20 வயது வரை காலணி அணிய முடியாதவரின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.65 ஆயிரம் கோடி!
உலகம் முழுவதும் பன்றிக்கறிக்கு அடுத்ததாக நுகரப்படும் அசைவ உணவு, கோழி இறைச்சி. இன்றைய நிலவரப்படி உலகமெங்கும் சுமார் 3,400 கோடி கோழிகள் இருக்கின்றன. அதாவது ஒரு மனிதனுக்கு நான்கு கோழிகள். தவிர, ஓவ்வொரு வருடமும் 5000 கோடிக்கும் அதிகமான கோழிகள் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வீடுகளிலும், பண்ணைகளிலும் வளர்க்கப்பட்டு; நுகரப்படுகின்றன.
இறைச்சிக்கான கோழிகளில் 70 சதவீதமும், முட்டைக்கான கோழிகளில் 68 சதவீதமும் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. கோழி இறைச்சியும், முட்டையும் அதிகளவு புரதச்சத்தைக் கொண்டிருப்பதால் இதற்கான மவுசு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. ஆம்; கடந்த 100 வருடங்களில் மட்டும் கோழி இறைச்சியையும், முட்டையையும் நுகர்வது 500 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்படியான கோழிப்பண்ணை பிசினஸில் ஆரம்பித்து, உலகின் முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்த விவசாயி லியூ யோங்காவ்.
கால்நடை தீவன தயாரிப்பில் சீனாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும் ‘நியூ ஹோம் குரூப்’பின் சேர்மன் இவர். கோழி மற்றும் பன்றி இறைச்சி, பால் மற்றும் பால் பொருட்கள், முட்டை உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது லியூவின் நிறுவனம். சீனாவில் உள்ள சிச்வான் மாகாணத்தில் வசித்துவந்த ஏழ்மையான குடும்பத்தில், 1948ம் வருடம் பிறந்தார் லியூ யோங்காவ். இவருக்கு லியூ யோங்ஸிங், சென் யூக்ஸின், லியூ யோங்யான் என்று மூன்று சகோதரர்கள்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான மாவோவின் தலைமையில் 1966 முதல் 1976ம் வருடம் வரை சீனாவில் கலாசாரப் புரட்சி நடந்தது. இந்த காலகட்டத்தில் நகரவாசியான லியூ, விவசாயம் செய்வதற்காக ஒரு குக்கிராமத்துக்கு அனுப்பப்பட்டார். அரிசியையும், காய்கறிகளையும் விளைவிப்பதற்காக அங்கிருக்கும் விவசாயிகளுக்கு லியூ உதவ வேண்டும். அங்கே காய்கறிகளுக்கு உரமாக மனித மலம் பயன்படுத்தப்பட்டது. ஒரு வாளியில் மனித மலத்தைக் கொண்டுவருவதுதான் லியூவுக்குக் கொடுக்கப்பட்ட முதல் விவசாயப் பணி.
அதற்குப் பிறகு அனைத்து வகையான விவசாய வேலைகளையும் செய்திருக்கிறார். நான்கு வருடங்கள், ஒன்பது மாதங்கள் நீண்ட இந்த விவசாய வேலை அவரை பல வழிகளில் வலிமையாக்கியதாகப் பிற்காலத்தில் ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் லியூ. கலாசாரப் புரட்சியின் போது வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்ட நான்கு சகோதரர்களும் எழுபதுகளில் ஒன்று சேர்ந்தனர். தங்களிடம் இருந்த தொகையைக் கொண்டு ஒரு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
அப்போது அதிகளவு முதலீடு தேவைப்படும் தொழிலாக எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இருந்தது. பிசினஸ் நஷ்டத்தில் சென்றதால் நிறுவனத்தை மூடிவிட்டனர். தங்களுக்கு பிசினஸ் சரி வராது என்று வேலை தேட ஆரம்பித்தனர். லியூ யோங்காவ் அரசுக்குச் சொந்தமான ஒரு தொழில்நுட்பப் பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார்.
மற்ற மூன்று பேருக்கும் வெவ்வேறு துறைகளில் அரசாங்க வேலை கிடைத்தது. அப்போது அரசு வேலையில் பெரிதாக வருமானம் இல்லை. அதனால் பொருளாதார ரீதியாக அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. நான்கு சகோதரர்களும் வேறு ஏதாவது தொழில் செய்யலாம் என்று திட்டமிட்டனர். அப்போது யோங்காவ் சொன்ன யோசனைதான் கோழிப்பண்ணை.
கோழிகள் வளர்க்க பெரிய இடம் தேவைப்படாது; கோழிக்குஞ்சுகள் நாற்பது நாட்களிலேயே வளர்ந்து இறைச்சிக்குத் தயாராகிடும் என்பதால்தான் இந்த யோசனையை முன் வைத்தார் யோங்காவ். அவரது இந்த பிசினஸ் ஐடியாவுக்கு மற்ற சகோதரர்களும் பச்சைக்கொடி காட்டினார்கள்.
ஒரே நேரத்தில் நான்கு பேரும் தாங்கள் பார்த்துவந்த அரசு வேலையை ராஜினாமா செய்தனர். கோழிப் பண்ணை தொடங்குவதற்காக சிச்வான் மாகாணத்திலேயே ஓர் இடத்தையும் பார்த்துவிட்டனர். பண்ணை அமைப்பதற்கான செலவுக்கே கையில் இருந்த எல்லா பணமும் தீர்ந்துவிட்டது. கோழிக்குஞ்சுகளை வாங்க அவர்களிடம் பணம் இல்லை. இந்நிலையில் தங்களிடமிருந்த கைக்கடிகாரம், சைக்கிள்களை விற்று 1000 யுவான்களைத் திரட்டினர். இன்று ஒரு யுவான் என்பது 12 இந்திய ரூபாய்க்குச் சமம். முதலீடு தயாரானவுடன் 1982ம் வருடம் ‘ஹோப் குரூப்’ என்ற பெயரில் கோழிப் பண்ணையை ஆரம்பித்தனர். கோழி மட்டுமல்லாமல் காடையையும் வளர்த்து விவசாயிகளிடம் விற்றனர். மூன்று வருடங்களிலேயே பெரிய கோழிப்பண்ணையாக பரிணமித்தது ‘ஹோப் குரூப்’.
கோழி மற்றும் காடைக்கு உண்டான தீவனங்களை சகோதரர்களே உருவாக்கினார்கள். அந்தத் தீவனம் கோழிகளை செழிப்பாக்கியது. ‘ஹோப் குரூப்’பின் கோழிகளுக்கு தனி மவுசு உண்டானது. பல வாடிக்கையாளர்கள் கோழிகளுக்கு எதை உணவாகக் கொடுக்கின்றனர் என்று ‘ஹோப் குரூப்’பை நச்சரிக்க, அவர்களுக்கு புது பிசினஸ் ஐடியா கிடைத்தது.
ஆம்; 1986ம் வருடம் கால்நடை தீவனங்களுக்காக ‘ஹோப் ஆராய்ச்சி மையத்’தை உருவாக்கினார்கள். தீவன பிசினஸ் மில்லியன் கணக்கில் அள்ளிக்கொடுத்தது. அடுத்த சில வருடங்களில் சீனாவிலேயே பல இடங்களில் கோழிப்பண்ணைகளையும், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகளையும் அமைத்தனர்.
1995ல் ‘ஹோப் குரூப்’ நான்கு நிறுவனங்களாக பிரிந்தது. யோங்காவ் தனது பங்காக கிடைத்த நிறுவனத்துக்கு ‘நியூ ஹோப் குரூப்’ என்று பெயரிட்டு தனியாக தொழிலை நடத்த ஆரம்பித்தார். மற்ற மூன்று சகோதரர்களும் வெவ்வேறு பெயர்களில் தங்களது நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இன்று ‘நியூ ஹோப் குரூப்’புக்கு 30 நாடுகளில் 600 துணை நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் 1.35 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். வருடத்துக்கு 2 கோடி டன் கால்நடை தீவனங்கள், 130 கோடி கோழிகள், 3000 கோடி முட்டைகள், 80 லட்சம் பன்றிகள், சுமார் 1000 கோடி லிட்டர் பால் என உற்பத்தியிலும், வருமானத்திலும் கோடிகளில் கொழிக்கிறது ‘நியூ ஹோப் குரூப்’.
இதுபோக ரியல் எஸ்டேட், வங்கி, முதலீடு, கெமிக்கல் எஞ்சினியரிங், லாஜிஸ்டிக்ஸ் என பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார் லியூமட்டுமல்ல, ஒரு மனிதராக ரொம்பவே எளிமையானவர் லியூ யோங்காவ். பெரும் கோடீஸ்வரர்கள் போல பகட்டான உடைகளை அணிய மாட்டார். ஆரம்ப நாட்களில் வெறும் டி-ஷர்ட் மட்டுமே அணிந்து வந்த அவரை நண்பர்களும், குடும்பத்தினரும் சேர்ந்துதான் கோட், சூட்டுக்கு மாற்றியிருக்கின்றனர்.
கோடிகளில் வருமானம் ஈட்ட ஆரம்பித்த பிறகும் சாதாரண காரைப் பயன்படுத்தி வந்திருக்கிறார் லியூ. ஊழியர்கள் எல்லோரும் சேர்ந்து பென்ஸ் காருக்கு மாறவேண்டும் என்று நிர்ப்பந்திக்கவே லியூ விலையுயர்ந்த சொகுசு காருக்கு மாறியிருக்கிறார். பிசினஸ் சம்பந்தமான விமானப் பயணத்தின்போது கூட எகானமி கிளாஸ் அல்லது தள்ளுபடியில் கிடைக்கும் விமானச் சீட்டைத்தான் வாங்குவது லியூவின் வழக்கம். இதுபோக அவரது ஹேர்ஸ்டைலைக் கூட மாற்றிக்கொள்ளவில்லை.
சின்ன வயதிலிருந்து யாரிடம் முடி வெட்டினாரோ அவரிடமே இப்போதும் வெட்டுகிறார். யாரிடம் பேசும்போதும் சிரித்த முகத்துடன், வார்த்தைகளைக் கவனமாகக் கையாண்டு பேசுவார். ‘‘ஒருபோதும் அதிகாரம் மிகுந்த, மிரட்டல் தோரணையுடன் கூடிய அவரது பேச்சைக் கேட்டதில்லை...’’ என்கின்றனர் ஊழியர்கள். ‘‘இருபது வயது வரை எனக்கு சரியான காலணி இல்லை. தினசரி உணவுக்கான பணம் இல்லை. இதுவே என் எளிமைக்குக் காரணம்...’’ என்கிற லியூவின் இன்றைய சொத்து மதிப்பு 65,340 கோடி ரூபாய்!
த.சக்திவேல்
|