பார்வதி கொடுத்த ரோபோ யானை!



மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதாலும் இருக்கலாம் அல்லது பண்டைய ஐந்து ‘கஜ வனங்களில்’ ஒன்றாகத் திகழ்ந்ததாலும் இருக்கலாம் அல்லது வேறு காரணமாகவும்

இருக்கலாம். கேரளாவில் உள்ள பெரிய கோயில்களில் தவிர்க்க முடியாத அம்சமாக யானைகள் இருப்பது மட்டும் நிஜம்.
நம் ஊர் கோயில்களில் எப்படி தேரில் சுவாமி சிலையை எடுத்துக்கொண்டு ஊர்வலம் செல்கிறோமோ, அதேபோல் கேரளாவில் யானைகளின் மீது வைத்துதான் சுவாமி சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.
ஒரு சில கோயில்களில் மாலையில் நடக்கும் சீவேலிகளில் சுவாமி சிலைகளை ஊர்வலமாக வைத்து எடுத்துச் செல்வார்கள். இதனாலேயே பல பக்தர்கள் கேரள கோயில்களுக்கு யானைகளை தானமாக வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் குருவாயூர் கோயிலில் மட்டும் பக்தர்களால் தானமாக வழங்கப்பட்ட சுமார் 50 யானைகள் உள்ளன. இந்த யானைகளை பராமரிப்பதற்காக மட்டுமே புன்னத்தூர் கோட்டை என்ற யானைகள் பராமரிப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி பக்தர்களால் கோயிலுக்கு வழங்கப்படும் யானைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அவை காட்டில் வளராமல் நகரத்தில் வளர்வதால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவதாகவும் எதிர்ப்புக் குரல்களும் புகார்களும் ஒருபக்கம் வந்தபடியே இருந்ததாலும்; சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் யானைகள், திருவிழாக்களின்போது சத்தங்களைக் கேட்டு மிரள்வதாக முணுமுணுப்புகள் எழுந்ததாலும் சில கோயில்களில் யானைகளுக்கு பதிலாக யானை சிலைகள் பூஜைகளுக்கு பயன்படுத்தப்பட்டன.

ஆனால், பார்ப்பதற்கு யானைகளைப் போல அந்தச் சிலைகள் இருந்தாலும், யானைகளைப் போல அவை செயல்படாததால் பக்தர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை.

இந்தச் சூழலில்தான் திருச்சூரில் உள்ள இரிஞடப்பிள்ளி கிருஷ்ணன் கோயிலுக்கு எந்திர யானை ஒன்றை வழங்கியிருக்கிறார் நடிகை பார்வதி. பிடா அமைப்புடன் இணைந்து இந்த யானையை அவர் வழங்கியிருக்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க அம்சம்.

10 அடி உயரம் கொண்ட இந்த எந்திர யானையின் மொத்த எடை 800 கிலோ. மின்சாரத்தின் உதவியால் உயிருள்ள யானையைப் போலவே தலை, வால், காது, தும்பிக்கையை இது ஆட்டும். முக்கிய பூஜைகளின்போதும் திருவிழாக்களின்போதும் இந்த யானையின் மீது சுவாமி சிலையுடன் 4 பேர் அமர்ந்து கொள்ளலாம்.

பார்ப்பதற்கு மட்டுமல்ல... செயல்பாடுகளிலும் நிஜ யானையைப் போலவே இந்த எந்திர யானை இருப்பதால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த யானையை மிகவும் பிடித்துப் போயிருக்கிறது. அதனால் நிஜ யானையைப் போலவே இந்த யானைக்கு ‘இரிஞடப்பிள்ளி ராமன்’ என்று பெயர் வைத்து பக்தர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

“கோயில்களில் யானைகளைப் பயன்படுத்துவதால் அவை ஏகப்பட்ட துன்பங்களுக்கு ஆளாகின்றன. அதனால் அவற்றுக்கு பதில் எந்திர யானையை கோயிலுக்கு வழங்கினால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவாக பிடா அமைப்புடன் இணைந்து இந்த யானையை வடிவமைத்து வழங்கியுள்ளேன்.

நிஜ யானையைப் போலவே இது இருப்பதால், கோயில் நடைமுறைகளை எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்த இது உதவும். பக்தர்களுக்கும் இந்த எந்திர யானை திருப்தி அளித்திருக்கிறது” என்கிறார் பார்வதி.“மிருகங்களை பயன்படுத்தாமல், அதேநேரத்தில் கோயிலின் ஆகம விதிகளை மீறாமல் இந்த எந்திர யானையை வைத்து பூஜைகளை செய்ய முடிவது மகிழ்ச்சி அளிக்கிறது...” என்கிறார் கிருஷ்ணன் கோயிலைச் சேர்ந்த ராஜ்குமார் நம்பூதிரி.

என்.ஆனந்தி