Must Watch
வி ஹேவ் ஏ கோஸ்ட் பேய்க் கதையைக்கூட வித்தியாசமாக, மென்மையாக எடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது, ‘வீ ஹேவ் ஏ கோஸ்ட்’ எனும் ஆங்கிலப்படம். ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. பதின்பருவத்துப் பையனான கெவின் தனது குடும்பத்துடன் புதிதாக ஒரு வீட்டுக்கு குடி வருகிறான். புது வீட்டில் என்னவெல்லாம் இருக்கிறது என்று சுற்றிப்பார்க்கிறான் கெவின்.
அந்த வீட்டினுள் ஒரு பேய் இருக்கிறது. பேயைப் பார்த்து பயப்படாமல், அதை வீடியோ எடுத்து வைக்கிறான். தன்னைப் பார்த்து பயப்படாத கெவினைக் கண்டு பேய் ஓடிவிடுகிறது. அடுத்த நாள் பேயை அழைக்கிறான் கெவின். பேய் வருகிறது. அதற்கு ஏர்னெஸ்ட் என்று பெயர் வைத்து, அதனுடன் நண்பனாகிறான்.
இந்நிலையில் கெவின் எடுத்த பேய் வீடியோ வைரலாகிவிடுகிறது. கெவினின் அப்பா பேயைப் பற்றிய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரபலமாகிறார். கெவினின் வீட்டில் பேய் இருப்பது முக்கிய செய்தியாகிறது. ஊடகம், அதிகாரம் எல்லாவற்றிடமிருந்தும் ஏர்னெஸ்ட்டைக் காப்பாற்ற கெவின் எடுக்கும் முயற்சிகள்தான் திரைக்கதை. குடும்பத்துடன் கண்டுகளிக்க ஒரு ஃபீல் குட் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோபர் லேண்டன்.
இரட்ட
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பாசிட்டிவ்வான விமர்சனங்களை அள்ளிய மலையாளப்படம் ‘இரட்ட’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் பார்க்க கிடைக்கிறது. பிரமோத்தும், வினோத்தும் இரட்டையர்கள். இவர்களது அப்பா, அம்மாவை அடித்துக்கொண்டே இருக்கிறார். ஒரு நாள் அம்மாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுகிறார். பிரமோத் அம்மாவிடமும், வினோத் அப்பாவிடமும் வளரவேண்டிய நிலை.
இருவரும் பெரியவர்களானதும் போலீஸாகிவிடுகின்றனர். பிரமோத் நேர்மையான டிஸ்பி ஆகிவிடுகிறார். வினோத் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடும் சப் இன்ஸ்பெக்டராகிவிடுகிறார். இருவருக்கும் இடையில் எப்போதுமே ஒரு மோதல் இருந்துகொண்டே இருக்கிறது. இருவரும் ஒரு ஸ்டேஷனில் வேலை செய்யவேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஒரு நாள் வினோத் வேலையில் இருக்கும்போதே துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்துபோகிறார்.
அவர் எப்படி இறந்தார்... யாராவது வினோத்தை சுட்டு விட்டனரா... வினோத்தின் மரணத்துக்கும் பிரமோத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா... என்ற கோணத்தில் செல்லும் விசாரணை யாருமே எதிர்பார்க்காத அதிர்ச்சியைத் தருகிறது. அந்த அதிர்ச்சி என்னவென்று தெரிய ஒருமுறை படத்தைப் பாருங்கள். வினோத், பிரமோத் என இரட்டை வேடங்களில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார் ஜோஜு ஜார்ஜ். படத்தின் இயக்குநர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன்.
த ஹைஸ்ட் ஆஃப் த சென்சுரி
வங்கிக்கொள்ளை பற்றிய சிறந்த படங்களைப் பட்டியலிட்டால் நிச்சயமாக ‘த ஹைஸ்ட் ஆஃப் த சென்சுரி’ எனும் ஸ்பானிஷ் மொழிப்படத்துக்குஓர் இடம் இருக்கும். ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்தப்படம். பெர்னாண்டோ ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அவரால் தனியாக இதை செயல்படுத்த முடியாது. அதனால் அவரைப் போலவே பணத்தாசை பிடித்த சிலரை கூட்டு சேர்க்கிறார்.
வங்கிக்கு அருகிலிருக்கும் சாக்கடைக் கால்வாயில் சுரங்கப்பாதை அமைத்து வங்கிக்குள் நுழைந்து, லாக்கரில் இருக்கும் பணத்தையும், தங்கத்தையும் கொள்ளை அடிப்பதுதான் பெர்னாண்டோவின் திட்டம். அவரது திட்டத்துக்கு உண்டாகும் செலவை கூட்டாளிகளில் ஒருவர் ஏற்றுக்கொள்கிறார். யாருக்கும் தெரியாமல் வங்கிக்குள் நுழைவதற்கான சுரங்கப்பாதையை அமைக்கின்றனர். மாட்டிக்கொள்வோம் என்று குழுவினர் பயப்படுகின்றனர். யாரும் மாட்டமாட்டோம் என்று புதிதாக ஒரு ஐடியாவைக் கொடுக்கிறார் பெர்னாண்டோ.
அந்த ஐடியா என்ன... பெர்னாண்டோவின் குழு வங்கியை எப்படி கொள்ளையடிக்கிறது... கொள்ளையர்கள் பிடிபட்டார்களா... என்பதே மீதிக்கதை. வங்கிக்கொள்ளையை அருகிலிருந்து பார்ப்பதுபோல் படமாக்கியிருப்பது சிறப்பு. 2006ல் அர்ஜென்டினாவில் நடந்த வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் இயக்குநர் ஏரியல் வினோகிரேட்.
ஃபால்
சீட் நுனிக்கே இட்டுச் செல்லும் திரில்லிங் படத்தைப் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கிறது ‘ஃபால்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப்படம். பெக்கியும், ஹண்டரும் உயிர்த் தோழிகள். பெக்கியின் கணவர் டான். மூவரும் ஒரு மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது கால் தவறி கீழே விழுந்து இறந்துவிடுகிறார் டான். நொறுங்கிப் போகிறாள் பெக்கி. மதுவுக்கு அடிமையாகிறாள். ஹண்டரிடம் கூட சரியாகப் பேசுவதில்லை. அப்பாவைப் பிரிந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறாள்.
டான் இறந்து ஒரு வருடமாகிறது. அவருடைய இறந்த நாள் வருகிறது. இந்நிலையில் 2000 அடி உள்ள ஒரு ரேடியோ டவரில் ஏறலாம் என்று பெக்கியை அழைக்கிறாள் ஹண்டர். ஆரம்பத்தில் மறுக்கிறாள். டானின் நினைப்பிலிருந்து வெளியே வருவதற்காக சம்மதிக்கிறாள். தோழிகள் இருவரும் ரேடியோ டவரில் ஏறும் சாகசப் பயணம் திக் திக் திரைக்கதையாக விரிகிறது. நம் கவனத்தை ஒரு நிமிடம் கூட பிசகாமல் படத்துடன் ஒன்ற வைப்பது சிறப்பு. ரேடியோ டவரில் ஏறும் காட்சிகளை திகில் அனுபவமாகக் கொடுத்திருக்கின்றனர். படத்தின் இயக்குநர் ஸ்காட் மான்.
தொகுப்பு: த.சக்திவேல்
|