சிவாஜி பேரனா இருந்தும் ஏன் சக்சஸ் ஆகலைனு யோசிச்சிருக்கேன்... துஷ்யந்த் Open Talk



காலத்தால் அழியாத பெருமையை தன் நடிப்பின் வழியாக சம்பாதித்தவர் நடிகர் திலகம் சிவாஜி. அவருடைய பேரன் துஷ்யந்த். ராம்குமாரின் மகன். அன்னை இல்லத்தின் வாரிசாக இருந்தாலும் இவருடைய சினிமா பயணத்தில் பல தடைக்கற்கள். அதையெல்லாம் கடந்து இப்போது ‘தீர்க்கதரிசி’ இவருடைய கம் பேக் படமாக வெளியாகவுள்ளது.

சினிமா குடும்பம் என்பதால் நடிக்க வந்தீர்களா?சிறு வயதிலிருந்தே எனக்கு சினிமா பிடிக்கும். படப்பிடிப்பை வேடிக்கை பார்த்திருக்கிறேன். ஸ்கூல் படிக்கும்போது நடிகராக வேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லை. சிபி, ஆதி, சக்தி, இமான் போன்ற கோலிவுட் பிரபலங்கள் ஸ்கூலில் என்னுடைய ஜூனியர்ஸ். காலேஜ் படிக்கும்போதுதான் சினிமாவில் நடிக்கணும்கிற ஆர்வம் வந்துச்சு.
வீட்ல என்னுடைய விருப்பத்தைச் சொன்னதும் எதுவும் சொல்லலை. ‘நீ ரெடியா இருந்தா பண்ணு’னு சொல்லிட்டாங்க. தயாரிப்பாளர்கள் இசக்கி சுப்பையா, இசக்கி சுந்தர் எங்கள் குடும்ப நண்பர்கள். அவர்கள்தான் நான் நடிக்க முதலில் அப்ரோச் பண்ணினார்கள். நடிக்கணும்னு  நினைத்த சமயத்தில் வந்த வாய்ப்பு அது.

சினிமாவுக்குள் வந்தபிறகுதான் சினிமா எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சது. கலா மாஸ்டரின் தங்கச்சி புவனா, ஸ்டண்ட் மாஸ்டர் ஆக்‌ஷன் பிரகாஷ், ஃபிலிம் இன்ஸ்டிடியூட் அருணாச்சலம் ஆகியோரிடம் சினிமாவுக்கான அடிப்படைகளைக் கத்துக்கிட்டேன். முதல் படம் ‘சக்சஸ்’ முடிவதற்குள் இரண்டாவது படம் ‘மச்சி’ வாய்ப்பு வந்துச்சு. முதல் படம் சரியா போகலை. ‘மச்சி’ படம் பார்த்தவங்க முதல் படத்தைவிட பரவாயில்லைனு  சொன்னாங்க. நீங்கள் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் கடந்துவிட்டது. ஆனா, விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள்தான் செய்துள்ளீர்கள்..?

என்னுடைய ஆரம்ப படங்கள் திருப்தியளிக்காததால்தான் நான் பிரேக் எடுத்தேன். அமெரிக்காவில் ஆக்டிங் கோர்ஸ் முடித்து இந்தியா திரும்பியதும் நாங்கள் ரஜினி சாரின் ‘சந்திரமுகி’ தயாரிச்சோம். எங்கள் குடும்பத்துக்கு ரஜினி சார் கொடுத்த வாய்ப்பு அது. தயாரிப்பு நுணுக்கங்களை கற்றுக்கொள்ள அதைவிட வேறு வாய்ப்பு கிடைக்காது என்று அதில் முழுமையாக இறங்கினேன். அதைத் தொடர்ந்து இந்தியில் ‘டெல்லி ஹைட்ஸ்’ என்ற படம் தயாரிச்சோம். அதன் தயாரிப்பு வேலைகளையும் பார்த்துக்கொண்டேன். அடுத்து, அஜித் சாரின் ‘அசல்’ தயாரிச்சோம். இதற்கிடையே, டிவி சீரியல்ஸ் தயாரிச்சோம்.

தொடர்ந்து புரொடக்‌ஷன் சைட்ல வேலைகள் இருந்ததால் எனக்கு நடிக்க நேரமில்லாத சூழ்நிலை உருவானது.நாங்கள் கூட்டுக் குடும்பம். எங்களுக்கு என்று சில ஃபேமிலி பிசினஸ் இருந்தது. அந்த வேலையையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்துச்சு. இப்போது நடிப்பதற்கான சூழ்நிலைகள் உருவானதால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தலாம்னு முடிவு செய்திருக்கிறேன்.

‘தீர்க்கதரிசி’ வாய்ப்பு எப்படி கிடைத்தது?

‘நெவர் ஆட் ஆர் ஈவன்’ என்ற ரைட்டர் சுஜாதா சாரின் ஸ்டோரியை சமீபத்தில்  இங்கிலீஷ் - தமிழில் ஸ்டேஜ் ஷோ போட்டோம். அப்போது ‘தீர்க்கதரிசி’ தயாரிப்பாளர் தன்னுடைய தயாரிப்பில் நடிக்கணும்னு கேட்டதோடு, கதையையும் சொன்னார். இன்ெவஸ்டிகேஷன் த்ரில்லர் கதை. படத்துல எனக்கு மிக முக்கியமான போலீஸ் ஆபீஸர் கேரக்டர். மீண்டும் நடிக்க முடிவானதுமே சினிமாவுக்காக என்னை தயார் படுத்திக்கொண்டேன். சுந்தர் - மோகன் டைரக்‌ஷன்ல படம் பிரமாதமாக வந்துள்ளது.

சத்யராஜ் உடன் நடித்த அனுபவம் எப்படி?

எங்கள் இருவருக்கும் காம்பினேஷன் இருக்காது. ஆனால், சீனியர், டேலண்ட்டட் ஆர்ட்டிஸ்ட் படத்தில் இருப்பது மகிழ்ச்சி. என்னுடைய கம் பேக் படத்தில் சத்யராஜ் சார்  நடிச்சது பெருமை. அஜ்மல், ஜெய்வந்த், மன் என  எல்லோருடனும் சேர்ந்து நடிச்சது பெரிய அனுபவம். நான் நடிக்க வந்ததில் யூனிட்ல உள்ள எல்லோருக்கும் பெரிய சந்தோஷம்.ஒரு வட்டத்துக்குள் இல்லாம வித்தியாசமான வேடங்கள் பண்ணணும்னு முடிவு செய்திருக்கேன். ஹீரோ என்றில்லாமல், வில்லன், சப்போர்ட்டிங் ரோல் பண்ணவும் ரெடியா இருக்கிறேன்.  

‘சிவாஜி பேரன்’ என்பது பலமா, பலகீனமா?

சிவாஜி பேரன் என்ற அடையாளமே போதும். அதுக்கு மேல ஒரு பலம் இருக்க முடியாது. சிவாஜி பேரன் என்பதை ஆரம்பத்தில் பலகீனமா நினைச்சதுண்டு. நடிகர் திலகத்தின் பேரனா இருந்தும் ஏன் நாம சக்சஸ் ஆகலைனு யோசிச்சிருக்கேன். சினிமா மட்டுமல்ல, எந்த துறையிலும் தலைமுறை தலைமுறையாக ஒரே துறையில் இயங்கும்போது ஒப்பீடு நடக்கும். அது எனக்கும் நடந்தது.

இப்போதுள்ள ஆடியன்ஸ் தெளிவாக இருக்கிறார்கள். எந்தெந்த நடிகர்களிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை தெரிந்து வைத்துள்ளார்கள். தாத்தா, சித்தப்பா பிரபு ஆகியோரின் பின்புலத்தை பலமாக பார்க்கிறேன். அதுல பலகீனம் இருப்பதாகத் தெரியலை.

சிவாஜியிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

நேரம் தவறாமை. படப்பிடிப் புத் தளத்துக்கு நடிகராக இருந்தாலும் சரி, தயாரிப்பாளராக இருந்தாலும் சரி முதல் நபராக இருக்கணும் என்பதை தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்டேன். சுய கட்டுப்பாடு, பழகும் விதம், எல்லோரிடமும் சமரசமாக பழகுவது இதெல்லாம் தாத்தாவிடம் கற்றது.

உங்களுடைய வளர்ச்சிக்கு பிரபு, விக்ரம் பிரபு என குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கிறதா?

நான் எதைச் செய்தாலும் முதல் ஆதரவு சித்தப்பாவிடமிருந்துதான் வரும். நான் நடிக்க வந்தபோது என்னுடைய அப்பா ராம்குமார் அருகில் இருந்து செய்ததைவிட சித்தப்பாதான் அதிகம் இருந்தார். பூஜை, முதல் நாள் படப்பிடிப்பு சமயங்களில் சித்தப்பா என் கூடவே இருந்தார். அந்த சமயத்துல அப்பா வெளியூரில் இருந்தார். நான் தயாரிப்புல இறங்கியபோதும் பரிபூரணமாக ஆசீர்வாதம் பண்ணினார். மீண்டும் நடிக்கப் போறேன்னு சொன்னதும் நல்லா பண்ணுனு ஆசீர்வாதம் பண்ணினார்.

ரஜினி, அஜித்தை வைத்து படம் தயாரித்துள்ளீர்கள். விஜய் படம் எப்போது?

நாங்கள் ரெடி. விஜய் சாரிடமிருந்து அழைப்பு வரும்னு நம்பிக்கை இருக்கிறது. காலம் கனியும்போது விஜய் சார் படம் தயாரிப்போம்.

ரஜினி, அஜித்துடன் பழகிய  அனுபவம் எப்படி?
‘பாபா’வுக்குப் பின்னர் 3 வருட இடைவெளிக்குப் பிறகு ரஜினி சார் நடிச்ச படம் ‘சந்திரமுகி’. அந்தப் படத்தோட லுக் டெஸ்ட்டுக்காக வாசு சாரும், நானும் ரஜினி சார் வீட்டுக்குப் போனோம். ஜீன்ஸ் பேண்ட்,  டீஷர்ட் காஸ்டியூம்ல வர்ற மாதிரி அறிமுக காட்சி. அப்போது டி ஷர்ட்டின் ஒரு பகுதிபேண்டுக்குள் இருக்கிற மாதிரியும் ஒரு பகுதி பேண்ட் வெளியே இருக்கும் மாதிரியும் ஐடியா சொன்னேன். அது நடந்து 3 மாதத்துக்குப் பிறகு படப்பிடிப்பு நடந்துச்சு.

முதல் நாள் படப்பிடிப்புல ரஜினி சார் என்னை அழைப்பதாக அவருடைய உதவியாளர் சொன்னார். ரஜினி சாரை சந்திச்சதும், காஸ்டியூம் ஓகேவானு கேட்டார். 3 மாசத்துக்கு முன் நான் சொன்னதை ஞாபகம் வைத்து காஸ்டியூம் பண்ணியிருந்தார். அப்படி அடுத்தவர்கள் சொல்லும் சஜஷனையும் கவனிக்க வேண்டும் என்பதை ரஜினி சாரிடமிருந்து கத்துக்கிட்டேன்.

அஜித் சாருடன் ‘அசல்’ படத்தில் பழகியதை மறக்க முடியாது. சொந்த தம்பி மாதிரி ட்ரீட் பண்ணினார். அந்த சமயத்துல  நானும் அஜித் சாரும் தினமும்  ரன்னிங் போவோம். படப்பிடிப்பு சமயத்துல சகோதரனாக நினைத்து நிறைய அட்வைஸ்  பண்ணினார்.

‘மீன்குழம்பும் மண்பானையும்’ படத்தை சொந்தமாக தயாரித்தீர்கள். அதன் பிறகு என்ன படம் செய்தீர்கள்?

நானும் என் மனைவியும் சேர்ந்து ‘ஈஷான் புரொடக்‌ஷன்’ என்ற கம்பெனியை ஆரம்பிச்ச பிறகு தயாரிச்ச முதல் படம் அது. அந்தப் படம் சித்தப்பாவின் 200வது படம். ஜெயராம் சாரின் மகன் காளிதாஸை அறிமுகம் செய்தோம். நாங்கள் ரெக்வஸ்ட் பண்ணியதால் கமல் சார் கெஸ்ட் ரோல் பண்ணிக் கொடுத்தார். இப்போது எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் நடிக்கும் ‘ஜெகஜாலக் கில்லாடி’ தயாரித்துள்ளோம்.  

சமீபத்துல நீங்கள் மெண்டல் ஹெல்த் பற்றி ஆலோசனை வழங்கி வருவதாக செய்திகள் வந்ததே..?

2019ல் டிப்ரஷன்ல இருந்தேன். வெற்றிகரமாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன். முன்பு இருந்ததைவிட இப்போது இரு மடங்கு மனோ பலத்துடன் இருக்கிறேன். சிவாஜி குடும்பத்திலிருந்து வந்ததாலும், குடும்ப உறவுகளின் அரவணைப்பு இருந்ததாலும் பல மருத்துவர்களின் உதவியால் என்னால் அதிலிருந்து மீள முடிந்தது.

எனக்கு இருக்கும் இந்த பின்னணி பலருக்கு இருக்காது. இந்த மாதிரி பிரச்னையில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கும்.  நம்ம ஊர்ல இந்த மாதிரி பிரச்னைகள் இருப்பவர்கள் வெளிப்படையாக தங்கள் சிக்கல்களை சொல்ல முன்வருவதில்லை.

மனசுக்குள்ளேயே ஒரு விஷயத்தைப் பூட்டி வைத்தால் அது ஒரு நாள் பெரியளவில் வெடிக்கும். அதுக்கு இடம் தரக்கூடாது. எல்லோருக்கும் டென்ஷன், ப்ரஷ்ஷர் இருக்கிறது. என் அனுபவத்துல நான் கத்துக்கிட்டது, ஸ்ட்ரெஸ் இருந்தால் உடனே அதைப் பற்றி பேசணும். டாக்டரிடம்தான் பேசணும்னு இல்ல. மனைவி, நண்பர்கள் என யாரிடமாவது அந்த மனஅழுத்தத்தைப் பற்றி பேசவேண்டும்.

மற்றவர்களிடம் பேசி என்ன நடக்கப் போகிறது என்று யோசிக்கலாம். பிறர் சொல்லும் எந்த ஒரு ஆலோசனையும் நம்மை நேர்மறையாக சிந்திக்க வைக்க உதவும். இல்லையென்றால் மனநல மருத்துவரை சந்திக்கலாம். சைக்காலஜி ட்ரீட்மெண்ட் தருகிறவர்களை மென்ட்டல் டாக்டராகத்தான் பார்க்கிறார்கள். அந்த பார்வை தவறு. அந்தவகையில் நம்முடைய மனநலம் பாதிக்கப்படும்போது சைக்காலஜி வல்லுநர்களை சந்திப்பதில் எந்தவித தவறும் இல்லை.

நான் போகும் இடங்களில் டாக்டர்களிடம் வெளிப்படையாக மனம் திறந்து பேசுங்கள் என்று சொல்லிவருகிறேன். நான் பேசும் கூட்டங்களில் மோட்டிவேட் பண்ண வரவில்லை என்பதைத் தெரிவித்துவிட்டு, நான் எப்படி டிப்ரஷன்ல இருந்து வெளியே வந்தேன் என்பதைச் சொல்லி வருகிறேன்.

அன்னை இல்லத்துக்கு பல முதல்வர்கள் வந்துள்ளார்கள். அந்த நினைவுகள் பற்றி சொல்ல முடியுமா?

இப்போதுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல முதல்வர்கள் அன்னை இல்லத்துக்கு வந்துள்ளார்கள். ரஜினி சார், கமல் சார் உட்பட பல மொழி சூப்பர் ஸ்டார்ஸ் வீட்டுக்கு வந்துள்ளார்கள்.

அப்போதெல்லாம் ஒரு ரசிகனின் மனநிலைதான் இருக்கும்.‘சக்சஸ்’ எடுக்கும்போது கலைஞர் ஐயாவை சந்திக்கப் போனோம். அப்போது ஒரு வாழ்த்துக் கடிதம் கொடுத்து அதில் எழுதியிருந்ததை படிக்கச் சொன்னார். ‘என் ஆசை பேரன் துஷயந்த்துக்கு வாழ்த்துகள்’ என்று இருந்தது.

‘உன் தாத்தா சிவாஜி பேசிய முதல் வசனம் நான் எழுதியது. அதே மாதிரி நீ பேசிய இந்த வசனமும் நான் எழுதியது’னு வாழ்த்தினார். அது மறக்க முடியாதது. ஜெயலலிதா அம்மா என்னுடைய கல்யாணப் பரிசாக வெள்ளி குத்துவிளக்கு கொடுத்தார்.

உங்க குடும்பத்தைப் பற்றி சொல்லுங்க?மனைவி அபிராமி. காஸ்டியும் டிசைனர். புரொடக்‌ஷனிலும் எனக்கு உதவியாக இருக்கிறார். இப்போது ‘ஹானஸ்ட் பேட்ஸ்’ நாப்கின் தயாரிப்புல இருக்காங்க. மகன்கள் ஈஷான், வீர்.   

செய்தி: எஸ்.ராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்