சிறுகதை - மாயவன் விடுத்த அம்பு



வேகு, வேகென்று நடந்தான் தலையூர்க்காளி. கூடவே நாலு கால் பாய்ச்சலில் வேட்டையன். வேட்டையன் வேகம் தலையூர்க்காளியின் வேகத்திற்கு ஈடானதாக இல்லை. நெடு, நெடு கால்கள். அப்படியொரு வேகம். விம்மிப் புடைக்குது கெண்டைக்கால் தசைகள். பின் மண்டையில் சுருட்டிக் கட்டிய குடுமியின் குலுக்கம்.
பருத்து அகண்ட மீசைக்குக் கீழே ஓயாத துடிப்பு. பருத்த புஜங்கள். அகண்ட மார்பு. கழுத்தில் மினுங்கித் துவளும் பொற்சங்கிலி. புலிப்பல் பதக்கம். காற்றில் அலையாடும் நீண்ட அங்கி. வலக்கையில் மினுங்கும் தண்டேறி. வீசியெறிந்தால் ஒரேமுட்டாய் ஏழுபேரை துளைத்து எட்டாம் ஆளை பதம் பார்த்துவிடும் கூர்மை. இவனின் நடை மனிதப் பாய்ச்சல் அல்ல, வேங்கையின் பாய்ச்சல்.

ஏன் அப்படி நடந்தது? எது தன்னை பழி பாவத்திற்கு ஆளாக்கியது? செல்லாத்தாக் கவுண்டனின் வம்சாவளி மாந்தியப்பன் செய்த சூதா? எனக்கு நானே இட்டுக் கொண்ட முன்னை இட்ட தீயா? கடவுள் நிந்தனை எவ்வளவு பெரிய தண்டனை. அதைவிட வீரனுக்கு அழகு புறமுதுகிடல் அல்ல. உரு மாற்றி மறைந்திருந்து அம்பெய்வது மாயவனுக்கு அழகா? தன்னைத் தானே மாய்த்துக்கொள்வது வீரனுக்கு அழகா? ஆயிரமாயிரமாய் கேள்விகள். மனக்கண்ணில் நீண்டு நெளியும் காட்சி பிம்பங்கள். சாதாரண காட்சியல்ல, படுகளக் காட்சி.

ஆயிரமாயிரம் வீரர்கள் குத்துப்பட்டுக் கிடக்கிறார்கள். ஒரு நூறு வீரர்கள் தலை சீவி முண்டம் வேறு, தலை வேறாகக் கிடக்கிறார்கள். வீரப்பூர் காடெங்கும் உயிர்வதை முனகல். ரத்த வாடை. உயரே பறக்கும் மலக்கழுகுகள். ‘சப்ப சாடா அத்தனையும் அழிச்சிட்டோம்!’ கொக்கறிக்கின்றன தலையூரான் படைகள். ‘வென்றுவிட்டோம் ராஜா. வென்றுவிட்டோம். ஆனந்தமாய் ஆடுவோம். பரவசமாய் ஆடுவோம்!’ என்றெல்லாம் கெக்களிப்புகள்.

எப்படி அவர்களால் முடிகிறது?

தன் தந்தையை, தன் தனயனை இன்னபிற உறவுகளெல்லாம் படுகளத்தில் மாண்டு கிடக்க, வெற்றிக் களிப்பில்,அந்த துக்கங்கள் காணாது போய்க் கொண்டாடுவது எப்படி?
ஒரே ஒரு கணம்தான் அந்த எண்ணம். மனக்கண் முன்னே அவர்கள் தோன்றுகிறார்கள். அண்ணன்மார். பொன்னர் கண்களில் சீற்றம். சங்கர் கண்களில் சாந்தம். இருவர் கண்களிலும் சில நேரங்களில் மட்டும் சுடர் விடும் சாந்தம். அதில் வெளிப்படும் தெய்வீகம். அதை கடைசி, கடைசியாய் பார்த்தபோதுதான் தலையூர்க்காளியே உணர்ந்தான்.

அது ஏன் ஆதியிலேயே எனக்குத் தெரியாமல் போனது? தெரிந்திருந்தால் இந்தப் போர் நடந்திருக்குமா? கலங்காத தன் நெஞ்சு கலங்கியிருக்குமா? ‘ஓ... தெய்வமே!’ என்றல்லவா அவர்களுடன் ஆரத்தழுவியிருப்பான்.என்ன செய்து விட்டேன் நான். தன் துயரத்தை குடிபடைகளிடம் காட்டுவதில் என்ன இருக்கிறது.

யாரங்கே என்று சேனைத் தளபதிக்கு உத்தரவிட்டான். ‘உடனே நம் படைகள் நாடு திரும்பக் கடவது!’ என்று உத்தரவிட்டான். கூடவே, ‘எக்காரணம் கொண்டும் இந்த வெற்றியை வெற்றியாகக் கொண்டாடக்கூடாது. துக்க நாளாக அனுஷ்டியுங்கள். காளி தேவிக்கு பூஜை செய்யுங்கள். பாவ மன்னிப்பு கோருங்கள்!’ என்கிறான்.

தளபதிக்கும், சேனைப் படைகளுக்கும் குழப்பமோ குழப்பம். வெற்றியின் விளிம்பில் நின்று மாவீரன் தலையூர்க்காளி எப்போதுமே இப்படிச் செப்பினான் இல்லை. அவர்கள் மருண்டு நின்ற வேளையிலே தனியனாய், தன்னந்தனியனாய் புறப்பட்டு விட்டான்.

நடந்தான். நடந்து கொண்டே இருந்தான். எத்தனை காதம் புலப்படவில்லை. வேட்டையன் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு விடும் மூச்சு மட்டும் அந்த கானக வெளியில் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது. திரும்பின பக்கமெல்லாம் பெரும்பாறை. எப்பக்கமும்  ரத்தவாடை இல்லை. பிணங்கள் இல்லை. தலை, முண்டங்கள் இல்லை. குற்றுயிராய் முக்கி முனகும் முனகல்கள் இல்லை.எப்படியான காட்சிகள் அவை? திரும்பத் திரும்ப அவை கண்முன்னே விரிகின்றன.

போருக்கு வந்த தலையூரான் படைகளை எல்லாம் வளநாட்டுப் படை சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் புலிபோல் பாய்ந்து பாய்ந்து ஒரு கையில் வாளும், மறுகையில் தண்டேறியுமாய் சுழற்றும் வீரன் சின்ன அண்ணன் சங்கரன். இவனை இந்த இடத்தில் விடக் கூடாது. விட்டால் நம் படை நாசமாகும். நம் நாடு நிர்மூலமாகும். கருவும் மனம். அவனைக் கருவறுக்கப் பாய்கிறது. இதோ தண்டேறியை ஒரு சுழற்று சுழற்றி விட்டான். சுழற்சிக்கு ஏற்ற வேகம் கைப்பிடிக்குள் பாய்ந்து விட்டது. இனி எறிவதுதான் பாக்கி.

அதற்குள் அதோ பறந்து வருகிறது ஓர் அம்பு. சங்கரனின் நெற்றியில் பாய்கிறது. ‘நங்’ஙென்று சிறு காயம் ஏற்படுத்தி அந்த அம்பு முனைமுறிந்து கீழே விழுகிறது. சங்கரன் வீரனல்லவா? பார்த்தான். தன் மீது, அதுவும் நெற்றியைக் குறிபார்த்து அம்பு எய்தவன் யார்? தன்னைத் தாக்கிய அம்பினைப் பார்க்கிறான். அது வந்த திசையையும் நோக்குகிறான். அவன் தலையூர்க்காளி. இல்லை அக்கண நேரமே காட்சி தந்தவன் தலையூர்க்காளியல்ல; மாயவன்தான். நினைக்கும் நேரம் கூட இல்லை. மறைந்தும் போகிறான்.

அந்தக் காட்சியை அசலான தலையூர்க்காளியும் மறைந்திருந்து காண்கிறான். அங்கேயும் தலையூர்க்காளி. ஆம். இங்கேயும் அங்கேயும் தலையூர்க்காளி.இந்த அசலான தலையூர்க்காளியை சங்கரன் கவனிக்கவில்லை. தன்மீது விழுந்த அம்பு சாதாரணன் விட்டதல்ல; அதை எறிந்தவன் தலையூர்க்காளியுமல்ல என்பதை உணர்ந்து விட்டான். அது மாயவன் விடுத்த அம்பு.

‘அம்புபடா மேனி அம்பு பட்டுப் போனதே. விண்ணப்படா மேனி விண்ணப்பட்டுப் போனதே!’ என துயருறுகிறான். ‘மாயவனே நீயா? நான் வாழத்தகுதியற்றவன் என்று உரைக்காமல் உரைத்து விட்டாயா? நெற்றியில் அம்புக்காயம் வீரனுக்கு அழகா? அதுவும் நீ எய்த அம்பில் பிழைத்து திரும்ப வேலேந்தலாமா?’ அவன் வருத்தக் குரல் காடேகி நிற்கிறது.

தன் இடுப்புப் பட்டாடையை பாறையில் விரிக்கிறான். வடக்கு முகம் பார்த்து அமர்கிறான். தோளில் கிடந்த அம்புக்கூட்டிலிருந்து ஓர் அம்பை உருவி எடுக்கிறான். கண்ணிமைக்கும் நேரம்தான் முன்னிறுத்திச் சுழற்றி எறியும் அம்பு பம்பரமாய். அவன் முன் சில கஜமே சென்று திரும்பி இவன் கழுத்தை துளைக்க உயிர் விடுகிறான்.அடுத்து ஒரு குதிரையின் குழம்போசை. சங்கரின் அண்ணர் பொன்னரும் வந்து விட்டானோ? அடுத்து  என்ன நடக்கப் போகிறது. குகை மறைவு காளிக்கு அடைக்கலம் தருகிறது.

வந்தவன் வீரபாகு. வளநாட்டுக் குலக்கொழுந்துகளின் தீராத விசுவாசி. சங்கரின் உடல் பார்த்துப் பொங்கும் அவன், விம்மி விம்மி தம் கை, தவில் முரசை அறைகிறான். காடெங்கும் அதன் ஓசை பிளக்கிறது. முரசம் முழக்கியவன், அடுத்து ஒரு கூரிய நெடுவாளை தரையிலே ஊன்றுகிறான். உந்தின உந்தலில் ஜிவ்வென்று உயரே பறக்கும் உடல், தலைகீழாய் நெடுவாளின் மீது விழுந்து ரத்தசாந்தி அடைகிறது.

அதோ அடுத்தும் ஓர் அதகளக்காட்சி.வெள்ளாங்குலத்து ஏரியில் செம்பகுலத்தானுக்கு கொடுத்த சத்தியவாக்கை நிறைவேற்ற உட்குமிழி புகுந்து புறக்குமிழி வந்த பொன்னருக்கு வீரபாகுவின்
முரசொலி கேட்டுவிட்டது.‘சங்கருக்கு ஆபத்து. இந்த செம்பகுலத்தான் மாந்தியப்பன் தந்த சூதோடுதான் வந்திருக்கிறான். தன்னை உட்குமிழி புகுந்து புறக்குமிழி வரச் சொல்லியிருக்கிறான்’ என்றுணர்ந்து மந்திரவாளை  வீசுகிறான்.அதோ செம்பகுலத்தான் தலை துண்டமாகி குளத்து நீரை சிவப்பாக்குகிறது.

அதே கணம். அதே வேகம். வாயுவேகம், மனோ வேகம். குதிரையில் பாய்ந்து வரும் பொன்னர். காட்டானை பலம். எதிர்ப்படும் தலையூரானின் படைகள் எல்லாம் நிர்மூலமாகிறது. அத்தனையும் சீவி, சீவி படுகளமாக்கி விட்டு, தம்பியின் உடல் முன்னே அமர்ந்து கதறுகிறான்.கதறுவது வீரர்களுக்கு அழகல்ல. தம்பி போலவே வடக்கிருக்கிறான். தம் அம்பைத் தானே விட்டெறிகிறான். அதுவும் நேர்போய் பின் வந்து இவன் நெஞ்சையும் துளைக்கிறது. நெஞ்சில் ஏந்திய அம்பு வீர மரணம்.பொன்னர் சங்கர் படுகளத்தில் மாண்டு விட்டனர். அருக்காணித்தங்கம் சொப்பனம் கண்டு காடேகி ஓடி வருகிறாள்.

அவளின் அழுகையில் கரைந்து காட்டிலிருந்து மந்தி, வேங்கை, பாம்பு, விலங்கினங்கள், பட்சியினங்கள் எல்லாம் கரைந்து அவளுடனே பயணிக்கின்றன.இத்தனையும் மறைந்திருந்து பார்த்தான் தலையூர்க்காளி. அதற்கு மேலும் தாங்க சக்தியில்லை. வேக நடையெடுக்கிறான். நிழலாய் மனதில் துரத்தும் அருக்காணித் தங்கம்.

அவள் தன் தங்கை வீர தங்காளாகவே புலனாகிறாள். இதோ ஏழடி தேகம் குலுங்குகிறது. கண்கள் சிவக்கிறது. அழுகை வெடிக்கிறது.‘‘என்ன செய்து விட்டேன்!’’ தேம்பி அழுகிறான் மாவீரன் தலையூர்க்காளி.சின்ன வயசில் இரட்டை வேங்கைப் புலிகளை ஒற்றையாளாய் நின்று கொன்ற மாவீரன். பதின்ம வயதில் எனக்கு ஒரு படைகொடு என்று தந்தையிடம் கேட்டுப் பெற்று அண்டை நாட்டானுடன் சண்டையிட்டு வென்ற சூராதி சூரன். இங்கே தேம்பித் தேம்பிக் கதறுகிறான்.

இது நமக்கான வெற்றியல்ல. மறைந்திருந்து அம்பெய்த மாயவனுக்கான வெற்றி. தனக்குத்தானே தன்னைப் பலியிட்டுக் கொண்ட சங்கரனுக்கான வீரம். அவனோடு படுகளம் கண்ட பொன்னருக்கான பெருமை. தனக்கோ இது அபகீர்த்தி. கோழைத்தனம். அவமானம். பேரவமானம்.‘ஓ... தலையூர் காளி... நித்தம் நித்தம் உன்னை பூஜித்தேனே. எனக்கா இப்படியொரு துன்பம்!’தன் இஷ்ட தெய்வம் காளி முன் சரணடைகிறான். அகோர காளி. எண்கரம் வீசி கோரநாக்குத் தள்ளி அருள்பாலிக்கிறாள். அவள் சிரசுக்குப் பின்னே சுடர் விடும் ஒளிவட்டம் மெல்ல மெல்ல பெரிதாகி காட்சிகள் விரிகின்றன.

காட்டிலிருந்த தன் தங்கை வீரதங்காளின் செல்லக் கிளிக்கு பொன்னர் சங்கரின் தங்கை அருக்காணித் தங்கம் ஆசைப்பட்டது. அதை தன் பார்வைக்குப் படாமல் அண்ணன்மார்கள் பிடித்துச் சென்று தங்கைக்கு கொடுத்தது. அதனால் மூண்ட பகை. வளநாட்டின் மீது, தான் படையெடுத்தது. அந்நாட்டை சூறையாடி, குப்பாயியை சிறையெடுத்து வந்தது. தன்குடிப் பெண்ணின் அழுகுரலுக்கு பொங்கியெழுந்து படை திரட்டி வந்த பொன்னர் சங்கர். எல்லைக்காப்பான் எழுபதடிக் கொம்பனை வீழ்த்தினது. ‘தலையூர்க்காளிக்கு அபயம்’ என கூவிய அதன் கூவல்...எல்லாமே காட்சி பிம்பமாய் எழுகிறது.

எல்லாமே செல்லாத்தாக்கவுண்டன் வாரிசு மாந்தியப்பன் செய்த சூது. பங்காளி சண்டைக்கு தன்னைப் பழியாக்கி விட்டார்கள். ராமர் லட்சுமணருக்கு மாயமான். பாண்டவர் சூழ்ச்சிக்கு சகுனி மாமா. இந்த தலையூர்க்காளிக்கு மாந்தியப்பன். இதுதான் மாயவன் இட்ட வரமோ?மறைந்து நின்று வாலியைக் கொன்றது போல, அண்ணன்மாரைக் கொன்று என் மீது பழி தீர்த்துக் கொண்ட லாவகமோ? பாவம் ஒரு பக்கம்; பழி வேறொரு பக்கம்.புரியாத புதிருக்கு விடை சொல்கிற மாதிரி இவன் முன்னே திடீரென பிரசன்னமான நான்கு உருவங்கள். ஆம்; அவர்கள் சாட்சாத் பொன்னர், சங்கர், அருக்காணித் தங்கம், கூடவே வீரபாகு. படுகளத்தில் மாண்டவர்கள் எப்படி உயிர்த்தெழுந்தார்கள்?

அவன் மனத்திரையில் எழுந்த கேள்வியை புரிந்து கொண்டாள் அருக்காணி.பெரியகாண்டியம்மன் தன்னையும், தன் சகோதரர்களையும் தீர்த்தம் தெளித்து உயிர்த்தெழ வைத்த கதை சொல்லுகிறாள். உடுக்கடி சத்தம் எழுகிறது. காடேகி உடுக்கை சத்தம் தவிர ஏதுமில்லை.தலையூர்க் காளிக்கு ஏதோ புரிந்தது போல இருந்தது. காளிதேவியின் பாதம் வணங்கி  எழுந்து நடந்தான். அவன் பின்னே வாலாட்டியபடி நடந்தான் வேட்டையன். அவனை முன்னிட்டு பின்னாக உடுக்கை ஒலி இன்னும் கூடுதல் ஓசையுடன் இடி, இடியென கேட்டுக் கொண்டே இருந்தது.

- கா.சு.வேலாயுதன்