படம் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை!
அதிர்ச்சியடைய வேண்டிய செய்திதான். ஆனால், இப்படியொரு அறிவிப்பு இந்தியாவில் இன்னமும் வெளியாகவில்லை என்பதால் மகிழவும் செய்யலாம்.ஆம். வெளிநாட்டுப் படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களைப் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப் படும் என வட கொரிய அரசு தெரிவித்துள்ளது.கிம் ஜாங் உன் தலைமையில் இருக்கும் வட கொரிய நாட்டில் இணையதளம், சமூக வலைத்தளம் போன்றவை கிடையாது. குறிப்பிட்ட டிவி சேனல்களை மட்டும் நிறைய கட்டுப்பாடுகளுடன் மக்களின் பயன்பாட்டுக்கு அரசு அனுமதித்துள்ளது.
சேனலே இப்படி என்றால் சினிமா, வெப் சீரீஸ்களின் நிலை? தடைதான். இதன் டிவிடிகளைப் பார்ப்பதற்கும், விற்பதற்கும் கூட அங்கு தடை உள்ளது. இதனை கண்காணிக்க அங்கு ஒரு தனிக்குழுவே இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கட்டுப்பாடு என்றால் கட்டுப்பாடுதான். கடந்த ஆண்டு சட்டவிரோதமாக தென் கொரிய வெப் சீரீஸ் பார்த்த இரண்டு சிறுவர்கள் தூக்கிலிடப்பட்ட சம்பவம் உலகை உலுக்கியதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
இந்நிலையில்தான் தடையை மீறி மேற்கத்திய படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களைப் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என வடகொரிய அரசு அறிவித்துள்ளது.இந்தக் குற்றத்தில் ஈடுபடும் குழந்தைகள், இதனை முதன்முறை செய்தாலும் குற்றம் குற்றமே... தண்டனைக்குறியவர்களாகவே கருதப்படுவர் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குழந்தைகளுக்கு மட்டுமல்ல... மேற்கத்திய தொடர்கள், படங்களை குழந்தைகள் பார்க்க அனுமதிக்கும் பெற்றோருக்கும் தண்டனை உண்டு எனவும் அறிவித்திருக்கிறது கிம் ஜாங் உன் அரசு.
அதன்படி, குற்றச்செயலில் ஈடுபடும் குழந்தைகளின் பெற்றோர் 6 மாத காலம் தொழிலாளர் முகாம்களில் வேலை பார்க்க வேண்டும்.இதற்குமுன் குற்றம் நிரூபிக்கப்பட்ட பெற்றோர் கடுமையாக எச்சரிக்கைப்பட்டனர். இனி நேரடி தண்டனைதானாம். மேற்கத்திய நாடுகளின் படங்கள், வெப் சீரீஸைப் பார்ப்பதால், பாடல்கள் கேட்பதால் அந்நிய நாட்டு கலாசாரம் வட கொரிய மக்களின் மனதில் வேரூன்றிவிடுகிறது... இதனால் மக்கள் அரசுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பிருக்கிறது என கிம் ஜாங் உன் அரசு நினைப்பதால் இந்தக் கட்டுப்பாடு, தண்டனை!
காம்ஸ் பாப்பா
|