பொன்னியின் செல்வன் அனுபவத்தை சொல்றேன்... லியோ... மூச்! இப்ப வேண்டாம்!



‘‘ஆடைகள் வெறும் ஆடைகள் அல்ல; நாம் யார் என்று புரஜெக்ட் செய்கிற ப்ரொஃபைல்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் மாலினி கார்த்திகேயன்.
‘செக்கச் சிவந்த வானம்’, ‘பொன்னியின் செல்வன் 1 & 2’, இதோ இப்போது ‘லியோ’ படத்தில் த்ரிஷாவுக்கு காஸ்ட்யூம்... என ஆடை வடிவமைப்பாளர் மாலினி கார்த்திகேயன் கிராஃப் ஆரம்பமே அதிரடி. ‘‘சொந்த ஊர் சென்னைதான். அப்பா கார்த்திகேயன், ரிடையர்ட் சாஃப்ட்வேர் கன்சல்டன்ட். அம்மா சுகந்தி, வீணை டீச்சர். எப்பவுமே மியூசிக்கிலேதான் இருப்பாங்க. என் ஃபேமிலியிலே யாருக்கும் சினிமா பின்னணி கிடையாது.  

நான் சென்னை NIFTலே ஃபேஷன் டெக்னாலஜி படிச்சேன். படிச்சுட்டு இருக்கும் போதே ஒரு நல்ல பிராண்டிங்கில் சம்மர் இன்டெர்ன்ஷிப் செய்யலாமேன்னு தோணுச்சு. சில பத்திரிகைகள், மாத இதழ்கள் கூட யோசிச்சேன். குறைஞ்ச பட்சம் ஒரு செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட்கிட்டயாவது வேலை செய்யலாம்னு ஒரு எண்ணம். அப்படித்தான் 2017ல் மும்பையிலே ஏகா லகானி மேடம் கூட வேலை செய்யற வாய்ப்பு கிடைச்சது. அவங்க அப்ப ஒண்ணு ரெண்டு படங்கள் செய்துட்டு இருந்தாங்க. அந்த சமயம் அவங்க வேலை பார்த்த எல்லாப் படங்கள்லயும் நானும் கொஞ்சம் கொஞ்சம் வேலை செய்துட்டு இருந்தேன்.

தொடர்ந்து ‘வானம் கொட்டட்டும்’ படத்துக்கு காஸ்ட்யூம்கள் டிசைன் செய்யணும்னு கேட்டாங்க. நல்ல வாய்ப்பா இருக்கேன்னு பயன்படுத்திக்கிட்டேன். அதுவும் மணி சார் பேனர், அவருடைய ஹவுஸ் புராஜெக்ட்... ஹேப்பியா வேலை செய்தேன். 2018ல் என்னுடைய கோர்ஸும் முடிஞ்சது. அடுத்து என்னன்னு யோசிக்கும்போதே மீண்டும் மணி சார் கதவுதான் ஓப்பன் ஆச்சு...’’ என பூரிப்புடன் சொல்லும் மாலினி கார்த்திகேயன், ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1, 2 படங்களில் இணைந்தது குறித்து மேலும் பகிர்ந்தார்.

‘‘பொதுவாகவே எனக்கு கதைகள்ல கேட்கற கேரக்டர்களை, காட்சிகளை விஷுவல் செய்து பார்க்க பிடிக்கும். குறிப்பா ஒரு கேரக்டரை முழுமையா கற்பனை செய்து பார்க்கறதும், அதை நிஜத்தில் உருவாக்கிக் கொண்டு வர்றதிலும் ஆர்வம் அதிகம். சின்ன வயதிலிருந்தே ஃபேஷன் ஆர்வமும் உண்டு. ஒரு கேரக்டரை முழுமையாக்கற பொறுப்பு மேக்கப் மற்றும் காஸ்ட்யூம்லதான் இருக்கு. அதனாலேயே ஃபேஷன்தான் என் கரியர்ன்னு முடிவு செய்தேன்.

 ‘வானம் கொட்டட்டும்’ படம் முடிஞ்சப்பறம் கௌதம் மேனன் சாருடைய ‘குயின்’ வெப் சீரீஸ்ல ஜெயலலிதா மேடம் கெட்டப்புக்கு வேலை செய்தேன். அடுத்து ‘ஆதித்யா வர்மா’ படத்தில் காஸ்ட்யூம்ஸ் செய்தேன். பிறகு ‘ஃபனே கான்’, ‘ராதே ஷ்யாம்’ படங்களிலும் வேலை செய்தேன்.

தொடர்ந்து மணி சாருடைய ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திலே ஏகா லகானி மேடம் டீம்ல முழுமையா வேலை செய்கிற வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படம் முடிஞ்சதுமே ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பாகங்கள். அதிலே த்ரிஷா மேடமுக்கு காஸ்ட்யூம்ஸ் நான் டிசைன் செய்தேன். தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ புரமோஷன்கள், ‘ராங்கி’ பட புரமோஷன்கள்ல த்ரிஷா மேடமுக்கு காஸ்ட்யூம்ஸ் டிசைன் செய்கிற சான்ஸ் கிடைச்சது.

இப்ப பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் ‘தக்ஸ்’ படத்திலேயும் காஸ்ட்யூம்ஸ் மற்றும் ஸ்டைலிஸ்ட்டா வேலை செய்திருக்கேன். அடுத்தடுத்து ‘பொன்னியின் செல்வன் 2’, ‘லியோ’, ‘குயின்’ வெப் சீரீஸ் சீசன் 2, ‘ஸ்வீட் காரம் காஃபி’ வெப் சீரீஸ் உட்பட பல வேலைகள் கைவசம் இருக்கு. ஓடிட்டு இருக்கேன்...’’ புன்னகையுடன் சொல்லிக்கொண்டிருந்தவரை நிறுத்தி சஸ்பென்ஸ் தாளாமல் கேட்டோம், ‘லியோ’!

‘‘ஊப்ஸ்... ரொம்ப சீக்கிரம் கேட்கறீங்க. இப்போதைக்கு எல்லாரும் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் வந்திருக்கோம். செம பனி. மைனஸ் 10 டிகிரியிலே உடம்பெல்லாம் நடுங்குது. இடியே இடிச்சாலும் ‘ஐயம் ஏ கூல் பெர்சன்’ அப்படின்னு செம சார்மிங்கா விஜய் சார் செட்டில் இருக்கார்.அதைவிட சைலன்ட் கில்லரா அமைதியா அந்தப் பக்கம் லோகேஷ் கனகராஜ் சார் இருக்கார். இந்தப் படத்திலும் ஏகா லகானி மேடம் டீம்ல நான் த்ரிஷா மேடமுக்கு காஸ்ட்யூம்ஸ் செய்யறேன். ஹேப்பியா இருக்கு.

‘பொன்னியின் செல்வன்’, ‘ராங்கி’ பட புரமோஷன்ஸ் அப்ப த்ரிஷா மேடம் காஸ்ட்யூம்கள் பத்தி நிறைய பேர் பாராட்டியிருந்தாங்க... அதெல்லாம் எனக்கு பூஸ்ட்டா இருக்கு...’’ என்று சொல்லும் மாலினி கார்த்திகேயன், மணிரத்னம் செட்டில் தான் கற்றுக்கொண்டது அநேகம் என்கிறார்.

‘‘எடுத்த உடனே டாக்டர் பட்டம் மாதிரி ஆரம்பமே மணி சார் செட்டில் வேலை செய்கிற வாய்ப்பு. என்ன கத்துக்கிட்டேன்னு ஒரு வரியிலே சொல்ற விஷயமா அது... ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கிலும் நிச்சயம் ஏதோ ஒண்ணு புதுசா நாம கத்துக்குவோம். கிட்டத்தட்ட ஒரு ஃபிரஷ் ஸ்டூடண்ட் பிரின்சிபல் ஆபீஸ்லயே படிச்சா எப்படி இருக்குமோ அப்படி இருந்துச்சு...’’ என்றவர், ஃபேஷன்தான் உலகம் என நினைத்து வரும் தன்னைப் போன்ற இளைஞர்களுக்கு டிப்ஸ் தரவும் தயங்கவில்லை.

‘‘டிப்ஸ், ஆலோசனை எல்லாம் சொல்ற அளவுக்கு எனக்கு இன்னும் வயதும் ஆகலை, அனுபவமும் இல்ல. ஸோ, ஒரு ஷேரிங்கா இதை எடுத்துக்குங்க. இதுகூட எனக்கு சொல்லிக் கொடுத்த ஒரு விஷயம்தான். அதைத்தான் நான் சொல்றேன். ‘என்ன ஆடைகள், என்ன மேக்கப் வேணும்னாலும் நாம கொடுக்கலாம். ஆனா, நாம் யாருக்கு ஆடைகள் கொடுக்கறோம்ங்கறதுதான் முக்கியம். எல்லாத்துக்கும் மேல ஆடைகள் கம்ஃபோர்ட்டான ஃபீல் கொடுக்கணும்...’ இதுதான் ரொம்ப முக்கியம்...’’ என்கிறார் மாலினி கார்த்திகேயன்.

ஷாலினி நியூட்டன்