ஆனந்த குயிலின் பாட்டு... தினம் ஆனந்த ராகம் செட்டுக்குள்ளே...



‘ஆனந்த ராகம்’ தொடரின் செட்டிற்குள் நுழையும்போதே, ‘ஆனந்த குயிலின் பாட்டு, தினம் எங்களின் வீட்டுக்குள்ளே...’ என்ற பாடல் வரிகள்தான் நிழலாடுகின்றன. அத்தனை ஜாலி... அவ்வளவு கேலி என செட்டே கலகலப்பாக இருந்தது. முதலில் எதிர்ப்பட்ட துர்கா கேரக்டரில் நடிக்கும் சங்கீதாவிடம் பேச்சுக் கொடுத்தோம்.
‘‘எங்க, ‘ஆனந்த ராகம்’ 150வது எபிசோடைக் கடந்திருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுக்கு முக்கிய காரணம் மக்களின் சப்போர்ட்தான். எங்களை இவ்வளவு சிறப்பாக நடிக்க வைக்கிற எங்க இயக்குநர் சிவா சார், எங்களை அழகா காட்டுகிற ஒளிப்பதிப்பாளர் பிரகாஷ் சார் உள்பட இதுல கூட நடிக்கிற எல்லோருமே அவ்வளவு ஃப்ரண்ட்லி.

இந்த டீமை ஒரு குடும்பம்தான் சொல்வேன். நான் உள்பட சிலர் நெகட்டிவ் ரோல் பண்றோம். ஆனாலும், கேரக்டருக்கு வெளியே எல்லோருமே அன்பானவங்க. ஹேப்பியா ஃபன் பண்ணிட்டே இருப்பாங்க...’’ என அவர் சொல்லும்போதே சிரித்தபடி வந்தார் வில்லி கேரக்டரில் ஜொலிக்கும் கிரிஜா.  

‘‘என் பெயர் சிவரஞ்சனி. நிஜத்துல நான் வில்லி இல்ல! இயக்குநர் கட் சொல்லிட்டா சிரிச்சு விளையாடிட்டு இருக்கிற பாவமான ஜீவன்ங்க நான். எங்க, ‘ஆனந்த ராகம்’ செட் எப்பவும் ஆனந்தமானது. எப்படா ஷூட்டிங் ப்ரேக்னு காத்திட்டே இருப்போம். ஏன்னா, நாங்க சாப்பாட்டுப் பிரியர்கள். நான் எல்லோருக்கும் சாப்பாடு கொடுப்பேன். என் அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. அவங்க சமையலுக்கு இங்க ஃபேன்ஸ் அதிகம். இன்னும் சிலரும் சமைச்சு எடுத்திட்டு வருவாங்க. எல்லோரும் சேர்ந்தே சாப்பிடுவோம்.

அடுத்து, எங்க ஹீரோ அழகப்பனை பத்தி சொல்லியே ஆகணும். அழகப்பன் செம க்யூட். சீரியல்ல குழந்தைத்தனமா, அப்பாவியாக வர்றார் இல்ல… நிஜத்திலும் அவர் அதே கேரக்டர்தான். ரொம்ப இன்னசென்ட். எங்க டீம்ல எல்லோரையும் சிரிக்க வைக்கிறது அவரும், தீக்குச்சியும்தான்...’’ என்கிற சிவரஞ்சனியை அருகிலிருந்து கலாய்த்தபடி இருந்தார், ‘தீக்குச்சி’ செபாஸ்டியன்.
அப்போது கதாநாயகி ஈஸ்வரி கேரக்டரில் நடிக்கும் அனுஷா அங்கு வந்து சேர, ‘தீக்குச்சி’ செபாஸ்டியனை இன்டர்வியூ செய்யச் சொன்னோம். ‘‘என்ன... கலாய்க்கிறீங்களா?’’ என்றபடி அனுஷா தயாரானார்.

‘‘ஷில்பாவிற்கு அழகுடன் கல்யாணம் நடக்குமா?’’ என ‘தீக்குச்சி’ எடுத்ததுமே கொளுத்திப்போட, ‘‘அதை வரக்கூடிய எபிசோட்லதான் பார்க்கணும். எனக்கு எந்த ஐடியாவும் இல்ல. இப்போதைக்கு ஷில்பாவை அழகுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஈஸ்வரி இருக்கா.அப்புறம், ‘ஆனந்த ராகம்’ சீரியல் ரொம்ப வித்தியாசமான கதை. எதிர்காலத்துல வர்ற கதை இன்னும் சிறப்பாக இருக்கப்போகுது...’’ என்றவரிடம், ‘‘உங்கள, ‘ஆனந்த ராக’த்தின் விஜயசாந்தினு சொல்றாங்களே?’’ என ‘தீக்குச்சி’ கிண்டலாகக் கேட்க, ‘‘இதுல சண்டைக்காட்சிகள் நானே எதிர்பார்க்காதது. ஒரு ஹீரோயின் கேரக்டர் இவ்வளவு பலம் வாய்ந்ததா இருக்கும்னு ஆரம்பத்துல நினைக்கல. அதுக்கு திரைக்கதைக்கும், சேனலுக்கும்தான் நன்றி சொல்லணும்.

 இதுதான் எனக்கு தமிழ்ல முதல் ஃப்ரொஜெக்ட். மக்கள் நல்ல வரவேற்பை அளிச்சிருக்காங்க. அவங்க ஆதரவு எப்பவும் தொடரணும்...’’ என உற்சாகமாக சொன்னார் அனுஷா.
அடுத்து வசுந்தரா கேரக்டரில் அழகின் அம்மாவாக நடிக்கும் ப்ரீத்தி சஞ்சீவிடம் ‘ஆனந்த ராகம்’ அனுபவங்களைக் கேட்டார் ‘தீக்குச்சி’. ‘‘சன்டிவியில், இந்தமாதிரி ஒரு ப்ரைம் ஸ்லாட்ல பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. டீமும் ரொம்ப அழகாக அமைஞ்சிருக்கு. ‘ஆனந்த ராகம்’ தொடரில் நான் நடிக்க இரண்டே காரணங்கள்தான்.

முதல்ல, ‘காவேரி மேடம் உங்களை இந்தக் கேரக்டர் பண்ணச் சொன்னாங்க’னு என்கிட்ட சொன்னாங்க. அவங்க ஒரு ரோலை எடுத்து என்னை பண்ணச் சொல்றாங்கனா அதுல ஏதோ விஷயம் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை உண்டு. அடுத்து, ‘பாகுபலி’ ரம்யாகிருஷ்ணன் மேடம் மாதிரியானது இந்தக் கேரக்டர்னு  குறிப்பிட்டிருந்தாங்க. எல்லோருக்கும் ராஜ மாதா பிடிச்ச கேரக்டர். ஸோ, உடனே நடிக்க சம்மதிச்சேன்.

இதுல இன்னொரு விஷயம் அழகப்பனுக்கும் அம்மாவாக நடிப்பீங்களானு கேட்டாங்க. அவர் காமெடி, குணச்சித்திர நடிகர். அதனால, ஸ்கிரீன்ல விட்டுக்கொடுத்து நடிக்கிறது சிறப்பாக இருக்கும்னு நினைச்சேன்...’’ என அவர் சொல்லும்போதே அழகப்பன் வந்தார். ‘‘‘தீக்குச்சி’... உனக்குதான் இப்ப ஷாட்...’’ என்றதும் பறந்தார் தீக்குச்சியாக நடிக்கும் செபாஸ்டியன்.
அப்போது அழகு, ‘‘பாஸ்... என் ஷில்லை நான் இன்டர்வியூ பண்றேன்... இவங்க உண்மையான பெயர் இந்து...’’ என அழகாக ஓர் இன்ட்ரோ கொடுத்தவர், ‘‘உங்களை எப்படி வில்லியாக தேர்ந்தெடுத்தாங்க? இந்த மூஞ்சியை பார்த்தால் இன்னும் பத்து கத்திக் குத்து வாங்கலாம் போல இருக்கே..?’’ என அதிரடியாக ஒரு கேள்வியைக் கேட்டார்.

அதற்கு சற்றும் தயங்காத ஷில்பா, ‘‘வில்லியாக பண்ணணும்னு வரல. முதல்ல பாசிட்டிவ் கேரக்டர்தான் கொடுத்தாங்க. அப்ப அழுது நடிச்சுக் காட்ட சொன்னாங்க. அது எனக்கு வரல. அப்புறம், கோபமாக பண்ணுங்கனு சொன்னாங்க. அது டக்னு வந்திடுச்சு. உடனே, வில்லி ஆக்கிட்டாங்க! இது என்னுடைய மூணாவது சீரியல்...’’ என ஷில்பா உற்சாகமாக சொல்ல, ‘‘அழகு சுந்தரத்தை ஷில்பாவிற்கு பிடிக்குமா?’’ என்றார். ‘‘பிடிக்காது. ஆனா, நிஜத்தில் இந்துவுக்கு அழகப்பனை ரொம்பப் பிடிக்கும்...’’ சட்டென சொன்ன ஷில்பாவிற்கும் அடுத்த ஷாட் ரெடியானது.

அப்படியே அழகு சுந்தரத்திடம் பேசினோம். ‘‘முதல்ல இந்தக் கதைக்கு என்னை தேர்ந்தெடுத்ததுக்கு சன் டிவிக்குதான் நான் நன்றியை சொல்லணும். முதல்முதலாக கதாநாயகனா, அதுவும் சன் டிவியில் பண்றேன்.

உருவ கேலி பண்றது, நிறத்தை வச்சு கேலி பண்றது எல்லாம் எல்லா பக்கமும் நடக்கும். எனக்கும் உருவ கேலி எல்லாம் நடந்திருக்கு. அதன் பிரதிபலிப்பாகதான் இந்தக் கதாபாத்திரம் எனக்கு கிடைச்சிருக்குனு நினைக்கிறேன். அப்புறம், என்னை எல்லோரும் இவ்வளவு நகை போட்டிருக்கீங்களேனு கேட்பாங்க. இதெல்லாம் ஓவராக இருக்குனு கூட சொல்வாங்க. ஆனா, இந்த அழகு சுந்தரத்தை யாரும் கண்டுக்கிடல என்கிற விரக்திக்கு என் அம்மா வசுந்தரா கொடுத்த மருந்துதான் இது. ‘உன்னை பார்க்கலனா கூட நீ போட்டு இருக்கிற நகை, துணிகளை பார்ப்பாங்க’னு அவங்க சீரியல்ல சொல்வாங்க.

இப்ப நான் நகையில்லாமல் வெளியில்போனா, ‘என்னங்க நகைகளைக் காணோம்’னு கேட்குறாங்க. அந்தளவுக்கு என் கேரக்டர் ரீச்சாகியிருக்கு...’’ என அவர் நெகிழ்வாக பேசும்போதே ஷாட் முடித்து திரும்பி வந்தார் ‘தீக்குச்சி’. ‘‘நண்பனுக்கு எதிர்காலத்துல ரொமான்ஸ் காட்சிகளெல்லாம் இதுல இருக்குனு கேள்விப்பட்டேனே...’’ என்றார் தீக்குச்சி நக்கலாக. ‘‘இந்தக் கேள்வியை ஹீரோயின்கிட்டயும் கேட்டீங்களா?’’ என தீக்குச்சியை பதிலுக்குக் கலாய்த்த அழகு, ‘‘செபாஸ்டின்... நீங்க இப்ப பேசுங்க...’’ என்றார்.  

‘‘முதல்ல நான் ‘கயல்’ல நடிச்சேன். இப்ப ‘ஆனந்த ராகம்’. இதுல என் கேரக்டர் பேரு ‘தீக்குச்சி’. ஆரம்பத்துல தொகுப்பாளராக இருந்தேன். சமீபத்துல ஒரு நண்பரின் அப்பா இறந்திட்டாங்க. அதுக்காக ஊருக்குப் போயிருந்தேன். எல்லோரும் அழுதிட்டு இருந்தாங்க. அப்ப அழுதிட்டு இருந்த பெண்கள் சிலர் என்னை பார்த்ததும், ‘இந்தா பாருங்கடி ‘தீக்குச்சி’னு சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சன் டிவியின் ரீச் எப்படியானதுனு அப்பதான் தெரிஞ்சுகிட்டேன்...’’ என சிரித்தவர், ‘‘சித்தப்பா வாங்க...’’ என அழைத்தார்.

சித்தப்பா கேரக்டரில் நடிக்கும் ரஞ்சன், ‘‘இப்ப என்னை எல்லோருக்கும் ‘ஆனந்த ராகம்’ சக்தினு சொன்னால்தான் தெரியுது. நிறைய படங்கள் பண்ணியிருந்தாலும் சன் டிவி சீரியல்ல கிடைக்கிற சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்கல...’’ என அவர் நெகிழ, நெகட்டிவ் ரோல் செய்யும் பார்த்தன் வந்தார். 

‘‘இந்த சீரியல்ல ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கு. ஒரு பாயிண்ட் ஆஃப் வியூல இவங்கதான் வில்லி, வில்லன்னு நினைப்பாங்க. அது இருக்காது. இவங்க நல்லவங்கனு நினைக்கிறப்ப அவங்க வில்லி, வில்லனாக இருப்பாங்க. இப்படி சஸ்பென்ஸை உருவாக்கிட்டே இருக்கிற தொடர் இது...’’ என்கிறவரைத் தொடர்ந்தார், ஷில்பாவின் அம்மாவாக  வரும் சரண்யா.

‘‘உண்மையில் ஆன் ஸ்கிரீன்ல மட்டுமல்ல, ஆஃப் ஸ்கிரீன்லயும் நாங்க எல்லோருமே ஒரு குடும்பமாக கலகலப்பாகவே இருப்போம். இதுல என் கேரக்டரும் அவ்வளவு ரீச்சாயிருக்கு. சமீபத்துல ஒரு விளம்பரத்துல நடிச்சேன். அதை ஒரு பள்ளியில்தான் எடுத்தாங்க. அங்கிருந்த மாணவர்கள் என்னை பார்த்ததும் ‘சரண்யாதானே நீங்க’னு கேட்டாங்க. அந்த சந்தோஷத்திற்கு அளவே கிடையாது...’’ என்றார் மகிழ்ச்சியுடன்.  

‘‘இது என் முதல் மெகாதொடர். வீட்டுல சின்ன வயசுல சன் டிவியை பார்த்து வளர்ந்தேன். இப்ப நானே சன்டிவியில் நடிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ என உற்சாகத்துடன் ரம்யா கேரக்டரில் நடிக்கும் மேக்னா சொல்ல, திவ்யாவாக வரும் வைஷாலி, ‘‘இந்த ஜர்னி ரொம்ப நல்லாயிருக்கு. இத்தனை எபிசோட் போனதே தெரியல...’’ என்றார்.

தொடர்ந்து ஈஸ்வரியின் தங்கையாக அபிராமி கேரக்டரில் நடிக்கும் ஸ்வேதா, ‘‘இதுவரை நான் பண்ணின சீரியல்ல இதுதான் எனக்கு நிறைய ரெஸ்பான்ஸ் தந்திருக்கு. என்னை நிறைய பேர் வாய் பேசமுடியாத பொண்ணுனு நினைச்சிட்டு இருக்காங்க. அதனாலயே நிறைய அன்பு கிடைக்குது. ஆனா, நான் நல்லா பேசுவேன்...’’ எனச் சொல்லிச் சிரிக்கிறார்.

அவரைத் தொடர்ந்த ரிந்து ரவி @ மங்கை, ‘‘இப்பதான் சீரியலுக்குள்ள வந்தமாதிரி இருக்கு. அதுக்குள்ள 150 எபிசோடை கடந்திருக்கோம். ஹேப்பியா இருக்கு...’’ என அவர் முடிக்க, இயக்குநர் சதாசிவம் பெருமாளை சந்தித்தோம். ‘‘இந்த சீரியல் மலையாளம், தெலுங்கு, மராத்தினு பல மொழிகள்ல ரீமேக்காகி வெற்றிகரமாக போயிட்டு இருக்கு. இது வித்தியாசமான கதையம்சம் உள்ள ஒரு தொடர். முரண்பட்டு இருக்கும் இரண்டு கதாபாத்திரங்கள் திருமணம் பண்ணிக்கும்போது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதுதான் கதை.

உண்மையில், திருமணத்திற்குப் பிறகுதான் முக்கியமான கதையே ஆரம்பிக்கப் போகுது. இந்த ‘ஆனந்த ராகம்’ டீம் பற்றி சொல்லணும்னா தொழில்நுட்பப் கலைஞர்கள்ல இருந்து நடிகர், நடிகைகள் வரை எல்லோருமே ஒரு குடும்பம் மாதிரிதான். எல்லோரின் ஒத்துழைப்பும் அற்புதமானது.

என் தயாரிப்பாளர் உதய்சங்கர் சாரும் நிறைய ஒத்துழைப்பு கொடுப்பவர். இதனால், எங்களால் சிறப்பாக இயங்க முடியுது. அடுத்து, சன் டிவி சேனலுக்கும் என் நன்றியைச் சொல்லிக்கிறேன். நான் சன் டிவியில் இயக்குகிற 7வது தொடர் இது. இதுக்கு முன்பு ‘முந்தானை முடிச்சு’, ‘சக்தி’, ‘பாசமலர்’, ‘கங்கா’, ‘கண்மணி’, ‘அன்பே வா’னு ஆறு சீரியல்கள் இயக்கினேன். இப்ப ‘ஆனந்த ராகம்’ பண்றேன். மக்களின் ஆதரவுக்கும் என் நன்றிகள்...’’
என்றார்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்