தனக்கென ஒரு நகரத்தை உருவாக்குகிறார்-எலன் மஸ்க்!



உங்கள் கனவு என்ன..? வாடகை வீட்டில் இருந்தால் சொந்த வீடு; சொந்த வீடு இருந்தால் இன்னும் சற்றே வசதியான வாழ்க்கை; நல்ல படிப்பு... கைநிறைய சம்பளத்துடன் வேலை
அல்லது சொந்தமாக ஒரு தொழில்; மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கை... இதுதானே?

நம் கனவு மட்டுமல்ல... அனைவரது கனவும் இதுதான். ஒரு வட்டம் அல்லது அதைவிட பெரிய வட்டம். கனவும் இலக்கும் இதற்குள்தான் சுற்றி வருகின்றன; இவற்றை நிறைவேற்றத்தான் அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்; வாழ்கிறோம்.
ஆனால், எலன் மஸ்க் அப்படியில்லை. எப்படி தொழில் ஆரம்பிப்பது என்பது முதல் மற்ற நிறுவனங்களைக் கையகப்படுத்துவது வரை... செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்ற முற்படும் செயல் உட்பட அவரது கனவுகளும் இலக்கும் வித்தியாசமானவை. இதன் காரணமாகவும் நிறுவன செயல்பாடு களில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்திலும் எப்பொழுதுமே லைம்லைட்டில் இருக்கிறார்.

அப்படித்தான் இப்போது, தான் மேற்கொள்ளும் ஒரு செயலால் சர்வதேச அளவில் பேசு பொருளாகி இருக்கிறார். இதுவும் அவரது கனவில் ஒன்றுதான். ஆனால், வித்தியாசமான ட்ரீம்.
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க், அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் சகட்டு மேனிக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்து வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.இந்தப் பணக்காரர், ஏன் இப்படி வெறி பிடித்தது போல நிலங்களை வாங்குகிறார் தெரியுமா?

தனக்கென சொந்தமாக ஒரு பங்களாவைக் கட்ட அல்ல... மாறாக தனக்கென சொந்தமாக ஒரு நகரத்தை உருவாக்க!ஆம். தனக்கென சொந்தமாக ஒரு நகரத்தையே எலன் மஸ்க் உருவாக்கிக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும், தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் வாழ்வதற்கும், வேலை பார்ப்பதற்கும் இந்த நிலங்களைப் பயன்படுத்த இருப்பதாகவும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை கடந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளதாக சில வலைத்தளங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.

எலன் மஸ்க்கின் நிறுவனம், டெக்ஸாஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டினுக்கு அருகில் சுமார் 3,500 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாகவும், அதற்கு ஸ்நேய்ல்ப்ரூக் (Snailbrook) என பெயர் வைத்திருப்பதாகவும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன.கடந்த பல ஆண்டுகளாக தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் அதிக நேரம் வேலை பார்ப்பதை ஊக்கு
விக்கும் வகையில் பல வசதிகளைச் செய்து கொடுத்து வருகின்றன. அப்படி எலன் மஸ்க், தன் ஊழியர்கள் அதிக நேரம் வேலை பார்ப்பதை ஊக்குவிக்க, தனி நகரத்தை உருவாக்குவதாக சொல்கிறார்கள்.

ஆனால், எலன் மஸ்க் இப்படிச் செய்வது உலகிலேயே முதல்முறை அல்ல. அவருக்கு முன்பும் சிலர் தங்களுக்காக, தங்கள் ஊழியர்களுக்காக ஒரு நகரத்தையே உருவாக்கியிருக்கிறார்கள்.
நமக்குத் தெரிந்த உதாரணம், இந்தியாவில் உள்ள ஜாம்ஷெட்பூர். இந்த நகரத்தைக் குறித்து பத்திரிகைகளிலோ, செய்திகளிலோ படித்திருப்போம்; கேள்விப்பட்டிருப்போம். இந்த நகரத்தை கிட்டத்தட்ட முழுமையாக டாடா குழுமம் நிர்வகித்து வருகிறது அல்லது தன்னுடைய தொழில் தேவைக்காக இந்த நகரத்தை மேலாண்மை செய்கிறது!

அதேபோல ராய் பகதூர் குஜர் மால் மோடி என்பவர், மோடி தொழில் குழுமத்தை நிறுவினார். அவர், கடந்த 1933ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் உள்ள மோதி நகர் என்கிற நகரத்தை நிறுவினார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

அவ்வளவு ஏன்..? ஆரக்கிள் நிறுவனத் தலைவர் ஒருவர் கூட அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒரு முழுத் தீவை விலைக்கு வாங்கி தன் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்து சொகுசு வாழ்க்கையை நடத்துவதாகச் செய்திகள் வெளியானதும், அவருக்கு எதிராக அந்தத் தீவைச் சேர்ந்த மக்கள் குற்றம் சாட்டியதும் செய்திகளில் அடிபடத்தானே செய்தன..?

கடந்த 2020ம் ஆண்டு வாக்கில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமையகத்தையும், தான் வசிக்கும் வீட்டையும் மாற்ற இருப்பதாக எலன் மஸ்க் தெரிவித்திருந்தார் அல்லவா..? சமீபத்தில், டெஸ்லா நிறுவனம் ஒரு மாபெரும் தொழிற்சாலையை டெக்ஸாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரத்தில் கட்டியது அல்லவா..?

இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து கணக்கு சரியாக இருப்பதாகவும்; சரியான விடை கிடைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.அந்த விடைதான் எலன் மஸ்க் தனக்கென உருவாக்கும் புதிய நகரம்! ரைட். இந்த நகரம் எப்படியிருக்கும் என்று கேட்கிறீர்களா? பொறுங்கள். எலன் மஸ்க்கே இன்னும் கொஞ்ச நாளில் அதை விவரிப்பார் அல்லது தெரியப்படுத்துவார்.

ஜான்சி