காடுகள் இல்லைனா மனிதனால உயிர் வாழ முடியாது...



சொல்கிறார் திரைப்பட ஒளிப்பதிவாளரும் சர்வதேச வனவிலங்கு புகைப்படக் கலைஞருமான அல்போன்ஸ் ராய்

‘‘காடுகள்தான் என் வீடு, என் உலகம்னு சொல்லலாம். அந்தளவுக்கு காட்டை ரசிச்சுக்கிட்டே இருக்கேன். காடு ஒரு மனிதனுக்கு பல விஷயங்களை சொல்லிக்கொடுக்கும். எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கு. அங்க இன்னும் படிக்கவேண்டிய விஷயங்கள் அதிகமிருக்கு...’’ அத்தனை கவித்துவமாகப் பேசுகிறார் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் கம் ஒளிப்பதிவாளரான அல்போன்ஸ் ராய்.
வனவிலங்கு புகைப்படக் கலைக்காக ஒன்றிரண்டு அல்ல, பல்வேறு விருதுகளைப் பெற்றவர். உலகம் முழுவதும் உள்ள காடுகளில் பயணித்து வனவிலங்குகளைப் படமெடுத்தவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தன் வாழ்நாளில் பாதியை காடுகளில் கழித்தவர். சமீபத்தில், தன் வைல்டு லைஃப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பியவரிடம் பேசினோம்.

‘‘சொந்த ஊர் பாளையங்கோட்டை. என் அப்பா யோகேஸ்வரமூர்த்தி ரயில்வே போட்டோகிராஃபராக இருந்தார். அவருக்கு அந்த வேலை எப்படி கிடைச்சதுனா ஒரு சமயம் தாமிரபரணியில் வெள்ளம் வந்திருக்கு. அப்ப, ரயில்வே பிரிட்ஜ் அடிச்சிட்டு போயிடுச்சு. அந்தப் படத்தை என் அப்பா எடுத்திருக்கார்.

அப்படியாக அவருக்கு ரயில்வேயில் போட்டோகிராஃபர் வேலை கிடைச்சிருக்கு. பிறகு, சென்னைக்கு வந்தோம். அவரைப் பார்த்துதான் எனக்கு போட்டோகிராஃபியில் ஆர்வம் வந்தது. என் ரோல் மாடல் அப்பாதான். அம்மா தங்கம் எனக்கும் நிறைய சப்போர்ட்டா இருந்தாங்க...’’ என்கிறவரிடம் வனவிலங்கு புகைப்படக் கலைக்குள் எப்படி வந்தீர்கள் என்றோம்.

‘‘என் பதினைந்து வயசுலேயே போட்டோகிராஃபிதான்னு முடிவெடுத்திட்டேன். குறிப்பா, அன்சல் ஆடம்ஸ் மாதிரி ஸ்டில் போட்டோகிராஃபியில் போகணும்னு நினைச்சேன். அப்ப இந்தியாவுல ஸ்டில் போட்டோகிராஃபிக்குனு ஸ்கூல் எதுவும் இல்ல.

அதனால, மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்தேன்.அங்க நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. பட இயக்கம், ஒளிப்பதிவுனு பல விஷயங்கள் கற்றுக்கிட்டேன்.

எப்பவும் சினிமா பத்தி பேசறதும், விவாதிக்கிறதுமா அந்த நாட்கள் சுவாரசியமா இருந்துச்சு. நாங்க ஒருடீமாக இருப்போம். அப்புறம், பல நாட்டு படங்களைப் பார்ப்போம். பெங்காலி படம் ஒன்றைப் பார்த்தபோது என் மனசை ரொம்ப பாதிச்சது. ஆனா, எனக்கு சினிமாவுக்குப் போக ஆர்வமில்ல.

ஸ்டில் போட்டோகிராஃபிதான் என் ஆசை. அதேநேரம் என் அப்பாவுக்கு வைல்டு லைஃப் போட்டோகிராஃபியில் ஆர்வம் உண்டு. எனக்கு பள்ளியில் லீவு விட்டதும் மொத்தக் குடும்பத்தையும் கல்கத்தாவுக்கு அழைச்சிட்டு போய் அங்குள்ள ஜூவில் புலிகள் குட்டிகள் போட்டிருப்பதைக் காட்டினார் அவர். அந்தளவுக்கு வைல்டு லைஃபில் ஆர்வம் கொண்டவர். அவரைப் பார்த்து எனக்கும் வைல்டு லைஃப் போட்டோகிராஃபியில் அதீத ஆர்வம் வந்தது.  

ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கிறப்ப மெட்ராஸ் சில்ட்ரன்ஸ் பார்க்ல சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 60 mm பிலிம் புரொஜெக்டரில் 5 வைல்டு லைஃப் படங்களைப் போட்டுக் காட்டுவாங்க. அதைப் போய் பார்ப்பேன். அது கூடுதலாக ஆர்வத்தை ஏற்படுத்திச்சு.பிறகு, இன்ஸ்டிடியூட்ல அன்சல் ஆடம்ஸின் ‘ANSEL ADAMS -400’னு அவரின் போட்டோ
கிராஃப் புத்தகத்தை படிச்சேன். அதை புரிஞ்சிக்கவே இரண்டு வருஷமானது. அதுவும் பெரிய ஆர்வத்தைத் தூண்டுச்சு.

அப்புறம், இன்ஸ்டிடியூட்ல கடைசி இரண்டு ஆண்டுகள் கிண்டி சில்ட்ரன்ஸ் பார்க் பத்தி ஒரு ஆவணப்படம் எடுக்க முயற்சி செய்தோம். ஆனா, அது முடியல. பிறகு, நிறைய ஆவணப்படங்கள் எடுத்தேன்.நாங்க வளர்ந்து வந்தப்ப சந்தோஷ் சிவன் நண்பரானார். அதேநேரம் என் சீனியர் நந்தகுமார் கரியால் முதலை பத்தி ஒரு படம் பண்ணியிருந்தார்.

முதலைகளின் குட்டிகள் முட்டையிலிருந்து வெளிவரும்போது கீச்கீச் என்று சத்தம் எழுப்பும். அதை அந்தக் காலத்தில் ரிக்கார்ட் செய்தவர் நந்தகுமார். அவரோடு சேர்ந்து பணியாற்றினேன். கொஞ்சம் கொஞ்சமாக வைல்டு லைஃப் புகைப்படக்கலைக்குள் வந்தேன்.

முதன்முதலில் புலிகள் பத்தி ஒரு ஆவணப்படம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பந்தாவ்கர் காட்டில் பண்ண ஆரம்பிச்சேன். 53 நிமிஷம் படம் பண்ண நான்கரை ஆண்டுகள் ஆச்சு. அந்தப் புலியின் பெயர் சீத்தா. இந்தப் புலி நேஷனல் ஜியோகிராபிக் சேனல் கவர் பேஜில் பப்ளிஷ் ஆனது. இப்ப அது உயிருடன் இல்ல.

அதன் வாரிசும் இல்ல. புலிகளுக்கு பதினாறு வயசு வரைதான் லைஃப். அதுலதான் முதல்பிரேக் எனக்கு கிடைச்சது. அந்த சமயத்தில் புலிகள் பத்தி யாரும் படம் பண்ணல. இப்படியே பன்னிரண்டு ஆண்டுகள் மத்தியப் பிரதேசத்திலுள்ள பந்தாவ்கர் காட்டில் வொர்க் பண்ணிட்டு இருந்தேன்.

அடுத்து கிங் கோப்ரா பத்தி படம் பண்ணினோம். சென்னையில் முதலை, பாம்புப் பண்ணையை ஆரம்பிச்ச ரோமுலஸ் விட்டேக்கருக்காக இந்தப் படம் பண்ணினோம். அப்படியே வைல்டு லைஃப் போட்டோ கிராஃபி என் வாழ்க்கையானது. ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’டுக்காக ஒரு வீடியோ செய்தேன். அப்புறம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி போகும் ரயிலைப் பத்தி ஒரு ஃபிலிம் பண்ணினோம். தொடர்ந்து சிங்கம், வரிக்குதிரை, மான், யானை, சிங்கவால் குரங்கு, இருவாச்சி பறவைனு நிறைய படங்கள் செய்தோம்.

பிபிசியில் ‘நேச்சுரல்ஸ்’னு ஒரு புரோகிராம் பண்ணுவாங்க. என் நண்பர் மார்ஷல் எல்லா புலிகள் பத்தியும் பண்ணுவோம்னு சொன்னார். அந்தப் படத்தில் நானே எல்லா பணிகளையும் செய்தேன். புலி, சிறுத்தை, பனிச் சிறுத்தை பற்றி எடுத்தோம். ‘கிரேட் கேட்ஸ் ஆஃப் இந்தியா’னு யூடியூப்ல போட்டால் இப்பவும் அந்த வீடியோ வரும்...’’ என்கிறவர் இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

‘‘இதுல எனக்கு உதவியாளர்கள்னு சிலர் இருக்காங்க. ‘96’ படம் இயக்கிய பிரேம்குமார் முன்னாடி எனக்கு உதவியாளராகப் பணியாற்றியவர்தான். இவர் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’டுக்காக ‘கிங் கோப்ரா’ உள்ளிட்ட இரண்டு ஆவணப்படத்தில் வேலை செய்தார். மத்தியப்பிரதேசம் பந்தாவ்கர் காட்டில் நடந்த படப்பிடிப்பிலும் இருந்தார். பிரேம்குமாருக்கு வைல்டு லைஃப்ல ரொம்ப ஆர்வம். ‘96’ படத்துல விஜய்சேதுபதி வைல்டு லைஃப் போட்டோகிராஃபராக வருவார்.

அடுத்து, மும்பையில் அர்ச்சனானு ஒரு உதவியாளர் இருக்காங்க. அப்புறம் தேவராஜன்னு ஒரு உதவியாளர் இருக்கார். இவர் காட்டைப் பற்றி நன்கு தெரிந்தவர்.  
இதுல நம் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றியும் சொல்லியாகணும். ஏன்னா, தனித்துவமான விஷயங்கள் நிறைய இருக்கிற மலை அது. இயற்கை வளங்கள் நிறைந்த மலைத்தொடர்ச்சி. பல்வேறு வகையான அரிதான விலங்குகள் உள்ள இடமும்கூட.

உதாரணத்திற்கு, மேற்குத்தொடர்ச்சி மலையில்தான் சிங்கவால் குரங்கு இருக்கு. உலகத்தில் எங்கேயும் இதைப் பார்க்க முடியாது. ஆனா, நாம் இயற்கை பத்தி கவலைப்படாமல் இருக்கோம். இப்ப பிளாஸ்டிக் மாசு அதிகரிச்சிட்டு இருக்கு. என்ன பண்ணப் போகிறோம்னு தெரியல...’’ என வேதனை தெரிவிப்பவர், சினிமா படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

‘‘2008ல் ‘அமீர்’னு ஒரு இந்திப் படம் பண்ணினேன். அதுல ஹீரோவாக ராஜீவ் கந்தேல்வால் நடிச்சார். அடுத்து ‘குலாப் கேங்’னு ஒரு படம் செய்தேன். இதுல மாதுரிதீட்ஷித், ஜூஹி சாவ்லா நடிச்சாங்க. பிறகு, மராத்தியில் ‘மைகாட்’படம் நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. ஆனந்த் நாராயண் மகாதேவன் இயக்கிய ‘ஸ்டோரி டெல்லர்’ இந்திப் படம் பண்ணியிருக்கேன். இது சத்யஜித்ரேவின் கதை. நடிகை ரேவதி நடிச்சிருக்காங்க. இந்தப் படத்திற்கும் நல்ல பெயர் கிடைச்சிருக்கு.

இப்ப ஆனந்த் நாராயண் மகாதேவன் இயக்கும் ‘த கன்ஃபெஷன்’ படம் முடிச்சிருக்கேன். இதுல நானா படேகர் நடிச்சிருக்கார். இதுவும் நல்லா வந்திருக்கு.எனக்கு உறுதுணையா என் மனைவி ராதா நாராயணன் இருக்காங்க. அவங்களும் ஃபிலிம் மேக்கர்தான். பெண்கள் பத்தி நிறைய குறும்படங்கள் பண்ணியிருக்காங்க. அவங்க சப்போர்ட் இல்லனா நான் இந்தளவுக்கு வந்திருக்க முடியாது. இன்னைக்கு வரை எல்லா குடும்பப் பொறுப்புகளையும் அவங்கதான் பார்த்துக்கிறாங்க.

எனக்கு ஒரு மகள் இருக்காங்க. அவங்க டாக்டராக ஆஸ்திரேலியாவில் இருக்காங்க...’’ என்கிற அல்போன்ஸ் ராய், ‘‘காடு இல்லனா மனிதன் உயிர் வாழ முடியாது. முக்கியமாக சுவாசிக்க காற்று தேவை. அது காட்டிலிருந்தே கிடைக்குது. அதனால் காட்டை அழிக்காதீங்க. அதை உயிர்ப்புடன் வச்சிருக்க வேண்டியது நம் அனைவரின் கடமை...’’ என வேண்டுகோள் வைக்கிறார்.

ஆர்.சந்திரசேகர்