இயற்கை வளங்களுக்காக நடக்கும் போர்! லித்தியம் to டைட்டானியம் via சோளம் + கோதுமை...



ஓராண்டு ஆகிவிட்டது. இன்னமும் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடர்கிறது. லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எண்ணற்ற கட்டடங்கள் உருக்குலைந்துள்ளன. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகளால் படிக்க முடியவில்லை. வருங்காலத் தலைமுறையின் அறிவுத் தேடலே கேள்விக்குறியாகியுள்ளது.இந்நிலையில் போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயலவில்லை என்பதே உண்மை. செய்தியாளர்கள் கூட்டத்தில் கண்டிப்பு, அறிக்கை என்பதுடன் கண்டிப்பை நிறுத்திவிடுகின்றனர்.

அதேநேரம் மறைமுகமாக உக்ரைனுக்கு ஆயுதத் தளவாடங்களை சப்ளை செய்து ரஷ்யாவுடனான போரைத் தொடரும்படியும் நிர்ப்பந்திக்கின்றனர்.இச்சூழலில் தொடரும் இந்தப் போருக்குப் பின்னால் கனிம வளங்கள் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் உலகெங்கும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.கூடவே புவியியல் ரீதியாக ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் ஒரு மிக முக்கிய புள்ளியாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஐரோப்பிய நாடுகளையும் ரஷ்யாவையும் இணைக்கும் சங்கிலிக் கண்ணி, உக்ரைன் என்றால் அது மிகையல்ல.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் உறுப்பு நாடாகவும்,  ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் உறுப்பினராகவும் இணைய விரும்புகிறது. ரஷ்யா இதை விரும்பவில்லை; ஏற்கவில்லை. தன் நாட்டின் கொல்லைப்புறத்தில் இருக்கும் ஒரு நாடு, தன்னை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்; எக்காரணம் கொண்டும் நேட்டோ உறுப்பினராகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

இவைதான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க காரணம் என ஆரம்பத்தில் நம்பப்பட்டது.
ஆனால், இப்போது வேறொரு காரணத்தை சுட்டிக்காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆம். மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதற்கு அந்நாடு புவியியல் ரீதியாக அமைந்திருக்கும் இடத்தைத் தவிர அந்நாட்டில் கொட்டிக் கிடக்கும் அரிய வகை உலோகங்கள் மற்றும் தனிமங்களே காரணம் என்கிறார்கள்.

அப்படி உக்ரைனில் என்ன இயற்கை வளம் இருக்கிறது?

ஒட்டுமொத்த ஐரோப்பாவிலேயே, அதிக அளவில் இயற்கை எரிவாயு இருப்பு வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் உக்ரைன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதாவது உக்ரைன் வசம் மட்டும் சுமார் 1.09 ட்ரில்லியின் கியூபிக் மீட்டர் அளவுக்கு இயற்கை எரிவாயு இருப்பதாக சொல்கிறார்கள். முதலிடத்தில் இருக்கும் நார்வே நாட்டில் 1.53 ட்ரில்லியன் கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு இருப்பு கணக்கிடப்பட்டுள்ளது.

இதுவரை இந்த இயற்கை எரிவாயு சம்பந்தமாக உக்ரைன் முழுமையாக களத்தில் இறங்கவில்லை. இதில் மற்றொரு முரணான விஷயம், இத்தனை பெரிய இயற்கை எரிவாயு கையிருப்பை வைத்துக் கொண்டும், உக்ரைன் தன்னுடைய எரிவாயு தேவையை இறக்குமதி மூலம்தான் பூர்த்தி செய்து கொள்கிறது என்பதுதான்.

அப்படி என்றால் உக்ரைன் நாடு எரிவாயு மூலம் பத்து பைசா கூட சம்பாதிக்கவில்லையா..?

சம்பாதிக்கிறது. ஆண்டுக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சம்பாதிக்கிறது. இது அவர்கள் நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் சுமார் 4 சதவீதம். எரிவாயுவை ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் வழித்தடங்கள் (Gas Transit Lines) உக்ரைனில் பதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த எரிவாயு டிரான்சிட் தடங்களுக்கான கட்டணமாகத்தான் மேற்கூறிய தொகையைச் சம்பாதிக்கிறது உக்ரைன்.

இன்றைய தேதிக்கு ஐரோப்பாவின் ஒட்டுமொத்த எரிவாயு நுகர்வில் 40 முதல் 50 சதவீதத்தை ரஷ்யாதான் பூர்த்தி செய்கிறது. அதுவும் நார்ட் ஸ்ட்ரீம் 1 (Nord Stream 1) என்று அழைக்கப்படும் ட்ரான்சிட் நெட்வொர்க் மூலம்தான் பூர்த்தி செய்கிறது. இந்த டிரான்சிட் நெட்வொர்க்கில் ஒரு கணிசமான பகுதி உக்ரைன் நாட்டில் பதிக்கப்பட்டுள்ளன.  இயற்கை எரிவாயு தவிர, நிலக்கரி, இரும்பு, டைட்டானியம் போன்ற பல்வேறு உலோகங்களும் தாதுப் பொருட்களும் உக்ரைனில் கொட்டிக் கிடக்கின்றன. எனவே உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் தாக்கங்கள், உலகளவில் நிலக்கரி மற்றும் மின்சார உற்பத்தியில் எதிரொலிக்கலாம்.

கடந்த 2019ம் ஆண்டு நிலவரப்படி உலக அளவில் இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடுகள் பட்டியலில் உக்ரைனுக்கு ஐந்தாவது இடம். உக்ரைன் நாட்டுக்குள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் இரும்புத் தாதுக்கு மூன்றாவது இடம். இப்படி நீளும் பட்டியலில் இணைந்தும் இணையாமலும் கண்சிமிட்டுகிறது டோன்பாஸ் பகுதி.
ஆம். உக்ரைன் நாட்டின் டோன்பாஸ் பிராந்தியம் முழுக்க இயற்கை வளங்கள் கொட்டிக் கிடப்பதாக சொல்கிறார்கள். இது எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவில் பொருளாதார ரீதியாகக் கை கொடுக்கும்.

அதுபோலவே உக்ரைனில் உள்ள Kirovohrad, Donetsk, Zaporizhzhia oblasts... போன்ற பல பகுதிகளில் இன்றைய தேதிக்கு பல தொழில்நுட்ப சாதனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் தாதுப் பொருள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த லித்தியம் தாதுப் பொருள் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே நடைபெற்று வரும் போர் காரணமாக உலக நாடுகளுக்கு லித்தியம் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் லித்தியம் இருப்பைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன.

அதேபோல் உலக அளவில் கணக்கிடப்பட்டிருக்கும் டைட்டானியம் இருப்பில், சுமார் 20% இருப்பு உக்ரைன் நாட்டில் மட்டுமே இருக்கிறது. சுரங்கத்தில் டைட்டானியத்தைத் தோண்டி எடுப்பது முதல் அதை ஒரு பொருளாக உருவாக்கி விற்பது வரையான அனைத்து பணிகளையும் சில நாடுகளுடன் இணைந்து உக்ரைன் மேற்கொள்கிறது.

ஒரு புள்ளிவிபரம் பல உண்மைகளுக்கு உரைகல்லாக இருக்கும். கடந்த 2021ம் ஆண்டு உக்ரைன் நாட்டின் டைட்டானியம் இரும்புத் தாதை அதிக அளவில் இறக்குமதி செய்த நாடுகள் பட்டியலில் சீனாவுக்கு முதலிடம் (24.4%), ரஷ்யாவுக்கு இரண்டாவது இடம் (15.3%), துருக்கிக்கு மூன்றாவது இடம் (14.5%).

இந்த டைட்டானியம் சந்தையில் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும்? பொதுவாகவே டைட்டானியம் எடை குறைவான, அதே நேரத்தில் மிக வலுவான உலோகங்களில் ஒன்று. எனவே, பயணிகள் விமானம், சரக்கு விமானங்களைத் தயாரிக்க மிகப்பெரிய அளவில் டைட்டானிய உலோகம் பயன்படுத்தப்படுகிறது.இன்று வரை போயிங் போன்ற உலகின் மிகப்பெரிய விமான உற்பத்தியாளர்கள், அதிகளவில் ரஷ்யாவின் டைட்டானிய உலோக விநியோகத்தையே நம்பி இருக்கிறார்கள்.  

இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் தொடர்ந்து கொண்டிருப்பதால், போயிங் போன்ற நிறுவனங்களுக்குத் தேவையான டைட்டானிய உலோகம் சரியான நேரத்தில், குறைந்த விலையில் கிடைப்பதில் சிக்கல் எழுவதாக அந்நிறுவனமே சில வாரங்களுக்கு முன் தன் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் பார்க்கும்போது உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் காரணமாக, உக்ரைன் நாட்டின் பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருப்பது புரிந்திருக்கும்.

உடனே உலோகங்கள், கனிங்கள் மட்டுமே உக்ரைனில் கொட்டிக் கிடப்பதாக நினைக்க வேண்டாம். உணவுப் பொருட்கள் ஏற்றுமதியிலும் உக்ரைன் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆம். உலகளவில் சோளம் மற்றும் கோதுமையை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உக்ரைனும் ஒன்று.

ஓராண்டில் உக்ரைன் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சோளம் மற்றும் கோதுமையில் சுமார் 40 சதவீதத்திற்கும் மேல் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுபோக தானிய உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் உக்ரைனின் பங்களிப்பு அதிகம்.

எனவே இதற்கு மேலும் ரஷ்யா - உக்ரைன் யுத்தம் தொடர்ந்தால் உலகளவில் உணவுப் பற்றாக்குறை பிரச்னை எழலாம் என்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது உண்மை புரிந்திருக்கும். அந்த உண்மைதான் இன்றும் தொடரும் இந்த போருக்குக் காரணம்.யெஸ். எரிசக்திக்காக ஐரோப்பா தன்னைச் சார்ந்து இருப்பதை வைத்துக் கொண்டு, ஐரோப்பா மீது அதிகாரம் செலுத்துவதை தொடர ரஷ்யா விரும்புகிறது.

இதைத்தான் ‘weaponizing heat’ என்கிறார்கள். இன்று வரை ஐரோப்பா குளிர் காலத்தில் தங்களை கதகதப்பாக வைத்துக் கொள்ள ரஷ்யாவின் எரிவாயுவையே நம்பியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கை காலம் முழுக்க தொடர வேண்டும் என்பது ரஷ்யாவின் ஆசை; பேராசை!

இத்தனை விஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் உக்ரைன் இப்போதும் பெரிய அளவில் - முழுவீச்சில் செயல்படாத - இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் நாடு; உக்ரைனில் ஒரு நாடு கால் தடத்தைப் பதிப்பது, அந்நாட்டுக்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும்; பொருளாதார செல்வ வளத்தையும், பாதுகாப்பு விவகாரங்களில் பூகோள ரீதியில் ஒரு முக்கியமான இடத்தைக் கொடுக்கும்... என்பதெல்லாம் தெளிவாகி இருக்கும்.கூட்டிக் கழித்துப் பார்த்தால் வரும் விடை? அதேதான்.

லித்தியம் to டைட்டானியம்... Via சோளம் + கோதுமை... ஆகியவற்றுக்காகத்தான் இந்தப் போர் நடக்கிறது. எப்போது இந்த யுத்தம் முடியும் என்பது இந்த கனிம வளங்களையும் உணவுப் பொருள் உற்பத்தியையும் கைப்பற்றுவதில் யார் கை ஓங்குகிறது என்பதைப் பொறுத்தது!

என். ஆனந்தி