சைலன்ட் ஆன சென்ட்ரல்!



“பயணிகளின் கனிவான கவனத்துக்கு... கோயம்புத்தூர் வரை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் 10வது பிளாட்பாரத்தில் இருந்து இன்னும் சில நிமிடங்களில் புறப்படும்...”
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10 நிமிடம் நின்றால் இதுபோன்ற நிறைய அறிவிப்புகளை நீங்கள் கேட்க முடியும். 150 ஆண்டு பாரம்பரியம் கொண்ட சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பல ஆண்டுகளாக பயணிகளுக்கு வழிகாட்ட இந்த குரல் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், இனி அந்தக் குரல் ஒலிக்காது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அமைதியான ரயில் நிலையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் வழிகாட்டும் முறைக்கு குட்பை சொல்லி இருக்கிறார்கள். இனி அந்தக் குரல் சென்னை சென்ட்ரலில் ஒலிக்காது; அறிவிப்புகள் மட்டுமின்றி விளம்பர சத்தமும் பயணிகளை இனி தொல்லை செய்யாது.

ரயில் நிலையத்தில் அறிவிப்புக் குரல் ஒலிக்காது என்றால், தாங்கள் பயணம் செய்யவுள்ள ரயில்களைப் பற்றி பயணிகள் எப்படித் தெரிந்துகொள்வது?

இந்தக் குறையைப் போக்குவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 3 நுழைவு வாயில்களிலும் பிரம்மாண்டமான டிஜிட்டல் அறிவிப்பு பலகைகளை வைத்திருக்கிறார்கள்.

தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த டிஜிட்டல் திரைகள் மக்களுக்கு வழிகாட்டுகின்றன. இதைத் தவிர பல இடங்களில் சிறிய அளவிலான டிஜிட்டல் திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் திரைகளைத் தவிர, ரயில் நிலையத்தின் பல இடங்களில் விசாரணைக் கவுன்ட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன.

பரீட்சார்த்த முறையில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிகள், இத்திட்டம் வெற்றியடைந்தால் மற்ற ரயில் நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இதன்மூலம் ரயில் நிலையங்கள் அமைதியான இடங்களாக மாற்றப்படும் என்கிறார்கள்.ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகளை வெளியிடும் திட்டம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இப்போது நிறுத்தப்பட்டாலும், அந்த ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள புறநகர் ரயில் நிலையத்தில் இன்னும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சில சேவைகளும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி காது கேளாத, வாய் பேசாத பயணிகளுக்காக சைகை மொழியில் அறிவிப்புகளை வெளியிடும் வீடியோ திரைகள் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

பார்வையற்றோருக்கு வழிகாட்ட பிரெய்லி முறையில் பல இடங்களில் வரை
படங்கள் வைக்கப்பட்டுள்ளன.இப்படி 150 வயதிலும் பல்வேறு புதுமைகளுடன் இளமையாக இருக்கிறது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.

நிரஞ்சனா