சிறுகதை - புலிக்கு பசித்தாலும்...
என்னடா குமரேசா... அந்த மேஸ்திரிக்கி நல்ல முடிவச் சொல்லுடா. முனிசிபாலிட்டி வேலை. சீக்கிரமா நிரந்தரமா ஆக்கிருவாங்களாம். நீ ராசாக்கணக்காப் பொழைச்சுக்குவ. அவசரப்பட்டு நான் புலிக் கணக்கா புல்லைத் தின்ன மாட்டேன்னு மறுப்புச் சொல்லிறாத...”வாசலில் சைக்கிளை நிறுத்தித் துடைத்துக் கொண்டிருந்த குமரேசன், அம்மா சரசுவின் அந்தக் குரலைக் கேட்டு, சட்டென தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான்.
எதிர்த்த வீட்டு ரைஸ் மில்க்கார நாச்சியாரம்மாளின் பேத்தி ரோகிணியை இடுப்பில் வைத்துக் கொண்டவாறு நின்றிருந்தாள். தனது எதிர்காலம் பற்றி, சிக்கலாகவே அசைபோட்டுக் கொண்டிருந்த அவளது மனசுக்குள் சர்க்கரையை அள்ளிக் கொட்டியதுபோல இனிப்பாய் இறங்கியிருக்க வேண்டும். முகத்தில் அத்தனைப் பிரகாசம்! ஆனாலும், அந்த வார்த்தைகள், கசப்பாக காதுகளுக்குள் இறங்கிட, விஷப் பாம்பாக கோபங் காட்டினான் குமரேசன்.
‘‘யம்மா... முனிசிபாலிட்டி வேலைதான். ஆனா, ஊருக்குள்ள நாய்த் தொல்லை ரொம்ப இருக்குன்னு தெரு நாயிங்களப் பிடிக்கிறதுக்கு முனிசிபாலிட்டி கமிஷனரு உத்தரவு போட்ருக்காராம். நான் சேந்தா, மொதல்ல அந்த வேலைதான் பாக்கணுமாம். அப்புறந்தான் வேற வேலைக்கி மாத்தி விடுவாங்களாமே...”‘‘இதுல என்னடா செரமம் இருக்குது? நீதான் நாயிங்களுக்கு பிஸ்கெட், சோறுன்னு போட்டு, அதுங்கள ஃபிரெண்டு ஆக்கிட்டீயே.
நீ போயி நின்னாலே, நாயிங்கல்லாம் ஒன்னச் சுத்தி வந்துருமே. செரமப்படாமெ ‘லபக்’குன்னு பிடிச்சிறலாம். உருப்பட்றாப்ல எந்த வேல கெடைச்சாலும், ‘புலிக்கு பசிச்சாலும் புல்லைத் தின்னாது. அந்த வேலையில உண்மையில்ல... நேர்மையில்ல... நான் சேர மாட்டேன’னு கொறையக் கண்டு பிடிச்சிட்டு வேணாம்னு சொன்னாப்ல, இதையும் ஒதறித் தள்ளிறாதடா. நீ செய்ற மாசம் 5000 ரூவா பால் பாக்கெட் போடுற வேலைக்கி, ஒனக்குப் பொண்ணு கேட்டாலும் எவளும் உன்னைக் கட்டிக்கச் சம்மதிக்க மாட்டாளுகடா...” நம்பிக்கை வறட்சி நீங்கி, அவனது நல்ல பதிலுக்காக, முகத்தில் நெம்பித் துளிர்த்திருந்த உற்சாகப் பச்சையுடன் அம்மா.“அதுக்காக, பாசத்தக் கொட்டி வளர்த்த நாயிங்கள சாகடிக்கிற வேலையில போயி சேரச் சொல்றீயா? என்னால முடியாது...” என்று சட்டென்று அவனும் அவளோடு பதிலுக்கு எகிற, மலர்ந்திருந்த அவளது முகம் ஏமாற்றத்தில் தளர்ந்து சுருங்கியது.
‘‘தெரு நாயிங்களுக்கு பசியப் போக்குறதுலதான் ஆர்வமா இருக்குறீயே தவிர, நல்லாச் சம்பாதிக்கிறாப்ல ஒரு தொழிலு கெடைச்சா, சேர அடம் புடிக்கிறீயே..! அந்த முனிசிபாலிட்டி மேஸ்திரி கருப்பசாமிக்கி யோசிச்சு நல்ல பதிலச் சொல்லுடா...” சொல்லிவிட்டு, குழந்தை ரோகிணியை அவனிடம் தந்தவாறு, “அழுதுட்டே இருக்குடா பாப்பா. இவளுக்கு கொஞ்சம் வெளையாட்டுக் காட்டு...” என்றபடி வீட்டுக்குள் போனாள் அம்மா.
குமரேசனைப் பொறுத்தளவில், குழந்தைப் பருவத்திலிருந்தே விலங்குகள், பறவைகள் என்றால், ரொம்பவே பிரியமாயிருப்பான். எதிலும் ஒரு நேர்மை வேண்டும் என்பதிலும் உறுதியாயிருப்பவன்.
ஏழெட்டு வருடங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு முடித்ததும் அப்பா இல்லாத வீட்டின் பொருளாதாரக் கஷ்டம் குரல்வளையைப் பிடிப்பதுபோல மூச்சுத் திணறச் செய்ய, பக்கத்து நகரத்தில் உள்ள பால் பண்ணை ஒன்றில் வீடுகளுக்கு பால் பாக்கெட் போடுகிற வேலைக்குச் சேர்ந்து, இப்போது மாதம் 4000 ரூபாய் சம்பளம் வாங்குகிறான். அதிகாலை 5 மணிக்கெல்லாம் பால் பாக்கெட் போடுவதற்குச் சென்று விடுவான். காலை 10 மணி வரையில் இந்த வேலை தொடரும்.
அதன்பிறகு, தெரு நாய்களுக்கு பிஸ்கெட் போடுவதையும்,வீட்டுக்கு வந்ததும், அம்மா தினமும் பிரியமாய் கொஞ்சுவதற்காக வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு வருகிற எதிர்த்த வீட்டு நாச்சியாரம்மாளின் பேத்தியும், அப்பா இல்லாத குழந்தையுமான ரோகிணிக்கு விளையாட்டுக் காட்டி சந்தோஷப்படுத்துவதுமாக நேரத்தைச் செலவிட்டான்.
இந்தச் சமயத்தில்தான் ஒரு நாள் ராசிங்காபுரம் தவமணி மாமா இவனைச் சந்தித்து, ‘‘எலேய் கொமரேசா... ஒன்னோட படிப்புக்கு கலெக்டரு உத்தியோகமா கெடைக்கப் போவுது?
ஆயுசு பூராவும் இந்த பால் பாக்கெட் போட்ற வேல பாத்து, ஓம் பொழப்பு பாழாப் போயிறப் போவுது. பேசாமெ ஏங்கூட வா. அண்ட மாநிலங்களுக்கு அரிசி கடத்தினா நல்லா காசு துட்டுன்னு கல்லா கட்டிறலாம். அதவுட்டுட்டு நேர்மை, நீதின்னு அரிச்சந்திரன் கணக்காப் பேசுனா தரித்திரம் ஒன்ன அரிச்சித் தின்னுரும்...’’ என்றார். ‘‘மாமா... நா புலி. கொலப் பட்டினியாக் கெடந்தாலும், புலி புல்லைத் தின்னு பாத்துருக்கீயா? நானும் அப்படித்தான். கஞ்சிக்குக் கதியில்லாத நெலமெ வந்தாலும், இந்தக் களவாணித்தனத்த மட்டுஞ் செய்ய மாட்டேன்...’’ என்றான்.
அதைப் போலவே ஒரு நாள் உள்ளூர் அரசியல் பிரமுகர் ராகவன், ‘‘இந்தாப்பா கொமரேசா... நல்லா வாட்டசாட்டமா, ஓங்குதாங்கா இருக்குற. நம்ப தலைவர்கிட்ட ஏற்கெனவே நாலு அடியாளுங்க இருக்கானுங்க. அஞ்சாவதா ஒண்ணச் சேத்துவுட்றேன். ராசாக் கணக்கா ஆயிருவ. ஒங்க குடும்பத்துக் கஷ்டம் தீந்துரும்...’’ என்றார்.‘‘அந்த வேலையெல்லாம் வேணாம்ண்ணே. நா புலிண்ணே. பசிச்சாலும், புலி புல்லைத் தின்னு பாத்துருக்கீங்களா..?’’ என்றான்.
தனக்கு ஒவ்வாத, நேர்மையில்லாத ஏதாவது ஒரு செயலைச் செய்யச் சொல்லி யாராவது கூப்பிட்டால், ‘நான் புலி கணக்கா. புலி எங்காச்சும் புல்லத் தின்னு பாத்திருக்கீங்களா? அதப்போலத்தான் நானும். அந்த வேலையெல்லாம் என்னால செய்ய முடியாது’ என்று சொல்லிவிடுவதை குமரேசன் வழக்கமாகக் கொண்டிருந்தான்.
இதனாலேயே குமரேசன் என்ற பெயர் மாயமாகி ‘புலி’ என்ற பட்டப் பேர் வைத்தே ஊரில் பெரும்பாலானோர் கூப்பிட ஆரம்பித்தனர். அவனை வீட்டுக்கு யாராவது தேடி வந்தால்கூட அவனது அம்மாவிடம், ‘‘புலி இருக்காப்லயா?’’ என்றுதான் விசாரிப்பார்கள்.
சமயத்தில் அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். ‘‘ஏம் புள்ளைய எல்லாரும் புலி, சிங்கம்ன்னு கூப்ட்டு அவன உசுப்பேத்திவுட்டு பொழப்பக் கெடுத்துட்டீங்களேடா பாவி மக்கா...’’ என விசனப்படுவாள்.தெரு நாய்கள் மீது குமரேசனுக்கு கொள்ளைப் பிரியம். அவற்றின் மேல் அலாதியான பரிவு. காலையில் வீடுகள், கடைகளுக்குப் பால் பாக்கெட் போடச் செல்லும்போது இரவில் வாங்கி வைத்திருக்கும் நான்கைந்து பிஸ்கெட் பாக்கெட்டுகளையும் எடுத்துக்கொண்டுப்போய் வழி நெடுகிலும் உள்ள தெரு நாய்களுக்குப் போடுவான்.
இதனாலேயே, இவன் ஏதாவது ஒரு வேலையாக சைக்கிளில் போவதைப் பார்த்துவிட்டால், அத்தனை நாய்களும் இவனை நோக்கி ஓடி வருவதுண்டு. ‘‘அண்ணனுக்கு வேல இருக்கு. வழிய விடுங்கடா...’’ எனச் சொல்லி, சாதுர்யமாக அவற்றின் பாச முற்றுகையிலிருந்து விடுபட்டுப் போவான்.எப்போதாவது அந்த நாய்கள் இவனைத் தேடி வீட்டுக்கும் வந்து விடுவதுண்டு.
‘‘இது என்ன சிநேகம்டா கொமரேசா... காலையில கோலம் போட்றதுக்கு கதவத் தொறந்தா நாலஞ்சு நாயிங்க நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு வாசல்ல நிக்குதுங்க...’’ என்று சீறுவாள். ‘‘வாசல்ல நின்னாக்க ஏதாச்சும் சோறு இருந்தாப் போடும்மா. சாப்ட்டுப் போயிரும்ங்க...’’ கடைவாய்ச் சிப்பாணியும், செல்லக் குசும்புமாய்ச் சொல்வான்.
அவளுக்கு ‘சுள்’ளென்று கோபம் வில்லாய் அம்பு நீட்டும். கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டதுபோல விசனப்பட்டு வெடவெடப்பாள். ‘‘எலேய்... சின்னப்புள்ளத் தனமாப் பேசாதடா. நாயிக்கும், பேயிக்கும் சமைச்சுப் போடச் சொல்றீயே, மண்டையில மூளையிருக்கா ஒனக்கு?” என்று தடித்த வார்த்தைகளில் கத்துவாள்.‘‘பாவம்... அதுங்களும் உசுருதானேம்மா.
என்னத்தச் சாப்டுங்க?’’ நெக்குருகும் குரலில் வக்காலத்து வாங்குவான்.ஆனாலும், உஷ்ணப் பார்வையுடன் இஷ்டமின்றி நகர்ந்து போவாள் சரசு.வீடுகளுக்குப் பால் பாக்கெட் போட்டு முடித்ததும், பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் சென்று, அதைத் தெரு நாய்களுக்குப் போட்டு ஆனந்தப் படுகிற அந்த வழக்கத்தைத் தொடர்ந்தவாறே இருந்தான் குமரேசன். இதை, தொடர்ந்து கவனித்து வந்த முறை மாமா போத்தி, “மாப்ள... நாலு காசு பாக்குறாப்ல வேலைக்கிக் கூப்ட்டா, புலி புல்லைத் தின்னாதுன்னுட்டு நீதி, நேர்மைன்னு சல்லிக்காசு பெறாத வியாக்கியானம் பேசிக்கிட்டு நாயிங்களயே கொஞ்சிட்டு இரு. நாங்கல்லாம் ஒனக்கு பொண்ணு தரமாட்டோம். இதுல ஏதாச்சும் ஒரு பொம்பள நாயாப் பாத்து கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்துடீ!” என்று நமட்டுச் சிரிப்புடன் கடந்து போயிருந்தார்.
இரண்டு தினங்கள் கழித்து அன்று மாலை -‘‘சரசு... சரசு... வீட்லதானே இருக்க?”அறிமுகமான அந்தக் குரலைக் கேட்டு, அரிசி புடைத்துக் கொண்டிருந்த அம்மா சரசு வாசலுக்குப் போக, அவளுக்குப் பின்னால் குமரேசனும் போனான்.எதிர்த்த வீட்டு நாச்சியாரம்மாள்தான்! அவளுடன் அவரது கணவரும் முகமெல்லாம் புன்னகையுடன் நின்றிருந்தார்.
அம்மா சரசுக்கு ஆச்சரியமாய் இருந்தது. எத்தனை தடவை கூப்பிட்டாலும் வீட்டுக்கு வராத நாச்சியாரம்மாளின் கணவரும், தானாகவே வந்திருப்பது புரியாத புதிராகத் தெரிந்தது. “அம்மா... ஐயா... உள்ள வாங்க. என்னங்கம்மா, ஐயாவும் வந்துருக்காங்க. என்ன சங்கதி?” என்றாள்.
நாச்சியாரும், அவளது கணவரும் அருகிலிருந்த பெஞ்சில் உட்கார்ந்தனர். “வேறொண்ணுமில்ல சரசு. என்னோட பொண்ணு சாவித்திரி இந்தச் சின்ன வயசுலேயே கைம்பெண்ணாகி, தெனமும் இந்தக் கோலத்துல அவளப் பாக்குறதுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்குது. வசதியான பலபேரு அவளுக்கு இன்னொரு வாழ்க்கை தரத் தயாராயிருந்தாலும், அவ சம்மதிக்கல. அதே சமயம், ஒன்னோட மகன் குமரேசனோட நேர்மைக் கொணமும், வாயில்லாத பறவைங்க, தெரு நாயிங்களக்கூட அன்போட ஆதரிச்சு, அதுங்க பசிய போக்குற அக்கறையும் அவளுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு.
வாயில்லா ஜீவனுங்ககிட்டேயே இவ்ளோ பாசம் காட்டுற மனுஷன், தன்னையும், தன்னோட பிள்ளையையும் பாசத்தக் கொட்டிக் கவனிச்சுக்கிருவாருன்னு நம்பிக்கை வெச்சிட்டா. இனி, பால் பாக்கெட்டு போடற வேலை வேணாம். எங்களுக்குச் சொந்தமான ரைஸ் மில்லக் கவனிச்சிக்கிட்டு இருந்தாப் போதும்னும் சொல்லிட்டா. அதனால, நீயும் ஒன்னோட மகனும் சம்மதிச்சீங்கன்னா, கல்யாணப் பேச்ச ஆரம்பிச்சு ரெண்டு பேரையும் ஒண்ணுசேத்து வெச்சிறலாம்ன்னு நெனைக்கிறோம்...” நாச்சியாரம்மாள் சொல்லி முடித்தாள்.
குமரேசனுக்கும், அம்மா சரசுக்கும் அந்த வார்த்தைகள், ஆச்சரியத்தை உண்டாக்கின. தோண்டாமலேயே கிடைத்த புதையலாய் மீண்டும் மீண்டும் இதயத்தை முற்றுகையிடுகிற இன்பக் குதூகலம்.“அதுக்கென்னங்கம்மா... நல்ல விஷயந்தானே சொல்லியிருக்கீங்க..! இதுக்குப்போயி, மாட்டேன்னு சொல்வோமா நானும் என் மகனும்..?!” என்று சரசு சொல்லவும், வெற்றிப் பரவசம் முகமெல்லாம் தொற்றிப் படர, பூரிப்புடன் அங்கிருந்து நாச்சியாரம்மாளும், அவளது கணவரும் வெளியேறினர்.
அடுத்த நொடியே குமரேசனிடமிருந்து செல்ஃபோனை வாங்கி, முனிசிபாலிட்டி மேஸ்திரி கருப்பசாமியை அழைத்த சரசு, “யோவ் மேஸ்திரி... என் மகன் நாய் பிடிக்கிற வேலைக்கு வரமாட்டான். எங்காச்சும் இரை கெடைக்கலேங்கறதுக்காக, புலி புல்லைத் தின்னு பாத்துருக்கியா? ஏம் புள்ள குமரேசன் புலிய்யா, புலி..!” ஒருவித இன்பக் கிறுகிறுப்புடன், உறுதியான குரலில் உரக்கச் சொன்னாள்.
- அல்லிநகரம் தாமோதரன்
|