மிரட்டும் இன்ஸ்டா...மிரளும் பயனாளர்கள்!
எனக்கு அஞ்சு லட்சம் ஃபாலோயர்கள் இருக்காங்க... ரெண்டு லட்சம் கொடு உன் புராடக்ட்டை புரமோட் செய்து தரேன்... இல்லைன்னா அதே ஃபாலோயர்கள் கிட்ட உன் புராடக்ட் பத்தி எவ்வளவு மோசமா சொல்ல முடியுமோ அவ்வளவு செய்வேன்...’’‘‘நீ போட்ட வீடியோவை நம்பிதான் இந்தப் பையன் புராடக்ட் வாங்கினான்... இப்ப அவன் ஏமாந்திட்டான்...
உன்னால ஏமாந்தவனுக்கு நீதான் பதில் சொல்லணும் அல்லது நீதான் காசைத் திருப்பிக் கொடுக்கணும்...’’ ‘‘என்கிட்ட மூணு லட்சம் ஃபாலோயர்கள் இருக்காங்க... உங்க அமைப்பு மூலமா கொடுக்கப் போகிற விருது லிஸ்ட்ல என்னையும் சேர்த்தா உங்களுக்கு புரமோஷன் கிடைக்கும்...’’இதெல்லாம் இன்ஸ்டாகிராமின் பின்னணியில் இருக்கும் பிளாக் மார்க்கெட் பிஸினஸ் உரையாடல்கள்.
தனக்கு இருக்கும் அல்லது தன்னை நம்பி பின்தொடரும் மக்களையே வலையாக வீசி புதிதாக வியாபாரங்கள் தொடங்கும் ஸ்டார்ட்டப் தொழிலாளிகள், குறைந்த முதலீட்டில் தொழில் ஆரம்பிக்கும் மிடில் கிளாஸ் மக்கள், தன்னார்வலர் அமைப்புகள், சமூக சேவை மையங்கள்... என இந்த இன்ஸ்டாகிராம் முதலைகள் எப்போது யார் கிடைப்பார்கள் என காத்துக்கிடக்கிறார்கள்.
ஒரு 50MB சைஸ் செயலி... நாமெல்லாம் வெறும் ஒரு கணக்கைத் தொடங்கிவிட்டு ஏதோ பத்து பேர் லைக் இட்டால் போதும் சாமி என ரீல்களை ஸ்வைப் செய்து நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், அதே செயலியைச் சுற்றி இன்று பலகோடி ரூபாய் பிஸினஸ் நடந்துகொண்டிருக்கிறது. பிஸினஸ் ஆரோக்கியமாக நடந்தால் பரவாயில்லை; மிரட்டல்களும், பிடுங்கல்களுமாக மறைமுகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் பலியாக, இடையில் என்ன நடக்கின்றன என்றே தெரியாமல் ஏதோ ஒரு பிரபலத்துக்கு ‘Follow’ பட்டனை அழுத்திவிட்டு நம் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், நாம் அழுத்தும் ஒரு ஃபாலோ யாரோ ஒருவருக்கு பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. அவர்களும் நம்மைப் போலவே சாதாரண மக்களாக இருப்பவர்களே அல்லது இருந்தவர்களே. ஏதோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோ அல்லது அமிதாப் பச்சனோ கிடையாது. தினம் தினம் ஏதோ ஒரு சிறப்பான எடிட்டிங் அல்லது வீடியோ மேக்கிங் திறமையைக் கொண்டு தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியவர்கள்தான். இதில் தங்களைப் பின் தொடர்பவர்களையும் கருத்தில் கொண்டு ஆரோக்கியமான அல்லது பயனுள்ள புராடக்ட்கள், ஷாப்பிங் ஐடியாக்கள் அல்லது அழகு சாதனப் பொருட்களை தினம் தினம் அறிமுகப்படுத்தி நமக்கும் பயனுள்ள வீடியோக்கள் கொடுத்து சின்ன முதலீட்டில் தொழில் தொடங்குவோருக்கும் இவர்களால் முடிந்த விளம்பர வீடியோக்கள் அல்லது ‘Vlog’ எனப்படும் வீடியோ புராடக்ட் விமர்சனங்கள் செய்து அதன் மூலம் சிறு வருவாய் ஈட்டுவோர் ஆரோக்கியமான இன்ஃப்ளூயன்சர்கள்.
அவர்களால் பாதிப்பு இல்லை. ஆனால், தன் ஃபாலோயர்களையே ஆயுதமாக மாற்றி வியாபாரிகளை அல்லது சில சமூகம் சார்ந்த அமைப்புகளை மிரட்டும் கும்பலிடம்தான் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ‘‘நம்மைச் சுற்றி இருக்கற டிஜிட்டல் உலகம் எப்ப என்னவா மாறும்னு நமக்கே தெரியாது...’’ என்று பேசத் தொடங்கினார் ஜோ மைக்கேல். இவர் டிஜிட்டல் ஆக்டிவிஸ்ட். ஈவன்ட் மானேஜராக இருப்பவர்.
‘‘ஏன், எப்ப சட்டென க்ளோஸ் போர்டு போட்டுச் செல்வார்கள் என்பதும் தெரியாது. உதாரணத்திற்கு Orkut வந்த புதிதில் அந்தச் செயலி ஏதோ பெரிய புரட்சி செய்யப் போகிறது என நினைத்தோம். ஆனால், சட்டென காணாமல் போனது. எனவே டிஜிட்டல் யுகத்தில் எதுவும் நிரந்தரமில்லை. ஒருவேளை குறிப்பிட்ட செயலியை உருவாக்கிய குழு பயனாளர்களின் பல்ஸ் தெரிந்து வலை வீசினால் முகநூல், டுவிட்டர்... இதோ இப்போது இன்ஸ்டாகிராம் போல் பல வருடங்கள் கடந்து நிற்கும்.
ஆனால், அதிலும் அரசாங்கத்துக்கு, பொது மக்களின் வாழ்க்கைக்கு - குறிப்பாக இளைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு எதிராக ஏதேனும் பிரச்னை வருகிறது எனில் கேள்வியே இல்லாமல் அந்தச் செயலி தடை செய்யப்படும். TikTok, PUBG, BlueWhale... என இப்படி தடைசெய்யப்பட்ட செயலிகளைச் சொல்லிக்கொண்டே செல்லலாம். என்னைக் கேட்டால் எதுவும் கையில் இருக்கிறது என ஆடாமல் இருப்பதே நல்லது. அதிலும் டிஜிட்டல் யுகத்தில் ‘ப்ளீஸ் கேர்ஃபுல்’ என்றே சொல்வேன்....’’ அலர்ட் மணியை அதிரடியாகவே அடித்து ஆரம்பித்தார் ஜோ மைக்கேல்.
‘‘சின்ன வியாபாரிகள் முதல்ல தன்னுடைய புராடக்ட் எது சார்ந்தது, யாருக்கானது என்பதில் தெளிவா இருக்கணும். அதேபோல் ஒரு இன்ஃப்ளூயன்சரிடம் இருக்கும் ஃபாலோயர்கள் யார்னு சோதனை செய்யறதும் அவசியம். உதாரணத்துக்கு, நாம விற்கறது பெண்களுக்கான காஸ்மெட்டிக்ஸ்னா அதை ஒரு ஃபேமஸ் பெண் மாடல் அல்லது பெண் இன்ஃப்ளூயன்சர்கள் கிட்ட புரமோட் செய்யச் சொன்னா லைக், ஷேர் எல்லாம் வரும்.
ஆனால், கஸ்டமர்கள் வருவாங்களா? காரணம், டிஜிட்டலைப் பொறுத்தவரை நாம யாரோ அதுக்கு எதிரான ஃபாலோயர்கள்தான் இருப்பாங்க. அழகான பொண்ணுன்னா ஆயிரம் பசங்கதான் அவரை ஃபாலோ செய்வாங்க. அதே ஸ்மார்ட்டான பையன்னா அவரை பெண்கள்தான் ஃபாலோ செய்வாங்க. இந்த லாஜிக் தெரிஞ்சாலே பிஸினஸும் சரியா நடக்கும்; நமக்கான கஸ்டமர்களும் சரியா கிடைப்பாங்க.
முதல்ல அவங்க கிட்ட ரெண்டு லட்சம் ஃபாலோயர்கள் இருக்காங்க. சரி; எல்லாமே உண்மையான கணக்குகளான்னு சோதிங்க. அதேபோல இன்னைக்கு எல்லாமே ஓபன் பிளாட்ஃபார்ம். ஒருத்தர் கிட்ட நாம புரமோஷன்னு போறதுக்கு முன்னாடியே அவரைப்பற்றி எதாவது நெகட்டிவ் வீடியோக்கள் இருக்கா, அல்லது விமர்சனங்கள் வருதா, குறிப்பா தவறான செய்திகள்ல அவர் பெயர் அடிபட்டிருக்கான்னு கூகுள் தேடல்ல பெயரை டைப் செய்தாலே முழு ஜாதகம் கிடைச்சிடும்.
எதையும் ஆராயாம மாட்டிக்கிறதுக்கு முன்பே கிரவுண்ட் ஒர்க் செய்யுங்க. ஓகே... ஒருவேளை இப்படியான மிரட்டலில் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்னு கேள்வி எழும். முதல் மிரட்டல் ஆரம்பிக்கும் போதே கால்களை ரெக்கார்ட் செய்ய ஆரம்பிச்சிடுங்க. ஒரு ரெக்கார்ட் உங்களிடம் இருக்குன்னு தெரிஞ்சாலே மிரட்டும் ஆசாமி நிச்சயம் பின்வாங்குவார். அடுத்து ‘சரி, உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள்’ எனச் சொல்லும் தைரியம் வேண்டும். குறைந்தபட்சம் ‘என் புராடக்ட் குறித்து நெகட்டிவ் வீடியோ வேண்டுமானால் போடுவாய்... அவ்வளவுதானே’ என கூலாக பதில் சொன்னாலே பாதி பிரச்னை சரியாகிடும்...’’ என்னும் ஜோ மைக்கேல், இன்ஃப்ளூயன்சர்கள் இதை விட மோசமான வகையில் மிரட்டப்படுகிறார்கள் என்கிறார்.
‘‘பிரபல மாடல் மற்றும் நடிகை சமீபத்திலே ஒரு பிரச்னையிலே சிக்கினாங்க. அதுக்குக் காரணம் ஒரு பிரபல யூடியூப் இன்வெஸ்டிகேட்டர் என்னும் போர்வையிலே இருக்கற நபருடைய வேலை. இவருடைய பிரதான வேலையே இதுதான். இன்ஃப்ளூயனசர்களை டார்கெட் செய்து அவர்கள் புரமோட் செய்த புராடக்ட்களை வாங்கி ஒருத்தன் ஏமாந்திட்டான்... இவனுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்கன்னு கேட்கறது. இவன் பாதிக்கப்பட்டதுக்கு நீங்கதான் காரணம்ன்னு பணம் கேட்டு மிரட்டுறது... தொடர்ந்து அவனும் இவங்க பணம் கொடுக்கற வரைக்கும் மொபைல்ல பேசிக்கிட்டு புலம்பிகிட்டு இருப்பான்.
பணம் கிடைச்ச உடனே மொபைல் நம்பர் ஸ்விட்ச் ஆஃப். இப்படி ஒரு தனி குரூப் மிரட்டிப் பணம் சம்பாதிப்பது அதிகரிச்சிருக்கு. இவர்களுக்கு வருகிற மிரட்டல் எல்லாம் நேரலையில் நடக்கும். கிட்டத்தட்ட பொதுவெளியில் பயமுறுத்தி இன்ஃப்ளூயன்சர்களை சங்கடமான நிலைக்குத் தள்ளி வேறு வழியே இல்லாம பணம் கொடுக்க வைக்கிற வேலை.
ஒருத்தன் நேரடியா லைவிலேயே கேள்வி கேட்கறானேனு பார்வையாளர்களும் அவனைத்தான் நம்புவாங்க. இப்படியான ஒரு நபரைக் கூட சமீபத்தில் காவல் துறை புகார் வரை கொண்டு போனோம். ஸோ, நாம்தான் இந்த டிஜிட்டல் பூதத்திடம் புத்தி சாதுர்யமா நடந்துக்கணும்...’’ என ஜோ மைக்கேல் முடிக்க இதைவிட மோசமாக பிரபலங்களின் பெயர்களில் போலிக் கணக்குகள் தொடங்கி அதில் மிரட்டுவதும், பணம் சம்பாதிப்பதும் கூட நடக்கிறது என்கிறார் ஏ.ரியாஸ்.
டிஜிட்டல் மீடியா புரமோட்டரான இவர் சொல்லும் தகவல்கள் அடிவயிற்றைப் பிசைகின்றன. ‘‘இன்னைக்கு ரூ.1000 கொடுத்தாலே போதும்... 10,000 போலி ஃபாலோயர்களை ஒரு அக்கவுண்ட்ல கொண்டு வந்திடலாம். அப்ப ரூ.10,000 இருந்தா 1,00,000 ஃபாலோயர்களைக் கொண்டு வரலாம்.ஒருத்தங்களுக்கு ரெண்டு முதல் மூணு லட்சம் ஃபாலோயர்கள் இருக்காங்கங்கன்னா அவங்க ஃபாலோயர்களா இல்லை வெறும் போலி Botகளான்னு (போலி கணக்குகள்) சோதிச்சு உங்க புரமோஷன்களுக்குப் பயன்படுத்துங்க.
இந்த போலி கணக்குகள் காரணமாவே சமூக வலைத்தளங்களுக்கு வந்த பிரபலங்கள்ல ஒருத்தர்தான் விஜய் சேதுபதி அண்ணா. அவருக்கு ஆரம்பத்திலே சமூக வலைத் தளங்கள்ல வர இஷ்டமில்ல. ஆனா, அவர் பெயர்ல ஏராளமான போலிக் கணக்குகள். இதிலே அவர் பெயரிலேயே அவரே ரிலீஸ் செய்கிற மாதிரி ஷார்ட் ஃபிலிம்கள், விளம்பரங்கள் எல்லாம் ரிலீஸ் செய்து ஒரு கும்பல் பணம் சம்பாதிச்சிட்டு இருந்துச்சு.
ஒரு கட்டத்திலே நடக்கற பொதுச் சம்பவங்களுக்கெல்லாம் கூட கருத்து போட ஆரம்பிக்க மக்கள் பார்வையிலே சேது அண்ணாவே கருத்து சொல்றாருங்கற அளவுக்கு போச்சு. அப்பறம்தான் இதைத் தடுக்க சமூக வலைத்தளங்கள்ல கணக்கு ஆரம்பிச்சார் சேது அண்ணா. இவர் மட்டுமில்ல; பல பிரபலங்கள் அவங்க பெயர்ல இருக்கற போலிக் கணக்குகளைக்களை எடுக்கத்தான் verified கணக்குகளை முதற்கட்டமா தொடங்கினாங்க...’’ என்கிறார் ஏ.ரியாஸ். பொழுதுபோக்காக போட்டோ, ரிலீஸ்... என ஆரம்பித்த தளம், இன்று எங்கேயோ சென்றுகொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் என்பது ஒரு பூதம்தான். ஆனால், நம் மொபைலில் இன்னும் இதுபோன்ற பூதங்கள் ஆயிரம் உள்ளன. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
ஷாலினி நியூட்டன்
|