற்றிய விஷயங்களை நிறைய உள்வாங்கி வைத்திருக்கிறார். மியூசிக் சென்ஸ் உள்ளவர்.என் மகன் நடிப்பைத் தாண்டி படைப்பாளியாக தன்னை வளர்த்துக்கொண்டதில் தந்தையாக எனக்கு மகிழ்ச்சி. இந்தப் படத்துக்குப் பிறகு அவரே  கதை எழுதி நடித்து இயக்கவுள்ளார்.

திடீர்னு மியூசிக் டைரக்டராக அவதாரம் எடுத்துள்ளீர்கள்?

சினிமாவுக்கு வந்ததே அதற்குத்தானே! கதை உருவானபோதே பாடல்களையும் உருவாக்கிவிட்டேன். எல்லா பாடல்களும் கதைக்குள் இருக்கும். கவிதை எழுதும்போதே சந்தம் பிறந்துவிடும் என்பதால் இசை வசப்பட்டது.

‘லால் சலாம்’ படத்தில் ரஜினியுடன் நடிக்கும் அனுபவம் எப்படி?

ரஜினியுடன் நடிக்கவில்லையே என்று எல்லா பேட்டிகளிலும் கேட்பார்கள். ‘லால் சலாம்’ வாய்ப்பு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்த மாதிரி. பல நாள் காத்திருந்ததற்கு கிடைத்த பரிசு. ஏற்கனவே பெண் இயக்குநரான லட்சுமி ராமகிருஷ்ணன் மேடத்துடன் படம் பண்ணியிருக்கிறேன். இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கிறேன். ஐஸ்வர்யாவை ‘பாப்பா’ என்றுதான் அழைப்பேன். ‘என்னை யாரும் பாப்பானு கூப்பிட்டதில்ல’னு ரசிச்சாங்க. எது தேவை, எது தேவையில்லைனு ஃபுட்டேஜை மைண்ட்ல வெச்சு ஷூட் பண்றாங்க. பல நாட்கள் இந்த கதையுடன் டிராவல் பண்ணியுள்ளார் என்பது எங்களிடம் வேலை வாங்கிய விதத்துல தெரிஞ்சது.

சூப்பர் ஸ்டாரின் மகள் என்ற பெருமை, அகந்தை இல்லாதவர். ஒவ்வொரு சீனை எடுப்பதற்கு முன்னும் கேரவனுக்குள் வந்து என்ன மாதிரியான ரியாக்‌ஷன் வேணும் என செய்யச்சொல்லிட்டு டேக்கின்போது அதை மட்டும் செய்யச் சொல்லி, நேரத்தை விரயமாக்காமல் ஷூட் செய்கிறார்.ரஜினி சாருடன் இன்னும் காம்பினேஷன் ஷூட் பண்ணல. ‘மைனா’ டைம்ல வாட் ஏ பெர்ஃபமர்னு நெத்தில மூணு முத்தம் அவர் கொடுத்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

‘வினோதய சித்தம்’, ‘ராஜாகிளி’ போன்ற படங்களில் தம்பிராமையா ஹீரோவாக சித்தரிக்கப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

அற்புதமான கேள்வி. 25 வயது மனிதனின் வாழ்க்கையை எளிதில் சொல்லிடலாம். 50களில் இருக்கும் மனிதனின் வாழ்க்கையைச் சொல்லி அது ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் அவன்தான் வளரக் கூடிய சமுதாயத்துக்கும் வளர்ந்து முடித்த குடிமகனுக்கும் சென்டர் பாயின்ட். ஏனோ தெரியவில்லை, 50 ப்ளஸ் கேரக்டர் அவ்வளவாக கொண்டாடப்படவில்லை. அந்த வயதுக்கான கதை கொட்டிக்கிடக்கிறது. அதை தோளில் சுமக்கும் ஆர்ட்டிஸ்ட்ஸ் குறைவு என்ற சூழ்நிலையில் ‘ராஜாகிளி’ வருகிறபோது அதற்கான கதவுகள் திறக்கப்படும். இளம் இயக்குநர்கள் அந்தமாதிரி கதைகள் பண்ண வருவார்கள்.

தம்பிராமையா வாழ்க்கையில் சமுத்திரக்கனி யார்?

சினிமாவில் பலரைச் சந்தித்துள்ளேன். என்னுடைய உடன் பிறந்த தம்பிகளைவிட ஒரு படி உயர்ந்தவர் கனி. என்னுடைய வாழ்க்கையைப் பொறுத்தவரை அவருக்கு நிகர் சினிமாவில் வேறு யாரும் இல்லை. என் நடிப்பில், எனது நலனில், திறமையில், என்னை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த வேண்டும் என்ற துடிப்பில், சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைப்பதில் என் மீதும், என் மகன் மீதும் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு செலுத்துகிறவர். சிவாஜி ஐயாவுக்கு சண்முகம் மாதிரி எனக்கு கனி.  

எஸ்.ராஜா