பரட்டைத் தலை... நிலக்கரி சுரங்கம்... போஸ்டரில் சில்க் ஸ்மிதா...
‘நானி’ஸ் தசரா சீக்ரெட்ஸ்
‘‘நானே என் படத்தை பான் இந்தியா படம்ன்னு சொல்லிக்கக் கூடாது... படம் நல்லா இருந்தா மக்களே பான் இந்தியா படமா மாத்திடுவாங்க...’’ வார்த்தைகளில் தெளிவும், உறுதியும் தெரிய சொல்கிறார் நானி.
 வாரிசுகளும், குடும்ப அரசியலும் பின்னிப் பிணைந்து நடக்கும் தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து போராடி மேலே வந்த நடிகர்களில் நானி முக்கியமானவர். இதன் காரணமாகவே அவர் ‘நேச்சுரல் ஸ்டார்’ எனச் செல்லமாக அழைக்கப்படுகிறார். அவர் நடித்த பல படங்கள் டாக் ஆஃப் த இந்தியா ரகம். ஆர்.ஜே, துணை இயக்குநர், இப்போது நடிகர், தயாரிப்பாளர்... என நானியின் சினிமாப் பயணம் தொடங்கி 15 வருடங்கள் கடந்துவிட்டன.
 ‘வெப்பம்’, ‘நான் ஈ’, ‘ஜெர்ஸி’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ என பக்கத்து மாநில பார்வையாளர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இதோ அடுத்து அறிமுக இயக்குநர் காந்த் ஒடேலா இயக்கத்தில் ‘தசரா’ பட ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறார்.‘வெப்பம்’, ‘ஆஹா கல்யாணம்’ படங்களுக்குப் பிறகு தமிழில் ஆளையே காணோமே?
 நல்ல கதைகள் இருந்தால் மொழிகள் எனக்குத் தடையில்லை. ஆனால், நான் தெலுங்கில் நடிக்கக் கூடிய படங்களே தமிழுக்கும் டப்பாகுற மாதிரி அமைஞ்சிடுது. அதன் காரணமே பெரும்பாலும் தெலுங்கில் படம் செய்கிறேன். ஆனாலும் நல்ல கதை வந்தால் நிச்சயம் நடிக்க ரெடி.
‘தசரா’..?
ஸ்ரீகாந்த் ஒடேலா காகிதத்தில் இந்தக் கதையை எழுதலை. அவர் வாழ்க்கையைக் காகிதத்தில் கொண்டு வந்திருக்கார். கதை சொல்லச் சொல்ல நான் என்னையே மறந்து கேட்டுக்கிட்டு இருந்தேன். இந்தக் கதைக்கு இல்லைன்னா வேறு எந்தக் கதைக்கு அப்படின்னு ஒரு எண்ணம் உண்டாச்சு. ‘தசரா’ பண்டிகை தெலுங்கானாவிலே ரொம்ப பிரபலம்.
ஆந்திராவில்தான் மகர சங்கராந்தி. ஆனால், தெலுங்கானாவில் ‘தசரா’தான் பெரிய பண்டிகை. அந்தப் பண்டிகைக்கு இடையிலேதான் படத்தின் பல முக்கியமான காட்சிகளும், திருப்பங்களும் நிகழும். தசரா பண்டிகைக்கும் படத்துக்கும் முக்கியமான தொடர்பு இருக்கும். தெலுங்கானாவின் உட்கிராமத்துக் களம்தான் கதை. பேச்சு, நடை, உடை, மேக்கப்னு எல்லாமே நான் முழுமையா மாத்திக்க வேண்டியதாயிருந்திச்சு. என்னைக் கருப்பாக்கவே லேயர் லேயரா மேக்கப் போட்டாங்க. அங்கே இருக்க வாழ்வியலை வாழ்ந்து எழுதியிருக்கார் காந்த்.
அறிமுக இயக்குநர்கள் மேலே அப்படி என்ன ஆர்வம்?
கிக். அவங்க கதைகள்ல ஒரு கிக் இருக்கும். முதல் படம் என்கிற மொத்த எதிர்பார்ப்பும், ஆர்வமும் சூழ ஒரு துடிப்போடு இருப்பாங்க. அப்படி கதைகள்ல நடிக்கும் போதுதான் வித்தியாசமான கதையும், கேரக்டரும் கிடைக்கும். ஒரு சம்பவம் சொல்றேன்... முதல் ரெண்டு நாட்கள் என் கேரக்டர்ல நான் ஒட்டவே இல்ல. ஷாட் முடிஞ்சு கால் மேலே கால் போட்டு உட்கார்ந்திருந்தேன்.
ஸ்ரீகாந்த் நேரா வந்து என் பாதத்தைப் பிடிச்சு ‘இந்தப் பாதத்தை முழுசா கீழே வெச்சு நடக்காம இருந்தா எப்படி நடப்பீங்க... அப்படியான பையன்தான் இந்த தரணி. தர லோக்கல், அசால்ட். எதிலேயும் ஒரு பிணைப்பில்லாதவனா தரணி கேரக்டர் வேணும்’னு சொன்னார். இதுதான் அறிமுக இயக்குநர்கிட்ட எனக்குக் கிடைக்கிற ஸ்பெஷல். மீண்டும் கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர ஆறு வருடங்கள் எடுத்துக்கிட்டீங்களே..?
கீர்த்தி எனக்கு குட் ஃபிரெண்ட். அதைவிட கீர்த்தி சுரேஷும் என் மனைவியும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். நானே இல்லன்னாலும் அவங்க வீட்டுக்கு வந்து ஜாலியா நேரம் செலவழிச்சிட்டு போவாங்க. நாங்க சேர்ந்து நடிச்ச முதல் படம் ‘நேனு லோக்கல்’.
அந்தப் படம் மெகா ஹிட். மறுபடியும் ஜோடி சேர்ந்து நடிச்சா அதைவிட நல்ல ப்ராஜெக்ட்டா இருக்கணும்... ஹிட் ஆகணும்னு பேசியிருந்தோம். இதோ இப்ப ‘தசரா’. கீர்த்தி இந்தக் கதைக்கு ஓகே சொன்னது செம காமெடியான தருணம். ‘இந்தக் கதையைக்கேளுங்க நிச்சயமா பிடிக்கும்’னு சொல்லியிருந்தேன். ஸ்ரீகாந்த்கிட்ட, கீர்த்தி 3 மணி நேரம் கதை கேட்டுட்டு ‘இந்தப் படத்தில் நான் நடிக்கல’னு சொன்னாங்க!
‘நிஜமாகவே நீங்க கதை கேட்டீங்களா’னு கேட்டேன். ‘ஆமா கேட்டேன்’னு சொன்னதும் காந்த் போட்டோவை அவர்களுக்கு அனுப்பி ‘இவர் கதை சொன்னாரா’ன்னு கேட்டேன். ‘யெஸ்... யெஸ்... திஸ் கை... எனக்கு மூணு மணி நேரம் கதை சொன்னார்...
ஆனால், எதுவுமே எனக்கு புரியல. அதனால பெருசா எனக்கு ஆர்வம் இல்ல..’னு சொன்னாங்க! ஸ்ரீகாந்த் உட்கிராம தெலங்கானா தெலுங்கு பேசுவார். மேலோட்டமான தெலுங்கு பேசுற மக்களுக்கு புரியாது. அதனால அவரோட ஸ்லாங்கை கேட்டுட்டு இவங்க கதை புரியாத காரணத்தால நடிக்கவும் ஆர்வம் காட்டலை.
விஷயம் புரிஞ்சு மறுபடியும் கீர்த்தி சுரேஷ்கிட்ட ‘ஒரு நல்ல ட்ரான்ஸ்லேட்டர் உதவியோடு இந்தக் கதையைக் கேளுங்க’ன்னு சொன்னேன். அப்படி கேட்டுட்டு அதிர்ந்துட்டாங்க. ‘ஓ மைகாட்... டிரான்ஸ்லேட்டர் இல்லைனா இப்படி ஒரு கதையை மிஸ் செய்திருப்பேன்’னு உடனே ஓகே சொன்னாங்க. சத்யன் சூரியன், சந்தோஷ் நாராயணன்... நிறைய தமிழ் டெக்னீஷியன்களைப் பார்க்க முடியுதே?
இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் படம் முற்றிலும் உட்புறத்து தெலுங்கானா கிராமங்கள்ல நடக்கப் போகிற கதை. அந்தக் கதையில் நம்ம நாட்டுடைய கலாசாரமும், பழங்கால பழக்க வழக்கங்களும் வெளிப்படணும்; இசையிலும், விஷுவலிலும் அது பிரதிபலிக்கணும்னு நினைச்சேன். ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனுடைய முந்தைய படங்களான ‘கைதி’, ‘மாஸ்டர்’ எல்லாம் விஷுவல் ட்ரீட் ரகம். பக்கா ரியலிஸ்டிக்கா இருக்கும்.
சந்தோஷ் நாராயணன் சாருடைய இசை மண் சார்ந்திருக்கும். குறிப்பா ‘கர்ணன்’ படத்தில் அவருடைய இசை ஒப்பிடவே முடியாது. அப்படிப்பட்ட இசையும், விஷுவலும் இந்தப் படத்துக்குத் தேவைப்பட்டுச்சு. அதன் காரணம்தான் சந்தோஷ் நாராயணன் சாரும் சத்யன் சூரியனும். ஸ்டண்ட் கூட அன்பறிவு மற்றும் ரியல் சதீஷ்தான் செய்திருக்காங்க. ‘விக்ரம்’ படத்தினுடைய ஸ்டண்ட் பார்த்துட்டு மிரண்டுட்டேன். கே.என்.விஜயகுமார் தமிழில் வசனங்கள் எழுதியிருக்கார்.சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிச்சுட்டு இப்ப சேர்ந்து நடித்த அனுபவம் எப்படி இருக்கு?
இனிமே அவர் ஆந்திராக்காரர்ன்னுதான் சொல்லணும். அந்த அளவுக்கு இங்கே அவர் செம பிசி. ‘நிமிர்ந்து நில்’ பட தெலுங்கு வெர்ஷனில் அவர் இயக்கத்தில் நான் நடிச்சிருந்தேன். இயக்குநரா அவருடைய வேலையை நேரில் பார்த்தவன். நடிகராக அவரைப் பற்றி நிறைய பேர் பாராட்டியிருக்காங்க. ஆனா, முதல்முறையா இப்பதான் கண்கூடாக நான் பார்த்தேன். எந்தக் காட்சியாக இருந்தாலும் சொடக்கு போடுகிற நேரத்துல செய்துட்டு போயிடுவார். அவர் மட்டும் இல்லாம சாய் குமார், பூர்ணா, தீக்ஷித் ஷெட்டி... இப்படி இன்னும் நிறைய பேர் நடிச்சிருக்காங்க.
போஸ்டரில் சில்க் ஸ்மிதா..?
ஆரம்பத்திலேயே நான் சொன்ன மாதிரி டைரக்டர் ஸ்ரீகாந்த் சின்ன வயதில் அவங்க அப்பா கூட இந்த ஏரியாக்களுக்கு வந்திருக்கார். அப்படி வரும்பொழுது இங்கே ஒரு பார் இருந்திருக்கு. அந்த பாரின் ஹைலைட் சில்க் ஸ்மிதா போஸ்டர்தான். அதனுடைய தாக்கம்தான் போஸ்டரில் சில்க் ஸ்மிதா.படத்தில் நான் சில்க் ஸ்மிதா ரசிகரானு நிறைய பேர் கேட்கறாங்க. ஆக்சுவலி இந்தக் காலகட்டத்தில் இங்கே இருந்த மக்கள் என்னவா இருந்தாங்க, அவங்கள சுத்தி என்னவெல்லாம் இருந்துச்சு; நடந்துச்சு... இதைத்தான் ஸ்ரீகாந்த் மெனக்கெட்டு டிசைன் செய்திருக்கார்.
‘சரக்கு எங்க சம்பிரதாயம்’னு டிரெய்லர்ல வசனம் வருது... உங்களைப் போன்ற இளம் நடிகர்கள் அப்படி பேசும்போது படம் பார்க்கிற இளைஞர்களுக்கு அது தவறான வழிகாட்டுதலா ஆகாதா..?
குடி நல்லது அப்படின்னு எங்கேயும் நான் கோட் பண்ணல. என்னுடைய கேரக்டரே ரெண்டு ஷேட் கலந்துதான் இருக்கும். முதலில் என்னை ஆடியன்ஸ் நல்லவனா பார்க்கணும்; அப்பறம்தான் நான் சொல்கிற கருத்தை அவங்க ஏத்துக்குவாங்க. எனக்குத் தெரிந்து வருஷம் முழுக்க குடிக்காத மக்கள் கூட வீட்டில் ஒரு விசேஷம், ஃபிரெண்ட்ஸ் மீட் என்றால் குடிக்கக்கூடிய பழக்கம் உள்ளவங்களா இருக்காங்க. அப்படிப்பட்ட நபர்களை நானே நிறைய பார்த்திருக்கிறேன். எனில் மது நம்மளுடைய கலாசாரத்திலேயே இருக்குதானே! இன்னும் வட இந்திய விழாக்கள்ல லேடீஸுக்கு தனி ஸ்டால் வைக்கும் கலாசாரமே இருக்கு. நமக்கு நம்ம லிமிட் தெரிந்தாலே போதும்.
ஏன் எங்கேயும் பான் இந்தியா டேக் இல்லை?
‘தசரா’ பான் இந்தியா படம்ன்னு நான் சொல்ல மாட்டேன். இந்த படம் முழுமையா தெலுங்கில் உருவான ஒரு படம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம்னு அஞ்சாறு மொழிகளில் டப்பிங் ஆகுது. அவ்வளவுதான். ஒருவேளை இந்த படம் ஹிட் ஆகிட்டா மக்கள் பான் இந்தியா படமா மாத்திடுவாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் பான் இந்தியா டேக் எல்லா படத்துக்கும் கொடுக்க முடியாது.
‘பாகுபலி 2’ பான் இந்தியா படம். முதல் படத்தில் கிடைத்த வெற்றி 2வது படத்தை பான் இந்தியா படமா மாத்திருச்சு. அப்படி மக்கள் அங்கீகரிக்கணும். நானே என் படத்தை பான் இந்தியா படம்ன்னு சொல்லிக்கக் கூடாது. இதில் நான் தெளிவா இருக்கேன்.
‘தசரா’ கொண்டாட்டமா இருக்குமா?
நிச்சயமா கொண்டாட்டமா இருக்கும். உங்க வாழ்க்கையிலே என்ன நடந்திருந்தாலும் ஒரு ரெண்டரை மணி நேரம் எல்லாத்தையும் மறந்திட்டு வேற ஒரு உணர்வுகளுக்குள்ளேயும் செம ஜாலியான ஒரு உலகத்துக்குள்ளேயும் நீங்க கடத்தப்படுவீங்க. ‘தசரா’ அதுக்கு கேரன்டி.
அடுத்து ஷௌர்யுவ் இயக்கத்தில் நடிக்கறேன். இன்னும் பெயர் வைக்கலை. இப்போதைக்கு ‘நானி 30’னு வைச்சிருக்கோம். படத்துல எனக்கு ஜோடியா மிருணாள் தாக்கூர் நடிக்கறாங்க. ஒரு ஆறு வயது குழந்தைக்கு அப்பாவாக நான் நடிக்கறேன். எமோஷனல் ஃபேமிலி கதை. இப்போதைக்கு அந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் ரிலீசாகியிருக்கு. கூடிய சீக்கிரம் டைட்டிலுடன் முழுமையான அறிவிப்பு வரும்.
ஷாலினி நியூட்டன்
|