அதிகரிக்கும் கடல் மட்டம்... டெல்டா பகுதிகளில் வாழ முடியாமல் போகுமா?



இந்தக் கேள்வியைத்தான் உலகெங்கும் எழுப்பியிருக்கிறது உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள ‘புவி கடல்மட்ட அதிகரிப்பு மற்றும் விளைவுகள்’ அறிக்கை. இந்த அறிக்கையின்படி இந்தியா, சீனா, வங்காள தேசம் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறது.
இந்த நாடுகள் மட்டுமின்றி பிற நாடுகளிலும் குறிப்பிட்ட பகுதிகள் பாதிக்கப்படுமாம். ஷாங்காய், தாகா, பாங்காக், ஜாகர்த்தா, மும்பை, மாபுடோ (Maputo), லாகோஸ், கெய்ரோ (Cairo), லண்டன், கோபன்ஹேகன், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், புவனர்ஸ் அயர்ஸ் மற்றும் சான்டியாகோ நகரங்கள் அதிகளவில் தாக்கங்களை எதிர்கொள்ளும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

என்ன சொல்கிறது ‘புவி கடல்மட்ட அதிகரிப்பு மற்றும் விளைவுகள்’ அறிக்கை?

2013 முதல் 2022 வரை உலகம் முழுவதும் ஆண்டுக்கு 4.5 மிமீ கடல் மட்ட உயர்வு நடந்திருக்கிறது. இந்த கடல் மட்ட உயர்வுக்கு மனிதச் செயல்பாடுகளே முக்கியக் காரணம். 1901 முதல் 2018 வரை பூமியின் கடல்மட்ட உயர்வு 0.20 மீட்டராக இருந்தது. இதில் 1901 முதல் 1971 வரை ஆண்டுக்கு கடல்மட்ட அதிகரிப்பு 1.3 மிமீ ஆகத்தான் இருந்தது.ஆனால், 1971 முதல் 2006க்கு இடையில் ஆண்டுதோறும் கடல் மட்டம் 3.7 மிமீ அதிகரித்திருக்கிறது.

புவி வெப்பமயமாதல் 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்தப்பட்டாலும் கடல்மட்டத்தில் கணிசமான அதிகரிப்பு இருக்கும். மாறாக வெப்பநிலை அதிகரித்தால் கடல்மட்ட அதிகரிப்பு இரு மடங்காக அதிகரிக்கும்.இதனால்தான் 1971 - 2018 ஆண்டுகளுக்கு இடையில் 50% கடல்மட்ட உயர்வு புவி வெப்பமயமாதலினால் நிகழ்ந்துள்ளது. 22% பனிப்பாறைகள் உடைவினாலும், 20% பனிக்கட்டிகள் உருகுவதாலும், 8% நிலத்தில் நீர் சேமிப்பதில் ஏற்படும் மாற்றங்களாலும் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

1992 முதல் 1999க்கு இடையில் பனிக்கட்டி உருகுவது 4 மடங்கு அதிகரித்துள்ளது. பனிக்கட்டி உருகுவதும், பனிப்பாறை உடைதலும் 2006 - 2018க்கு இடையில் கடல் மட்டம் உயர முக்கிய காரணிகளாக இருந்துள்ளன.

இதன் விளைவுகள் என்ன?

தொடர்ந்து புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதால் கிரீன்லாந்து மற்றும் மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மீள முடியாத பாதிப்பைச் சந்திக்க நேரிடலாம்.கடல் நீர் அதிகரிப்பு கடலோர உள்கட்டமைப்பையும், கடலோர சுற்றுச் சூழல் அமைப்பையும் முழுமையாக சிதைக்கும். நிலத்தடி நீரில் உப்பு கலப்பது கட்டுப்படுத்த முடியாமல் போகும், வெள்ளம் ஏற்படும்...

இந்த பாதிப்புகளால் சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்த விஷயங்கள் பாதிக்கப்படும். உடல்நலக் குறைபாடுகள், உணவுப் பற்றாக்குறை, இருப்பிடம் பறிபோதல் மற்றும் கலாசாரங்கள் மறக்கப்படுதல்... என அடுக்கிக்கொண்டு போகலாம். இவற்றில் சில உடனடி பாதிப்புகளாகவும் சில நீண்ட நாள் பாதிப்புகளாவும் ஏற்படும்.இந்த பாதிப்புகளில் இருந்து தப்ப காலநிலை மாற்றம் குறித்த புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

இந்தியாவுக்கு எந்தளவு பாதிப்பு? அதிகளவில். 20ம் நூற்றாண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 1.7 மிமீ கடல் மட்ட அதிகரிப்பு இந்தியக் கடற்கரைகளில் நடந்திருப்பதாக புவி அறிவியல் அமைச்சகம் கூறியுள்ளது.கடல் மட்டம் 3 செமீ அதிகரித்தால் நிலத்தில் 1.7 மீட்டர்கள் வரை கடல் ஊடுருவும்.எதிர்காலத்தில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் 5 செமீ கடல் மட்ட உயர்வு ஏற்பட்டால் அடுத்த நூற்றாண்டில் 300 மீட்டர் வரை கடல் நிலத்தில் ஊடுருவும்.

இந்திய பெருங்கடல் வெப்பமடைவதால் நீரின் கன அளவு அதிகரித்து கடல் மட்டம் உயருகிறது. பனிப்பாறைகள் உருகுவதும் இதற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது.
கடல் வெப்பமடையும் விகிதம் மிகவும் அதிகமாக இருப்பதால் இந்திய கடலோரப் பகுதிகள் ஏற்கெனவே அடிக்கடி புயல் ஏற்படுவது போன்ற பாதிப்புகளை சந்திக்கத் தொடங்கிவிட்டன.
இதனால் வெள்ளம் ஏற்பட்டு மீண்டும் கடல் மட்டம் உயர வழிவகுக்கிறது.

வெள்ளத்தினால் கங்கா, சிந்து, பிரம்மபுத்ரா நதிகளின் டெல்டா பகுதிகள் ஏற்கெனவே வாழத் தகுதியற்ற இடங்களாக மாறி வருவதை இந்த இடத்தில் நினைவுகூர்வது அபாயத்தைப் புரிந்து கொள்ள உதவும்.

என்ன செய்யப் போகிறோம்?

ஜான்சி