56 வருடங்களாக கேரளாவில் தொடரும் கூட்டு விவசாயம்!
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள இரிஞ்சாலக்குடா மாநகராட்சிக்குள் அமைந்திருக்கும் கிராமம், மப்ராணம். கேரளாவின் நெல் விவசாயத்தில் புதிய வரலாற்றை எழுதியிருக்கிறது இந்தக் கிராமம். இங்கு நடக்கும் விவசாயம் உலகுக்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது.
ஆம்; ஏராளமான விவசாயிகள் இணைந்து மப்ராணத்தில் கூட்டு விவசாயம் செய்து வருகின்றனர். 56 வருடங்களாக தொடரும் இந்தக் கூட்டு விவசாயம் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கைமாற்றப்படுவதுதான் இதில் ஹைலைட்.
குறைவான நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கூட்டு விவசாயத்தில் இப்போது 100 விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வருங்காலத்தில் கூட்டு விவசாயிகளின் எண்ணிக்கை கூடலாம். இப்போதிருக்கும் 100 பேரில் ஆண், பெண், வயதானவர், இளைஞர் என அனைத்து தரப்பட்ட விவசாயிகளும் அடக்கம். மப்ராணத்தில் உள்ள 88.5 ஏக்கரில் நடக்கிறது கூட்டு விவசாயம்.
நெல்தான் முக்கிய பயிர். இது கோல் சதுப்பு நிலம் என்பதால் எப்போதும் ஈரத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். டிராக்டர் வைத்து உழுதால் நிலத்திலிருக்கும் அமிலத்தன்மை வெளிப்படும். அதனால் விவசாயிகளே நிலத்தில் இறங்கி ஏர் மூலம் உழுகின்றனர். அவரவர்களின் நிலத்தில் அவரவர்களே உழுதுகொள்கின்றனர்.
ஒருவேளை அமிலத்தன்மை வெளிப்பட்டால் அதை சரி செய்வதற்காக எலுமிச்சையைப் பயன்படுத்துகின்றனர். இந்த 88.5 ஏக்கரில் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 12.5 ஏக்கரும், குறைந்தபட்சமாக ஒரு விவசாயிக்கு 8 சென்ட்டும் உள்ளது. ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கைதான் அதிகம். 100 பேருக்குச் சொந்தமான இந்த விளைநிலம் ஒரே இடத்தில் வீற்றிருப்பதால் யாரோ ஒருவருக்குச் சொந்தம்போல காட்சியளிக்கிறது.
கூட்டு விவசாயத்தை ஒரு பிசினஸ் போல நெறிப்படுத்தியிருக்கின்றனர். இதற்காகவே பிரத்யேகமாக ‘சித்ரவள்ளி கொல்படவு சமிதி’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே கூட்டு விவசாயத்தில் ஈடுபட முடியும். இந்த அமைப்புக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் அடங்கிய 11 பேர் கொண்ட கமிட்டி உள்ளது. மாதத்துக்கு ஒருமுறை, அறுவடைக்குப் பின் அல்லது அவசர காலத்தில் மட்டுமே இந்த அமைப்பு கூடி கலந்துரையாடுகிறது.
அரசிடமிருந்து மானியம் பெற்றுத் தருவதிலிருந்து, உரம் மற்றும் விவசாயக்கருவிகள் வாங்குவது வரை விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்து தருகின்றது. அமைப்பைச் சேர்ந்த முக்கிய விவசாயியின் மேற்பார்வையின் கீழ் விவசாயம் நடக்கிறது. ஒரு ஏக்கரில் 3 ஆயிரம் கிலோ நெல் விளைகிறது. மற்ற இடத்தில் விளையும் நெல்லுடன் ஒப்பிடும்போது இது ரொம்பவே அதிகம். இந்த நெல் அரிசியாக மாற்றப்பட்ட பிறகு விற்கப்படுகிறது.
கேரள மாநில நுகர்பொருள் விநியோகக் கழகம் ஒரு கிலோ அரிசியை ரூ.28.20க்கு வாங்கிக்கொள்கிறது. மீதமிருக்கும் வைக்கோல் கிலோ 120 ரூபாய் வரை போகிறது. கிடைக்கும் லாபத்தில் சிறு தொகையை அமைப்பின் நலனுக்காக ஒதுக்கிய பிறகு மீதி லாபம் விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. நிலத்தின் அளவைப் பொறுத்து லாபம் பிரிக்கப்படுகிறது. கூட்டு உழைப்பும், சகோதரத்துவமும் தான் இந்த கூட்டு விவசாயத்தின் முதன்மையான நோக்கம். லாபம் அடுத்ததுதான்.
த.சக்திவேல்
|