11 ஆயிரம் ஹெக்டேரில் பால் பண்ணை! கோடி கோடியாக சம்பாதிக்கும் சகோதரர்கள்
ஆஸ்திரேலியாவின் முதல் ஐம்பது பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் விவசாயிகள் என்ற பெருமையைத் தன்வசமாக்கியிருக்கின்றனர் டோனி பெரிச் மற்றும் ரொன் பெரிச் எனும் சகோதரர்கள். சிட்னி நகரத்தில் உள்ள ஒவ்வொரு வீடும் இவர்களது நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்களைத்தான் அதிகமாக நுகர்கிறது. பால் பண்ணை மூலமாகவும் கோடிகளைக் குவிக்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது இவர்களது வெற்றிக்கதை.

இரண்டாம் உலகப்போரின் தாக்கம் அதில் பங்கேற்ற நாடுகளை மட்டுமல்லாமல் உலகையே வெகுவாக பாதித்திருந்தது. போர் முடிந்த பிறகும் கூட பல நாடுகளில் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகரவில்லை. வேலை வாய்ப்புகளும் பெரிதாக உருவாகவில்லை. அனைத்தையும் புதிதாகத் தொடங்க வேண்டிய நிலை.
 இப்படியான சூழலில் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரமான சிட்னியின் புறநகர்ப் பகுதியான லெப்பிங்டனில் வசித்து வந்தனர் கொலாம்போவும், ஜூலியா பெரிச்சும். ஓரளவுக்கு வசதி படைத்த தம்பதியினர் இவர்கள். அதனால் மற்றவர்களிடம் வேலைக்குச் செல்லாமல் புதிதாக பிசினஸ் தொடங்குவதற்கான எல்லா வாய்ப்புகளும் அவர்களுக்கு இருந்தன. 1950களில் ஐரோப்பாவிலிருந்து ஹால்ஸ்டீன் ரக மாடுகள் அதிகமாக ஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்பட்டன.பணம் வைத்திருந்தவர்கள் எல்லோரும் ஹால்ஸ்டீன் ரக மாட்டில் முதலீடு செய்தனர். அப்படி முதலீடு செய்தவர்களில் ஒருவர்தான் கொலாம்போ. லெப்பிங்டன் பகுதியில் 1951ம் வருடம் 25 ஹால்ஸ்டீன் ரக மாடுகளுடன் ஒரு பால் பண்ணையை ஆரம்பித்தார் கொலாம்போ. 100 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மேய்ச்சல் நிலத்தில் அமைக்கப்பட்டது இந்தப் பண்ணை.
கொலாம்போவும், ஜூலியாவும் சேர்ந்து பண்ணையைப் பார்த்துக்கொண்டனர். இருவரும் சேர்ந்தே மாடுகளை மேய்த்தனர். பால் கறப்பதற்காக மட்டும் ஒருவர் நியமிக்கப்பட்டார். இத்தம்பதியினருக்கு டோனி பெரிச், ரொன் பெரிச் என்று அடுத்தடுத்து இரண்டு மகன்கள் பிறந்தனர். ஒவ்வொரு மாடும் தினமும் குறைந்தபட்சம் 25 லிட்டர் பால் தந்தன. ஒரு சொட்டு கூட தண்ணீர் கலக்காமல் பாலை விற்பனை செய்தார் கொலாம்போ.
இந்தத் தொழில் நேர்மையை அவரது வாரிசுகளான டோனியும், ரொன்னும் தொடர்கின்றனர். அத்துடன் கால் லிட்டர், அரை லிட்டர், ஒரு லிட்டர் என தேவைப்படும் அளவுகளில் எல்லாம் பாலை விநியோகம் செய்தார் கொலாம்போ. அதனால் லெப்பிங்டன் மட்டுமல்லாமல் அதையொட்டிய எல்லா இடங்களிலும் கொலாம்போவுக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். ஹால்ஸ்டீன் மாடுகளில் முதலீடு செய்த பலர் சரியாக பிசினஸ் செய்ய முடியாமல் திணறினார்கள். வாங்கிய விலைக்கும் குறைவான விலையில் மாடுகளை விற்றனர். அந்த மாடுகளை எல்லாம் தன்வசமாக்கி, பண்ணையைப் பெரிதாக்கினார் கொலாம்போ. சிட்னி நகரிலேயே அவருக்குப் போட்டியாக யாருமே இல்லை என்ற நிலை உருவானது.
டோனியும், ரொன்னும் பள்ளியில் படித்துக்கொண்டே பால் பண்ணையில் தந்தைக்கு உதவியாக இருந்தனர். பால் பண்ணை ஒரு குடும்ப பிசினஸாக பரிணமித்தது. 1963ம் வருடம் பிரின்ஜெல்லி எனும் இடத்தில் 242 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலத்தை வாங்கியது டோனியின் குடும்பம். இந்த நிலம் ஒரு காலத்தில் செம்மறியாட்டுப் பண்ணையாக இருந்தது. இங்கே பால் உற்பத்திக்காக 200 ஹால்ஸ்டீன் ரக மாடுகள் வளர்க்கப்பட்டன.
இவ்வளவு மாடுகளையும் ஒரே கூரைக்குள் பராமரிப்பது கஷ்டம் என்பதால் ஒவ்வொரு 12 மாடுகளுக்கும் தனித்தனி கொட்டகைகள் அமைக்கப்பட்டன. மட்டுமல்ல, அந்த கொட்டகைகளில் ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனியாக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த மாடு வளர்ப்பு முறை ஆஸ்திரேலியாவில் புதிய பாய்ச்சலை உண்டாக்கியது. புதிதாக பால் பண்ணை ஆரம்பிப்பவர்கள் கொலாம்போவின் பண்ணைக்கு வருகை தந்து, மாடு வளர்க்கும் முறையைக் கற்றுக்கொண்டனர்.
மாடுகளின் அடையாளத்துக்காக அதன் கழுத்தில் ஒரு அடையாள அட்டை அணிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாட்டைப் பற்றியுமான தகவல்களும் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டன. இதுபோக பண்ணையில் வேலைக்காக பத்து பேர் சேர்க்கப்பட்டனர். பண்ணையைத் தந்தையுடன் சேர்ந்து டோனியும், ரொன்னும் கவனித்துக்கொண்டனர். எழுபதுகளில் பால் பண்ணை ‘லெப்பிங்டன் பாஸ்டோரல் கம்பெனி’ எனும் உணவு நிறுவனமாகப் பரிணமித்தது.
தந்தை ஓய்வெடுத்துக்கொள்ள, சகோதரர்கள் பிசினஸைக் கவனித்துக்கொண்டனர். 1975ல் 600 ஹெக்டேர் பரப்பளவில் பண்ணை விரிவடைந்தது. மாடுகளின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்தது. தினமும் மூன்று முறை பால் கொடுத்தன மாடுகள்; அதனால் குறைந்தபட்சம் 25 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தியானது.
நேரடியாக பாலை விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல் பால் கூட்டுறவு சங்கங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. பால் சார்ந்த பொருட்களும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. 1980களில் பிரின்ஜெல்லியின் மற்றொரு இடத்தில் 1280 ஹெக்டேர் பரப்பளவில் புதிதாக ஒரு பண்ணை ஆரம்பிக்கப்பட்டது. இங்கே மட்டும் 800 ஹால்ஸ்டீன் மாடுகள் வளர்க்கப்பட்டன.
அடுத்த நாற்பது ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் பால் உற்பத்தியில் யாராலும் நெருங்க முடியாத ஓர் இடத்தை தன்வசமாக்கினார்கள் டோனியும், ரொன்னும். மட்டுமல்ல, ‘லெப்பிங்டனி’ல் கன்றுகளைப் பராமரிக்கும் முறை ரொம்பவே கவனிக்கத்தக்கது. கன்று பிறந்தவுடனே அதன் கழுத்தில் ஒரு எலெக்ட்ரானிக் அட்டை அணிவிக்கப்படும்.
அதில் அந்தக் கன்றுக்குட்டியைப் பற்றிய அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும். தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆன்டிபயாட்டிக் வசதிகொண்ட அறைஒவ்வொரு கன்றுக்குட்டிக்கும் அமைக்கப்பட்டுள்ளது. பத்து நாட்களே ஆன கன்றுக்குட்டிகளுக்கு தினமும் காலையில் 3 லிட்டர், மாலையில் 3 லிட்டர் என 6 லிட்டர் பால்பாட்டில் மூலமாகக் கொடுக்கப்படுகிறது.
இதுபோக கன்றுக்குட்டிகளுக்கு என்று பிரத்யேகமாக இருக்கும் உணவை வழங்க ஆட்டோமேட்டிக் உணவு இயந்திரம் கூட வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று 11000 ஹெக்டேர் பரப்பளவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகளுடன் ஆஸ்திரேலியாவிலேயே மிகப்பெரிய பால் பண்ணைகளில் ஒன்றாக மிளிர்கிறது ‘லெப்பிங்டன் பாஸ்டோரல் கம்பெனி’. டோனி மற்றும் ரொன்னின் வாரிசுகளும் குடும்ப பிசினஸில் ஈடுபட்டு வருகின்றனர்.
தவிர, அமெரிக்காவின் நவீன பால் உற்பத்தி முறைகளை மேற்கொள்ளும் உணவு நிறுவனமாகவும் திகழ்கிறது ‘லெப்பிங்டன்’. பால் பண்ணை மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கின்றனர் டோனியும், ரொன்னும். இச்சகோதரர்களின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 11,700 கோடி ரூபாய்.
த.சக்திவேல்
|